துக்கம் என்பது ஓர் எதிர்மறை உணர்வைவிட அதிகமானதா?
மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

துக்கம் என்பது ஓர் எதிர்மறை உணர்வைவிட அதிகமானதா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

"நீங்கள் சரியாக இல்லாமலிருப்பதும் சரிதான்" என்கிற புத்தகத்தில், துக்கத்தைப்பற்றிய உலகப்பார்வைகள் முற்றிலும் எதிர்மறையாக இருப்பதைப்பற்றிப் பேசுகிறார் மேகன் டிவைன். "துக்கம் என்பது ஒரு பிறழ்ச்சியாக, வழக்கமான, மகிழ்ச்சியான வாழ்க்கையிலிருந்து விலகிச்செல்வதாகக் காணப்படுகிறது. மருத்துவ மாதிரிகள் அதை ஒரு பேரழிவு என்கின்றன. துக்கம் என்பது, ஒரு சிரமமான சூழலுக்கான ஒரு குறுகிய கால எதிர்வினை என்று மக்கள் நம்புகிறார்கள்; ஆகவே, அதனைச் சில வாரங்களுக்குள் முடித்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்."

துக்கம் என்பது என்ன? இழப்பைச் சந்திக்கும் ஒருவர் அனுபவிக்கும் ஓர் உணர்வுதான் அது - அவருக்குத் திரும்பக் கிடைக்காத அல்லது ஈடுசெய்ய இயலாத ஒன்றை அல்லது ஒருவரை இழக்கும்போது இந்த உணர்வு நிகழ்கிறது. நல்ல உறவொன்றைப் பிரிகிறவர்கள், அன்புக்குரியவரை இழந்தவர்கள், ஒரு செல்லப்பிராணியை இழந்தவர்கள், ஒரு தீவிர நோய் கண்டறியப்பட்டவர்கள் துக்கப்படுவது இதனால்தான்; காரணம், அவர்கள் மகிழ்ச்சி என எண்ணியுள்ள படத்துடன் எதார்த்தம் பொருந்திப்போவதில்லை. 

பல நேரங்களில், ஒருவருடைய துக்கத்தை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிற பொதுவான பழக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியை இழந்துவிட்டார், அல்லது, அவருடைய நண்பர் வேறோர் இடத்துக்குக் குடிபெயர்கிறார் என்றால், 'இதற்கெல்லாம் துக்கப்படுவார்களா?' என்று சிலர் எண்ணலாம். ஆனால், துக்கமானது அந்த நபருடைய சூழல், அவர் சந்திக்கும் (நபர் அல்லது பொருள்) இழப்புடன் அவருக்கு இருக்கிற உறவு ஆகியவற்றைச் சார்ந்து அமைவதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவர் அனுபவிக்கும் துக்கத்தின் தீவிர அளவை வரையறுப்பது இதுதான்.

துக்கத்தை உணரும்போது மற்றும் செயல்முறைப்படுத்தும்போது மூளையில் என்ன நிகழ்கிறது?

நீடித்த துக்கமானது மூளை மற்றும் உடலில் ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது. ஒருவர் துக்கத்தை அனுபவிக்கும்போது, அது அவருடைய உடல்நலத்தில் பலவிதமாக வெளிப்படலாம்:

  • கவனமின்மை, மூளையில் மூட்டம்
  • எதார்த்தத்திலிருந்து விலகியிருத்தல்
  • தலைவலி
  • எரிச்சல்
  • நேரத்தை மேலாண்மை செய்ய இயலாதிருத்தல்
  • சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருத்தல்
  • குடும்பத்தினர்/நண்பர்களிடமிருந்து விலகிச்செல்லுதல்
  • ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள் - மிக அதிகமாகச் சாப்பிடுதல், அல்லது, சாப்பிடாமலே இருத்தல்

இது ஏன் நிகழ்கிறது? இதுபற்றி நிகழ்ந்துள்ள ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, ஒருவர் துக்கத்தை அனுபவிக்கும்போது, அவருடைய மூளையில் உள்ள நியூரான்கள் ஒரு மாற்றத்துக்குள்ளாகின்றன; இதனால் அவருடைய மூளையில்மட்டுமின்றி பிற உடலுறுப்புகளின் செயல்பாடுகளிலும், எடுத்துக்காட்டாக, செரிமான அமைப்பு மற்றும் இதயத்தின் ஒழுங்குபடுத்தல் போன்றவற்றிலும் மாற்றம் உண்டாகலாம்.

துக்கத்தின் வெவ்வேறு நிலைகள் எவை?

