மன நலனைப் புரிந்துகொள்ளுதல்

மனநலப் பிரச்னையிலிருந்து மீளுதல்

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீளும்போது அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவரது குடும்பத்தாருக்கும் சமூகத்திற்கும் உள்ளது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

மீளுதல் என்றால் என்ன?

பொதுவாக, உடல்நலம் அல்லது மனநலப் பிரச்னைகொண்ட ஒருவர் அதிலிருந்து மீளுதல் என்பது பிரச்னைகளால் ஏற்பட்ட காயங்களிலிருந்து அவர் தன்னை ஆற்றிக்கொள்கிற செயல்முறையைக் குறிக்கிறது. தங்களுடைய பழைய உடல், மன நலம் மற்றும் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு, முன்பு போல் தங்களது தினசரி நடவடிக்கைகளைச் செய்து கொள்வதற்கு அவர்கள் செய்துகொள்ளும் மாற்றங்களை குறிப்பிடுகிறது.1

நமது சமூகத்தில் மனநலப் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றிய களங்க உணர்வும், பாரபட்ச உணர்வும் இருக்கிறது. ஆகவே மனநல பாதிப்பு கொண்ட பலர் பிறர் தங்களைப்பற்றி என்ன சொல்வார்களோ, தங்களைப்பற்றி பாரபட்சம் காட்டுவார்களோ, சமூகத்தில் தங்களை ஒதுக்கிவிடுவார்களோ என்றெல்லாம் பயப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய பிரச்னையின் துவக்கத்திலேயே பிறரிடம் இதைப்பற்றிச் சொல்வதில்லை, நிபுணர்களை அணுகி உதவியும் சிகிச்சையும் பெறுவதில்லை. அந்த அறிகுறிகள் மிகவும் மோசமாகி அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படும்போதுதான், அவர்கள் தங்கள் பிரச்னைகளைப்பற்றி வெளியே சொல்கிறார்கள், நிபுணர்களிடம் உதவி கோரிச் செல்கிறார்கள்.

உண்மையில் மனநலப் பிரச்னையின் சிகிச்சை பெறுவதில் முதல்படி, தனக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்பதை ஒருவர் அடையாளம் காண்பதும், அதற்காக உதவி பெறவேண்டும் என்று தீர்மானிப்பதும்தான். இந்தத் தீர்மானத்தை ஒருவர் எடுத்துவிட்டார் என்றால் தன்னால் மனநலப் பிரச்னையிலிருந்து மீளமுடியும், ஒரு செயலுள்ள சுயமான வாழ்க்கையை வாழ இயலும் என்ற நம்பிக்கை அவருக்குள் தூண்டப்படுகிறது.

மனநலப் பிரச்னையிலிருந்து மீளுதலைத் தனித்தனிச் செயல்பாடுகளாகப் பார்க்கக்கூடாது. அதை ஒரு முழுமையான செயல்பாடாகக் காணவேண்டும். பாதிக்கப்பட்டவர் விரைவாகவும் நல்ல முறையிலும் மீள்வதற்கு, வழக்கமான மருத்துவ சிகிச்சை, தெரபி, மருந்துகள் போன்றவற்றுடன், சமூகத்தில் தாங்களும் ஓர் அங்கம் என்பதுபோன்ற உணர்வுகளும் உதவுகின்றன.

இங்கே நினைவில் வைக்க வேண்டிய இன்னொரு விஷயம் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், அவர்களுக்கென்று தனித்தனி வலிமைகள், கலாச்சாரம், விருப்பங்கள், மனநிலை, சமாளிக்கும் திறன்கள் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு தனிநபரும் மீளுதலைப்பற்றிச் சொந்தமாக ஒரு சிந்தனைக்கோணத்தைக்கொண்டிருக்கிறார், தன் வாழ்க்கையைக் கையாள்வதற்கான தனித்துவமான திறனைக் கொண்டுள்ளார். இந்தக் காரணிகள் அனைத்தையும் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது : மனநலம் பாதிக்கப்பட்ட எல்லாரும் இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள் என்று சொல்ல முடியாது. இந்தக் காலகட்டம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

நாள்பட்ட மனநலப் பிரச்னைக் கொண்டவர்களுக்கு மீளுதல் என்பது, தன் நிலையை ஜீரணித்துக்கொள்ளுதல், அதனால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கிற வரம்புகளை மீறியும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளுதல் ஆகும்.

முக்கியக் குறிப்பு: ஒவ்வொரு மனிதரும் தன்னை பிறர் நேசிக்கவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரும் அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கிற நேரத்தில், அன்புக்காகவும், அரவணைப்புக்காகவும், ஏங்குகிறார். ஆகவே இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உணர்வு பூர்வமான ஆறுதல் கிடைப்பது மிகவும் முக்கியம்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களைப் போல்தான், மற்றவர்கள் விரும்பும் அதே விஷயங்களைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். அர்த்தமுள்ள உறவுகள், வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான இடம், தனக்குத் திருப்தியளிக்கும் செயல்பாடுகள், போதுமான வருவாய், பணித்திருப்தி, மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத்தக்க சமூக வாழ்க்கை” என்கிறது அமெரிக்க உளவியல் அமைப்பு. “இவையெல்லாம் நமக்கு சாதாரண விஷயங்களாகத் தோன்றலாம் ஆனால் தீவிர மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு இவை அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை, இது பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்டவர் முழுமையாக அதிலிருந்து குணமாகி முழுமையாக தனக்குத் திருப்தியளிக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சமூகத்தினர் அதனை நம்புவதில்லை. அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆதரவை அளிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக களங்க உணர்வு, சமூகத்தில் அவர்களை விலக்கி வைத்தல், சிகிச்சை அமைப்பானது தேவையான சேவைகளை வழங்கத்தவறுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்”

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீளும்போது அவர் சந்திக்கிற சவால்கள் என்ன?

