மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

மின்சார வலிப்புச் சிகிச்சை (ECT): உண்மை அறிவோம்

ECT பற்றிய அறிவியல்பூர்வமான உண்மைகளை மக்கள் அறிவதில்லை, அதனால் இந்தச் சிகிச்சையைப்பற்றிய தவறான நம்பிக்கைகளை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தவறான நம்பிக்கை: ECT சிகிச்சை ஒருவர் தன் ஞாபக சக்தியை இழக்கவேண்டும் என்பதற்காகத் தரப்படுகிறது.

உண்மை: ECT சிகிச்சை பெறுகிற ஒருவர் தாற்காலிகமாக ஒரு சில நினைவுகளை இழக்கக்கூடும். இது இந்தச் சிகிச்சையின் பக்க விளைவு ஆகும். ஆனால் இந்த நினைவிழப்பு தீவிரமானதல்ல. மிகச் சிறிய, மிதமான அளவில்தான் நினைவிழப்பு காணப்படும். அதாவது சமீபத்தில் நடந்த சில விஷயங்களை மட்டுமே அவர்கள் மறக்கக்கூடும். ECT சிகிச்சை முடிந்தவுடன், அவருடைய ஞாபகசக்தி மறுபடியும் வந்துவிடும்.

தவறான நம்பிக்கை: ஒருவர் மனநல மருத்துவமனையின் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கே தெரியாமல் அவருக்கு ECT சிகிச்சை தரப்படலாம்.

உண்மை: ECT சிகிச்சையானது எப்போதும் பாதிக்கப்பட்டவர், அவருடைய குடும்ப உறுப்பினர்களுடைய சம்மதத்தின்பேரில் தான் வழங்கப்படுகிறது. இதுபற்றி மருத்துவர் அவர்களிடம் விவாதித்துவிட்டு, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றபிறகுதான் சிகிச்சையைத் தொடங்குவார்.

தவறான நம்பிக்கை: ECT அனுபவம் மிகவும் வலிமிகுந்தது, பயமுறுத்தக்கூடியது

உண்மை: ECT சிகிச்சை எப்போதும் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகே தரப்படுகிறது. ஆகவே இந்தச் சிகிச்சையைப் பெறுபவர் எந்தவிதமான வலியையோ, மின் அதிர்ச்சியையோ பெறுவதில்லை.

தவறான நம்பிக்கை: ECT சிகிச்சையால் மூளை சேதமடைகிறது, அதனால், அவருடைய புத்திசாலித்தனம் குறைந்துவிடும், அவரது ஆளுமை மாறிவிடும்.

உண்மை: ECT சிகிச்சையால் ஒருவருடைய மூளை எந்தவிதத்திலும் சேதமடைவதில்லை, தாற்காலிகமாக அவர்களுக்கு மறதி ஏற்படலாம், அதனால் ECT சிகிச்சை பெறுகிற நேரத்தில் நடந்த வேறு சில நிகழ்ச்சிகளை அவர்கள் மறந்துவிடக்கூடும். மற்றபடி ECT ஒருவருடைய ஆளுமையையும் ஒட்டுமொத்த அறிவுத்திறனையும் பாதிப்பதில்லை.

தவறான நம்பிக்கை: ECT என்பது மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ஒரு தண்டனை

உண்மை: ECT என்பது தண்டனை அல்ல, அது ஒரு மருத்துவ சிகிச்சை. பாதிக்கப்பட்டவருடைய உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக செய்யப்படுகிறது. இதில் வலி ஏதும் கிடையாது ஆகவே இதனை தண்டனையாகக் கருதவேண்டியதில்லை.

தவறான நம்பிக்கை: : ஒருவருக்கு ECT செய்யவேண்டும் என்று மருத்துவர் சிபாரிசு செய்கிறார் என்றால், அவருக்கு மற்ற எந்தச் சிகிச்சை முறையும் பலன் தரவில்லை என்று பொருள், அவர்கள் குணமாவார்கள் என்ற நம்பிக்கையை மருத்துவரே இழந்துவிட்டார் என்று பொருள்.

உண்மை: ECT என்பது மற்ற மருத்துவ முறைகளைப் போல் வழங்கப்படும் ஒரு சிகிச்சைதான், அந்தச் சிகிச்சைகளையெல்லாம் விட ECT சிறந்தது என்று மருத்துவர் கருதினால், அதை சிபாரிசு செய்வார். ஒருவேளை பாதிக்கப்பட்டவரோ அவரது குடும்பத்தினரோ ECT சிகிச்சையை செய்துகொள்ள விரும்பவில்லை என்றால், அவர் அடுத்து உள்ள சிறந்த சிகிச்சையை சிபாரிசு செய்வார்.

தொகுத்தவர் டாக்டர் ப்ரீத்தி சின்ஹா, உளவியல் ஆலோசகர், தேசிய மனநல & நரம்பு அறிவியல் அமைப்பு (NIMHANS), பெங்களூரு

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org