மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

சிகிச்சையில் குடும்பத்தை இணைத்தால், தனிப்பட்ட முன்னேற்றம் மேம்படும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மன நலனும் உறவுகளும் ஒருவருடைய குடும்பம் மற்றும் சமூகத்தால் பாதிக்கப்படுகின்றன. ஒருவேளை, அவர்கள் பாதிக்கப்பட்டவரை ஆதரிக்காவிட்டால்? அவர் எப்படிக் குணமாவார்? எல்லாரும் ஒரு குடும்பத்தின் உறுப்பினராக உள்ளார்கள், அந்தக் குடும்பம் சமூகத்தின் ஓர் உப-பிரிவாக இருக்கிறது, இதுவே குடும்ப அமைப்பு எனப்படுகிறது. இந்த அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் நன்கு தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் செயல்படுவதுதான் இணையர்கள் மற்றும் குடும்பத்தினர் சிகிச்சை.

அநேகமாக எல்லாருமே, தங்களுடைய ஆளுமைகளை நேர்விதமாகவோ எதிர்மறையாகவோ பாதித்தது தங்களுடைய குடும்பத்தினர்தான் என்பதை ஒப்புக்கொள்வார்கள். ஆரோக்கியமான, ஆதரவளிக்கிற மூலக் குடும்பத்திலிருந்து (FOO) வந்த அதிர்ஷ்டசாலிகள் மற்றவர்களைவிட நன்கு தங்களைச் சரிசெய்துகொள்கிறார்கள், அவர்களுடைய வருங்கால உறவுகளும் ஆரோக்கியமாக, சமநிலையுடன் இருக்கும். ஒருவேளை, யாருக்கேனும் ஒரு மோசமான குழந்தைப்பருவம் இருந்திருந்தால்? ஒரு சிரமமான குடும்பப் பின்னணி இருந்திருந்தால்? இது பொதுவாக அவருடைய வருங்கால உறவுகளிலும் நீடித்த தாக்கத்தை உண்டாக்கும்.

ஆனால், மக்கள் சென்று விழுகிற இந்தப் பழைய பழக்கவழக்க பாணிகள், உணர்வுகளை மாற்றிக்கொள்வது எந்த அளவு சிரமமானது? ஓர் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்:

ரமேஷ் எப்போதும் களைப்பாக உணர்கிறார், ஆகவே, ஆலோசனைக்கு வருகிறார். தனக்கு மனச்சோர்வு இருக்கிறதோ என்று அவருக்குச் சந்தேகம்; ஒரு சிகிச்சையாளரிடம் பேச விரும்புகிறார். சிகிச்சை அறையில் அவரைப்பற்றி இன்னும் நன்கு அலசியபிறகு, அவருக்குச் சமீபத்தில் திருமணமானது தெரியவருகிறது, ரமேஷும் அவருடைய புதிய மனைவியும் ரமேஷின் பெற்றோர், சகோதரருடன் கூட்டுக்குடும்பத்தில் உள்ளார்கள். ரமேஷ்தான் வீட்டின் மூத்த பிள்ளை, தேவைப்பட்டால் தன் குடும்பத்துக்கு நிதி உதவி செய்யும் பொறுப்பு தன்னுடையது என்று அவர் உணர்ந்தார். ரமேஷுடைய தாய் அவர்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவருக்குப் பிடித்த உணவுகள் அனைத்தையும் அவர் சமைத்துத்தருவார், ரமேஷின் தந்தை, தம்பியை அவர் இப்படிக் கவனித்துக்கொள்வதில்லை. ரமேஷின் தாய், தன் கணவருக்கும் தனக்கும் இருக்கும் பிரச்னைகளைப்பற்றிக்கூட மகனிடம் பேசுவார்; இப்படித் தன் தாயிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசுவதை அவர் விரும்பினார். ரமேஷைப் பொறுத்தவரை, திருமணம் என்பது அவருடைய குடும்பப் பொறுப்பைச் சுமப்பதில் அவருக்கு உதவக்கூடிய, அவருடைய தாய்க்கும் ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு துணையைப் பெறுவதுதான்.

