மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

ஹெல்ப்லைனை எப்போது அழைக்கவேண்டும்?

ஹெல்ப்லைன்கள் என்பவை, ஒருவர் தன்னுடைய பெரிய, சிறிய பிரச்னைகளைக் கையாள்வதற்கான உளவியல் ஆதரவை வழங்குகின்றன

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஹெல்ப்லைன் என்றால் என்ன?

ஹெல்ப்லைன் என்பது, நெருக்கடிச் சூழலில் உள்ள மக்களுடைய பிரச்னைகளைக் கேட்கக்கூடிய, அவர்கள்மீது தீர்ப்புச்சொல்லாத ஒரு சேவை ஆகும். இந்தச் சேவை பெரும்பாலும் தொலைபேசிவழியாக வழங்கப்படுகிறது. சில ஹெல்ப்லைன்கள் எல்லா நாள்களிலும் எல்லா நேரங்களிலும் இயங்குகின்றன (24/7), வேறு சில ஹெல்ப்லைன்கள் குறிப்பிட்ட நேரத்தில்மட்டும் இயங்குகின்றன. உணர்வுத்துயரத்தில் இருக்கும் ஒருவர் ஹெல்ப்லைனை அழைத்து ஆதரவு கோரலாம்.

ஒருவர் ஏன் ஹெல்ப்லைனை அழைக்கவேண்டும்?

எல்லாருக்கும் வாழ்க்கையில் அழுத்தங்கள் வரும், சவால்கள் வரும், அவற்றைச் சமாளிக்க இயலாமல் அவர்கள் சிரமப்படக்கூடும். சில நேரங்களில், இதுபோன்ற சிரமங்களை அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். வேறு சில நேரங்களில், அப்படிப் பகிர்ந்துகொண்டால் அவர்கள் தங்களைப்பற்றித் தவறாக நினைத்துவிடுவார்களோ, தங்களை வேறுவிதமாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்களோ, அந்தப் பிரச்னைகளே தங்களைப்பற்றிய பிம்பத்தை மாற்றிவிடுமோ என்று அவர்கள் தயங்குகிறார்கள், தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதில்லை. சில நேரங்களில், பிரச்னை சார்ந்த சில அந்தரங்கமான விஷயங்களைத் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்கக்கூடும். ஒருவேளை, தங்களுடைய மனத்தில் உள்ளதை அவர்கள் யாரிடமாவது  பகிர்ந்துகொள்ள விரும்பினாலும், அவர்கள் சிரமத்தில் உள்ளபோது அந்த இன்னொருவர் அருகில் இருக்கவேண்டுமே! வேறு சில நேரங்களில், பிரச்னையில் உள்ளவர்களுக்கு அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்றே தெரிந்திருக்காது; அந்த நேரத்தில், அவர்களுடைய மனத்தில் உள்ளதை யாராவது காதுகொடுத்துக்கேட்டாலே போதும், என்ன செய்யலாம் என்கிற தெளிவு பிறந்துவிடும். இந்தச் சூழ்நிலைகள் அனைத்திலும், ஹெல்ப்லைன்கள் உதவும். நாட்டின் பல இடங்களில், ஒருவர் மனநலப் பிரச்னைக்கான சிகிச்சை பெறுவதைவிட, ஒரு ஹெல்ப்லைனை அழைப்பது மிக எளிது.

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கிறார் என்றால், அதன்மூலம் அவர் எதையும் இழக்கப்போவதில்லை, பெறப்போவதுதான் அதிகம். பெரும்பாலான ஹெல்ப்லைன்கள் இலவசச் சேவைகளை வழங்குகின்றன (இவற்றை அழைப்பவர்கள் தொலைபேசி அழைப்புக்கான ஒரு சிறிய கட்டணத்தைமட்டும் செலுத்தினால் போதும்), சில ஹெல்ப்லைன்களில் பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் இருப்பார்கள், இவர்கள் பிரச்னையில் உள்ளோருக்கு உளவியல் ஆதரவு வழங்குவார்கள். ஒருவர் ஹெல்ப்லைனை அழைத்துச் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். தனக்கு உணர்வுப்பிரச்னையை உண்டாக்கும் எதைப்பற்றியும் அவர் சுதந்தரமாகப் பேசலாம், ஹெல்ப்லைனில் உள்ளவர்கள் தன்னைத் தவறாக எடைபோடுவார்களோ என்று அஞ்சவேண்டியதில்லை, தன்னுடைய தனிப்பட்ட விவரங்கள் பொதுவில் வெளியாகிவிடுமோ என்று தயங்கவேண்டியதில்லை.  ஹெல்ப்லைனில் உள்ள ஆலோசகர் ஒருவருடைய தேவைகளைக் கேட்டறிந்துகொண்டு, அவர்கள் தங்களுக்கருகே உள்ள யாரிடம் உதவி பெறலாம் என்று சிபாரிசும் செய்யக்கூடும்.

