மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

காயங்களை ஆற்றும் இசை

மனநலப் பிரச்னைகளைக் குணமாக்க, இசைச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

அன்றுமுதல் இன்றுவரை, இசையும் தாளமும் நம் வாழ்வில் இணைந்துள்ளன. உலகக் கலாசாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கிய இடமுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள், இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன: குழந்தைப் பிறப்பு, திருமணம், திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சி, மற்ற சமூக, கலாசார நிகழ்வுகள்... அனைத்திலும். அதேபோல், இசையை ஆரோக்கியத்துக்காக, சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதும் பலகாலமாக வழக்கத்தில் உள்ளது.

இசைச் சிகிச்சை என்றால் என்ன?

இசைச் சிகிச்சை என்பது, ஒருவருடைய உளவியல் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்படும் தலையீடாகும். தகுதிபெற்ற இசைச் சிகிச்சையாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவருடைய உளவியல் மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிடுவார், அவருக்கு உரிய சிகிச்சையைத் தருவார். இதில் பாடுதல், ஓர் இசைக்கருவியை இசைத்தல், இசையைக் கேட்டல், இசையை உருவாக்குதல் போன்றவை இடம்பெறலாம். இசைச்சிகிச்சையானது, பாதிக்கப்பட்டவர் தனது சிகிச்சையைத் தொடர ஊக்கம்தருகிறது, அவர்களது இயக்கவியல் திறன்களை (உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளில்) மேம்படுத்துகிறது, தகவல்தொடர்பு வெளிப்பாடாகவும் திகழ்கிறது. குறிப்பாக, தங்கள் எண்ணங்கள், உணர்வுகளைச் சொல்லால் சொல்லச் சிரமப்படுகிறவர்களுக்கு இது நல்ல பலன் தருகிறது. உதாரணமாக, ஒருவர் உடல் அல்லது மன அதிர்ச்சியை அனுபவித்திருக்கும்போது, அவர் அதிர்ச்சி நிலையில் இருக்கலாம், பேச இயலாமல் திகைக்கலாம், அவர்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை அவர்களால் சொல்ல இயலாமல் போகலாம். இசைச் சிகிச்சை இந்தத் தடையை உடைக்கிறது. அவர்கள் தங்களுடைய உள் முரண்களையும் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவுகிறது.

மனத்தைத் தளர்த்தும் மற்ற உத்திகளைப்போலவே, இதமான இசையை இசைப்பது அல்லது கேட்பது (குரல்களை அல்லது இசைக்கருவிகளை) மூளையைத் தூண்டுகிறது, அறிவாற்றல், உணர்வுநிலை மற்றும் உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது.

இசைக் கல்வி, இசைச் சிகிச்சை வேறுபாடு

இசைச் சிகிச்சை, இசைக் கல்வி ஆகிய இரண்டிலும் இசை உருவாக்கப்படுகிறது. ஆனால், அவற்றின் நோக்கம் வேறு.

