மனநல மருந்துகளின் நன்மைகள் அவற்றால் வரும் பக்க விளைவுகளைவிட அதிகமா?

மனநல மருந்துகளின் நன்மை, தீமை குறித்து நிறைய பேசப்பட்டுள்ளது. மனநல மருந்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்ற அறிவுக் குறைவால் சில பயங்கள் ஏற்பட்டாலும், மருந்துகளால் பயனர்களுக்கு வரும் பக்க விளைவுகள் குறித்தும் கவலைகள் எழுப்பப்படுகின்றன. சகாரா மருத்துவமனையின் ஆலோசனை மனநல நிபுணர் மரு. சபினா ராவ் அவர்களிடம் இதுகுறித்துச் சில பொதுவான கேள்விகளைக் கேட்டோம்.

மனநல மருந்துகள் குறித்து மக்களுடைய பொதுவான கவலைகள் எவை?

மக்கள் மனநல மருந்துகளை எடுப்பதற்கு விரும்புவதில்லை. பல ஆண்டுகளில் நான் கேட்ட காரணங்களில் சில – “அவை எனது மூளையை மாற்றும்” அல்லது “நான் அவற்றைச் சார்ந்தவனாக மாறிவிடுவேன்”. அவர்கள் மனநல மருந்துகளுக்கு ‘அடிமையாகி’ விடுவார்கள் என்று சிந்திப்பதைத் தவிர, மக்கள் மன நல மருத்துவரைப் பார்ப்பது அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வது வலிமையின்மையின்மையின் அடையாளமாக நம்புகின்றனர். மன நல நிபுணரைப் பார்ப்பது அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வது நீங்கள் ‘நோயுற்று இருப்பது’ அல்லது நீங்கள் ஒரு ‘பைத்தியம்’ எனக் காட்டுகிறது என்று நினைக்கிறார்கள்.

மனநல மருந்துகள் நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்படுகின்றன என்ற உண்மையிலிருந்து இது தோன்றியதா?

சில நாட்களுக்குமட்டும் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் என்றால் ஆன்ட்டிபயாடிக்குகளும் வலி நிவாரணிகளும்தான். பிற அனைத்தும் நீண்ட நாளுக்குத் தொடர்பவை. அந்த அடிப்படையில் மன நல மருந்துகள் பிற மருந்துகளிலிருந்து வேறுபட்டவை அல்ல.  மனச்சோர்வுபற்றிய உலகச் சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மனச்சோர்வின் சதவிகிதம் மிக அதிகமாக (36%) உள்ளது. மற்றொரு ஆய்வு, ஒவ்வோர் ஆயிரம் பேரிலும் மூன்று முதல் நான்கு பேருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா இருப்பதாகக் காட்டுகிறது. அரிய நோய்களான ஸ்கிஜோஃப்ரெனியா போன்றவற்றுக்குப் பல நாள் மருந்துகள் தேவைப்படலாம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு அவ்வாறு தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டியிருக்காது.

ஆகவே, மனச்சோர்வு/பதற்றம் கொண்ட ஒருவர் மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிட்டால், பரிந்துரைக்கப்பட்டிருக்கக்கூடிய சிகிச்சை/ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆறு மாதம், சில நேரங்களில் ஒரு வருடம்வரை மருந்துகளைச் சாப்பிட்டால் போதும். அந்தப் பிரச்னை போய்விட்டால், அவர்கள் மருந்துகள் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஒருவர் ஒருமுறை மனச்சோர்வைப் பெற்றால், அவர் மீண்டும் மனச்சோர்வடைய 50 விழுக்காடு வாய்ப்புள்ளது, ஆனால் அவர் மனச்சோர்வு அடையாமல் இருக்கவும் 50 விழுக்காடு வாய்ப்புள்ளது.  எனவே, ஒருவர் ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மருந்துகளை உட்கொண்டால், அவர் தன்னுடைய மனச்சோர்வைக் கையாளச் சில திறன்களை கற்றுக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. அவர் மீண்டும் மனச்சோர்வுற்றால், மனச்சோர்வைக் கையாளக் கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு மருந்துகள் தேவைப்படாமலே இருக்கலாம்.

எந்த நிலையில் மனநல மருத்துவர்கள் வழக்கமாக மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்?