ஹெல்ப்லைன் என்பது நெருக்கடி நேரங்களில்மட்டும்தானா?

ஹெல்ப்லைன் என்பது, நெருக்கடி நேரங்களில்மட்டும் பயன்படுத்தப்படுகிற ஒன்றல்ல, உயிருக்கு ஆபத்து வந்தால்தான் ஹெல்ப்லைனை அழைக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவர் தனக்கு வந்துள்ள எந்தவொரு பிரச்னையைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஹெல்ப்லைனை அழைக்கலாம், அதனை எப்படிக் கையாள்வது என்று கேட்டு உதவிபெறலாம். தனக்குத் தெரிந்த இன்னொருவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறது என்று ஒருவர் நினைத்தால், அவர் சார்பாக இவரே ஹெல்ப்லைனை அழைத்துத் தேவையான விவரங்களைப் பெறலாம்.

ஹெல்ப்லைன் என்பது தொலைபேசியில்மட்டும்தான் கிடைக்குமா?

சில ஹெல்ப்லைன்கள் தொலைபேசியில்மட்டுமே கிடைக்கின்றன, வேறு சில ஹெல்ப்லைன்கள் (உதாரணமாக TISSன் iCall) மின்னஞ்சல்வழியாகவும் உளவியல் ஆதரவை வழங்குகின்றன. இன்னும் சில ஹெல்ப்லைன்கள் பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்தும் ஆலோசனை வழங்குகின்றன. உதாரணமாக, பரிவர்த்தன் மற்றும் ஸ்நேஹா ஆகியவை.

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது, அங்கே என்ன நடக்கும்?

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது, இவை நடைபெறும்:

 • அழைத்தவர் ஓர் ஆலோசகருடன் பேசலாம், அல்லது, குறைந்தபட்சப் பயிற்சி, ஆலோசனைத் திறன்களைக் கொண்ட ஒரு தன்னார்வலருடன் பேசலாம்
 • அந்த ஆலோசகரிடம் யாராவது பேசினால், அவர்களைப்பற்றி அவர் தீர்ப்புச்சொல்லமாட்டார், பச்சாத்தாபத்தோடு அவர்கள் சொல்வதைக் கேட்பார்
 • அந்த ஆலோசகரிடம் பேசுவதன்மூலம், ஒருவர் தன்னுடைய பிரச்னையைத் தெளிவாக்கிக்கொள்ளலாம்
 • எந்தப் பிரச்னையைப்பற்றியும் பேசலாம், அதை யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள்
 • தன்னுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கூடுதல் உதவியை எங்கே பெறுவது என்று தெரிந்துகொள்ளலாம்
 • இந்த விஷயத்தில் உதவக்கூடிய நிபுணர்களைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்
 • அவருக்கு உதவக்கூடிய மற்ற எதார்த்தமான ஆதரவைப் பெறலாம், உதாரணமாக, ஒரு குழந்தை துன்புறுத்தப்படுகிறது என்றால், குழந்தைகளுக்கு உதவும் சேவைகளைப்பற்றிய விவரங்களைப் பெறலாம்.

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது, அங்குள்ள ஆலோசகர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார், அழைத்தவருடைய பெயரைக் கேட்பார், அந்த அழைப்பு எவ்வளவு நேரம் நீடிக்கலாம் என்பதுபற்றிச் சொல்வார். ஒவ்வொரு ஹெல்ப்லைனிலும், அழைப்பவர் அதிகபட்சம் எவ்வளவு நேரம் பேசலாம் என்பதற்கான நெறிமுறைகள் இருக்கும், அதன்பிறகு, அழைப்பு துண்டிக்கப்படும். அழைத்தவருடைய வயது, இடம் ஆகியவற்றைப்பற்றி ஆலோசகர் கேட்கலாம். இதன்மூலம், தேவைப்பட்டால் அவர்கள் பொருத்தமான சிபாரிசுகளைச் செய்ய இயலும். அழைத்தவருக்குத் தன்னுடைய பெயரைச் சொல்ல விருப்பமில்லையென்றால், பிரச்னையில்லை. அந்த உரையாடலின்போது அவர் எந்தப் பெயரில் அழைக்கப்படவேண்டும் என்றுமட்டும் சொன்னால் போதும், அப்போதுதான் அந்த உரையாடல் இயல்பாக அமையும். ஹெல்ப்லைனின் ரகசியக்காப்புக் கொள்கைகளைப்பற்றியும் ஆலோசகர் சொல்லலாம்.