உளவியலாளர் எலிசபெத் குப்ளெர் ராஸ், தன்னுடைய இறப்பு மற்றும் இறத்தல் என்ற புத்தகத்தில் துக்கம் மற்றும் அதன் நிலைகளைப்பற்றிய தன்னுடைய கோட்பாட்டைப்பற்றிப் பேசுகிறார்.

மறுப்பு: அவரால் இந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை; 'எல்லாம் சரியாகதான் இருக்கிறது; எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளக்கூடும்.   

கோபம்: துக்கத்தைச் சந்திப்பவர் தன்மீது அல்லது தனக்கு நெருக்கமானவர்கள்மீது கோபப்படக்கூடும். இதனைக் கவனத்தில் கொள்வது அவசியம்; ஏனெனில், துக்கத்தை அனுபவிப்பவரைச் சுற்றியுள்ளவர்கள் அந்தக் கோபத்தைத் தாண்டி உண்மையை அறிய இது உதவும்; அவர் அனுபவித்துவரும் துக்கத்தை அவர்கள் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவும்.   

பேரம் பேசுதல்ஆபத்தான நோயைச் சந்திக்கும் ஒருவர், "என் மகளுக்குத் திருமணமாகும்வரை என்னை வாழவிடுங்கள்" என்று பேரம்பேசக்கூடும்; அதாவது, தாங்கள் நம்பும் கடவுளிடம் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின்வழியாகத் தங்கள் வாழ்க்கைச் சூழலைப்பற்றி அவர்கள் பேரம்பேசுகிறார்கள். ஒரு பிரிவைச் சந்தித்துத் துக்கத்தை அனுபவிக்கும் ஒருவர் இவ்வாறு பேரம் பேசக்கூடும், 'இனி நாங்கள் நண்பர்களாகவேனும் இருக்கலாமா?'

மனச்சோர்வுஇந்த நிலையில், துக்கத்தை அனுபவிப்பவர் தான் அனுபவித்துவரும் இழப்பின் அளவை உண்மையாகப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார். இந்த நேரத்தில் அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் பேசாமல் தவிர்க்கலாம், எப்போதும் சோகமாகத் தோன்றலாம், அழுவதுபோல் உணரலாம், நெடுநேரம் அழுதுகொண்டிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் மற்றவர்கள் அவர்களிடம், 'அழுவதை நிறுத்துங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்' என்றோ, 'அடுத்து நடக்கவேண்டியதைப் பாருங்கள்' என்றோ சொல்வது இயல்புதான்; ஆனால், இந்த நேரத்தில்தான் அவர்கள் துக்கத்தைச் செயல்முறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், அதற்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நிபுணர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள். அவர்கள் கையாளும் பல்வேறு உணர்வுகளைக் கண்டனமில்லாமல் உணரவிடுவது முக்கியம். 

ஏற்றுக்கொள்ளுதல்இந்த நிலையில், அவர் தன்னுடைய இழப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார்; சூழ்நிலையைச் சரிசெய்வதற்கான, அல்லது, விளைவுகளைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிய முயல்கிறார். எடுத்துக்காட்டாக, நிதி சார்ந்த ஒரு வீழ்ச்சிக்குப்பிறகு, ஒருவர் இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிகளைத் தேடலாம் அல்லது, பிரிவுக்குப்பிறகு தனி நபராகத் தன்னுடைய வாழ்க்கைக்குத் திரும்ப முனையலாம்.

இவை ஒரு தனி மனிதர் கடந்துசெல்லும் பொதுவான நிலைகளாக இருந்தபோதும், ஒவ்வொருவரும் எல்லா நிலைகளையும் அனுபவிப்பார்கள், அல்லது, ஒரேமாதிரியாக இவற்றைக் கடந்துசெல்வார்கள் என்று கட்டாயமில்லை.

“ஒவ்வொருவருடைய துக்க அனுபவமும் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறது: அத்துடன், எல்லா நிலைகளும் கோட்பாட்டில் உள்ளதுபோலவே அனுபவிக்கப்படுவதில்லை. இது பெரும்பாலும் அந்த நபருடைய சமூகச்சூழல் மற்றும் அவர் சந்தித்துள்ள கலாசாரச் சூழல், துக்கத்தைக் கையாள்வதற்கு அவர் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதற்கான மீள்திறன் போன்றவற்றைச் சார்ந்துள்ளது” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த உளவியலாளர் டாக்டர் பூர்வா ரானடே.

