மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

மனநலத்தைப்பற்றிய பேச்சைத் தொடங்குவது எப்படி?

அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை அவரிடம் எப்படிச் சொல்வது?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை அவரிடம் எப்படிச் சொல்வது? அதற்குச் சில குறிப்புகள் இங்கே.

மனநலப் பிரச்னை என்பது, மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். குறிப்பாக, ஒருவரிடம் மனநலப் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்களிடம் இதைப்பற்றிப் பேசுவது இன்னும் சிக்கலாகிவிடுகிறது. பல நேரங்களில், ஒருவரிடம் காணப்படும் மனோநிலை மாற்றங்கள், பழக்கவழக்க மாற்றங்களை அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கவனிக்கிறார்கள், அதை எண்ணிக் கவலைப்படுகிறார்கள், ஆனால் அதைப்பற்றி அவர்களிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்: "அன்புக்குரிய ஒருவரிடம் இதைப்பற்றி எப்படிப்பேசுவது? நான் அவர்மீது அக்கறை காட்டுகிறேன், இந்த விஷயத்தில் அவருக்கு உதவ விரும்புகிறேன் என்று எப்படிச்சொல்வது? நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அல்லது ஆலோசகரைப் பார்க்கவேண்டும் என்று நான் அவரிடம் எப்படிச் சொல்வது? மனநலப் பிரச்னைகளைச் சமூகம் மிகவும் களங்கத்தோடு பார்க்கிறதே!"

இதுபோன்ற கவலைகள் மிகவும் இயல்பானவை. மனநலப் பிரச்னை கொண்டோரைக் கவனித்துக்கொள்கிற பலர், தங்கள் அன்புக்குரியவர்களிடம் பேசுமுன் இந்த எண்ணங்களை அனுபவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்கள் அதனை எப்படி அணுகலாம்?

பிரச்னையைப் புரிந்துகொள்ளலாம்

அவர்கள் என்னமாதிரி பிரச்னையை அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பொதுவாகவும், அவர்கள் அனுபவிக்கிற அறிகுறிகளைப்பற்றியும் படிக்கலாம். போதுமான நேரம் செலவிட்டு இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம், மேலும் ஆதரவு தேவைப்பட்டால், இதுபற்றி யாரிடமேனும் பேசலாம். மனநலப் பிரச்னை என்பதும் உடல்நலப் பிரச்னையைப்போன்றதுதான், இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், அது யாருக்கும் வரக்கூடியதுதான், குணப்படுத்தப்படக்கூடியதுதான் என்பதை உணரவேண்டும், இதன்மூலம் இந்தப் பிரச்னையை எண்ணித் திகைக்காமல், அவர் தன்னுடைய அன்புக்குரியவரைப் பச்சாத்தாபத்துடன் அணுக இயலும்.

இங்கே முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது, இந்தப் பிரச்னையைப்பற்றிப் படிப்பதன்மூலம், தன்னுடைய அன்புக்குரியவர் எந்தமாதிரி சிரமத்தை அனுபவிக்கிறார் என்பதை அவர் உணர்வார், புரிந்துகொள்வார், ஆனால், இதுமட்டும் போதாது, இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு நிபுணரின் அக்கறையும் ஆதரவும் தேவை.

உரையாடலுக்கு ஆதரவைக் கோரலாம்

அவர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி: இந்த உரையாடலுக்கு உதவக்கூடியவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? அல்லது, வேறு யாராவது இதைப்பற்றிப் பேசினால் சரியாக இருக்குமா? அவரோடு மிகவும் நெருக்கமாக இருக்கிற ஒருவர் இந்த உரையாடலைத் தொடங்குவது நல்லது. அந்த நபரோடு இவர் நல்ல தொடர்பில் இருக்கவேண்டும், அவரை நம்பவேண்டும், அப்போதுதான் இவர் மிரட்டப்படுவதாக அல்லது ஒரு மூலையில் தள்ளப்படுவதாக உணராமலிருப்பார்.

முதலில் பொது விஷயங்களைப் பேசலாம்

அவர்களுடைய பழக்கவழக்கங்களில் காணப்படும் மாற்றங்களைப்பற்றிப் பொதுவாகப் பேச்சைத் தொடங்கலாம், தங்களுடைய அறிகுறிகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களா, அவற்றைப்பற்றி யோசித்திருக்கிறார்களா என்று அறிய முயற்சிசெய்யலாம். மனநலப் பிரச்னைகளைச் சந்திக்கும் பெரும்பாலானோர் தங்களுடைய முந்தைய அனுபவங்களோடு ஒப்பிடும்போது அல்லது, பிறருடைய அனுபவங்களோடு ஒப்பிடும்போது தாங்கள் இப்போது அனுபவிக்கும் விஷயங்கள் மாறியுள்ளன என்பதை ஓரளவேனும் உணர்ந்திருப்பார்கள், ஸ்கிஜோஃப்ரெனியாபோன்ற தீவிரப் பிரச்னை கொண்டோருக்குமட்டும் இதைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காது. குறிப்பாக, பதற்ற வகைக் குறைபாடுகள் மற்றும் மனச்சோர்வு கொண்டவர்கள் தங்களுடைய பிரச்னையை அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

'நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?' என்று பேச்சைத் தொடங்கலாம். இப்போதெல்லாம் அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக உணர்கிறார்களா? தங்களிடம் காணப்படும் மாற்றங்களைப்பற்றி அவர்கள் சொன்னால், அவர்களைப்பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் அதைக் கேட்கவேண்டும்.

