அழுத்தத்தை அனுபவித்த ஒருவர் மீள்திறனோடு இருக்க இயலுமா? பட்டப்படிப்பின்போது, நான் பல பாடப்பணிகளைச் செய்யவேண்டியிருந்தது; அவற்றில் ஒன்று: அழுத்தத்தைச் சமாளித்தல். அந்தப் பாடப்பணியின்போது நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் என்னுடைய மருத்துவ அனுபவம் மற்றும் கல்விப்பணியின்மூலம் நான் கற்றுக்கொண்டது: மீள்திறனைக் கற்றுக்கொள்ளலாம், அதாவது, வாழ்க்கை நம்மைச் சிக்கலான திசைகளில் அழைத்துச்செல்லும்போது நாம் மீள்திறனைப் பெறலாம், அதற்கான நம் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம்.
மீள்திறன்என்றால் என்ன? உளவியல் புத்தகங்களில் மீள்திறன் என்பது இப்படி வரையறுக்கப்படுகிறது: ஒரு நெருக்கடி அல்லது அழுத்தம் தரும் சூழ்நிலையிலிருந்து 'திரும்பிவரும்' திறனை அளத்தல் அல்லது அழுத்தத்தைச் சந்திக்கும்போது ஓரளவு சமநிலையைத் தொடர்ந்து பராமரிக்கும் திறனை அளத்தல். அதேசமயம், மீள்திறன் என்பது இப்போது ஒரு பரந்த கருத்தாக்கமாகிவிட்டது. இதில் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன: தனிப்பட்ட குணங்கள், செயலில் உள்ள சமாளிக்கும் முறைகள், செயல்முறைகள், தனிநபரின் வாழ்க்கையில் ஆபத்து மற்றும் பாதுகாப்புக் காரணிகள், அழுத்தம் ஒருவரைப் பாதிக்கும் கலாசாரப் பின்னணி. எடுத்துக்காட்டாக, அதிர்ச்சி அல்லது மரணத்தைப் பார்க்கும் போர் வீரர்கள் எப்படி மீண்டும் பணிக்குத் திரும்புகிறார்கள்? வன்முறை நிகழ்வதைப் பார்க்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி மீண்டும் கடமைக்குத் திரும்புகிறார்கள்? பரபரப்பான வாழ்க்கையின் அன்றாட அழுத்தங்களை நாம் எப்படிச் சமாளிக்கிறோம்? பணி அழுத்தங்கள், வீட்டு அழுத்தங்களை எப்படிச் சமநிலைப்படுத்துகிறோம்? பொதுவாக, இங்கு நாம் பார்த்த பல அம்சங்களின் ஒரு தொகுப்புதான் நம்முடைய தனித்துவமான, அன்றாட வாழ்க்கைச் சவால்களைக் கையாள நமக்கு உதவுகிறது.
இதைக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். நாள்தோறும் அதீத வேலைப்பளுவைச் சந்திக்கும் ஓர் ஊழியரை எடுத்துக்கொள்வோம், அவருடைய பணியைப் பலர் விமர்சிக்கிறார்கள், அவர் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகிறார், தன் கண்காணிப்பாளருடைய அசாதாரணமான அதீத எதிர்பார்ப்புகளை எப்படிப் பூர்த்திசெய்வது என்று திகைக்கிறார். பின்னர், தடுக்க இயலாத அந்தப் பிழை நடந்துவிடுகிறது: அவர் ஒரு குறிப்பிடத்தக்க தவற்றைச் செய்துவிடுகிறார். இந்தத் தவற்றை அவர் எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மிகத் தீவிரமான நிலையில் பார்த்தால், அதீத அதிர்ச்சி, குறிப்பிடத்தக்க ஒருவருடைய மரணம், தீவிரவாதத் தாக்குதல், அல்லது பிற வெறுக்கத்தக்க நிகழ்வுகளின் பின்னணியிலும் மீள்திறன் நிகழ்கிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குப்பிறகு, ஒரு நிலையான மன, உணர்வுச் சமநிலையைப் பராமரிப்பது சவாலாக இருக்கலாம். மீள்திறனானது வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறுவிதமாக வெளிப்படலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் ஆதரவு அமைப்பு, அவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம், ஒரு கடினமான நிகழ்ச்சிக்குப்பிறகு அவர் காட்டும் தனிப்பட்ட நெகிழ்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறலாம். வயது வந்த ஒருவருடைய மீள்திறனானது அவருடைய சமாளிக்கும்திறனைப் பெருமளவு சார்ந்திருக்கிறது; அதாவது, அவர் அழுத்தங்களின்போது பயம், யாரும் தனக்கு உதவவில்லை என்கிற எண்ணம், பிறர்மீது தீர்ப்புச்சொல்லுதல், தன்னை விமர்சித்துக்கொள்ளுதல் போன்றவற்றைமட்டும் காட்டாமலிருப்பது.