திருமணத்துக்குப்பிறகு, அசௌகர்யங்கள் தொடங்கின. தேனிலவு நன்றாக இருந்தது, ஆனால், வீட்டில் சில சிறு முரண்கள். இதுபற்றிக் கேட்டபோது, ரமேஷ் இவற்றை விவரித்தார்: ரமேஷுக்குப் பிடித்த உணவுகளெல்லாம் எப்போதும் வீட்டிலேயே சமைக்கப்படுவதைப்பற்றி அவருடைய மனைவி கேலியாகப் பேசியிருக்கிறார், வேலைக்குச் சென்று திரும்பியபிறகு அவர் தன் தாயிடம் நெடுநேரம் பேசுவது ஏன் என்று கேள்வி கேட்டிருக்கிறார். தன் தாயுடன் அதிக நேரம் பேச இயலவில்லை என்பதைப்பற்றி ரமேஷ் குற்றவுணர்ச்சி கொண்டார். அவருடைய தாய் இதைப்பற்றி எதுவும் நேரடியாகப் பேசாவிட்டாலும், அவருக்குத் தன் மகன் அதிகம் தேவைப்படுவதை ரமேஷ் புரிந்துகொண்டார். தாயோடு ரமேஷ் பேசாவிட்டால், யார் பேசுவார்கள்?

இது அவருடைய புதிய திருமணத்தில் முரணை ஏற்படுத்தியது, வீட்டில் அமைதி கெட்டுப்போனது. அவருடைய மனைவி, தான் அவரைப் பிரிந்து தன் பெற்றோரிடம் திரும்பச் சென்றுவிடுவதாக மிரட்டினார்; ஒருவேளை அது நடந்துவிட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இதனிடையே, திருமணம், தேனிலவுக்காகப் பல நாள் விடுமுறை எடுத்துவிட்டு அலுவலகம் திரும்பினால், அங்கேயும் பல அழுத்தங்கள். அலுவலகத்திலும் தன்னால் போதுமான அளவு பணிபுரிய இயலவில்லை என்று அவர் குற்றவுணர்ச்சி கொண்டார்.

ரமேஷின் கோணத்திலிருந்து பார்த்தால், மற்ற எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தன்னால் இயன்ற அனைத்தையும் அவர் செய்கிறார், ஆனால் அதன்பிறகும், மகிழ்ச்சி இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் வரவே கூடாது என்று அவர் ஊகித்திருக்கக்கூடும், தான் 'சரி'யானதைச் செய்தால் எல்லாம் சரியாகவே நடக்கும் என்று நினைத்திருக்கக்கூடும். துரதிருஷ்டவசமாக, தனி நபர்கள் ஆலோசனைக்கு வரும்போது, பல நேரங்களில் வீட்டில் முரண் இருக்கிறது. சிகிச்சையாளர் ரமேஷுடன் பணியாற்றலாம், அவர் அடிக்கடி சென்று விழும் பாணிகளைக் காண உதவலாம்:  அவர் அடிக்கடி குற்றவுணர்ச்சியாக உணர்கிறார், தான் 'சரியான விஷயங்களை'ச் செய்ய முயலும்போதுகூட. வீட்டில் தன் பெற்றோருக்கும், தன் மனைவியுடனான உறவுக்கும், பணியிடத்தில் தன்னுடைய பதவிக்கும் அவர் பொறுப்பாக உணர்கிறார். தன் குடும்பத்தைப்பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற சமூக அழுத்தத்தையும் அவர் உணர்கிறார்.

தனி நபர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் உள்ள பிரச்னை, இந்தப் பிரச்னைகளைத் தூண்டக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கு அது சென்றுசேர்வதில்லை. ரமேஷ் தன் மனைவியிடம் அதிக நேரம் செலவிடாமல் தாயுடன் பேசிக்கொண்டிருந்தால், அவருடைய மனைவி தனிமையாகவோ பொறாமையாகவோ உணரலாம். இந்த உணர்வுகளை அவர் அப்படியே வெளிப்படுத்தாமல், கேலியாக அல்லது கோபமாக நடந்துகொள்ளலாம், இதனால் ரமேஷின் கோபம் அதிகரிக்கலாம், அவருக்குக் குற்றவுணர்ச்சி வரலாம். ஆலோசனைக்குப்பிறகும்கூட, ரமேஷ் வீடு திரும்பவேண்டும், தன் குடும்பத்தினருடன் பழகவேண்டும், ரமேஷ் மாறிவிட்டார் என்பதற்காக அவர்கள் வேறுவிதமாகச் சிந்திப்பார்களா? வேறுவிதமாக நடந்துகொள்வார்களா?

