சிகிச்சை வழங்குபவருக்குச் சிகிச்சை வழங்குதல்

வாணி முதன்முதலாக ஓர் ஆலோசகரிடம் சென்று பேசத்தொடங்கியபோது பதற்றமாக இருந்தார்.  தன்னுடைய ஆலோசகர் தான் பகிர்ந்துகொள்ளப்போவதைப்போன்ற எதையாவது இதற்குமுன் கேட்டிருப்பாரா, இல்லையா என்று அவர் யோசித்துக்கொண்டே இருந்தார், வியந்துகொண்டே இருந்தார்.  தான் பகிர்ந்துகொள்ள விரும்பிய விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தன்னுடைய ஆலோசகரால் இயலுமா என்பதுபற்றியும் அவர் கவலை கொண்டார்:  ”ஒவ்வொரு நாளும் மற்றவர்களுடைய பிரச்னைகளைப்பற்றிக் கேட்பது ஆலோசகரை எப்படிப் பாதிக்கிறது என்று நான் வியக்கிறேன். என்னுடைய ஆலோசகர் ஒரு வலுவான நபராக இருக்கவேண்டும், அவரால் எனக்கு உதவிசெய்ய இயலவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

சிலசமயங்களில், என்னிடம் சிகிச்சை பெற விரும்புகிறவர்கள் ஆர்வத்துடன் இப்படிக் கேட்பதுண்டு, ”உங்களிடம் இத்தனை பேர் இத்தனை விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்களே அதையெல்லாம் கேட்டு நீங்கள் கனமாக, சுமையாக உணர்வதில்லையா?”

சிகிச்சை பெறுகிறவர்கள் அல்லது சிகிச்சை பெறலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இதுபோன்ற குழப்பமான எண்ணங்கள் வரலாம்.  

சிகிச்சை வழங்குகிற ஒருவர், தன்னிடம் சிகிச்சை பெறுகிறவருடன் ஒரு தீவிரமான உறவில் பங்கேற்கிறார், தன்னுடைய பணியால் அவர் தனிப்பட்டமுறையிலும் தொழில்முறையிலும் பாதிக்கப்படுகிறார்.  ஆகவே, சிகிச்சை வழங்குபவருடைய உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நலம் முக்கியமாகிறது.  சிகிச்சை வழங்குகிறவர் உதவுகின்ற ஒரு தொழிலில் இருப்பதால் அவர் தன்னுடைய சொந்தப் பராமரிப்பைப்பற்றித் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும்.

பல சிகிச்சை வழங்குநர்கள் தாங்கள் ஏன் ஆலோசனை வழங்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்தோம் என்பதற்கு ஒரு தனிப்பட்ட, சொந்தப் பயணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.  சிகிச்சை வழங்குகிற ஒருவர் தொழில்முறை நிபுணராகத் தன்னுடைய பணியைத் தொடங்குவதற்குமுன் அவருக்குக் கோட்பாடு சார்ந்த அணுகுமுறைகள் மற்றும் திறன்களில் தீவிரப் பயிற்சி வழங்கப்படுகிறது.    அவர்கள் தனிப்பட்ட சிகிச்சையும் பெறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதில் பின்வருவன இடம்பெறலாம்: அவர்களுடைய சொந்தக் கடந்தகாலத்தை ஆராய்வது, இப்போதைய பிரச்னைகளை ஆராய்வது, தனிப்பட்ட முரண்களை அறிந்து அவற்றில் பணியாற்றுவது, தங்களைத் தாங்களே ஏற்றுக்கொள்வது, மற்றும் தங்களுடைய சொந்த மீள்திறனை வளர்த்துக்கொள்வது.      பல தொழில்முறை ஆலோசனைப் பயிற்சி வகுப்புகள், திறன் முன்னேற்றத்துக்கான ஒரு தேவையாக, பயிற்சிபெறும் ஆலோசகர்கள் குறிப்பிட்ட மணி நேரங்கள் தனிப்பட்ட சிகிச்சையில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று கட்டாயமாகத் தெரிவிக்கின்றன.   

