மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

இயற்கைப் பேரழிவுகளும் மனநலமும்

இயற்கைப் பேரழிவுகளில் உயிர்தப்பியவர்களுக்கு, அடிப்படையான மருத்துவம், வீட்டுவசதி, நிதிதேவைகளைமட்டும் வழங்கினால் போதாது, அவர்களுக்கு உளவியல் சமூகவியல் ஆதரவும் தேவை.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நாங்கள் உணவகத்தின் கதவை நோக்கி ஓடினோம். பல ஆண்டுகளாக மலையடிவாரத்தில் வாழ்ந்துவருவதால், எனக்கும் என் நண்பர்களுக்கும் நடுக்கங்கள் என்றால் பழக்கம்தான். ஆனால், இந்த நடுக்கம் மிகப்பெரிதாக இருந்தது. அன்று மதியம் என் காலுக்கடியில் பூமி நடுங்கியதைப்போல் நான் முன்பு எப்போதும் உணர்ந்ததில்லை. நாங்கள் தெருவை நோக்கி ஓடினோம், எங்களைப்போல் பலரும் கட்டடங்களிலிருந்து வெளியே வந்து சாலையின் மையத்துக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தத் தீவிர நடுக்கங்கள் தொடர்ந்தன. சுமார் அறுபது விநாடிகள்தான் அந்த நடுக்கம் நீடித்ததாகப் பின்னர் சொன்னார்கள், ஆனால் உண்மையில் அது நெடுநேரம் நீடித்ததாகத் தோன்றியது. ஒருவழியாக அந்த நடுக்கம் நின்றபோது, சாலைமுழுவதும் மக்கள்தான் இருந்தார்கள்.

அதிர்ஷ்டவசமாக, அதிகச் சேதம் ஏற்படவில்லை. சில பழைய கட்டடங்களில் சில விரிசல்கள் விழுந்திருந்தன, அவ்வளவுதான். நாங்கள் சாலை நடுவே கும்பலாக அமர்ந்து, பின் அதிர்ச்சிக்காகக் காத்திருந்தோம், அப்போது, தொடக்க அதிர்ச்சி குறைந்தது, எங்களுக்கு ஒருவிதமான  நிம்மதியுணர்வு வந்தது. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். சுமார் ஒரு மணிநேரம் கழித்து, எங்களுடைய குடும்பத்தினருடனெல்லாம் தொலைபேசியில் பேசியபிறகு, நாங்கள் நகரின் பழைய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவத் தீர்மானித்தோம். அந்தப் பகுதிகளில் சேதம் மிக அதிகம் என்று நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால், அன்று நேருக்கு நேர் சந்தித்த அதிர்ச்சிக்கு நாங்கள் சிறிதும் தயாராக இல்லை.

பழைய நகர்ப்பகுதி பார்ப்பதற்கு அழகானது. ஆனால் இன்றைக்கு, அது வெறும் கற்குவியலாகக் கிடந்தது. அந்த இடிபாடுகளுக்கு நடுவே யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று மக்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த எனக்கு ஆழமான குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு உயிர்பிழைத்தவர்களைத் தேடிக்கொண்டிருந்த ஒரு குழுவில் நாங்கள் இணைந்துகொண்டோம். அந்தக் குறுகலான பாதைகளில் நடக்கும்போது, இந்த ஏழைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காததற்காக நான் வெட்கப்பட்டேன். பழைய அதிர்ச்சியும் பயமும் திரும்ப வந்துவிட்டது, திடீரென்று எல்லாம் குளிர்வதைப்போல் தோன்றியது.

அன்று மாலை நான் வீடு திரும்பியபோது, எதிலும் சுரத்தில்லாமல் காணப்பட்டேன்; என் பெற்றோர் என்னைப்பார்த்து நிம்மதியடைந்தார்கள், ஆனால் நான் வெறுமனே மரத்துப்போய் நின்றேன். எனக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள், என்னைத் தனியே விட்டுவிட்டார்கள். அன்று இரவு நான் அதிகம் தூங்கவில்லை.

