குடும்ப முரண்பாடுகளைச் சரிசெய்ய தெரபி உதவுமா?

குடும்ப முரண்பாடுகளைச் சரிசெய்ய தெரபி உதவுமா?

குடும்பத்தில் முரண்பாடுகளை எதிர்கொள்ளும்போது, என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலானோர் ஒருவருக்கொருவர் பேசுவதன்மூலம் மற்றும் பிரச்னையின்மீது ஒவ்வொருவருடைய பார்வையைப் புரிந்துகொள்வதன்மூலம் இதைத் தீர்க்க முயற்சிசெய்வார்கள். அப்போதும் பிரச்னை தீராவிட்டால், நெருங்கிய நண்பர்கள் அல்லது தூரத்து உறவினர்களிடம் தீர்வு கண்டுபிடிக்க ஆலோசிப்பார்கள். அதன்பிறகும் பிரச்னை தொடர்ந்தால் என்ன செய்வது?

இங்குதான் குடும்பத் தெரபி உதவுகிறது. குடும்பத் தெரபி என்பது உறவுகளில் தொடர்புப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் குறிப்பிட்ட சிகிச்சை வடிவம் ஆகும். ஒரு குடும்பச் சிகிச்சையாளர் மறைந்திருக்கும் காரணங்களை ஆராய்வது மற்றும் குடும்பத்தினர் தங்களுடைய பிரச்னையில் தீர்வுக்கு வர உதவுதன் மூலம் குடும்பத்தில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்க உதவுவார்கள். இந்தத் தெரபி குடும்ப உறுப்பினர்கள் இடையே தொடர்பினை மேம்படுத்துவதில் கவனம் கொள்கிறது: கணவன் மனைவி இடையே, அல்லது பெற்றோர், அவர்களுடைய குழந்தைகள் இடையே, அல்லது பல குடும்பப் பிரிவுகளிடையே (தூரத்து உறவுகள்).

யார் குடும்பத் தெரபியை நாடலாம்?

குடும்பத் தெரபி குடும்பத்துக்குள் நிகழக்கூடிய பல பிரச்னைகளைக் கையாள்கிறது. அவை

 • குழந்தை வளர்ப்புப் பிரச்னைகள்
 • பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் பழக்கவழக்கப் பிரச்னைகள்
 • குடும்பத்தில் மனநலப் பிரச்னை: தங்கள் அன்புக்குரியவர்களுடைய நோயைப் புரிந்துகொள்ளுதல், மற்றும் அவர்களுடன் உரையாடுதல்*
 • ஒரு குடும்ப உறுப்பினரின் பாலியல் நாட்டம் மற்றும் ஒரே பாலின உறவுகளைப் புரிந்துகொள்ளுதல்
 • திருமணத்திற்குப் பின் தம்பதியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்: பாத்திரம் மாறுதல், நெருக்கப் பிரச்னைகள், சிறந்த தொடர்பாடல்
 • தம்பதியருக்குத் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை
 • நடுத்தர வயது தம்பதியரிடையே, பிள்ளைகளைப் பிரிந்து வாடும் Empty nest syndromeக்கான ஆலோசனை

*தங்கள் அன்புக்குரியவர்களின் மனநலப் பிரச்னையைப் புரிந்துகொள்ளப் போராடும் குடும்பத்தினருக்கு குடும்பத் தெரபி மிகவும் பயன்படுகிறது, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் உணர்வதைப் புரிந்து கொள்ள உதவுகிறது தங்கள் அன்புக்குரியவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் பச்சாதாபத்துடன் உரையாட உதவுகிறது.

ஆனால், எனக்குக் குடும்பத் தெரபி தேவையில்லை!”

பல நபர்கள் ஒரு குடும்பச் சிகிச்சையாளரை அணுகத் தயங்குகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை குறித்த நெருக்கமான விசயங்களை ஓர் அந்நியருடன் கலந்துரையாடுவதை வசதியாக உணர்வதில்லை.