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு ஹெல்ப்லைனை அழைக்கலாம்?

பலவிதமான ஹெல்ப்லைன்கள் இருக்கின்றன, எந்தப் பிரச்னைக்கு ஆதரவு தேவை என்பதைப்பொறுத்து, ஒருவர் எந்த ஹெல்ப்லைனை அழைக்கவேண்டும் என்பது மாறுபடும். பெரும்பாலான ஹெல்ப்லைன்களில் 'கவனித்தல் சேவைகள்' வழங்கப்படுகின்றன. வேறு சில ஹெல்ப்லைன்களில், அழைத்தவர் நேரடியான நிபுணர் ஆதரவைப் பெறுவது எப்படி என்பதுபற்றிய விவரங்களும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கான ஆதரவுகளை வழங்கும் ஹெல்ப்லைன்கள் உள்ளன: குழந்தைகள்மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், LGBT பிரச்னைகள் போன்றவை. இந்த ஹெல்ப்லைன்கள் தங்களை அழைப்போருக்குக் குறிப்பிட்ட விவரங்கள், வளங்களை வழங்கி உதவுகின்றன.

தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் சார்பாக, அதாவது, இன்னொருவருக்கு உதவி பெறுவதற்காக ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கலாமா?

ஆம், இன்னொருவருடைய நலன் அல்லது பிரச்னைகளைப்பற்றிய கவலைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஹெல்ப்லைனை அழைக்கலாம். அதற்கு உரிய வளங்களை வழங்கி அவர்கள் வழிகாட்டுவார்கள். அதேசமயம், ஒருவருக்கு ஒப்புதல் இல்லாதபோது இன்னொருவர் அவருக்கு ஆலோசனை வழங்க இயலாது. ஓர் ஆலோசனை சிறப்பாக அமையவேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர் தானாக விரும்பி ஆலோசனைக்கு வரவேண்டும். அதேசமயம், ஒருவருடைய பிரச்னைக்காக இன்னொருவர் ஹெல்ப்லைனை அழைத்தால், பாதிக்கப்பட்டவருடைய பிரச்னையைப்பற்றிப் பேசுவதற்காக அவரை அணுகுவது எப்படி என ஆலோசகர் சொல்லித்தரலாம், அல்லது, அவருடைய பிரச்னையைப்பற்றி இவர் கொண்டிருக்கும் பயங்கள், பதற்றங்களைக் கையாள்வது எப்படி என்று கற்றுத்தரலாம்.

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கிறார் என்றால், அவர் யாருடன் பேசுவார்?

ஹெல்ப்லைனை அழைக்கிற எவரும் ஓர் ஆலோசகரிடம் பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த ஆலோசகர் உளவியல், சமூகவியல் ஆதரவு வழங்குவதற்கு ஓரளவு பயிற்சி பெற்றிருப்பார். ஹெல்ப்லைனில் பேசுகிறவருடைய தகுதிகள், அந்த ஹெல்ப்லைனின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளைப்பொறுத்து அமையும். பெங்களூரில் உள்ள ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆய்வு மையமான பரிவர்த்தன் நடத்தும் ஹெல்ப்லைனை யார் அழைத்தாலும் சரி, அவர்களுக்குப் பதில் சொல்லும் ஆலோசகர்கள் ஆலோசனைத் திறன்களில் ஒரு வருடம் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள், அத்துடன், குழந்தைகள், வளர்இளம்பருவத்தினர் மற்றும் தம்பதிகள், குடும்பத்தினருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பார்கள். டாடா சமூக அறிவியல் கல்வியகம் நடத்தும் iCall ஹெல்ப்லைனில் பேசுகிறவர்கள் மருத்துவ உளவியல் அல்லது செயல்முறைசார்ந்த உளவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற நிபுணர்களாக இருப்பார்கள்.