அந்த நில நடுக்கம் நிகழ்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன, நகரம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. சிலருக்கு இன்னும் செங்கல் கட்டடத்துக்குத் திரும்பப் பயம்.  கூடாரங்களிலேயே வாழ்கிறார்கள். நல்லவேளையாக, நகரச்சூழல் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறிவிட்டது, உணவும் நீரும் போதுமான அளவு கிடைக்கிறது, மின்சாரம் திரும்பிவிட்டது, தண்ணீர்ப் பிரச்னை இப்போது இல்லை. பழைய நகரப்பகுதியில் வசிக்கும் எங்கள் நண்பன் ஆகாஷுக்குப் பாதிப்பு ரொம்ப அதிகம். நிலநடுக்கத்தின்போது, அவன் வீட்டில் இருந்திருக்கிறான். நிகழ்ந்த சேதத்தில் பெரும்பகுதியை நேரில் பார்த்திருக்கிறான். 'ஆகாஷ் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை' என்கிறார் அவனுடைய தாய். பல நேரங்களில், தூக்கத்திலேயே நிலநடுக்கம் நிகழ்வதுபோல் அவன் உணர்ந்திருக்கிறான். அவனுக்குச் சரியாகப் பசிப்பதில்லை, எப்போதும் தன்னுடைய அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்கிறான். 'அவன் இன்னும் அதிர்ச்சியில்தான் இருக்கிறான்' என்கிறார் ஆகாஷின் தந்தை. 'எல்லாம் சரியாகிவிடும்.' ஆகாஷின் தாய்க்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களால் இயன்றவரை அடிக்கடி ஆகாஷைச் சென்றுபார்க்கிறோம். அவனுக்கு எதிலும் ஆர்வமில்லை, ஆனால் நாங்கள் எங்கள் முயற்சியைத் தொடர்கிறோம்...

இது ஒரு கற்பனை விவரிப்பு. இந்தத் தலைப்பு நிஜவாழ்க்கைச் சூழலில் எப்படி அமையும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.

ஆம், பேரழிவிலிருந்து தப்பித்தவர்களுக்கு உளவியல் சமூகவியல் ஆதரவு தேவை.

ஓர் இயற்கைப் பேரழிவைக் கண்டுள்ள ஒவ்வொருவருக்கும், அதனால் பாதிப்பு இருக்கும், அவர்களுக்கு ஆதரவு தேவை. அந்த ஆதரவின் அளவு வேண்டுமானாலும் மாறுபடலாம். ஓர் இயற்கைப் பேரழிவின்போதும், அதன்பிறகும் மக்களுக்குப் பலவிதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. சிலரால் அவற்றை நன்கு சமாளிக்க இயலுகிறது. இதுபோன்ற பேரழிவுகளிலிருந்து உயிர்பிழைத்தவர்களிடம் இந்த உணர்ச்சிகள் கலவையாகக் காணப்படும்:

 • அதிர்ச்சி
 • பயம்
 • குற்றவுணர்ச்சி
 • கோபம்
 • எச்சரிக்கையுணர்வு
 • குறுக்கிடும் ஞாபகங்கள், பழைய நினைவுகள்
 • சோகம் மற்றும் விரக்தி

எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியில் உயிர்பிழைக்கிற எல்லாருக்குமே இந்த உணர்வுகள் இருக்கும். கொஞ்சம்கொஞ்சமாக, பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்வார்கள், நிலைமையைச் சமாளிக்கத்தொடங்குவார்கள். ஆனால், சிலரால் அப்படிச் சமாளிக்க இயலுவதில்லை. அவர்கள் தொடர்ந்து மேலும் துயரத்தைச் சந்திப்பார்கள். மனச்சோர்வு, அதிர்ச்சிக்குப்பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD), தூக்கக் குறைபாடுகள், போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல் போன்ற மன நலப் பிரச்னைகளுக்கு ஆளாவார்கள்.

