மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

மனநலத்துக்கான முதலுதவி

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நீங்கள் உங்கள் விரலை வெட்டிக்கொண்டால், என்ன செய்வீர்கள்? நீங்கள் உங்கள் விரலைத் தண்ணீரால் கழுவுவீர்கள், கிருமிநாசினிக் களிம்பை வெட்டின் மீது பூசுவீர்கள், மேலும் தொற்றுப் பரவலைத் தடுக்க காயத்தைப் பாண்ட் எய்டால் மூடுவீர்கள். இது உடலுக்கான முதலுதவி. இதைப்போல், மனதுக்கும் ஒரு முதலுதவி உள்ளது, அது மனநல முதலுதவி என அழைக்கப்படுகிறது.

மனநல முதலுதவி என்பது ஒரு நபருக்கு வந்திருக்கச் சாத்தியமான மனநலப் பிரச்னையைக் கண்டறியும் ஒரு செயல்முறையாகும். அதில் இடம்பெறுபவை: ஒருவருடைய உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னைகளின் குறியீடுகளை அடையாளங்காணுவது, தேவைப்பட்டால், அவரை நிபுணரின் உதவியை நாடச்சொல்வது. உடல் பிரச்னையோ, மனப் பிரச்னையோ, விரைவாக்க் கவனித்தால் குணமாகும் சாத்தியம் அதிகம்.

யாருக்கு மனநல முதலுதவி தேவைப்படுகிறது?

மனநல முதலுதவி என்பது, உணர்ச்சித் துயரத்தை அனுபவிக்கும் மற்றும் உதவி தேவைப்படும் நபர்களுக்கானது. குழந்தை புதிய பள்ளிக்குச் செல்வது, ஒரு நபர் உறவில் பிரிவை எதிர்கொள்வது, ஒரு பணியாளர் புதிய நகருக்கு இடம் பெயர்வது, அன்புக்குரியவர்களின் இழப்பு, வேலை இழப்பு, நிதி இழப்பால் வருந்துதல் போன்ற பல சூழல்களில் உணர்ச்சிநிலை அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. தீடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்வதால், அவருக்கு மன அழுத்தம், பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம், இது ஆரம்பத்திலே கண்டறியப்படவில்லையெனில், மனநலப் பிரச்னையாக வளரலாம். எனவே, அந்த நபரைப் பாதுகாக்க, அவருக்கு மேலும் சேதம் ஏற்படாமலிருக்க உதவி தேவை.

மனநல முதலுதவி என்றால், ஒரு மனநலப் பிரச்னையைக் கண்டறிவது, அல்லது ஒருவர் தன்னுடைய நெருக்கடியைக் கையாள உதவுவது, அல்லது, ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது இல்லை.

மனநல முதலுதவி தேவைப்படும் நபர்களை அடையாளம் காணுவது எப்படி?

ஒருவரைப் பார்த்தவுடன் ‘இவருக்கு மனநல முதலுதவி தேவை’ என்று பொதுமக்களால் கண்டறிய இயலாது. ஆனால், தீவிர மன மற்றும் உணர்வுத் துயரத்தைச் சந்திப்போர் சில குறிப்பிட்ட எண்ணங்கள், நட்த்தைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள், இதை வைத்து அவர்களுடைய துயரத்தைக் கண்டறியலாம். அவையாவன:

 • எளிதில் கண்ணீர் விடுவது
 • கவலையாக மற்றும் பதற்றமாக இருப்பது
 • கோபமாக மற்றும் எரிச்சலைடைந்து இருப்பது
 • சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது
 • பள்ளி/கல்லூரி/பணியிடத்துக்குப் போக மறுத்தல்
 • தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்வது
 • குற்ற உணர்வு
 • நம்பிக்கையற்ற உணர்வுகள்
 • உதவியற்ற உணர்வுகள்

சிலநேரங்களில், அந்த நபருக்கு மனநல நிபுணர்களின் உதவி தேவைப்படலாம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் உரையாடல்கள் மற்றும் ஆதரவைத்தான் மற்ற நபர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

ஒருவர் மனநல முதலுதவியை வழங்குவது எப்படி?