சில நோயாளிகள் ஏதோ ஒன்று சரியில்லை என்று அறிந்து வருகின்றனர், மேலும் அவர்களுக்குச் சிகிச்சையில் மருந்துகள் தேவைப்படலாம். இன்னும் சிலர் எதுவும் தெரியாமல் உள்ளே நுழைந்து, "உங்களைச் சந்திக்கவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள், அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு மருந்துகள் வேண்டாம்" என்கிறார்கள். மனநல மருத்துவரைப் பார்ப்பதால் மட்டுமே ஒருவர் சரியாகிவிடமாட்டார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் மருத்துவர் ஆலோசனையை மட்டும் பரிந்துரைத்தாலும், ஒன்று அல்லது இரண்டு அமர்வுகள் எதையும் சரிசெய்யப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்து இதனைப் பின்பற்றவேண்டும், பரிந்துரைக்கப்பட்ட அளவு அமர்வுகளுக்கு வரவேண்டும். எடுத்துக்காட்டாக, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை பதினாறு வாரங்களுக்கு, அதாவது, நான்கு மாதங்களுக்குத் தொடரும். ஒருவரால் அவ்வளவு நேரம் செலவிட இயலாவிட்டாலும், பாதி அமர்வுகளுக்காவது வரவேண்டும், அப்போதுதான் அவர் தன்னுடைய பிரச்னையைக் கையாளச் சில திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

அவர் சொல்வதைப்பொறுத்துதான் மருத்துவர் தீர்மானமெடுப்பார். ஒருவர் மருத்துவரிடம் வந்து, "நான் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறேன், இனி என்னால் வாழமுடியாது, எனக்கு நம்பிக்கையில்லை, யாரும் என்னை மதிப்பதில்லை, எனக்கு மனச்சோர்வாக இருக்கிறது" என்று சொன்னால், அவர் மருந்துகளைத் தருவார். ஏனெனில், இங்கே நோயானது “மிதமானது” என்று வரையறுக்கப்படவில்லை. ஆனால் இன்னொருவர், "எனக்கு அலுவலகத்தில் சிரமங்கள் உள்ளன. திகைப்பாக இருக்கிறது. தற்கொலை எண்ணங்கள் இல்லை" என்று சொன்னால், நான் அவருக்கு ஆலோசனையைமட்டுமே வழங்கக்கூடும். மனநல மருத்துவரின் மருத்துவமனைக்குச் செல்லும்போது, திறந்த மனதுடன் செல்லவேண்டும். மன நல மருந்துகள் போதைப் பொருட்கள் இல்லை. அவை பாதுகாப்பான மருந்துகள். அவற்றில் பெரும்பாலான மருந்துகளைக் கர்ப்பிணிகள்கூட உட்கொள்ளலாம்.

ஆனால் இப்போது அனைவரும் விரைவான சரிசெய்தல்களை விரும்புகிறார்கள்.

நோயாளி ஏதோ சரியில்லை என்று முதலில் உணரும்போது எனது அலுவலகத்திற்கு வந்தால், அவருடைய கால அளவுக்கு ஏற்ப நாங்கள் விஷயங்களைச் ‘சரிசெய்ய’ முயற்சிசெய்யலாம். ஆனால் அது இந்தியாவில் அரிதாகவே நடக்கிறது. மக்கள் மனநல மருத்துவரின் அலுவலகத்தில் நுழையும் நேரத்தில் நடுத்தரத்திலிருந்து தீவிரமான அசவுகரிய நிலைக்கு முன்னேறிவிடுகின்றனர்.  ஒருவருக்குப் பல மாதங்களாகத் தூக்கப் பிரச்னைகள் இருந்தால், எந்த மருத்துவராலும் அதை ஓரிரு நாட்களில் சரிசெய்ய இயலாது.  எல்லச்ா சிகிச்சைகளைப் போல், மன நல சிகிச்சைக்கும் நேரம் தேவைப்படுகிறது.

பொதுவான மனநலப் பிரச்னைகளுக்கான சிகிச்சையின் ஒரு பகுதி, பாதிக்கப்பட்டவர் சுற்றுச்சூழலில் உள்ள அழுத்தங்களை எப்படிப் பார்க்கிறார், அவற்றுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதை மாற்றுவதாகும். இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  பல ஆண்டுகள் உருவாக்கப்பட்ட ஒருவருடைய அறிவாற்றலை மாற்றுவதற்கு நேரமும் நோயாளியின் தரப்பிலிருந்து முயற்சியும் தேவைப்படும்.

ஆலோசனை, மருந்துகள் இடையிலான வழக்கமான விகிதம் என்ன?