சில ஹெல்ப்லைன்களில் தன்னார்வலர்கள் பேசுவார்கள், மற்ற சில ஹெல்ப்லைன்களில் முழுநேரப் பணியாளர்கள் பேசுவார்கள். ஒரு ஹெல்ப்லைனில் பேசுகிறவர்கள் தன்னார்வலர்களாக இருந்தாலும் சரி, பகுதிநேர அல்லது முழுநேர ஊழியர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அந்த ஹெல்ப்லைனில் பேசத் தொடங்குமுன், தொலைபேசிவழி ஆலோசனை வழங்குதலில் பயிற்சி பெறுகிறார்கள். சில ஹெல்ப்லைன்களில், இந்தப் பிரச்னைகளை நேரடியாக அனுபவித்தவர்களும் இருப்பார்கள். தங்களைப்போலவே பிரச்னைகளைச் சந்திக்கிறவர்களுக்கு உதவவேண்டும் என்று இவர்கள் முன்வந்து பேசுகிறார்கள்.

ஹெல்ப்லைனில் ஒருவர் பேசுகிறார் என்றால், அவர் சொல்லும் விவரங்கள் வேறு யாரிடமாவது பகிர்ந்துகொள்ளப்படுமா?

பொதுவாக ஹெல்ப்லைன்களில் பேசப்படும் விஷயங்கள் ரகசியமாகவே வைக்கப்படும். பெரும்பாலான ஹெல்ப்லைன்கள் அழைத்தவருடைய பெயர், தொடர்பு எண், அல்லது, அவரை அடையாளம் காட்டக்கூடிய வேறு விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஒருவேளை அழைத்தவரால் அவருடைய உயிருக்கோ, சுற்றியிருக்கிற மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்து வரும் என்று தெரிந்தால்மட்டுமே அந்த விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படலாம். ஹெல்ப்லைனை அழைக்கும் ஒருவருக்குத் தன்னுடைய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமா என்கிற சந்தேகம் இருந்தால், தொடக்கத்திலேயே இதைப்பற்றிக் கேட்கலாம், இதுதொடர்பான அவர்களுடைய கொள்கையை விளக்கச்சொல்லலாம். பெரும்பாலான ஹெல்ப்லைன்கள் தங்களுடைய கொள்கைகளைத் தங்கள் இணையத்தளங்களிலும் தெளிவாக அறிவிக்கின்றன. ஆகவே, அழைப்பதற்குமுன்னால் அதைப் படித்துவிடுவதும் நல்லது.

ஒருவர் யாரையும் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை பெற விரும்பவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஹெல்ப்லைனையே அழைத்துக்கொண்டிருக்கலாமா?

கூடாது. ஹெல்ப்லைன்கள் ஒருபோதும் நீண்டகால ஆலோசனைச் சேவைகளுக்கு மாற்று ஆகாது. அதேசமயம், மனநலப் பிரச்னை கொண்ட எல்லாரும் ஓர் உளவியலாளரையோ ஒரு மனநல மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது, அங்குள்ள ஆலோசகர் அவரது தேவைகளை மதிப்பிடுவார், அவருக்குக் கூடுதல் ஆதரவு தேவையா என்று புரிந்துகொள்வார். ஒருவேளை அவருக்குக் கூடுதல் ஆதரவு தேவை என்றால், அவருடைய பிரச்னைகளுக்குத் தொடர்பான மனநலச் சிகிச்சைச் சேவைகளைப்பற்றி ஆலோசகர் சொல்வார், அல்லது, அவர் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள ஒரு மனநல நிபுணரிடம் செல்லுமாறு சிபாரிசு செய்வார்.

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் ஹெல்ப்லைன்மூலம் ஆலோசனை பெற்று அதைக் குணப்படுத்திக்கொள்ள இயலுமா?

ஹெல்ப்லைன் ஆலோசனை என்பது, எல்லா மனநலப் பிரச்னைகளுக்கும் பொருந்தாது, அல்லது, போதாது. சில மனநலப் பிரச்னைகளுக்கு மருந்துகள், தெரபி, புனர்வாழ்வு தேவைப்படலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்கள் ஒரு மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படலாம்.