ஆலோசகருக்குச் சிகிச்சை தேவைப்படுவது ஏன்? பயிற்சிபெறும் ஆலோசகர் தானே சிகிச்சைக்கு உட்படும்போது, தன்னிடம் ஆலோசனைக்கு வருகிறவர்கள் எப்படி உணர்வார்கள், ஆபத்துக்குள்ளாவதுபோல் எப்படி எண்ணுவார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள இயலுகிறது.    உணர்வு நலனை நோக்கிப் பணியாற்றுவதற்கு என்ன தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவும் இது  உதவுகிறது, பின்னர் அவர்கள் சிகிச்சை அளிப்பவர்களாகப் பணியாற்றும்போது, தங்களிடம் வருகிறவர்கள் இதை நோக்கிப் பணியாற்றவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கும்போது இந்தப் புரிந்துகொள்ளல் உதவும். சிகிச்சை அளிப்பவர்கள் தங்களுடைய சொந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள், மற்றும் உலகப்பார்வைகள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கும், இதற்குமுன் கவனித்திராத விஷயங்களை அடையாளம் காண்பதற்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இது உதவுகிறது.      

சிகிச்சை அளிக்கிற ஒருவர் தன்னுடைய அனுபவங்களைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்கவேண்டும், தன்னுடைய சொந்தச் சுய அறிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  இதன்மூலம் அவர்கள் உணர்வுகள், எண்ணச் செயல்முறைகள் மற்றும் உடல் சார்ந்த விழிப்புணர்வு போன்றவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள இயலுகிறது.  சிகிச்சை அளிக்கிற ஒருவரால் தன்னைத்தானே அறிந்திருக்க இயலுகிறது என்றால், தன்னிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களுடைய உலகத்துக்குள் அவர் நம்பகத்தன்மையோடும் உண்மையோடும் நுழைவதற்கு இது முக்கியமாகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு சிகிச்சையாளர் தனிப்பட்ட சிகிச்சையில் தன்னுடைய சொந்தக் கோபங்களை மற்றும் ஆபத்துச் சாத்தியங்களைக் கவனிக்கிறார், ஆராய்கிறார் என்றால், தன்னிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு ஆலோசனை வழங்கும் செயல்முறைகளில் இந்த விழிப்புணர்ச்சி ஒரு முக்கியமான கருவியாகிறது.     விக்ரமுடைய கோபம் அவருடைய வாழ்க்கையையும் உறவுகளையும் பாதித்துக்கொண்டிருந்தது, அதனால் தடுமாறிய அவர் ஆலோசனைக்கு வந்தார்.     சிகிச்சை அளிப்பவரால் விக்ரமுடைய அனுபவங்களுடன் தன்னை இணைத்துப்பார்க்க இயன்றது, அவர்மீது பச்சாத்தாபம் காட்ட இயன்றது, அவருடைய தடுமாற்றங்களைப் புரிந்துகொள்ள இயன்றது.    விக்ரம் தன்னுடைய கோபப் பிரச்னைகளைக் கையாள்வதற்கு உதவுவதற்கும் இது சிகிச்சை அளிப்பவருக்கு உதவியது.

சிகிச்சை அளிப்பவர்கள் தாங்களே சிகிச்சையில் இருப்பதில் இருக்கும் பலன்களைப்பற்றிப் பல உளவியல் சிகிச்சையாளர்கள் பேசியுள்ளார்கள்.   சர்வேதேச அளவில், ஆலோசனை அளிக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துகின்ற பல அமைப்புகள், சிகிச்சை அளிப்பவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு அல்லது அங்கீகாரம் அளிப்பதற்குத் தனிப்பட்ட சிகிச்சையை ஒரு தேவையாகக் குறிப்பிடுகின்றன.    பிரிட்டிஷ் ஆலோசனை அளித்தல் மற்றும் உளவியல் சிகிச்சைக் கழகத்தின் (BACP) நல்ல செயல்முறைக் கட்டமைப்பானது, ஆலோசனை வழங்குதலின் நெறிமுறைக் கட்டமைப்பின்கீழ், சிகிச்சை அளிப்பவர் தன்னைத்தானே கவனித்துக்கொள்வதை ஒரு பொறுப்பாகப் பரிந்துரைக்கிறது. 