துக்கத்தில் இருக்கும் ஒருவருடன் பேசுதல்

பல நேரங்களில், மிகுந்த துக்கத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதுபற்றிய போதுமான புரிந்துகொள்ளல் மக்களுக்கு இல்லை. அவர்களுடன் பேசுவதன்மூலம் தாங்கள் அதிக வலியை உண்டாஅக்கிவிடுவோம் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்; அதனால், அவரிடமிருந்து முற்றிலும் விலகிச்சென்றுவிடுகிறார்கள். இதற்கு மாறாக, அவர்கள் தங்களுடைய துக்கத்தை இயன்றவரை விரைவாகச் சமாளித்துவிடவேண்டும், வாழ்க்கைக்குத் ‘திரும்பவேண்டும்’ என்று சிலர் வற்புறுத்துகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையைக் கடந்துவந்துகொண்டிருக்கும் ஒருவருக்கு உதவுவதற்கு இந்த இரண்டு அணுகுமுறைகளும் சரியான வழிகள் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதற்குப்பதிலாக, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கும் ஒருவரிடம் பேசுவதற்கான சில வழிகள் -  

பச்சாத்தாபம் காட்டுதல் மற்றும் சிந்தித்தல்‘நீங்கள் இதைக் கடந்துவிடவேண்டும்’ என்றோ, ‘இதெல்லாம் வாழ்க்கையில் நடப்பதுதான்’ என்றோ சொல்வதற்குப்பதிலாக, ‘நீங்கள் ஒரு கடினமான நேரத்தைக் கடந்துவந்துகொண்டிருக்கிறீர்கள், சோகமாக மற்றும் கோபமாக உணர்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது’ என்று சொல்லலாம். 

திறந்த வகையில் ஆலோசனைகளைச் சொல்லலாம்‘நீங்கள் இப்படிச் செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று சொல்வதற்குப்பதிலாக, ‘நீங்கள் இதைக் கருத்தில் கொள்வீர்களா (…)’ என்று சொல்லலாம்.

அவர்களுக்காக இருத்தல்: அவர்கள் பேசத் தயங்குகிறார்கள் என்று உணர்ந்தால், ‘எப்போதாவது நீங்கள் யாரிடமாவது பேச விரும்பும்போது, நான் உங்களுக்காக இருக்கிறேன்’ என்று சொல்லலாம்.

உதவியை நாடுதல்

நீண்டநாள் நீடிக்கிற, தூண்டப்பட்ட துக்கத்துக்கும் மனச்சோர்வு அறிகுறிகளுக்கும் இடையிலான வேறுபாடு, ஒரு மிக மெல்லிய கோடாகும். பல நேரங்களில் இவை இரண்டும் ஒன்றைப்போல் ஒன்று காணப்படுகின்றன. துக்கத்தைச் செயல்முறைப்படுத்துவது இயல்பாக இருந்தாலும், அது தீவிர  மனச்சோர்வைப்போல் தோன்றினாலும், துக்கமும் மனச்சோர்வும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்கிறது அமெரிக்க உளவியல் அமைப்பு. 

துக்கம்

மனச்சோர்வு

வலிதரும் உணர்வுகள் அலைகளாக வருகின்றன, இழப்பைப்பற்றிய (பொதுவாக ஓர் அன்புக்குரியவருடைய இழப்பைப்பற்றிய) நேர்விதமான உணர்வுகளுடன் கலந்து வருகின்றன.

உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் பொதுவாகத் தொடர்ந்து எதிர்மறையாக உள்ளன

சுய மதிப்பு பொதுவாகத் தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது

தன்னைத்தானே வெறுத்துக்கொள்ளுதல், தான் மதிப்பற்றவர் என்று தொடர்ந்து உணர்தல் தொடர்கிறது

துக்க உணர்வுகளுடன், இழப்புக்குப்பிறகு நெடுநாட்களாகியும் அவரால் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் செயல்பட இயலாவிட்டால், அவருக்குத் தற்கொலை எண்ணங்கள் (தன்னுடைய அன்புக்குரியவருடன் மரணத்தில் இணைய விரும்புதல்) இருந்தால், அவருக்கு மன நலத் தலையீடு தேவைப்படலாம்.

பார்வைகள்

 –  துக்கத்தின் ஐந்து நிலைகள், http://sde.ok.gov/sde/sites/ok.gov.sde/files/Five%20Stages%20of%20Grief.pdf

- குப்ளெர்-ராஸ் மாதிரி, https://hdsa.org/wp-content/uploads/2015/02/13080.pdf

இந்தக் கட்டுரை, பெங்களூரைச் சேர்ந்த உளவியலாளரான பூர்வா ரானடே வழங்கிய கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org