இயங்கியல் பழகுமுறைச் சிகிச்சை: ஓர் அறிமுகம்

இயங்கியல் பழகுமுறைச் சிகிச்சை: ஓர் அறிமுகம்

1961ல், அமெரிக்காவின் கன்னெக்டிகட்டிலுள்ள ஒரு மனநல அமைப்பில் 17 வயதுப் பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டார். சமூகத்திலிருந்து தீவிரமாக விலகியிருத்தல், அடிக்கடி தன்னைக் காயப்படுத்திக்கொள்ளுதல் ஆகியவை அவருடைய பிரச்னைகளாகக் குறிப்பிடப்பட்டன.  “மருத்துவமனையில் மிகவும் தொந்தரவோடிருக்கும் நோயாளிகளில் ஒருவர்” என்று மருத்துவப் பதிவுகள் அவரை விவரித்தன. அதேசமயம், தீவிரப் பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கான தனிமை அறையில் தான் செலவழித்த நேரங்களைப்பற்றி அவர் குறிப்பிட்டபோது, “நரகம்” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

அந்த இளம் பெண், டாக்டர் மர்ஷா லைன்ஹன். இயங்கியல் பழகுமுறைச் சிகிச்சை(DBT)யின் முன்னோடி. 2011ல், டாக்டர் லைன்ஹன் முதன்முறையாகத் தன்னுடைய பயணத்தைப்பற்றிப் பொதுவில் பேசினார். மன நலனுடனான அவருடைய போராட்டம், மீட்சிக்கான பாதையின் கதையை நியூ யார்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை விவரித்தது: அவருடைய பிரச்னை, துல்லியமான கண்டறிதல் இல்லாத நிலை, ஒரு சிகிச்சை இடையீட்டை உருவாக்குவதற்கு அவரைத் தூண்டிய அன்றைய சிகிச்சை.

விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு (BPD)பற்றி அன்றைக்குத் தெரிந்திருந்தால், அவருக்கு அந்தப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டிருக்கும் என்று நம்புகிறார் டாக்டர் லைன்ஹன். இன்று, மிகப் பொதுவாகக் கண்டறியப்படும் ஆளுமைக் குறைபாடுகளில் ஒன்று BPD. இதேபோன்ற சிக்கலான கண்டறிதல்கள், தவறான கையாளல்களைக் கொண்டவர்கள் பலர் உள்ளார்கள், தங்களுடைய அறிகுறிகளைக் கையாள்வதற்கு DBT உதவுவதை இவர்கள் கண்டுள்ளார்கள்.

DBT என்பது என்ன?   

DBT என்பது ஒருவிதமான பேச்சுச் சிகிச்சையாகும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவருகின்ற பழகுமுறைச் சிகிச்சையின் ஒரு மாறுபட்ட வடிவம் இது. இதன் முக்கிய நோக்கம், உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களைச் சந்திக்கிறவர்களுக்குச் சிகிச்சையளித்து, ‘வாழத் தகுந்த ஒரு வாழ்க்கை’யை வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுவது. தங்களுடைய பிரச்னைகளைத் தீர்க்கும்படி இந்தச் சிகிச்சை அவர்களை ஊக்குவிக்கிறது. இது திறன்பயிற்சியில் கவனம் செலுத்துகிறது; அதன்மூலம், பிரச்னைகளைச் சந்திக்கிறவர்கள் தங்களுடைய பிரச்னைகளைச் செயல்திறனோடு சமாளிப்பதற்கான கருவிகளை வழங்குகிறது. தொலைநோக்கு இலக்குகளை உருவாக்கவும், அவற்றை நோக்கிப் பணியாற்றவும் DBT அவர்களுக்கு உதவுகிறது. 

பல மனநலக் குறைபாடுகளுக்கு DBTயைப் பயன்படுத்துதல்

DBTயானது தொடக்கத்தில் BPDயைக் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. 1991ல், டாக்டர் லைன்ஹனும் அவருடைய குழுவினரும் BPD, பாராசூசைடல் யோசனை (மரணத்தை இலக்காகக் கொள்ளாத தற்கொலை எண்ணங்கள்) கொண்ட பெண்களுக்கான சிகிச்சையில் ஓர் ஆய்வை நடத்தினார்கள். தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் பழகுமுறைகளைக் குறைப்பது, சிகிச்சைக்கு வருகைதருவதை அதிகரிப்பதற்கான ஒரு பயனுள்ள சிகிச்சை முறையாக இது காணப்பட்டது.

காலப்போக்கில், பலவிதமான பிற மருத்துவ நிலைகளைச் சமாளிக்கும்விதத்தில் DBT வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, உண்ணல் குறைபாடுகள், சினத்தைக் கையாளுதல், கவனப்பற்றாக்குறை/மிகைச்செயல்பாட்டுக் குறைபாட்டின் (ADHD) சில அம்சங்கள், மனச்சோர்வு மற்றும் அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD). இதுபோன்ற சூழல்களில், DBTயானது பிரச்னையின் வெவ்வேறு அம்சங்களைக் குறிவைக்கிறது: இது பிறருடன் பழகும் திறன்கள் (தன்முனைப்புபோன்றவை), மனமுழுமைத் திறன்கள், உணர்வுக் கட்டுப்பாடு, நன்றியுணர்வு மற்றும் அனிச்சை எதிர்வினைகளை(அதீதமாக உண்ணுதல் மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்தும் குறைபாடுபோன்றவை)த் தள்ளிப்போடுதல் போன்ற சமாளிக்கும் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை(CBT)யைப்போல, DBT சிகிச்சையிலும் செயல் திட்டங்கள் (அல்லது, வீட்டுப் பணிகள்) ஒரு பகுதியாக அமைகின்றன. இதில், பிரச்னை கொண்டோர் சிகிச்சைக்கு வருகிற இடைவெளிகளில் அவர்களுக்குச் சில பணிகள் தரப்படுகின்றன, இவை அவர்களுடைய முன்னேற்றத்தில் உதவும். பல நேரங்களில், DBTயை நாடுகிற மக்களுக்குப் பிறருடன் பழகுவதில் பிரச்னை உள்ளது; சிகிச்சைச் செயல்முறையில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு, பிரச்னை உள்ளவரும் சிகிச்சையளிப்பவரும் ஒரு வலுவான சிகிச்சையுறவை உண்டாக்குவது முக்கியமாகும்.