போதிய விழிப்புணர்வின்மை மற்றும் உதவியை நாடுவதில் அருவெறுப்பு காரணமாக சிகிச்சையாளரை நாடுவதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உள்ளனர். அதே நேரத்தில், தங்கள் குடும்பத்திலுள்ள அழுத்தத்தைப் புரிந்து கொள்ள, மற்றும் தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதற்காகக் குடும்பத் தெரபிக்குச் செல்லும் பல குடும்பங்களும் உள்ளன.

திறந்த மனத்துடன் வருதல், தெரபிபற்றிய பயங்களைப் பேசுதல், குடும்பத் தெரபி ஆகியவற்றால் பல தவறான நம்பிக்கைகளை விரட்டமுடியும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

குடும்பத் தெரபியின் செயல்முறை என்ன?

குடும்பத் தெரபியின் செயல்முறை, அவர்களுடைய பிரச்னையை புரிந்துகொள்வதற்காக ஒவ்வோர் உறுப்பினரின் மனநிலைக்கு ஆழமாகச் சென்று புரிந்துகொள்ளும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை இவற்றைக் கொண்டது.

I. மதிப்பீடு: மதிப்பீட்டின்போது, குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சையாளரிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் தெரபி செயல்முறையின் முழுமையான காட்சியைப் பெறலாம்:

 • அமர்வுகள் எவ்வளவு நேரம் இருக்கும்?
 • சிகிச்சை எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
 • சிகிச்சை அமர்வின் போது யாரெல்லாம் இருக்க வேண்டும்?
 • இந்தத் தகவல்கள் எவ்வளவு தனிப்பட்டவை?
 • சிகிச்சையாளரின் அனுபவம் எப்படி? அவர் இதுபோன்ற பிரச்னைகளைக் கடந்த காலங்களில் கவனித்துள்ளாரா?

சிகிச்சையாளர் தன் பங்குக்குத் தனிநபர் அல்லது தனிநபர் குழுக்களை முதன்முறையாகச் சந்தித்து, குடும்பத்தின் இயங்குநிலைகளை மதிப்பிடுவார். குடும்பமானது, எல்லைகள், படிநிலை, குடும்பத்தில் முடிவெடுத்தல் போன்ற பல அளவீடுகளில் மதிப்பிடப்படும். குடும்பத்தின் எல்லைகள் என்பவை, குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களிடையே கொண்டுள்ள கட்டுப்பாடுகளை (அல்லது அவை இல்லாது இருப்பதை)க் குறிப்பிடுகிறது. இந்த எல்லைகள் குடும்ப அமைப்பின் ஒரு பகுதியை உருவாக்கும் பெற்றோர்களிடையே (துணை அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது), உடன்பிறந்தோரிடையே அல்லது தூரத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ளவையாகவும் இருக்கலாம். படிநிலை என்பது குடும்பத்தின் தொடர்பாடல் மற்றும் இயங்குதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கட்டமைப்பாகும். வழக்கமாகத் தந்தை வழிக் குடும்பத்தில், தந்தைதான் படிநிலைக் கட்டமைப்பின் உச்சியில் இருப்பார்.

சிகிச்சையாளர், முரண்பாட்டுச் சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்ள விரும்புவார். அதற்காக, தற்போது குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி ஒருவரிடம் தனியாகவோ குடும்பத்தினருடன் சேர்த்தோ பேசுவார்.

ஒருவேளை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் குடும்பத் தெரபியை நாட முன்வரவில்லை என்று நினைத்தால், ஒருவர் தனியாகவும் நிபுணத்துவ உதவியை நாடலாம்.

II. இடையீட்டு நிலை

மதிப்பீட்டின்போது சேகரித்த தகவல்களின் படி, சிகிச்சையாளர் ஒரு கருதுகோள் மற்றும் குடும்பத்துக்குப் பரிந்துரைக்கப்படத் தேவையான இடையீட்டை உருவாக்க முயற்சிசெய்வார்.