மிதமான அறிகுறிகள் கொண்ட ஒருவருக்கு, ஆலோசனைமட்டுமே சிகிச்சையாக இருக்கலாம். ஆனால் நான் கூறியபடி, இந்தியாவில் மக்கள் மருந்துவரைப் பார்க்க வரும் நேரத்தில் அது நடுத்தரத்திலிருந்து தீவரமாகிவிடுகிறது. அந்த நிலையில், வழிகாட்டுதல்களின்படி மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை எதிர்பார்க்கலாம். மருந்துகள் வேண்டாம் என்று வலியுறுத்தும் நோயாளிகள் உள்ளார்கள், அவர்கள் சிகிச்சையை ஒழுங்காக மேற்கொள்ளவேண்டும். ஒரு முறை வந்துவிட்டு, மனச்சோர்வை உண்டாக்கிய அதே சூழலுக்குத் திரும்பச்செல்வது சரிப்படாது. ஒரு தீவிர வாராந்திரச் சிகிச்சையில் தொடங்கலாம், பின்னர் அதன் தேவை கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும்.

தீவிரமான மனநலக் குறைபாடுகள் எவை?

பைபோலார் குறைபாடு, ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது, மாயத்தோற்றங்களுடன் வரக்கூடிய தீவிர மனச்சோர்வு போன்றவற்றைக் கொண்டோர் மருந்துகளை மறுக்காமலிருப்பது நல்லது. இவை ஒருவருடைய பணி வாழ்க்கை, திருமண வாழ்க்கை, பிற அம்சங்களைப் பாதிக்கக்கூடிய தீவிர மனநலப் பிரச்னைகளாகும். வருத்தத்துக்குரிய விஷயம், சிகிச்சையைமட்டும் பின்பற்றி, மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. மேலும், பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளியைச் சமநிலைப்படுத்தாமல் நாங்கள் சிகிச்சையைத் தொடங்கக்கூட இயலாது.

மனநல மருந்துகளின் பக்க விளைவுகள் என்ன? இதுபற்றிக் கடும் அச்சம் உள்ளது.

பொதுவான மன நல நோய்களுக்கான மனநல மருந்துகளில் பக்க விளைவுகள் மிதமானவை. பல நோயாளிகள் எங்களை அழைத்து, தங்களுக்கு வாந்தி, தலைவலி, வறண்ட வாய் அல்லது சோர்வு போன்றவை இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை மிதமான பக்க விளைவுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், அவற்றின் நன்மைகளோடு ஒப்பிடும்போது, பக்க விளைவுகளின் ஆபத்து குறைவு. நாங்கள் முன்பு பயன்படுத்திவந்த முச்சுழல் மனச்சோர்வு மருந்துகளைப்போலின்றி, பொதுவான மனநலப் பிரச்னைகளுக்கான புதிய மருந்துகளில் பக்க விளைவுகள் மிகவும் மிதமானவை. அரிதாக ஒருவர் பக்க விளைவைப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அது மிகக் குறைவு.

ஆனால் தீவிரமான மனநலக் குறைபாடுகளுக்கான மருந்துகளில் ஒருவர் தன்னை இழக்கும் உணர்வு உள்ளதாகப் புகார்கள் உள்ளன. அதை எப்படிச் சமாளிப்பது?

இது எப்படிப் பணியாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஒருவருக்கு பைபோலார் குறைபாடு உள்ளதாக வைத்துக்கொள்வோம். அவர்களில் சிலர் இந்தக் கற்பனையை மிகவும் அனுபவிக்கலாம், படைப்பாற்றிலின் பாய்வை உணரலாம், மருந்துகள் அவற்றை மரத்துப்போகச்செய்யலாம். ஆனால், இந்தக் கற்பனை பெரும்பாலும் ஆபத்தான நிலை, வாழ்வை அச்சுறுத்தும் நிலைக்குச் செல்லலாம். அதேசமயம், அவர்கள் மனச்சோர்வுக்கு மருந்துகளை விரும்பலாம், ஏனெனில் அவர்கள் நம்பிக்கையற்று உணர்கிறார்கள். அரிதான, தீவிரமான நோய்கள் வந்தவர்களுடைய குடும்பத்தினரும் இதில் பங்கேற்கவேண்டும். நோயாளி சரியாகத் தீர்மானிக்கக் குடும்பத்தினர் உதவலாம். நிச்சயமாக அவர் மந்தமாக, களைப்பாக உணர்வார், மருந்துகளால் அவருடைய எடை அதிகரிக்கலாம். ஆனால் அதற்காகச் சிகிச்சையே அளிக்காமல் விட்டுவிட்டால், அது கட்டுப்பாடில்லாமல் பரவிவிடக்கூடும். மருந்தில்லாத ஸ்கிஜோஃப்ரெனியா மிகவும் மோசமடையக்கூடும். இருப்பினும், காலப்போக்கில், தீவிர நோய்களுக்குக்கூட, ஒருவர் ஆலோசனையிலிருந்து திறன்களைக் கற்றுக்கொண்டு சில அறிகுறிகளைக் கையாளலாம், மருந்துகளைக் குறைக்கலாம், கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

ஆகவே, மனநல நிபுணருடன் தொடர்பில் இருப்பது, தன்னுடைய அறிகுறிகளைக் கண்காணிப்பது ஆகியவையே பாதி வேலை.