DBT, CBT: வேறுபாடு என்ன?

இவை இருவிதமான பேச்சுச்சிகிச்சைகளாக இருப்பினும், இவற்றின் முதன்மை நோக்கம், சில மையப் பகுதிகள் மாறுபடுகின்றன.

CBTயானது பாதிக்கப்பட்டவருடைய செயல்படாத எண்ணங்கள், பழகுமுறைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. DBTயானது, இவற்றை மாற்றுவதுடன், பிரச்னையுடன் வருகிற அனைத்து உணர்வுகளையும் ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. பிரச்னைகளைச் சந்திக்கிற ஒருவர், தன்னுடைய அனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகளை அடையாளம் கண்டு, ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டால், அந்தப் பிரச்னைகளை ஒரு மாறுபட்டவிதத்தில் கையாள்வதற்கு அது அவர்களுக்கு உதவலாம் என்று DBTயைப் பின்பற்றுவோர் நம்புகிறார்கள். ஏற்றுக்கொள்ளுதல், மாறுதல் ஆகியவற்றுக்கிடையில் ஒரு சமநிலையை உண்டாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுகிறது.

CBT, DBT ஆகிய இரண்டும், பிரச்னை கொண்டோரைக் குணப்படுத்துவதற்குச் சிகிச்சை வியூகங்களைப் பயன்படுத்துகின்றன. CBTயில் பலவிதமான பதற்றம் மற்றும் எழுச்சிநிலைக் கையாளல் உத்திகள் உள்ளன. அதேசமயம், DBTன் மையப் பகுதிகளில் ஒன்றாக மனமுழுமை அடிப்படையிலான தலையீடுகள் அமைகின்றன, இது வழக்கமான CBT நடைமுறைகளில் இல்லை.

பொதுவாக DBT சிகிச்சைத் திட்டத்தில் என்னென்ன இடம்பெறுகிறது?

DBTக்கான முதன்மைச் சிகிச்சை வழங்கல் முறைகள், தனிநபர் சிகிச்சை, குழுத் திறன் பயிற்சி மற்றும் ஆலோசகரைச் சந்திப்பதற்கிடையில் திறன் பயிற்சியளித்தல்.

சிகிச்சையளிப்பவர் பிரச்னையைச் சந்திப்பவருடன் ஒரு நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்குத் தனிநபர் சந்திப்புகள் உதவுகின்றன. அடுத்தடுத்த சந்திப்புகள் எப்போது நிகழவேண்டும் என்கிற வரம்புகளும் இந்தச் சந்திப்புகளின்போது தீர்மானிக்கப்படுகின்றன, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் குறிப்பிட்ட சவால்களுக்கான திறன்களைக் கற்றுத்தருவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பிரச்னைகளைச் சந்திப்பவர்கள் தங்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகப் பணியாற்றவேண்டும் என்று சிகிச்சையளிப்பவர் அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கிறார்.

திறன் பயிற்சி என்பது, பிரச்னைகளைச் சந்திக்கிறவர்கள் உணர்வுகளைக் கையாளும் தங்களுடைய திறனை மேம்படுத்துவதற்கான, தங்களை மேம்படுத்திக்கொள்வதை நெருங்குவதற்கான பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்வதாகும். இவற்றில் சில: மனமுழுமை, ஒருவர் தன்னுடைய உணர்வுகளை அறிதல், அவற்றை அடையாளம் காணுதல், தன்னைக் காயப்படுத்திக்கொள்ளும் வெளிப்பாடுகளைக் கையாளுதல், ஒரு நெருக்கடியைத் தானே கையாளுதல், உறவுகளில் தகவல்தொடர்பு (சிகிச்சையாளருடன் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை நடித்துக்காட்டுவதன்மூலம் கோரல்கள்/மறுத்தல்களை வெளிப்படுத்துதல்). திறன் பற்றாக்குறைகளைத் தொடர்ச்சியான பயிற்சியின்மூலம்தான் சிறப்பாகக் கையாள இயலும் என்பதால், இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.

பிரச்னைகளைச் சந்திக்கிறவர்கள் ஒரு நெருக்கடியில் இருப்பதாக உணர்ந்தால், சிகிச்சையளிப்பவரைத் தொடர்புகொள்ளவேண்டும், உடனடியாகத் திறன் பயிற்சியளித்தலைக் கோரவேண்டும் என்று ஊக்கப்படுத்தப்படுகிறது. பிரச்னைகளைச் சந்திக்கிறவர் எப்போதெல்லாம் சிகிச்சையளிப்பவரைத் தொடர்புகொள்ளலாம் என்பதற்கான வரம்புகளும் இந்த நிகழ்வுகளின்போது விவாதிக்கப்படுகின்றன.

இந்தக் கட்டுரை, NIMHANS மருத்துவ உளவியலாளர் டாக்டர் பௌலோமி சுதிர் வழங்கிய குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பார்வைகள்:

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org