ஆஷா சில குழந்தை வளர்ப்புப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார், அதற்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.   அவர் தன்னுடைய உணர்வு அனுபவங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தன் தாயார் இறந்ததுபற்றிய ஓர் ஆழமான இழப்பு உணர்வை அவர் உணரத்தொடங்கினார்.    ஆஷாவின் சோகத்தைக் கண்டு, அவருக்குச் சிகிச்சை வழங்கியவர் ஆழமான உணர்வை வெளிப்படுத்தினார், அவரால் ஆஷாவின் வலியை அனுபவிக்க இயன்றது – அதேநேரம், அவர் உணர்வுரீதியில் தொடர்ந்து சிகிச்சையை வழங்கினார், ஆஷாவுக்குத் தேவைப்பட்ட ஆதரவை வழங்க அவரால் இயன்றது.      இதைச் செய்வதற்கு, இன்னும் பல ஆலோசனை பெறுவோருக்கு உதவுவதற்கு, சிகிச்சை வழங்குபவர் தன்னைத் தானே கவனித்துக்கொள்வது மிக முக்கியமாக இருக்கலாம்.    

சிகிச்சை வழங்குபவர்களும் மனிதர்கள்தான், மற்ற எல்லாரையும்போல் அவர்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.  ஆலோசனை வழங்குகிற ஒருவர் தனிப்பட்ட நெருக்கடிகள் மற்றும் அவசரங்கள், வாழ்க்கையை மாற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், இழப்பு, சோகம், உடல்நலமின்மை, தோல்விகள் மற்றும் சவால்களைக் கையாளவேண்டியிருக்கலாம்.      சிகிச்சை வழங்குகிற ஒருவருக்கு வாழ்க்கை வெவ்வேறு சவால்களை வழங்கலாம், அதேசமயம் அவர்கள் தங்களுடைய பணியில் எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதபடி உறுதிசெய்கிற பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

சிகிச்சை வழங்குபவர்கள் சிகிச்சையில் இருக்கும்போது, தங்களுடைய வளங்களைப் புதுப்பிப்பதற்கு, தங்களுடைய மீள்திறனை வலுவாக்குவதற்கு மற்றும் தங்களுடைய களைப்பு மற்றும் சோர்வுணர்வைக் கையாள்வதற்கு தேவையான ஆதரவு மற்றும் பராமரிப்பை அவர்கள் பெறுகிறார்கள்.    எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பாலான நேரங்களில், சிகிச்சை வழங்குபவருடைய நலனும் துடிப்பும் இதன்மூலம் மேம்படுகிறது, அதனால் அவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறுவோரிடம் அர்த்தமுள்ள முறையில் பணியாற்ற இயலுகிறது.  

சிகிச்சை வழங்குகிற ஒருவர் வலி அல்லது தடுமாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை.  சொல்லப்போனால், இவற்றால் அவர் பாதிக்கப்படுகிறார் என்கிற தன்மையே, அவர்களுக்கும் அவர்களிடம் சிகிச்சை பெற வருகிறவர்களுக்கும் இடையிலான ஓர் உண்மையான உணர்வுத் தொடர்பை உருவாக்குவதற்கு உதவுகிறது.   சிகிச்சை வழங்குகிற ஒருவருடைய சொந்தச் சிகிச்சையானது இதைச் சாத்தியமாக்குவதில் மிக முக்கியமான பணியை ஆற்றுகிறது.   தனிப்பட்ட சிகிச்சையில் உள்ள ஒருவர் பிறருக்குச் சிகிச்சை வழங்கும்போது, அவரிடம் சிகிச்சை வழங்க வருகிறவருக்குத் தங்களுடைய ஆலோசனைப் பேச்சுகளின்போது தங்களுக்காக உணர்வுரீதியிலும் மனரீதியிலும் இவர் உதவுவார், அதற்கான ஆதரவு அமைப்பியல்களை அவர் வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்கிற உறுதி கிடைக்கிறது.   

**இங்கு வழங்கப்பட்டுள்ள விவரிப்புகளில் வரும் மனிதர்கள் ஓர் எடுத்துக்காட்டுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள், அவர்கள் உண்மையான வாடிக்கையாளர்கள் இல்லை.

**பின்வரும் சொற்கள் கிட்டத்தட்ட ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன: ஆலோசனை வழங்குபவர் மற்றும் சிகிச்சை வழங்குபவர், ஆலோசனை வழங்குதல் மற்றும் உளவியல் சிகிச்சை வழங்குபவர். 

அர்ச்சனா ராமநாதன், பரிவர்த்தன் ஆலோசனைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆலோசனை வழங்குபவராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்.  

சான்றுகள்: ஆலோசனை வழங்குதல் மற்றும் உளவியல் சிகிச்சைக்கான பிரிட்டிஷ் அமைப்பு (BACP) - நெறிமுறைக் கட்டமைப்புக்கான வழிகாட்டுதல்கள்-https://www.bacp.co.uk/ethical_framework/

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org