குடும்ப அல்லது தம்பதிச் சிகிச்சையாளர்கள் இந்தப் பிரச்னைகளை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்க முனைவார்கள். இந்த எடுத்துக்காட்டில், ரமேஷின் பெற்றோரையும், அவர்களுடைய உறவையும், இது அந்தக் குடும்பத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் கவனிப்பது அவருடைய குடும்பத்துக்கு உதவலாம். பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது அவர்களால் தங்கள் பெற்றோரின் தேவைகளை நன்கு நிறைவுசெய்ய இயலலாம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபிறகும் அதேபோல் தங்கள் பெற்றோரின் தேவைகளை நிறைவுசெய்யவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக் குடும்பத்தால் மாற இயலவில்லை. ரமேஷ், அவருடைய சகோதரர் இருவரிடமும், குடும்ப இயக்கவியலை மேம்படுத்த இந்தச் சூழலைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கலாம். அவருடைய சகோதரர் அதே அளவு முரணை வெளிப்படுத்தாமலிருக்கலாம், ஆனால் அதை வைத்து அவர் இதில் பாதிக்கப்படவே இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. குடும்பச் சிகிச்சையில், குற்றவுணர்ச்சி போன்ற உணர்வுகள் ஒரு நோக்கத்தை நிறைவுசெய்கின்றன. இங்கே ரமேஷின் குடும்பத்தில் ஏதோ பிரச்னை என்பதைக் காட்டும் விஷயம், அவருடைய குற்றவுணர்ச்சி, துயரம். ரமேஷும் அவருடைய மனைவியும் தங்களுக்கிடையிலான தகவல்தொடர்பை மேம்படுத்துவதுபற்றிச் சிந்திக்கலாம், அதன்மூலம் இன்னும் நெருக்கமாகலாம்.

இந்தவகையில், குடும்பச் சிகிச்சையானது ரமேஷின் குற்றவுணர்ச்சி மற்றும் மனச்சோர்வு உணர்வுகளின் மூல காரணத்தைச் சரிசெய்ய உதவலாம். ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றத்துக்கு(அவருடைய திருமணத்துக்கு)முன், விஷயங்கள் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம், அதன்பிறகு, பிரச்னைகள் வரத்தொடங்கின. தேவைப்படும்போது, சூழலுக்கேறத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளக் குடும்பங்களால் பெரும்பாலும் இயலுவதில்லை, ஆகவே, அவர்கள் உரையாடல் பாணிகளில் சிக்கிக்கொள்கிறார்கள், இது அவர்களுக்கு வலியை உண்டாக்கலாம். குடும்பச் சிகிச்சையானது இந்தப் பிரச்னைகளைக் கையாள்வதற்கான இன்னும் செயல்திறன் மிக்க ஒரு வழியாக இருக்கலாம்.

மேற்கத்திய நாடுகளில், இயன்றவரை எல்லாப் பிரச்னைகளையும் குடும்பச் சிகிச்சையின்மூலம் கையாளவேண்டும் என்ற ஓர் இயக்கம் பிரபலமாகிவருகிறது. ஆபத்தில் உள்ள குழந்தைகள், குறிப்பாகப் பதின்பருவத்தினரைப்பற்றிய குறுக்கிடல்கள் ஒரு குடும்பச் சூழலில் நடத்தப்படுகின்றன, இதன்மூலம் பிரச்னையை உருவாக்கும் அமைப்பை விரைவில் சரிசெய்யலாம் என்று நம்பப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள ஊழியர் உதவித் திட்டங்களும் (EAPகள்) தம்பதியரைச் சந்திப்பதை ஊக்கப்படுத்துகின்றன. இதன்மூலம் தனி நபர்களுடைய பிரச்னைகளை இன்னும் சிறப்பாகக் கையாளலாம் என்று நம்புகிறார்கள். நம்முடைய கோணத்திலிருந்து, அநேகமாக எல்லாப் பிரச்னைகளையும் ஓர் அமைப்புப் பிரச்னையாகக் காணலாம், அதை அந்தக் கோணத்தில் சிறப்பாகக் கையாளலாம். வெளிநாட்டுடன் ஒப்பிடும்போது, இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினர், சமூகங்களுடன் அதிகம் இணைந்துள்ளனர். இதனால் ஆதரவு போன்ற நன்மைகள் இருப்பினும், அமைப்பால் மாற இயலாவிட்டால், அது அதிகத் துயரத்தை உருவாக்கக்கூடும். தம்பதிகள் மற்றும் குடும்பச் சிகிச்சையானது இதனை ஒரு முழுமையான கோணத்தில் சரிசெய்கிறது.

இங்கே வழங்கப்பட்டுள்ள கதையானது ஓர் எடுத்துக்காட்டாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது, உண்மையான நபர்கள் எவரையும் பிரதிபலிக்கவில்லை.
 

சபரி பட்டாச்சார்யாபரிவர்த்தன் ஆலோசனை, பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தின் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். 

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org