இதையெல்லாம் செய்யக்கூடாதென்றால், வேறு எதைச் செய்யவேண்டும்? முதலில், மனத்தைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதாவது, தன்னை உணரும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும், தன்னுடைய எண்ணங்களை, உணர்வுகளை, தன் உடலில் நிகழும் உணர்ச்சிகளைத் தீர்ப்புச்சொல்லாமல் கவனிக்கவேண்டும். இதன் இன்னொரு பொருள், அசௌகர்யமான, வருத்தம் தருகிற எண்ணங்களை, உணர்வுகளை வெறுமனே கவனிக்கவேண்டும், அவதானிக்கவேண்டும், அதற்கான ஒரு வழியை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து, அந்தப் பின்னடைவு அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வை வெறுமனே 'தன்னந்தனியான' எதிர்மறைக் கோணத்தில் பார்க்காமல் எண்ணத்தை விரிவாக்கவேண்டும், அதைப் பல கோணங்களில் இருந்து பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும், அப்போதுதான் அந்த நிகழ்ச்சியைச் சமாளிப்பதற்கு அவரிடம் பல தெரிவுகள்/தீர்வுகள் தோன்றும். கடினமான உணர்வுகள், அனுபவங்களைத் தீர்ப்பதற்கான தெரிவுகளைக் கொண்டிருப்பது, அவற்றை ஒரு முழுமையான வழியில் கருத்தில்கொள்வது ஆகியவற்றின்மூலம் அவர் ஒரு தீர்வைநோக்கி நகர்வதற்கான நெகிழ்திறன் கிடைக்கும், அல்லது, அவருடைய மன நலனுக்கு விரும்பப்படும் பலனைப் பெற இயலும்.
ஊழியரைப் பொறுத்தவரை, விரும்பப்படும் பலன் என்பது, அந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது, அதில் தன் பங்கு என்ன என்பதைக் கற்றுக்கொள்வதாக இருக்கலாம், இதன்மூலம் அவர் தன்னுடைய கற்றலைச் செயல்படுத்த இயலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகளைக் கையாளும் அணுகுமுறையை மேம்படுத்த இயலும். தீவிர அதிர்ச்சியைப் பொறுத்தவரை, அந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து சமாளிப்பதற்கு அவரிடம் இருக்கும் தனிப்பட்ட வளங்களை (குடும்பத்தினர்/நண்பர்களின் ஆதரவு) அவர் ஆழமாக ஆராயவேண்டியிருக்கலாம், உணர்வு உதவிக்காகத் தொழில்முறை நிபுணரை விரைவில் அணுகிச் சிகிச்சை பெறவேண்டியிருக்கலாம், தீவிர உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தேவையை எதிர்க்கவேண்டியிருக்கலாம், நன்கு ஓய்வெடுப்பதன்மூலம் தங்கள் உடலைக் கவனிப்பது, ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கிக்கொள்வது, அதீதமாகத் தன்னை வருத்திக்கொள்ளாமலிருப்பது, எதையும் கச்சிதமாகதான் செய்தாகவேண்டும் என்ற உணர்வைத் தாண்டி வருவது போன்றவை சிறந்த தீர்வுகள்.
இவற்றுடன், ஓர் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு அல்லது ஒரு சிரமமான அழுத்தத்தை அனுபவித்தபிறகு, அவர் தன்னுடைய திறமையைப்பற்றி, தன்னுடைய தகுதியைப்பற்றி, தன்னுடைய சுய மதிப்பைப்பற்றி, அறிவைப்பற்றித் தானே கேள்விகேட்டுக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ என்கிற சிந்தனை அவருக்கு அதிகரிக்கலாம், தன்னையும் அறியாமல் சுய-ஐயம், விமர்சனம் மற்றும் தீவிரம் ஆகியவற்றில் சிக்கிச் சுழல் பாதையில் கீழ்நோக்கிச் செல்லலாம். இந்தப் பாதை அவரை இன்னும் கடினமான ஓர் உணர்வு நிலைக்குக் கொண்டுசெல்லலாம், அங்கு அவர் சிக்கிக்கொள்ளலாம். ஒரு மாறுபட்ட உணர்வுப் பலன்பற்றிய (அதாவது, கோபத்திலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கு நகர்தல்) தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலுதலும் மீள்திறன் அடிப்படையிலான சமாளித்தலின் ஒரு முக்கிய அம்சமாகும். பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளுக்கு நடுவில், அவர் தன்னுடைய தொடர்பு நபர்களை, தன்னுடைய ஆதரவு அமைப்புகளை, வழிகாட்டிகளை, நண்பர்களை, சிகிச்சை வழங்குபவர்களைப்பற்றிச் சிந்தித்தல், அவர்களைச் சுறுசுறுப்பாக அணுகுதல், அதன்மூலம் வீழ்ச்சியை மறந்து ஊக்கம் பெறுதல் போன்றவை துன்பத்தைச் சமாளிக்கும் பொருளுள்ள, நல்ல வழிகளாக இருக்கலாம்.
இந்தக் கட்டுரையின் மிக முக்கியமான கருத்து என்ன என்றால், மீள்திறன் என்பது ஒரு கற்றுக்கொள்ளக்கூடிய திறன், தகுதியாக இருக்கலாம், அது ஒருவருக்குள் ஏற்கெனவே இருந்தாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, அதைப் பின்னர் வளர்த்துக்கொள்ளலாம். அழுத்தத்தின்போது, அல்லது ஒரு நெருக்கடிக்குப்பிறகு பிறருடன், தன்னுடன் பயனுள்ள ஊடாடல் அளவை அதிகரிப்பது செயல்திறன் மிகுந்த சமாளித்தலின் ஒரு முன்னோக்கிய படியாகும், இதன்மூலம் அவர் துன்பத்தைக் கையாளத் தவிர்த்தல் என்கிற உத்தியைப் பயன்படுத்தாமலிருக்கிறார்.
திவ்யா கண்ணன், PhD, அமெரிக்காவில் நாஷ்வில்லெயிலிருக்கும் வாண்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியலாளராகப் பொறுப்புவகிக்கிறார்; அங்கு அவர் வன்முறையைச் சந்தித்த வயதுவந்தோருடன் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் பெங்களூரில் மருத்துவ சேவை வழங்கிவருகிறார்.