தனக்குத் தெரிந்த ஒருவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பதை ஒருவர் பார்த்தால், அவரை அணுகிப் பேசலாம். இந்தப் பேச்சு பச்சாத்தாபத்துடன், அவரைப்பற்றி எந்த்த் தீர்மானத்தையும் எடுக்காமல், ரகசியமாக இருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு மேலாளர், ஒரு கீழ்நிலை பணியாளருக்கு இடையேயான இந்த உரையாடலைப் பாருங்கள்:

மேலாளர்: வணக்கம் ஆனந்த், நீங்கள் இப்போது சில  நாட்களாக மிகவும் மந்தமாக மற்றும் சோர்வாகத் தெரிகிறீர்கள். ஏதாவது சரியில்லையா?

ஆனந்த்: எனது தந்தை உடல்நலமின்றி உள்ளார். அவரது உடல்நிலை மோசமாகவிட்டது. நான் வேலையின் காரணமாக அவருடன் நேரம் செலவழிக்க இயலவில்லை.

மேலாளர்: நீங்கள் அவரை மருத்துவரிடம் கூட்டிச் சென்றீர்களா?

ஆனந்த்: ஆம், மருத்துவர் அவரது மருந்துகள் வேலை செய்வதை நிறுத்துவிட்டன என்றார், மேலும் அவரை இயன்றவரை அமைதியாக வாழவிடவேண்டும் என்று கூறினார்.

மேலாளர்: ஓ. நீங்கள் அதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ஆனந்த்: நான் அவரைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்வடைந்து விட்டேன், மேலும் நான் அவருடன் நேரம் செலவழிக்க இயலவில்லை என்று மோசமாக உணர்கிறேன்.

மேலாளர்: நீங்கள் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு அவருடன் இருங்கள். அவருடன் சிறிது நேரம் செலவழியுங்கள். இந்தச் சூழ்நிலையில் வண்டி ஓட்டுவது நல்லதில்லை, வாடகை வண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனந்த்: நன்றி, ஐயா. நான் இப்போதே கிளம்புகின்றேன்.

இந்தச் சூழ்நிலையில், ஒருவர் தன் தந்தையின் உடல்நலன் குறித்து உதவியற்றுச் சோகமாக உள்ளார், அவருடைய மேலாளர் தன் சக பணியாளருக்கு மனநல முதலுதவி வழங்கினார். அவர் புரிந்துகொள்பவராக இருந்தார், மேலும், ஆனந்த் கூறுவதைக் குறுக்கிடாமல் கேட்டார், அவரது உணர்வுகளை வெளிப்படுத்த விட்டார். அவர் ஆனந்துக்குத் தன்னை எளிதாக்கவும் தனது தந்தையுடன் நேரம் செலவழிக்கவும் உதவினார்.

இப்படி யாருக்கேனும் மனநல முதலுதவி தேவைப்படுவதாகத் தோன்றினால் இவற்றைச் செய்யலாம்:

 • அவர்களுடைய சிந்தனைக்காக (எடுத்துக்காட்டாக, தற்கொலை எண்ணம்) அவர்களைக் குற்றம் சாட்டவேண்டாம்.
 • அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
 • தீர்வுகளை அளிக்க முயற்சிசெய்யவேண்டாம், அவர் தீர்வுகளைத் தேட உதவலாம்.
 • அவர்கள் ஏதேனும் ஆதரவு அமைப்பினைப் பெற்றுள்ளார்களா என்று கண்டறியலாம்.
 • அவர் தன்னுடைய பிரச்னைகளைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. எல்லைகளை மதிக்கவேண்டும்.

அந்த நபர் தற்கொலை எண்ணங்கள் கொண்டுள்ளதாக, அல்லது பலவீனமாக்கும் உணர்வுகளைக் கொண்டிருப்பதாக, அல்லது நடத்தைப் பிரச்னைகளான போதைப்பழக்கம் போன்றவற்றைக் கொண்டிருப்பதாக நினைத்தால், அவர்களை ஒரு மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.

இந்த உள்ளடக்கங்கள், மனநலக் கல்வித்துறை உதவிப் பேராசிரியர் மரு KS மீனாவின் உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டன.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org