ஒருவர் ஹெல்ப்லைனை அழைக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்:

ஒரு ஹெல்ப்லைனை அழைக்குமுன், அவர்களால் என்ன செய்ய இயலும், என்ன செய்ய இயலாது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். செய்யக்கூடாதவை சில:

 • ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று நினைக்கவேண்டாம். சில பிரச்னைகள் தீவிரமானவையாக இருக்கலாம், அவற்றைத் தீர்க்க நீண்டகால உதவி தேவைப்படலாம்.
 • பிரச்னையைத் தீர்ப்பதில் தனக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம். ஒருவர் தன்னுடைய பிரச்னைகளை ஓர் ஆலோசகரிடம் சொல்கிறார் என்றால், அவற்றைத் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு உடனே அந்த ஆலோசகரிடம் சென்றுவிடாது.
 • அறிவுரைகளைக் கோரவேண்டாம்: இப்போது என்ன செய்யவேண்டும்? ஆலோசனையின் நோக்கம், ஒருவர் தெளிவுபெற உதவுதல், தனது சவால்களைத் தானே தீர்த்துக்கொள்வதற்கான வழிகளை, திறன்களைப் பெற உதவுதல்தான். மற்றபடி, இன்னொருவருடைய பிரச்னைகளுக்கு ஆலோசகர்கள் தங்களுடைய தீர்வுகளைச் சொல்வது சரிப்படாது.
 • அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவேண்டாம்: சில பெற்றோர், ஹெல்ப்லைனை அழைத்து, 'எங்கள் பிள்ளைகளுக்கு இப்படியெல்லாம் அறிவுரை சொல்லுங்கள்' என்கிறார்கள். அதாவது, தங்கள் பிள்ளைகள் என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதை ஹெல்ப்லைன் அவர்களிடம் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது அந்தக் குழந்தைகளை ஏமாற்றும் செயல் ஆகும். பெற்றோரும் ஆலோசகர்களும் தங்களுக்கு எதிராக அணிதிரண்டுவிட்டார்கள் என்று அவர்கள் எண்ணக்கூடும், தங்களுடைய பெற்றோரிடமிருந்து மேலும் விலகிச்செல்லக்கூடும்.
 • ஹெல்ப்லைனில் உள்ளவர்களைத் திட்டவேண்டாம், அந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்: சிலர் ஹெல்ப்லைனை அழைத்துக் கெட்டவார்த்தையில் பேசுவார்கள், அல்லது, தங்களது பாலியல் கற்பனைகளை விரிவாகப் பேசுவார்கள்.
 • "சும்மா அரட்டையடிப்பதற்காக" ஹெல்ப்லைனை அழைக்கவேண்டாம். ஹெல்ப்லைனில் உள்ள ஆலோசகர் தன்னுடைய சேவைகளை வழங்கும் ஒரு நிபுணர், அல்லது தன்னார்வலர், அவரை நண்பராக நினைத்துக்கொண்டு அரட்டையடிக்கவேண்டாம். அழைப்பவர், ஆலோசகர் இடையிலான உறவு அலுவல்முறையில் இருப்பது அவசியம். ஒருவர் சும்மா நட்புரீதியில் அரட்டையடிக்க ஹெல்ப்லைனை அழைக்கிறார் என்றால், உண்மையிலேயே நெருக்கடியில் இருக்கிற இன்னொருவருக்குச் சரியான நேரத்தில் உதவி கிடைக்காதபடி அவர் தடுக்கிறார் என்று பொருள்.

ஒருவர் தன்னுடைய பிரச்னைக்கு ஏற்ற ஹெல்ப்லைனை எப்படிக் கண்டறிவது?

ஒருவருடைய பிரச்னைக்கு இந்த ஹெல்ப்லைன்தான் சிறந்தது, இதுதான் நல்ல பலன் தரும் என்று கண்டறியத் தனியே ஒரு வழி எதுவும் இல்லை. ஹெல்ப்லைனை அழைக்கிறவர் அவர்களுடைய ரகசியக்காப்புக் கொள்கைகளை வாசித்துத் திருப்தியடையவேண்டும், தன்னுடைய கதையை அவர்களிடம் பகிர்ந்துகொள்வதை எண்ணிப் பாதுகாப்பாக உணரவேண்டும். ஒரு ஹெல்ப்லைனை அழைத்துப் பேசியபிறகு, அவர் தன்னைத்தானே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: அவர் எந்தத் தேவைகளுக்காக இந்த ஹெல்ப்லைனை அழைத்தாரோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகின்றனவா? அவர் தனது பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டபோது, கவலைகளைச் சொன்னபோது, கேள்விகளைக்கேட்டபோது, அவற்றுக்கு ஆலோசகர் எப்படிப் பதிலளித்தார்? ஆலோசகரின் அணுகுமுறை அழைத்தவருக்குத் திருப்தியளித்ததா? இந்த அழைப்புக்குப்பிறகு, அவர் முன்பைவிடச் சிறப்பாக உணர்கிறாரா? அல்லது, இதுபற்றிய தெளிவு/ கூடுதல் விவரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதில் 'இல்லை' என்றால், அவர் இன்னொரு ஹெல்ப்லைனைத் தேடவேண்டியிருக்கலாம்.