பச்சாத்தாபத்தை வெளிப்படுத்தலாம்

பச்சாத்தாபம் என்பது, இன்னொருவருடைய அனுபவங்களை நேரடியாக அனுபவிக்காமலே புரிந்துகொள்கிற திறன் ஆகும். இதுபோன்ற மாற்றங்களால் மிகுந்த களைப்பு, பயம் அல்லது விரக்தி வருவது சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளலாம், அவர்களிடம் பச்சாத்தாபம் காட்டலாம். மனநலப் பிரச்னையைக் குணப்படுத்த இயலும், இதைச் சமாளிப்பதில் அவர்களுக்கு உதவக்கூடிய நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குப் புரியவைக்கலாம், இதை வைத்துப் பிறர் அவர்களைப்பற்றித் தவறாக எண்ணமாட்டார்கள் என்று உணர்த்தலாம். 'நிகழும் மாற்றங்களை, உங்கள் உணர்வுகளை உங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது எனக்குப் புரிகிறது' என்று அவருக்குத் தெரிவிப்பதும் நல்லது.

அவர்களுடைய பார்வைக்கோணத்தை மதிக்கலாம்

அவர்களுக்கு அடுத்த படிநிலைகளைப்பற்றிச் சொல்லி, அவர்களையே தேர்ந்தெடுக்கச்சொல்லலாம். அவர்கள் உதவியை நாட விரும்புகிறார்களா என்று கேட்கலாம். இந்த விஷயத்தில் அவர்களையே தீர்மானமெடுக்கவிடலாம்: நீங்கள் இதைப்பற்றி யோசிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உதவியை நாடத் தயாராக இருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் அவர்களுடைய பார்வைக்கோணத்தை மதிக்கவேண்டும். ஒருவர் தன்னுடைய அன்புக்குரியவரை வலுக்கட்டாயமாக நிபுணரிடம் அழைத்துச்சென்றால், அவர் சிகிச்சையில் பங்கேற்காமல்போகலாம், அதனால் சிகிச்சை போதுமான அளவு பலன் தராமலிருக்கலாம். பாதிக்கப்பட்ட ஒருவர் உதவி பெற விருப்பத்துடன் இருக்கும்போதுதான் சிகிச்சை நல்ல பலன் தருகிறது என்று மனநல நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அதேசமயம், சிலர் மிகவும் தீவிரமான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவர்களுக்குத் தங்களுடைய பிரச்னையைப்பற்றியே தெரியாமலிருக்கலாம், இதற்கு உதாரணமாக, ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோரைக் குறிப்பிடலாம். இன்னும் சிலர், போதுமான மன ஆற்றலைப் பெறாமலிருக்கலாம், இதற்கு உதாரணமாக, மனநலப் பாதிப்பு கொண்டோரைக் குறிப்பிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில்மட்டுமே அவர்களுடைய விருப்பமின்றி சிகிச்சையளிப்பது அவசியப்படலாம். இந்தத் தீவிரச் சூழ்நிலைகளைத்தவிர மற்ற நேரங்களில், மனநலப் பிரச்னை கொண்டவர் தனக்குச் சிகிச்சையளிக்கும் மனநல நிபுணருடன் இணைந்து செயல்படுவதும் சிகிச்சையில் சுறுசுறுப்பாகப் பங்கேற்பதும்தான் நல்லது.

ஆதரவளிக்கலாம்

சுற்றியிருப்பவர்கள் அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவு உண்டு என்பதையும், தேவைப்பட்டாலன்றி அவர்களைப்பற்றிய விவரங்களைத் தாங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளமாட்டோம் என்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அவர்கள் ஒரு நல்ல மனநல நிபுணரைக் கண்டறியலாம், தங்கள் அன்புக்குரியவரை மனநல நிபுணரிடம் அழைத்துச்செல்லலாம்; இதன்மூலம் தங்கள் அன்புக்குரியவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிவதில் அவர்கள் உதவலாம், ஆதரவளிக்கலாம்.

நிலைமையைச் சமாளிப்பது சிரமம் என்று தோன்றினால், உதவி பெறலாம்

இந்தச் செயல்முறையின்போது ஒருவருக்குக் குழப்பம், திகைப்பு அல்லது குற்றவுணர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படலாம், அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் ஓர் ஆலோசகரை அல்லது மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவரிடம் அவர்கள் தங்களுடைய உணர்வுகளைச் சொல்லவேண்டும், அடையாளம்காணவேண்டும். மனநலப் பிரச்னையால் வரும் சவால்களை ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாகக் கையாள்கிறார்கள், பிரச்னை கண்டறியப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்விதமும் மாறுபடுகிறது. தங்கள் அன்புக்குரியவரை நினைத்து அவர்கள் கவலைப்படுவதும் சோகப்படுவதும் இயல்புதான். அதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களுக்கு உணர்வுரீதியிலான ஆதரவைப் பெறவேண்டும், அப்போதுதான் தங்களுடைய அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்ளத் தேவையான சமாளிப்பு வியூகங்களை அவர்கள் அடையாளம் காண இயலும்.

தில்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்விக்கழகத்திலிருந்து PhDபெற்றவரான டாக்டர் கரிமா ஶ்ரீவஸ்தவாவின் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org