மனமாக்க அடிப்படையிலான சிகிச்சை: செயல்படுமுன்னர் சிந்திக்கக் கற்றுக்கொள்ளுதல் 

மனமாக்க அடிப்படையிலான சிகிச்சை: செயல்படுமுன்னர் சிந்திக்கக் கற்றுக்கொள்ளுதல் 

மனமாக்க அடிப்படையிலான சிகிச்சை (MBT) என்பது,  விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடுள்ள (BPD) நபர்களுக்கான ஒருவகைச் சிகிச்சையாகும். பிரிட்டனைச் சேர்ந்த உளவியல் இயங்கியல் சிகிச்சையாளர்களான பீட்டர் ஃபொனாகி மற்றும் ஆன்டனி பாடெமன் இதை உருவாக்கினார்கள். பாதுகாப்பற்ற இணைப்புகளால் தடுமாறுகிறவர்களுக்கு மனமாக்கல் திறனை மீட்கும் இலக்குடன் இது செயல்படுகிறது.

பாதுகாப்பற்ற இணைப்புகள் எப்படி உருவாகின்றன?

சிறு பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், தங்களுடைய பெற்றோருடன் நெருங்கியிருக்கவேண்டும் என்று உணர்கிறார்கள், அது அவர்களுக்குள் உள்ளார்ந்த ஓர் எண்ணமாக இருக்கிறது. ஒருவர் அழுத்தத்துக்கு ஆளாகும்போது, இதமளிக்கும் எதிர்வினையைப் பெறுவதற்காகச் சிரித்தல், அழுதல், அல்லது பற்றிக்கொள்ளுதல் போன்ற இணைப்பு நடவடிக்கைகளை நம்புகிறார். இந்தச் செயல்பாடுகளுக்கு ஒருவருடைய பெற்றோர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது, அவருடைய பாதுகாப்பு உணர்வின் இயல்பு, வளர்ச்சியில் தாக்கம் உண்டாக்குகிறது.

எளிமையாகச் சொன்னால், வசதியாக்கும் எதிர்வினைகள் ஒரு சட்டகத்தை வழங்குகின்றன, மக்கள் தங்களைத்தாங்களே தேற்றிக்கொள்ள, தங்களுடைய உணர்வுகள் மற்றும் பழகுமுறைகளைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. இதனால், அவர்களுக்குள் ஓர் உறவு மாதிரி உண்டாகிறது, அவர்களுடைய வாழ்க்கையில் பின்னர் வருகிற உறவுகளுக்கு அவர்கள் இதனைப் பின்படுத்துகிறார்கள்.

சில சூழ்நிலைகளில், எடுத்துக்காட்டாக, பெற்றோர் குழந்தைக்குப் போதுமான அளவு எதிர்வினையாற்றாவிட்டால், ஒரு பாதுகாப்பற்ற இணைப்பு உண்டாகலாம். இது வேண்டுமென்றே செய்யப்படாமலிருக்கலாம், என்றாலும், இதனால் குழந்தையால் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் போகிறது, வளர்ந்தபின், பிறருடனான அவருடைய உறவுகளைப் பாதிக்கிறது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்களால் மனமாக்க இயலுவதில்லை.

அதென்ன மனமாக்கம்?

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைச் சந்திக்கும்போது, தன்னுடைய அல்லது பிறருடைய நடவடிக்கைகளில்மட்டும் கவனம் செலுத்தாமல், அதைப்பற்றிய தன்னுடைய எண்ணங்கள், உணர்வுகளை அடையாளம் காணும் திறனை மனமாக்கம் என்கிறோம். இதன்மூலம், மக்களால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றித் தெளிவாகச் சிந்திக்க இயலுகிறது; சூழ்நிலையை வெவ்வேறு பார்வைக்கோணங்களில் புரிந்துகொள்ள இயலுகிறது. இது, செயல்படுவதற்குமுன்னால் சிந்திக்கிற திறனை வழங்கி உதவுகிறது, மக்களுடைய உரையாடல்கள், சமூக உறவுகளை மேம்படுத்துகிறது.

