மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

உடற்பயிற்சியும் மனநலமும்

மனநலம் என்பது எல்லாருக்கும் முக்கியம், மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

எழுதியவர்: டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா

எல்லாம் நன்றாக இருக்கும்போது, ஆரோக்கியத்தைப்பற்றி ஏன் யோசிக்கவேண்டும்? மக்களிடையே ஆரோக்கியத்தைப்பற்றிய உணர்வு அதிகரித்துக்கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில், இந்தக் கேள்வி முட்டாள்தனமாகத் தோன்றலாம். இதன் அர்த்தம், ஒரு திருப்தியான மற்றும் பலனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியப் பிரச்னைகளைத் தடுப்பது, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆகியவை எந்த அளவுக்குத் தேவை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், ஆகவே, அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம்.

மேற்கண்ட பத்தியைப் படிக்கும்போது, நீங்கள் எதைக் கற்பனை செய்தீர்கள்? அநேகமாக, சாலையில் மக்கள் ஓடுவதை, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை, வயதானவர்கள் அதிகாலையில் விறுவிறுவென்று நடப்பதைதான் நினைத்திருப்பீர்கள். இல்லையா? அத்துடன், தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்த ஆரோக்கிய-உணவு விளம்பரங்களின் காட்சிகளும் உங்களுக்கு நினைவில் வந்திருக்கும், பிரபல பத்திரிகைகளில் வாசித்த ஊட்டச்சத்து அறிவுரைகளைக்கூட நினைத்திருப்பீர்கள்.

இப்போது, நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தக் காட்சிகளில், மனநலத்தைப்பற்றி நீங்கள் நினைத்தீர்களா? ஒருவர் தன்னுடைய மனத்துயரை ஒரு நெருங்கிய நண்பரிடம் அல்லது ஆலோசகரிடம் சொல்வதுபோல் கற்பனை செய்தீர்களா? ஒருவர் தன்னுடைய கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று எழுதிப்பார்ப்பதுபோல் கற்பனை செய்தீர்களா? ஒருவர் தன்னுடைய பதற்றம் அல்லது குறைவான சுய-மதிப்பை எப்படிச் சரிசெய்வது என்பதுபற்றிய ஒரு சுயமுன்னேற்றப் புத்தகத்தைப் படிப்பதுபோல் கற்பனை செய்தீர்களா? ஒருவர் பிறருடன் பழகும் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதுபோல், அல்லது, நேர்ச்சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுபோல் கற்பனை செய்தீர்களா?

அநேகமாக இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் உங்கள் பதில், 'இல்லை' என்றுதான் இருக்கும். இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்திருந்தால் நல்லது, இல்லாவிட்டால் இனியாவது சிந்திக்கத்தொடங்குங்கள்: ஆரோக்கியம் என்பதில் மன ஆரோக்கியமும் உண்டு என்பதை உணருங்கள்.  

சில நேரங்களில், நாம் உடல் ஆரோக்கியத்தைப் பெரிய விஷயமாக நினைப்பதில்லைதான். ஆனால், மன ஆரோக்கியத்தை நாம் எப்போதுமே ஒரு பெரிய விஷயமாக நினைப்பதில்லை. சொல்லப்போனால், மனநலம் என்று சொன்னாலே, மக்கள் அதை மனநலப் பிரச்னையோடு பொருத்திப்பார்க்கிறார்கள். அதாவது, மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்குதான் மனநலம் தேவை என்று எண்ணுகிறார்கள்.  

