மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

பேச்சுச் சிகிச்சையால் பலனுண்டா?

பேச்சுச் சிகிச்சை, ஆலோசனை அல்லது தெரபி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சிகிச்சைக்கு நிறைய செலவாகலாம், அதன்மூலம் ஒருவர் குணமாவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது, இந்தச் சூழலில் ஒருவர் ஏன் அந்தச் சிகிச்சையைப் பின்பற்றவேண்டும்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

பேச்சுச் சிகிச்சை, ஆலோசனை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தச்சிகிச்சையில், சிகிச்சை வழங்கும் நிபுணர், பாதிக்கப்பட்டவரிடம் பேசுகிறார். அவர்களுடைய சிந்தனைகளைப்பற்றி, உணர்வுகளைப்பற்றி, நடவடிக்கைகளைப்பற்றி, இந்த அனுபவங்களுக்குக் காரணங்களாக இருக்கக்கூடியவைகளைப்பற்றி அவர்களே அறிந்துகொள்ள உதவுகிறார். இந்தச் சிந்தனைகளும் உணர்வுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்த பிறகு, இவற்றைச் சமாளிப்பதற்கான திறன்களைச் சிகிச்சையாளர் சொல்லித்தருகிறார். அதன்மூலம் அவர்கள் தங்கள் உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்குச் சொல்லித்தருகிறார்.

பெரும்பாலான பேச்சுச் சிகிச்சைகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன, இதற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு அவை முன்னேறுகின்றன. இந்தச் சிகிச்சைகள் ஒருவருடைய மன அழுத்தத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதற்குக் காரணமாக அமையக்கூடிய, உணர்வுப் பிரச்னைகளையும் கவனிக்கின்றன, அவற்றையும் சரிசெய்வதற்கு முயலுகின்றன. ஒரு சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் இலக்குகள் பிரிக்கப்பட்டு, சிறிய இலக்குகளாக ஆக்கப்படுகின்றன, பிறகு ஒவ்வொரு சிறிய இலக்கையும் நோக்கி சிகிச்சையாளர் முன்னேறுவார். இதன்மூலம் சிகிச்சை எப்படிப் பலனளிக்கிறது என்பதை அவ்வப்போது காண இயலும். பேச்சுச் சிகிச்சை அளிக்கும் நிபுணரின் பணி, சிகிச்சைக்கான இலக்குகளை பாதிக்கப்பட்டவர் எட்ட உதவுவது, அதன்மூலம் அவர்களின் சிந்தனைச் செயல்முறையை மாற்றி அமைப்பது.

பேச்சுச்சிகிச்சையில் இப்படி எத்தனையோ பலன்கள் இருப்பினும், பெரும்பாலானோர் அந்தச்சிகிச்சையை எடுத்துக்கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம் பேச்சுச்சிகிச்சைக்கு மிகவும் செலவாகும் என்கிற தவறான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருப்பதனால்தான். பேச்சுச்சிகிச்சை பற்றி விசாரிக்கும்போது பெரும்பாலான மக்கள் இவ்வாறு சொல்வார்கள்:

  • தெரபியா? தெரபி நிபுணர்களுக்கு பணம் தரும் அளவிற்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லையே!
  • யாரோ ஒருவர் சும்மா உட்கார்ந்து என் பேச்சைக்கேட்டுக்கொண்டிருப்பார். அதற்கு இவ்வளவு பணம் தரவேண்டுமா?
  • இன்னொருவரிடம் பேசுவதற்காக பணம் தரவேண்டுமா? அதற்கு நான் இப்படியே இருந்துவிடுவேனே!

இன்னொரு பிரச்னை பேச்சுச் சிகிச்சையின் மூலமாக ஒருவருடைய மனநலப் பிரச்னை குணமாகும் என்று யாராலும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. எனவே பலர் இந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். உண்மையில் எந்தச் சிகிச்சையும் பாதிக்கப்பட்ட நபர், அவருக்கு சிகிச்சை தருபவர் என்ற இருவரின் கூட்டு முயற்சியாகவே இருக்கும்; சில நேரங்களில் இவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றாத போது சிகிச்சை பலனளிக்காது போய்விடக்கூடும். இதனால் சில நேரங்களில் பேச்சுச்சிகிச்சைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாகக் குணமாகக்கூடும், அல்லது அவரிடம் குணமாகமலேயே இருந்துவிடலாம். இது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு சிகிச்சை நிபுணரை நாடிச்செல்வது வழக்கம். ஒரு சிலர் பல தெரபி நிபுணர்களிடம் சென்று இவர் நமக்குச் சரிப்படவில்லை என்று திரும்பி வந்துவிடுவார்கள், அவர்கள் தமக்கு ஏற்ற பேச்சுச்சிகிச்சை நிபுணரைக்கண்டு பிடிப்பதற்கு நீண்டகாலம் ஆகலாம்.