இசைச் சிகிச்சை இசைக் கல்வி
ஓர் இசைச் சிகிச்சையாளர் உடல் அல்லது உணர்வுப் பிரச்னை (புத்திசாலித்தனக் குறைபாடு, மனநலப் பிரச்னைகள், வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவை) கொண்டவர்களுடன் பணியாற்றுகிறார். ஓர் இசை ஆசிரியர் பாரம்பரிய முறைப்படி இசை கற்பிக்கிறார். அவருடைய மாணவர்கள் எந்தச் சிரமமும் இல்லாதவர்கள், நன்கு செயல்படுகிறவர்கள்.
ஒவ்வொருவரும் தன் ஆர்வம் மற்றும் திறனுக்கேற்ப இசையைக் கற்கலாம். கச்சிதமாக இசைக்கவேண்டும் என்று கவலைப்படாமல், கற்கும் முறையை ரசிக்கலாம். ஒவ்வொருவரும் அடிப்படையிலிருந்து இசை கற்கவேண்டும், கொஞ்சம்கொஞ்சமாக உத்திகள், பாணிகளில் சிறந்துவிளங்கவேண்டும்.
சிகிச்சையளிப்பவரும் பாதிக்கப்பட்டவரும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள், நன்கு பழகுகிறார்கள், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள், அதன்மூலம் சிகிச்சையைச் சிறப்பாக்குகிறார்கள். பொதுவாக, ஆசிரியர் - மாணவர் இடையே ஒரு சுமுகமான உறவு இருக்கும், மாணவரின் இலக்கு, அந்த இசைத்துறையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிபுணத்துவம் பெறுவதாக அமையும்.
பாதிக்கப்பட்டவர்கள் பலவகைகளில் மேம்படுவதற்கு (அறிவாற்றல், தகவல்தொடர்பு, கல்வி, இயக்கவியல், உணர்வு, ஒழுங்குபடுத்துதல், படைப்புத்திறன் மற்றும் சமூகத் திறன்கள்) இசைச் சிகிச்சையாளர்கள் உதவுகிறார்கள். இதனால், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலையைச் சமாளிக்கவும், தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கையாளவும் கற்றுக்கொள்கிறார். இசைக் கல்வியாலும் மாணவர்கள் அறிவாற்றல் திறன்கள், கவனக்கூர்மை, படைப்பாற்றல் மற்றூம் சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் பெரும்பாலும் இசை நிகழ்ச்சிகளில்மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

மனநலப் பிரச்னைகளுக்கு இசைச் சிகிச்சை

இசைச் சிகிச்சையானது மனநலப் பிரச்னைகளுக்கு ஒரு கூடுதல் சிகிச்சையாக (மற்ற சிகிச்சைகளுடன்) பயன்படுத்தப்படுகிறது. இசைச் சிகிச்சையின் நோக்கம், சொற்கள் அல்லது மருந்துகளைமட்டும் வைத்துக் கையாளச் சிரமமான பிரச்னைகளைக் கையாள்வது. தொழில்முறை இசைச் சிகிச்சையாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவருடைய கலாசார, தனிப்பட்ட விருப்பங்களைக் கருத்தில் கொண்டு ஒரு பொருத்தமான் இசையைத் (குரல் அல்லது இசைக்கருவி) தேர்ந்தெடுக்கிறார், அதன்மூலம் சிகிச்சையும் சிறப்பாகிறது, ஒட்டுமொத்த அனுபவமும் மகிழ்ச்சியானதாக அமைகிறது.

இசைச் சிகிச்சையானது ஆட்டிஸம், ADHD, டவுன் குறைபாடு, ஸ்கிஜோஃப்ரெனியா, பதற்றம், மனச்சோர்வு, அல்சைமர்ஸ் குறைபாடு, அடிமையாதல் போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்த நன்கு பயன்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும், தங்களுடைய உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிக்க இசைச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுக்குத் தெரியுமா? இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நேரம், அமெரிக்காவில் ஏராளமானோர் போர் தொடர்பான உடல் மற்றும் மன அதிர்ச்சியுடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போது, அந்நாட்டைச்சேர்ந்த பல இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்று இசைக்கோப்புகளை வாசித்தார்கள். இதனால், அந்த நோயாளிகள் விரைவில் குணமானார்கள். இதைக் கவனித்த மருத்துவர்கள், அதன்பிறகு தங்களுடைய மருத்துவமனைகளில் இசைக்கலைஞர்களை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கினார்கள்.