உண்மையில், மனநலப் பிரச்னைகளைத் தடுப்பதும், மனநலம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் முக்கியம், உடல் நலத்தையும் கட்டுக்கோப்பான உடலையும் நாம் எந்த அளவு கவனித்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு இதையும் கவனிக்கவேண்டும்.  உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதையும், அவை ஒன்றையொன்று பாதிப்பதையும் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. WHOன் செய்தி அறிக்கையொன்றில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு, உடல் மற்றும் மன நலத்துக்கு இடையே உள்ள சிக்கலான இணைப்புகளை ஆய்வுகள் காண்பித்துள்ளதாகச் சொல்கிறது. (உதாரணமாக, வகை II டயாபெடெஸ் மெலிடஸ் கொண்ட வர்களுக்கு மனச்சோர்வு வருவதற்கான வாய்ப்பு, மற்றவர்களைவிட இருமடங்காகிறது, இதேபோல், ஒருவருக்கு இதய அதிர்ச்சி வந்தபிறகு, அவரது மனச்சோர்வு அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளித்தால், அவர் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கிறது, அவர் திரும்ப மருத்துவமனைக்கு வரவேண்டிய தேவை குறைகிறது.)  நாம் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம், மனநலம், உடல்நலம் இரண்டையும் கவனிக்கவேண்டும், ஒன்றைக் கவனித்தால் இன்னொன்று தானாகச் சரியாகிவிடாது.

நமது மனநலம் மற்றும் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அல்லது மேம்படுத்துவதற்காக நாம் வளர்த்துக்கொள்கிற பழக்கங்களும் செயல்முறைகளும், நமது உடலின் எதிர்ப்புச்சக்தியை வளர்க்க உதவக்கூடும், வாழ்வின் தீவிரப் பிரச்னைகளைச் சந்தித்து மீள்வதற்கு நம்மைத் தயார் செய்யக்கூடும். மனநலத்தை நாம் அவசியம் கவனிக்கவேண்டும், காரணம், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நாம் எப்படிச் செயல்படுகிறோம், எப்படிப் பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது. இதனை கேலப் ஆய்வாளர் குழுவொன்று நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால், மக்கள்மத்தியில் மனநலத்தைப் பராமரிப்பது இன்னும் பிரபலமாகவில்லை. இதற்குக் காரணம், மக்கள் மனத்தில் மனநலம்பற்றிய தோற்றத்தைச் சிதைக்கும் களங்கவுணர்வுமட்டுமல்ல, மனநலம் என்பது கொஞ்சம் தெளிவற்ற, அருவமான விஷயமாகத் தோன்றுகிறது, அதை எப்படிப் பராமரிப்பது என்று நமக்குச் சரியாகப் புரிவதில்லை.

ஒருவர் தனது மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகச் செய்யக்கூடிய சில விஷயங்கள்: 1. எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்த உதவும் உளவியல் திறன்கள் அல்லது தகுதிகளைக் கற்றுக்கொள்ளுதல், உதாரணமாக, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவகையில் தனது எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன்கள், நேர்விதமான உணர்வுகளை வளர்த்துக்கொள்ளும் திறன்களைக் கற்றல்; (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், உளவியல் அறிவியல் கழகம் மற்றும் உளவியல் ஆய்வுகளுக்கான சர்வதேசச் சஞ்சிகை போன்றவை பதிப்பித்த ஆய்வுகளில் உள்ளபடி), 2. தொலைநோக்கில் தீமையைக் கொண்டுவரக்கூடிய ‘நல்லபடி உணரும்’ திடீர்த் தீர்வுகள், முறைகளைத் தவிர்த்தல், 3. மனநலப் பிரச்னைகளைப் பிறரிடம், அல்லது (தேவைப்பட்டால்) ஒரு நிபுணரிடம் பகிர்ந்துகொண்டு ஆதரவு பெறுதல். இவை வெறும் உதாரணங்கள்தான். இவ்வாறு நமது மனநலத்தை மேம்படுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. ஆகவே, இதைப்பற்றி நாம் நம் மனத்துடன் பேசத் தொடங்குவோம், பிறருடன் பேசத் தொடங்குவோம்!

டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா NIMHANSல் மருத்துவ உளவியல்துறையில் துணைப் பேராசிரியர். இவர் தனது துறையில் நேர்விதமான உளவியல் பிரிவின் பணிகளை ஒருங்கிணைக்கிறார். இப்பணிகள் மனநலத்தை முன்னிறுத்தும் ஆய்வுகள், சேவைகள் மற்றும் பயிற்சிகளைச் சார்ந்து அமைகின்றன, இளைஞர்கள்மீது சிறப்புக்கவனம் செலுத்துகின்றன.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org