உண்மையில் சரியான பேச்சுச்சிகிச்சை நிபுணர் என்று எதுவும் கிடையாது. பாதிக்கப்பட்டவருக்கும் சிகிச்சை பெறுபவருக்கும் உள்ள உறவு நல்ல படியாக இருக்கவேண்டும், அது பாதிக்கப்பட்டவருக்கு சௌகரியமாக இருக்கவேண்டும், இதுதான் முக்கியம். இந்த அம்சங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது பொதுமக்களுக்குச் சில கேள்விகள் எழுகின்றன.

பேச்சுச் சிகிச்சையின் போது உத்தரவாதமாகக் குணமாகும் என்ற நிலை இல்லாத போது நான் எதற்கு இவ்வளவு செலவழிக்கவேண்டும்? இதற்கான பதில் எளிதானது. பேச்சுச்சிகிச்சை பற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைச் சற்றே கவனித்தால் போதும். இந்த ஆய்வுகளின் படி பேச்சுச்சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்களைவிட ஒப்பிட்டால் பேச்சுச்சிகிச்சை பெறுகிறவர்களுக்கு மனநலப் பிரச்னையிலிருந்து குணமாகும் வாய்ப்பு அதிகம்.

பேச்சுச்சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று தெரிந்தாலும் ஒருவர் அதைப் புறக்கணிக்கூடாது. அதற்கான சில காரணங்கள்

  • செயல்திறன்: தொலைநோக்கில் பார்க்கும்போது, சில சூழ்நிலைகளில் மருந்துகளைவிட பேச்சுச்சிகிச்சை தரும் பலன்கள் நீண்ட நாள் நீடிக்கின்றன1.
  • செலவு: பொதுவாக பேச்சுச்சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல, பல பேச்சுச்சிகிச்சை நிபுணர்கள் நியாயமான கட்டணமே வசூலிக்கிறார்கள். சில நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய நிதி நிலையக் கருத்தில் கொண்டு, தங்களுடைய கட்டணத்தையும் மாற்றி அமைப்பதுண்டு.
  • மாதிரி அமர்வுகள்: பல பேச்சுச்சிகிச்சை நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் ஒருமுறை இலவசமாக வரலாம் என்று தெரிவிக்கிறார்கள். இது ஒரு பரிசோதனை முயற்சிபோல அமையும். ஒருவேளை பாதிக்கப்பட்டவருக்கு அந்தப் பேச்சுச்சிகிச்சை நிபுணரிடம் சரியான ஒன்றுதல் ஏற்பட்டால், அவர் தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெறலாம். இல்லாவிட்டால் எந்தச் செலவும் இல்லாமலே அவரிடம் இருந்து விலகி வேறொரு நிபுணரிடம் சிகிச்சை பெறச் செல்லலாம்.
  • மேலும் தீவிரமான மன/உடல் பிரச்னைகளைத் தடுத்தல்: இன்றைக்கு நாம் எல்லாருமே கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். இந்தக் கூடுதல் அழுத்தம் நம்முடைய உடலில் பல பிரச்னைகளைக் கொண்டு வரக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்தப் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கக்கூடும். இதோடு ஒப்பிடும்போது பேச்சுச்சிகிச்சைக்கு எவ்வளவு சீக்கிரம் செலவழிக்கிறோமோ, அவ்வளவு நல்ல பலன் இருக்கக்கூடும். அனாவசிய மருத்துவச்செலவுகளைக் குறைக்கும்.
  • வாழ்க்கைத் தரம்: பதற்றம், மனச்சோர்வு மற்றும் இதர மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுடய வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருக்கும். அவர்களால் பணி இடத்தில் தங்களுடைய முழுத்திறனையும் காட்டி வேலை செய்ய இயலாது. அதனால் செயல்திறன் குறையும், அழுத்தம் மேலும் அதிகமாகும். அவர்களுடைய மனநிலையும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். மற்றவர்கள் அவர்களுடன் பழகுவதையும் குறைத்துக்கொள்ளக்கூடும். ஆகவே, இவர்கள் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பார்கள், அது இந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், உணர்வு சார்ந்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேச்சுச் சிகிச்சைதான் நல்ல பலன்களைத் தருவதாகவும், அதிகச் செலவு பிடிக்காததாகவும் அமைகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஓர் அம்சம், சிகிச்சை பெறுகிறவர் தான் குணமாகவேண்டும் என்று நம்பவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட சில பலன்களுக்கு நேரடியாக பராமரிப்பிட இயலாது. ஆகவே பேச்சுச்சிகிச்சையின் செலவு Vs பலன்கள் என்கிற கணக்கு மாறக்கூடும். அதேசமயம், பொதுவாக, மற்ற சிகிச்சைகளால் குணமாகிறவர்களைவிட பேச்சுச்சிகிச்சையால் குணமாகிறவர்கள் அதிகம் என்பதுதான் உண்மை.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org