பிரச்னையைப்பொறுத்து, சிகிச்சையாளர் தேர்ந்தெடுக்கக்கூடிய பல வடிவிலான இடையீடுகள் உள்ளன. அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையின் கொள்கைகள், அவர்கள் பிரச்னையைச் சிந்திக்கிற மற்றும் பார்க்கிற வழியை மாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. குடும்ப இந்தப் பார்வை மாற்றம், தெரபியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தீர்வைக் கண்டறிய உதவலாம்.

ஒரு நல்ல குடும்பம் எனும் கற்பனை

நாம் சமூக உயிரினங்கள், நமது வாழ்வை நம் பக்கத்து வீட்டார், நண்பர்கள் அல்லது பிற உடன்பிறந்தோர்கள் குடும்பத்துடன் ஒப்பிடத் தூண்டப்படுகிறோம். நாம் அறிந்த பிறர் மகிழ்ச்சியாக உள்ளனர், மேலும் அவர்கள் வாழ்க்கையில் விரும்பும் அனைத்தையும் பெற்றுள்ளனர் என்று நினைப்பது இயற்கையானதாக இருக்கலாம். நிபுணர்கள் இதனை ‘ஒரு நல்ல குடும்பத்துக்கான கற்பனை’ என்று அழைக்கின்றனர். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களுக்கிடையிலான தொடர்பாடலில் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை, ஒருவர் மற்றவருடன் வேறுபடவில்லை, மேலும் ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் போன்றவைதான் நல்ல குடும்பத்தின் அடையாளங்கள் என்று நம்பப்படுகின்றன. 

குடும்பத் தெரபிக்குச் செல்லும் நபர்கள், தெரபியால் தங்கள் குடும்பமும் ஒரு நல்ல குடும்பமாக மாறிவிடும் என்று நம்புகிறார்கள் ஆனால் அது உண்மையில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் கருத்துகள் கொண்ட இருவர் இருக்கும்போது, வேறுபாடுகள் மற்றும் தொடர்புக்குறைபாடுகள் நிகழலாம். குடும்பத் தெரபி இது போன்ற வேறுபாடுகள் மற்றும்  தொடர்புப் பிரச்னைகளை ஓர் ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கொள்ளக் குடும்பங்களுக்கு உதவுகிறது.

குடும்பத் தெரபியில் எதை எதிர்பார்க்கலாம்?

குடும்பத் தெரபியானது குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள எல்லாப் பிரச்னைகளையும் சரி செய்யப் போகிறது என்று நினைப்பது இயற்கையானதுதான், ஆனால் அது அப்படியில்லை. குடும்பத் தெரபியில் எதிர்பார்க்கக்கூடியவை:

 • ஒருவரைப் பச்சாதாபத்துடன் மற்றும் மதிப்பிடும் நடத்தையின்றிக் கேட்பதற்கு ஒரு நிபுணர், சிகிச்சையாளர்  இருப்பார்.
 • உரையாடல்கள் மற்ற உறுப்பினர்களிடமிருந்து இரகசியமாக வைக்கப்படும் (தேவைப்பட்டால்)
 • உரையாடல்கள் குற்றம் சாட்டுபவையாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்
 • ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பார்வையைக் கூறச் சமமான தளம்  கொடுக்கப்படும்
 • சிகிச்சையாளர் சார்புநிலை எடுப்பதில்லை, அதற்குப் பதிலாக குடும்பத்தினர் தங்களுக்குப் பொருந்தும் தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு உதவ முயற்சிசெய்கிறார்

இந்தத் தெரபியின் செயல்திறன், தெரபியின்போது கண்டறியப்பட்ட விஷயங்களின்மீது எந்த அளவு பணியாற்றப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

இக்கட்டுரை NIMHANS மருத்துவ மனநல நிபுணர் மரு வீணா சத்தியநாராயணா அவர்களிடமிருந்து பெற்ற உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org