அவர்கள் அனுபவித்துள்ள விஷயங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கிறபோது, உளவியல் சமூகவியல் ஆதரவு அவர்களுக்குத் தேவை. அவர்கள் சாவுக்கு அருகே சென்று திரும்பியிருக்கலாம், ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை இழந்திருக்கலாம், அவர்களுடைய வீடு சிதைந்துபோயிருக்கலாம். இத்துடன், உணவு மற்றும் தண்ணீரைப் பெறுவதில் அவர்களுக்குச் சவால்கள் இருக்கலாம், அதனால் அவர்களுக்குப் பல உடல்சார்ந்த ஆரோக்கியப் பிரச்னைகள் வரலாம். இத்தகைய அழுத்தங்களைத் தாங்கும் மன உறுதி, சரியான உணர்வுகள் எல்லாருக்கும் இருப்பதில்லை.

குறிப்பு: பேரழிவுகள் அல்லது அதுபோன்ற சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு அதிர்ச்சிகரமான பின்விளைவுகள் உடனே ஏற்படாமலிருக்கலாம். அவற்றின் தாக்கம் தொடங்குவதற்குச் சில நாள் ஆகலாம். ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகளில் உயிர்பிழைத்தவர்களுடைய உணர்வுகளைத் தொடர்ந்து நுண்ணுணர்வுடன் கவனித்துவரவேண்டும். சம்பந்தப்பட்ட நிகழ்வு நடந்து சில மாதங்கள் சென்றபிறகும் அவர்கள் அதிர்ச்சியின் தாக்கத்திலேயே இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு உளவியல் சமூகவியல் குறுக்கீடு தேவைப்படலாம்.

இயற்கைச் பேரழிவுகள் நடைபெற்றவுடனே, மக்களுக்கு இந்த உதவிகள் தேவைப்படும்:

 • பிரிந்துபோன அல்லது, வேறூ நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களைத் தேடுதல்.
 • பேரழிவைப்பற்றிப் பேசுதல், அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவை, தொலைநோக்கில் நல்ல பலன் தரக்கூடும். இவற்றால் தனிமையுணர்வு குறையும்.
 • அவர்கள் பல பிரச்னைகளை ஒரே நேரத்தில் சந்திக்கவேண்டியிருப்பதால், திகைத்துப்போகக்கூடும்; பிரச்னைகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதற்கு உதவுவதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும் முக்கியம்.

உங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஓர் இயற்கைப் பேரழிவில் உயிர்பிழைத்திருக்கிறார் என்றால், நீங்கள் அவருக்குப் பலவிதங்களில் உதவலாம்:

 • அவருக்கு ஆதரவாக இருங்கள், அவரிடம் பொறுமையாகப் பேசுங்கள், பழகுங்கள். அவர் ஒரு மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வைச் சந்தித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
 • அவர்களிடம் அந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசாமல் தவிர்க்கவேண்டாம், அதேசமயம், மிகவும் வற்புறுத்தவும் வேண்டாம். தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன்மூலம், அவர்களுடைய அதிர்ச்சி குறையலாம். அதேசமயம், இதனை நுண்ணுணர்வுடன் அணுகவேண்டும்.
 • அவர்கள் உணர்வுரீதியில் விலகியிருக்கிறார்கள், யாருடனும் பழகுவதில்லை என்றால், அது சகஜம்தான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
 • அந்த நிகழ்வுக்குப்பின் நெடுநாள்களாகியும் அவர்களால் உணர்வுத் துயரத்தைச் சமாளிக்க இயலவில்லை என்றால், அவர்கள் ஓர் ஆலோசகரைச் சந்திக்கச்சொல்லி ஊக்குவிக்கவேண்டும்.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org