மனமாக்க அடிப்படையிலான சிகிச்சை என்றால் என்ன?

MBT என்பது ஒருவகையான பேச்சுச் சிகிச்சையாகும்; பாதிக்கப்பட்டவர்களைத் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து நிகழ்வுகளை விவரிக்கும்படி இது ஊக்குவிக்கிறது. பின்னர், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய எண்ணங்கள், உணர்வுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும், எதிர்மறை அதீதங்களில் சிந்திப்பது அல்லது பொதுமைப்படுத்துவது (எடுத்துக்காட்டாக, “நான் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டேன், அவர்கள் என்னை எப்போதும் புறக்கணிக்கிறார்கள்” என்பதுபோன்ற எண்ணங்களைச் சிந்திப்பது) போன்ற மனமாக்கமல்லாத முறைகளை அடையாளம் காணவும் சிகிச்சையாளர் உதவுவார். சிகிச்சையளிப்பவர் சில குறிப்பிட்ட அம்சங்களைக் குறிவைத்துச் சிகிச்சையளிப்பதால், பாதிக்கப்பட்டவர் அந்நிகழ்ச்சியை வெவ்வேறு பார்வைக்கோணங்களிலிருந்து பார்க்க இயலுகிறது. பின்னர் அவர்கள் மனமாக்கத்தில் ஈடுபடலாம், தங்களுடைய சொந்த உணர்வுகளை ஒழுங்குபடுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவருடைய நண்பர் அவருடைய தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசாதபோது, தன்னுடைய நண்பர் தன்னைப் புறக்கணிப்பதாக அவர் புகார் கூறலாம். முதலில், நிகழ்ச்சியைத் தொடர்ந்த எண்ணங்கள், உணர்வுகளை அடையாளம் காண்பதற்குச் சிகிச்சையாளர் அவருக்கு உதவுகிறார்; பின்னர், அவருடைய நண்பர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமலிருந்ததற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய உதவுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மனமாக்கமல்லாத முறையைக் காண, தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த, அந்த நிகழ்ச்சியைக் கடந்து வர இது உதவுகிறது.

ஒருவர் எந்த அளவுக்கு இந்தப் பயிற்சியை அதிகம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு மனமாக்கல் அவருடைய இயல்பாகிவிடுகிறது; சிகிச்சையிடத்துக்கு வெளியில் பிறருடன் பழகும்போதும் இந்த வியூகத்தை அவர் பயன்படுத்தத் தொடங்குகிறார். இது, உணர்வுகளை இன்னும் நன்கு கட்டுப்படுத்த உதவுகிறது, சின வெடிப்புகளைக் குறைக்கிறது, நடத்தையை மேம்படுத்துகிறது.

MBTயால் யார் பலனடையலாம்?

இந்தச் சிகிச்சை BPDயுடன் வாழ்கிற மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது, அதேசமயம், மற்ற ஆளுமைக் குறைபாடுகள்உண்ணல் குறைபாடுகள், திரும்பத்திரும்ப வருகிற மனச்சோர்வு, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல், மற்றும் அடிமையாதல் ஆகியவற்றுக்குச் சிகிச்சை வழங்கவும் இதைப் பயன்படுத்தலாம். சிக்கலான அதிர்ச்சியால் துன்பப்படுகிறவர்களும் இந்தச் சிகிச்சையால் பலன் பெறலாம், தூண்டிகளுக்கு எதிர்வினையாற்றும்போது உணர்வுக் கொந்தளிப்பைத் தவிர்க்கலாம்.

CBT அல்லது DBTக்கும் MBTக்கும் என்ன வேறுபாடு?

இந்தச் சிகிச்சைகள் அனைத்திலும் சில விஷயங்கள் ஒரேமாதிரி உள்ளன, எடுத்துக்காட்டாக, உணர்வுகள் மற்றும் பழகுமுறைகளுக்கிடையிலுள்ள இணைப்புகளைப் புரிந்துகொள்ளுதல். அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) மற்றும் இயங்கியல் பழகுமுறைச் சிகிச்சை (DBT) ஆகியவை ஒரு திசைகாட்டும் அணுகுமுறையின்வழியாகப் பழகுமுறைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றன; சிகிச்சையளிப்பவர், பாதிக்கப்பட்டவரைத் தன்னுடைய பழகுமுறையை மாற்றிக்கொள்ளும்படி தூண்டுகிறார்.