சான்றுகள்

1. சஹாய்

இடம்: பெங்களூரு
நடத்துவோர்: சஹாய், இவர்கள் ஒத்துழைப்புடன்: NIMHANS, மெடிகோ பாஸ்டொரல் அஸோஸியேஷன் மற்றும் ரோட்டரி பெங்களூரு கிழக்கு
இலக்குக் குழு: உணர்வுத் துயரத்தில் இருக்கிற யாரும்
ஹெல்ப்லைன் எண்: 080 - 25497777
பணிபுரியும் நேரங்கள்: திங்கள்முதல் சனிவரை, 10 am முதல் 6 pm
இணையத்தளம்/மின்னஞ்சல்: http://www.sahaihelpline.org

2. பரிவர்த்தன் ஆலோசனை ஹெல்ப்லைன்

இடம்: பெங்களூரு
நடத்துவோர்:  பரிவர்த்தன் ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆய்வு மையம்
இலக்குக் குழு: உணர்வுத் துயரத்தில் இருக்கிற யாரும்
ஹெல்ப்லைன் எண்: 080 - 65333323
பணிபுரியும் நேரங்கள்: திங்கள்முதல் வெள்ளிவரை, 4 pm முதல் 10 pm
ஆதரிக்கப்படும் மொழிகள்: ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, மராத்தி, ஒரியா, பெங்காலி
இணையத்தளம்/மின்னஞ்சல்: http://www.parivarthan.org

3. iCall

இடம்: மும்பை
நடத்துவோர்:  டாடா சமூக அறிவியல் கல்விக்கழகம்
இலக்குக் குழு: உணர்வுத் துயரத்தில் இருக்கிற யாரும்
ஹெல்ப்லைன் எண்: 022-25563291அல்லது, இந்த மின்னஞ்சலுக்கு எழுதலாம் icall@tiss.edu
பணிபுரியும் நேரங்கள்: திங்கள்முதல் சனிவரை, 10 am முதல் 10 pm
ஆதரிக்கப்படும் மொழிகள்: ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, தமிழ், மலையாளம்
இணையத்தளம்/மின்னஞ்சல்: https://www.tiss.edu/view/11/projects/icall-telephonic-counselling-service-for-individua

4. NIMHANS முதியோருக்கான ஹெல்ப்லைன்

இடம்: பெங்களூரு
நடத்துவோர்: தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கல்விக்கழகம்
இலக்குக் குழு: உணர்வுத் துயரத்தில் உள்ள முதியோர்
ஹெல்ப்லைன் எண்: 080-26685948 அல்லது 09480829670
பணிபுரியும் நேரங்கள்: திங்கள்முதல் சனிவரை, 9.30 am முதல் 4.30 pm
ஆதரிக்கப்படும் மொழிகள்: ஆங்கிலம், கன்னடம்
இணையத்தளம்/மின்னஞ்சல்: nimhans.wellbeing@gmail.com

5. ஸ்நேஹா இந்தியா

இடம்: சென்னை
இலக்குக் குழு: தற்கொலை எண்ணமுள்ளோர்
ஹெல்ப்லைன் எண்: 044-24640050; 91-44-2464 0060 அல்லது, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: help@snehaindia.org
பணிபுரியும் நேரங்கள்: இந்த ஹெல்ப்லைன் 24/7, அதாவது எல்லா நேரங்களிலும் இயங்குகிறது. மக்கள் இந்த மையத்துக்கு நேரிலும் வரலாம், திங்கள்முதல் ஞாயிறுவரை, 8 am முதல் 10 pm

6. 1098

இலக்குக் குழு:  உடல் அல்லது உணர்வுத் துயரத்தில் உள்ள குழந்தைகள்
ஹெல்ப்லைன் எண்:  1098
பணிபுரியும் நேரங்கள்:  24/7
இணையத்தளம்/மின்னஞ்சல்: http://www.childlineindia.org.in/1098/b1b-partnership-model.htm

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org