உடல்சார்ந்த நோய்களை மருந்துகள் எப்படிக் குணப்படுத்துகின்றன என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும், ஆனால், மனநல மருந்துகள் எப்படி வேலைசெய்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. மனநல மருந்துகளைப்பற்றி மக்கள் பேசுகிற சில பொதுவான விஷயங்கள், அவற்றுக்குப் பக்க விளைவுகள் இருக்கும், அல்லது, அவை பயன்படுத்துகிறவருடைய ஆளுமையை மாற்றிவிடும் என்கிற கவலைகள்தான். அந்தத் தவறான நம்பிக்கைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தவறான நம்பிக்கை: இந்த மருந்துகள் ஒருவரை அடிமையாக்கிவிடும்; ஆகவே, இவற்றை ஒருமுறை சாப்பிடுகிறவர்கள் வாழ்நாள்முழுக்கத் தொடர்ந்து சாப்பிடவேண்டியிருக்கும்.உண்மை: வெவ்வேறு மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த வெவ்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவான மனநலப் பிரச்னைகளுக்கு வழங்கப்படுகிற பெரும்பாலான மருந்துகள் யாரையும் அடிமையாக்குவதில்லை. ஒருவருடைய அறிகுறிகள் மற்றும் நோய் வரலாற்றைக் கருத்தில் கொண்டுதான் மனநல நிபுணர் எந்த ஒரு மருந்தையும் பரிந்துரைப்பார். இந்த மருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பரிந்துரைக்கப்படும், அதில் காணப்படும் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு அதன் அளவு குறைக்கப்படும்.
தவறான நம்பிக்கை: மருந்துகளைச் சாப்பிட்டதும் உடனடியாக நல்ல குணம் தெரியும். அவை 'மகிழ்ச்சி மருந்துகள்'.உண்மை: பொதுவாக எந்தவொரு மருந்திலும் உடனடிப் பலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மனநல மருந்துகள் ஒருவரை 'மகிழ்ச்சியாக' ஆக்குவதில்லை, அவருடைய தீவிர உணர்வு மாற்றங்களைச் சமாளிக்க அவருக்கு உதவுகின்றன. மற்ற மருந்துகளைப்போலவே, மன நல மருந்துகளும் பணிபுரிவதற்குச் சிறிது நேரமாகலாம். குறிப்பிட்ட மருந்தளவுகள் ஒருவரை ஒரு குறிப்பிட்டவிதமாக உணரவைக்கலாம்; அந்த அளவை மாற்றினால் அவர் வேறுவிதமாக உணரலாம். இதுபற்றி அவர் தன்னுடைய உளவியலாளரிடம் விவாதிப்பது அவசியம், ஒரு குறிப்பிட்ட மருந்து தன்னை எப்படிப் பாதிக்கிறது என்பதுபற்றி அவர் தன்னுடைய உளவியலாளருக்குச் சொல்லவேண்டும்.
தவறான நம்பிக்கை: ஒரு குறிப்பிட்ட பரிந்துரை தொடக்கத்தில் வேலைசெய்யாவிட்டால், மற்ற பரிந்துரைகளும் வேலைசெய்யாமல்போகலாம்.உண்மை: ஒருவருடைய மருந்துகள் வேலைசெய்யத் தொடங்கச் சிறிது நேரமாகலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு, அவருடைய தேவைக்கு நன்கு பொருந்தும்வகையில் ஒரு மருந்தின் அளவை மாற்றவேண்டியிருக்கலாம். சில சூழ்நிலைகளில், மருந்து வேலைசெய்யாமல்போகலாம், அப்போது பரிந்துரையை மாற்றவேண்டியிருக்கலாம். ஒரு ஆன்ட்டிபயாடிக் வேலைசெய்யாதபோது இன்னொரு ஆன்ட்டிபயாடிக்கை மருத்துவர் முயன்றுபார்க்கிறார், அது செயல்திறனுடன் வேலைசெய்யலாம், அதைப்போல்தான் இதுவும்.