சொல்லப்போனால், அது பாதி வேலைக்குமேல். பொதுவான மனநலக் குறைபாடுகளில், ஒருவர் சரியான நேரத்தில் மருந்துகளிலிருந்து வெளியேறலாம், மேலும் பல நிகழ்வுகளில் அவர் நிலைப்படலாம், அல்லது அறிகுறிகள் இன்றி இருப்பதற்குத் தேவையான அளவைக் குறைக்கலாம்.

மாற்றுச் சிகிச்சைகள் பலன் தருமா?

ஒரு நோயாளி மாற்றுச் சிகிச்சைகளை முயன்றுபார்ப்பதை எந்த மருத்துவராலும் தடுக்க இயலாது. ஆனால், மாற்று மருந்துகள் மனநல நிபுணர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் குறுக்கிடலாம் என்பதை நோயாளி அறிந்திருக்கவேண்டும். நமக்குப் பெரும்பாலும் மாற்று மருந்துகள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரியாது, ஏனெனில் அதில் போதிய ஆய்வுகள் இல்லை, மேலும் மனநல மருத்துவர்களும் மாற்றுச் சிகிச்சை முறைகளில் நிபுணர்கள் இல்லை. ஒருவர் குணமாவதற்கு யோகா மற்றும் தியானம் உதவலாம். ஆனால், இன்னொரு மருந்து அல்லது பொடியை உட்கொள்வதென்றால், அது அலோபதி மருந்துடன் எப்படி எதிர்வினை புரிகிறது என்பது எனக்குத் தெரியாது.

பல நேரங்களில், மனநல மருத்துவர்களுக்கு நேரமில்லாததால் நோயாளிகளுக்கு மருந்துகளைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

மக்கள் இப்படிச் சிந்திப்பது தவறு என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்தியால் இது எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா? உண்மையில் நோயாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது போதுமான மனநல மருத்துவர்கள், மனநல ஆய்வாளர்கள் அல்லது மனநலச் சமூகப் பணியாளர்கள் இங்கே இல்லை. ஆகவே, ஒரு மருத்துவரைப் பார்க்க நூறு பேர் வரிசையில் நிற்கலாம். ஒருவர் தன்னுடைய அறிகுறிகள் மிதமானதிலிருந்து தீவிரமானதாக மாறும்போது மருத்துவமைனக்கு வரலாம், எனவே மருத்துவர் விசயங்களை நிலைப்படுத்த மருந்துகளைக் கொடுக்கவேண்டும். அதன்பிறகு, அவர் மனநல மருத்துவருடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும், ஆனால் பெரும்பாலும் நாங்கள் குறைந்த வளங்களுடன் உள்ளோம். எனவே, பெரும்பாலான மருத்துவர்கள், 'பிரச்னையின் ஒரு பகுதியையாவது நான் தீர்த்துவிட்டேன்' என்றுதான் நினைக்கிறார்கள்.

என் எண்ணம், மருத்துவரை ஐந்தே ஐந்து நிமிடங்கள் சந்தித்தாலும் அது நல்ல உதவியாக இருக்கும். சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பரபரப்பான வேலைகளுக்கு நடுவே ஆலோசனைக்குச் செல்ல நேரத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.

அவர் தான் கூற விரும்புபவை, அல்லது, மருத்துவரிடம் கேட்க விரும்புபவற்றை எழுதிவைத்துக்கொண்டு செல்லலாம். அதன்மூலம், மருத்துவருடன் அவர் அமரும் நேரம் பயனுள்ளதாக இருக்கும். இது எலும்பு மருத்துவர், தோல் மருத்துவர் அல்லது பிற எந்த மருத்துவருக்கும் பொருந்தும். மருத்துவர்களின் காத்திருப்பு அறைகள் நிறைந்து வழிகின்றன, இதை மாற்றவேண்டும் என்றுதான் நாம் எல்லாரும் நினைக்கிறோம். எங்கள் நோயாளிகளுடன் அதிக நேரம் நிதானமாகப் பேசுவதையே நாங்களும் விரும்புகிறோம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org