MBT இயல்பில் அதிகம் ஆராயும் தன்மையைக் கொண்டது, மனமாக்கச் செயல்முறையை மீட்பதில் கவனம் செலுத்துகிறது. பாதிக்கப்பட்டவரால் தன்னுடைய நெருக்கடியை அமைதியாகச் சிந்திக்க இயன்றதும், தன்னுடைய பழகுமுறையை மாற்றிக்கொள்வதுபற்றி அவரே சொந்தமாகத் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் MBT பின்பற்றப்படுகிறதா?

ஒப்பீட்டளவில் புதிய  சிகிச்சை முறையான MBT இந்தியாவில் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது; இந்தச் சேவை குழுச் சிகிச்சை வடிவில் பெங்களூரில்மட்டும் கிடைக்கிறது.

ஒவ்வொரு புதிய குழுவினரும் ஓராண்டுக்கு வாராந்திர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வையும், மனநல மருத்துவர் ஒருவரும், சக-சிகிச்சையளிப்பவர் ஒருவரும் வழிநடத்துகிறார்கள், இவை 75 நிமிடங்களுக்கு நடைபெறுகின்றன. ஆறு மாதங்களின் நிறைவிலும், ஆண்டின் நிறைவிலும் மனநல மருத்துவர் மதிப்பீடுகளை நிகழ்த்துகிறார், அதன்பிறகு, உறுப்பினர்களுடைய முன்னேற்றம் அவ்வப்போது கண்காணிக்கப்படுகிறது. குழுவில் பங்கேற்பவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன, இதன்மூலம், தங்களுடைய அன்புக்குரியவர்களுடைய போராட்டங்களை அவர்களால் இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள இயலுகிறது.

குழுச் சிகிச்சை ஏன்?

உண்மையில், MBTயானது குழு மற்றும் தனிநபர் சிகிச்சையின் தொகுப்பாகப் பெறப்படுகிறது; ஆனால், இந்தியாவில் தனிநபர் MBTயை வழங்கப் பயிற்சி பெற்ற வல்லுனர்கள் போதுமான அளவு இல்லை.

அத்துடன், குழுச் சிகிச்சையில் பல நன்மைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இணைப்புகளை உண்டாக்கிக்கொள்கிறார்கள்; இதேபோன்ற பிரச்னைகளுடன் போராடுகிறவர்களுடன் உரையாடுகிறார்கள். குழுச் சிகிச்சையின் நோக்கம், சிகிச்சையளிப்பவரும் குழு உறுப்பினர்களும் பிறருடனான ஊடாடல்களின்போது தாங்கள் எங்கு மனமாக்கல் திறனை இழக்கிறோம் என்பதை உடனுக்குடன் காணச்செய்வது. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஆதரிக்கவும், தங்களுடைய சிந்திக்கும் திறனைத் திரும்பப்பெறவும் இந்தப் பாதுகாப்பான இடம் அனுமதிக்கிறது.

MBTயைத் தனிநபர் சிகிச்சைக்குப்பதிலாகப் பயன்படுத்த இயலாது. குழுச் சிகிச்சையானது, பாதிக்கப்பட்டவர் பிறருடனான உறவுகளில் மனமாக்கத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது; தனிநபர் சிகிச்சையின்போது, அதிர்ச்சி மற்றும் குழுவாக விவாதிக்க இயலாத பிற நுண்ணுணர்வுள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்காக இடத்தைக் காலிசெய்கிறது.

விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு மற்றும் மனமாக்க அடிப்படையிலான சிகிச்சையில் வல்லுனரான டாக்டர் ஆஷ்லேஷா பகாடியா வழங்கிய குறிப்புகளுடன்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org