தவறான நம்பிக்கை: மன நல மருந்துகளுக்குப் பல பக்க விளைவுகள் இருக்கும்.உண்மை: ஒருவர் எதற்காக மருந்துகளைச் சாப்பிட்டாலும் அதில் பக்க விளைவுகள் இருக்கலாம். ஒருவர் எந்த மருந்தைச் சாப்பிடும்போதும், அதில் இருக்கும் முதன்மைப் பொருட்களுக்கு அவருடைய உடல் பழகிக்கொள்ளவேண்டும். இதற்குக் குறிப்பிட்ட நேரம் ஆகலாம், அந்தக் காலகட்டத்தில் அவருடைய உடல் ஒரு குறிப்பிட்ட வகையில் எதிர்வினை நிகழ்த்தலாம். குமட்டல், மயக்கம் மற்றும் களைப்புபோன்ற பக்க விளைவுகள் உண்டாகலாம். அதேசமயம், நேரம் ஆக ஆக, இந்தத் தாக்கம் பெரும்பாலும் குறைந்துவிடும். ஒரு குறிப்பிட்ட மருந்து பரிந்துரைக்கப்படும்போது, அதில் எந்தப் பக்க விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்று மருத்துவரிடம் பேசுவது நல்லது.
தவறான நம்பிக்கை: மருந்துகளைச் சாப்பிடுவதால் ஒருவருடைய ஆளுமை/அடையாளம் மாறிவிடும்.உண்மை: மருந்துகளால் ஒருவருடைய ஆளுமையை மாற்ற இயலாது. நோயால் அவர் சந்தித்துவந்த தீவிர உணர்வுகள் அடிக்கடி வருவது குறையலாம். இதை அவர் கவனிக்கக்கூடும்.
தவறான நம்பிக்கை: ஒருவர் மன நல மருந்துகளை உட்கொள்கிறார் என்றால், அவருடைய பிரச்னை மிகவும் தீவிரமடைந்துவிட்டது, அவரால் எப்போதும் குணமடைய இயலாது என்று பொருள்.உண்மை: சில மனநலப் பிரச்னைகள் நரம்புக் கடத்திகளின் சமநிலைமையின்மையால் உண்டாகின்றன. இதனைச் சமநிலைப்படுத்த மருந்துகள் உதவுகின்றன. ஒருவருடைய அறிகுறிகள் தீவிரமாக உள்ளன என்றால், அவர் தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு மருந்துகள் உதவும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் கூட்டணியால் அவர் தன்னுடைய அறிகுறிகளை இன்னும் நன்றாகக் கையாளத் தொடங்குவார், சாத்தியமுள்ள தூண்டிகளை இன்னும் நன்றாக அடையாளம் காணத் தொடங்குவார்.
தவறான நம்பிக்கை: ஒருவர் முன்பைவிட நன்றாக உணரும்போது மருந்துகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.உண்மை: ஆன்ட்டிபயாடிக்ஸைப்போலவே, மனநல மருந்துகளும் ஒரு 'கோர்ஸ்' என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. மருந்துகளை நிறுத்துவதற்குமுன்னர் ஒருவர் தன்னுடைய மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். ஒருவர் மருந்துகளை திடீரென்று நிறுத்திவிட்டால், அந்த மாற்றத்துக்கேற்ப அவருடைய உடல் ஓர் இதமான முறையில் தன்னைச் சரிசெய்துகொள்வது சிரமமாகலாம், இதனால் பிரச்னை மீண்டும் திரும்ப வரலாம்.
தவறான நம்பிக்கை: ஒருவர் மனநல மருந்துகளை உட்கொள்கிறார் என்றால் அவருக்குப் பேச்சுச் சிகிச்சை தேவையில்லை. உண்மை: மருந்துகள் மற்றும் பேச்சுச் சிகிச்சை ஆகிய இரண்டும் மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான வெவ்வேறு வழிகளாகும். மனநலப் பிரச்னைகள் உடல் சார்ந்த மற்றும் சூழல் சார்ந்த காரணிகளின் தொகுப்பால் உண்டாகலாம். மருந்துகள் மனநலப் பிரச்னையின் உயிரியல் சார்ந்த அம்சத்தைச் சரிசெய்துகொண்டிருக்கும்போது, அதே மனநலப் பிரச்னையின் சூழலியல் அம்சத்தைப் பேச்சுச் சிகிச்சை சரிசெய்யக்கூடும். ஆகவே, மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறவர் தன்னுடைய மனநல மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும், அவர் மருந்துகள் மற்றும் பேச்சுச் சிகிச்சையைத் தனக்குப் பரிந்துரைக்கிறாரா என்று கேட்கவேண்டும்.
மனநல மருந்துகளைப்பற்றித் தெரிந்துகொள்ள எங்களுடைய வீடியோவைக் காணலாம்.
இந்தப் பட்டியலானது பெங்களூரு NIMHANSல் மனநல மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் சந்தோஷ் லோகநாதன் வழங்கிய கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.