இசைச் சிகிச்சையின் வகைகள்

பாதிக்கப்பட்டவரின் தேவை, ஒரு குறிப்பிட்ட இசையைப் புரிந்துகொள்ள அல்லது கற்க அவருக்கு இருக்கும் திறன் ஆகியவற்றைப்பொறுத்து, இசைச் சிகிச்சையாளர் இவற்றில் ஏதேனும் ஒரு வகையைப் பயன்படுத்துவார்:

பின்னணி இசைச் சிகிச்சை: இசையானது  மருத்துவமனையில் வானொலி அல்லது ஒலிநாடா வழியே தொடர்ந்து சில மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது. இதனால், ஓர் அமைதியான சூழல் உண்டாகிறது. இதனால், சிகிச்சைபெறுவோரின் பதற்றம், மன அழுத்தம் குறைகிறது. குறிப்பாக நெருக்கடிநேரப் பராமரிப்பில் இருப்பவர்களுக்கு இது நல்ல பலன் தருகிறது.

தியான இசைச் சிகிச்சை: பாதிக்கப்பட்டவர் இசை மற்றும் கலையின் பொதுவான முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஓர் இசையை ஒலிக்கச்செய்யுமுன், சிகிச்சை பெறுகிறவருக்கு அல்லது சிகிச்சை பெறும் குழுவுக்கு அந்த இசையை உருவாக்கிய இசையமைப்பாளரின் வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது, அந்த இசையைப்பற்றிய பிற விவரங்கள் வழங்கப்படுகின்றன. இந்தச் சிகிச்சையால் ஒருவருடைய போராட்டவுணர்வு கட்டுப்படுகிறது, சோகம் குறைகிறது.

குழு இசைச் சிகிச்சை: இசைச் சிகிச்சை வழங்குபவர் ஒரு குழுவினருக்குப் பாடச் சொல்லித்தருகிறார், அல்லது ஓர் இசைக்கருவியை இசைக்கச் சொல்லித்தருகிறார். இது பொதுவாக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள்மத்தியில் பயன்படுத்தப்படுகிறது. குழுச் சிகிச்சை தன்னம்பிக்கையையும் சுயமதிப்பையும் வலுப்படுத்துகிறது.

இசைக்கலைஞர்கள் வாசிக்கும் இசை: மருத்துவமனை வார்ட்களுக்கு ஓர் இசைக்கலைஞர் வந்து, தன் இசைக்கருவியை வாசிக்கிறார். இந்த வகைச் சிகிச்சை பொதுவாக மனநல பாதிப்பு, ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் அல்லது உணர்வுப் பிரச்னைகள் கொண்ட பெரியவர்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

படைப்பாற்றல் இசைச் சிகிச்சை: சிகிச்சை பெறுவோர் பாடல்களை எழுதுகிறார்கள், இசையமைக்கிறார்கள், இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள், இது அவர்களுக்கு அமைதி தருகிறது. இதனால், அவர்களால் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்த இயலுகிறது. உதாரணமாக, இறந்துபோன காதலியை எண்ணி ஒருவர் பாடலாம், இதேபோல் அடக்கிவைக்கப்பட்ட பயங்கள், உணர்வுகளையெல்லாம் அவர்கள் பாடல் மற்றும் இசைவழியே வெளிப்படுத்துகிறார்கள்.

இசைச் சிகிச்சையின் பகுதிகள்

இசைச் சிகிச்சையில் பல பகுதிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாகப் பலன் தருகின்றன. பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு இவற்றில் எந்தப் பகுதி நன்கு பலன் தருமோ, அதைச் சிகிச்சைதருபவர் பயன்படுத்துவார்.

  • பாடல் எழுதுதல்: பாதிக்கப்பட்டோர் பாடல்களை எழுதலாம். அதுவரை அடக்கிவைக்கப்பட்டிருந்த தங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இசைச் சிகிச்சையாளர்கள் அவர்களுக்கு உதவுவார்கள், தாளம் மற்றும் மெட்டுக்கு ஏற்ப எளிய பாடல்வரிகளை எழுதச் சொல்லித்தருவார்கள். உதாரணமாக, சிகிச்சை பெறுபவர் ஒரு பாடலில் இருக்கும் சொற்களை நீக்கிவிட்டு, அதற்குப்பதிலாகச்  தன்னுடைய சொந்த உணர்வுகளை வைத்துப் பாடல் எழுதுவார், அதன்மூலம் ஓர் எளிய கவிதையை உருவாக்குவார்.
  • பாடல் வரிகளை அலசுதல்: பாதிக்கப்பட்டவரிடம் இசைச் சிகிச்சையாளர், 'உங்களுக்குப் பிடித்த பாடல் எது?' என்று கேட்பார். அதிலுள்ள சொற்களை, வரிகளை ஆராயக் கற்றுத்தருவார். இதனால், ஒரு விவாதம் தொடங்கலாம், அதன்மூலம், பாதிக்கப்பட்டவருடைய உணர்வுப் பிரச்னைகள் வெளிப்படலாம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பாடலின் வரிகள், பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கைக்குத் தொடர்புடையவை, அவற்றைப் பயன்படுத்தி அவருடைய உணர்வுகளை ஆழமாக அலசலாம்.
  • கேட்டல்: பாதிக்கப்பட்டவர் ஒரு நேரடி அல்லது பதிவுசெய்த இசையைக் கேட்கிறார், அதற்கு எதிர்வினையாற்றுகிறார். அவர்கள் இசைக்குப் பலவிதமான செயல்பாடுகளின்மூலம் எதிர்வினையாற்றலாம்: மனம் தளர்ந்து இருத்தல், தியானம், கட்டமைப்பான சுதந்தர அசைவு, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போன்றவை.
  • இசைக்கருவிகளை வாசித்தல்: சொற்களால் பேசச் சிரமப்படுகிறவர்கள் தங்களுக்குப் பிடித்த ஓர் இசைக்கருவியை இசைத்துத் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இது அவர்களுக்கு மனநிறைவும் தரலாம். இசைக்கருவிகளை இசைப்பதற்குக் கை-கண் ஒருங்கிணைப்பு தேவை. ஆகவே, இது அவர்களுடைய இயக்கவியல் திறன்களை வளர்க்கவும் உதவலாம். (குறிப்பாக, ஆட்டிஸம், ADHD மற்றும் பிற வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கு இது நல்ல பலன் தருகிறது.) ஓர் இசைக்கருவியை இசைப்பது, ஒருவர் தனக்குள் இருக்கும் சுயத்துடனும் பிறருடனும் உரையாடுவதற்கான மகிழ்ச்சிமிக்க வழி ஆகும்; அது ஞாபகசக்தி, சமூகத் திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இசையை உருவாக்குதல்: இது ஒரு சுய-வெளிப்பாட்டு உத்தி ஆகும். இங்கே, பாதிக்கப்பட்டவரும் சிகிச்சை அளிப்பவரும் சேர்ந்து ஒரு புதிய இசையை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்டவர் இசை அல்லது இசையல்லாத ஊடகங்களைத் தன்னால் இயன்றவரை பயன்படுத்தி இசையை உருவாக்கலாம். உதாரணமாக, குரல், உடல், ஒலி, தாளவாத்தியக் கருவிகள், படங்கள் மற்றும் எழுத்து. இந்த உத்தியின்மூலம், பாதிக்கப்பட்டவர் தனக்குள் அமுக்கப்பட்டிருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார், அவை இசையின்மூலம் வெளிப்படுவதைக் காண்கிறார். அதன்பிறகு, சிகிச்சையளிப்பவர் இந்த உணர்வுப் பிரச்னைகளைக் கவனித்துச் சரிசெய்கிறார்.

இசையில் உள்ள தாளம், மெட்டு மற்றும் அர்த்தமுள்ள கவிதை போன்றவை மக்களிடையே ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகின்றன, அவர்கள் தங்களுடைய பிரச்னையை, தினசரி வாழ்க்கையைச் சமாளிக்க உதவுகின்றன.

இந்தக் கட்டுரை பெங்களூரில் உள்ள மீரா இசைச் சிகிச்சை மையத்தின் இசைக்கலைஞர், நிறுவனரான டாக்டர் மீனாட்சி ரவி வழங்கிய கருத்துகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org