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சையைக் கொடுத்தால் அவர் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நமக்குத்தெரியும், இருந்தாலும் அவ்வாறு அவர்கள் சிகிச்சை பெறும்போது பல சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. உதாரணமாக, அவர்களுக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னையே பெரும் சவாலாகிவிடுகிறது. காரணம் சமூகம், மனநலப் பிரச்னைகள் பற்றி பலவிதமான தவறான நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. இத்துடன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறவர் மீது சமூகம் காட்டுகின்ற களங்க உணர்வு மற்றும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டுதல், போன்றவையும் பாதிக்கப்பட்டவருடைய உணர்வுகளைக் காயப்படுத்துகின்றன. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்கின்றன. இந்தச் சவால்களால் பாதிக்கப்பட்டவருடைய மனநலம் இன்னும் மோசமடையக்கூடும். தன்னுடைய பிரச்னை தீர்க்கக்கூடியதுதான் என்று அவர் கொண்டிருக்கிற நம்பிக்கை குறைந்துபோகும்.

பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினர், அவ்வளவு ஏன் மருத்துவர் மத்தியில் கூட மனநலப் பிரச்னைகளைப்பற்றிய அறிவு அதிகம் இருப்பதில்லை, இதுவும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு வந்திருக்கிற பிரச்னையால் ஏற்படும் அறிகுறிகள் அல்லது நடவடிக்கைகள் எவை, அவரது உணர்வுகளால், அல்லது, அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை அவரோ சமூகமோ எதிர்கொள்ளுவதால் ஏற்படும் அறிகுறிகள் அல்லது நடவடிக்கைகள் எவை, இந்தப் பிரச்னைக்கு எத்தகைய தீர்வுகளை எட்டலாம் என்பதையெல்லாம் இவர்கள் உணர்வதில்லை. இதனால் பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீள்வது சிரமமாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீண்டுகொண்டிருக்கும்போது, சமூகம் அவருக்கு எப்படி உதவலாம்?

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீண்டுகொண்டிருக்கும்போது, அவருடைய குடும்பத்தினரும் சமூகத்தினரும் அவர்களை ஆதரித்தால் அவர்கள் விரைவில் பழைய, ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். மனநலப் பிரச்னை என்பது மற்ற உடல்நலப் பிரச்னை போலத்தான். அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சமூகம் இதைப் புரிந்துகொள்வதில்லை. மனநலப் பிரச்னைகளைப்பற்றி பலவிதமான களங்க உணர்வுகளையும் தவறான நம்பிக்கைகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறது. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளை அவர்கள் தெரிந்தே காயப்படுத்துகிறார்கள். அவர்களால் இனி எதையுமே செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், அவர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விலகி சமூகத்திலிருந்து தனியாக இருக்க நேரிடுகிறது. இப்படி மனநலப் பிரச்னை பற்றி சமூகத்தில் களங்க உணர்வு இருப்பதால், யாருக்காவது மனநலப் பிரச்னை வரும்போது, அவர்கள் உதவி கேட்கத் தயங்குகிறார்கள். ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டால் பல நேரங்களில் அவர்களுடைய குடும்ப நண்பர்கள் விலகிச்சென்று விடுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்புக்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை, சொத்து, தனியுரிமை, சட்டப்பூர்வமான உரிமை போன்றவை மறுக்கப்படுகின்றன. இதனால், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் தான் இழந்த சமூக உரிமை மற்றும் அடையாளங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது, அவற்றைத் தக்கவைத்துக்கொள்வது ஆகியவை, அவர் தன் பிரச்னையிலிருந்து மீளுவதற்கு ஒரு முக்கியப்பங்காற்றுகின்றன.

ஒருவர் மனநலப் பிரச்னையிலிருந்து மீண்டுகொண்டிருக்கிறார் என்றால் அவருக்கு நாம் எப்படி உதவலாம்?

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் உணர்வுபூர்வமான ஆதரவை விரும்புகிறார். யாராவது தன்னை நம்பமாட்டார்களா என்று ஏங்குகிறார். இந்தவகையான ஓர் உறவு அவருக்குக் கிடைத்தால் அவருக்கு நம்பிக்கை வரக்கூடும், பிரச்னையிலிருந்து அவர் மீளக்கூடும்.

உங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது இப்படி ஒரு பிரச்னையிருந்தால், அவர்கள் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு நீங்கள் நிச்சயமாக உதவலாம், இதற்கு உங்களுக்கு நிறைய பொறுமையும் அனுதாப உணர்வும் தேவைப்படும். அவர்களுக்காக, அவர்களுடன் இருந்து நீங்கள் உதவவேண்டும்.

நீங்கள்:

  • அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும்போது நீங்கள் அங்கே இருத்தல்.
  • அவர்கள் இப்படித்தான் என்று தீர்ப்பு சொல்லாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டல். அவர்கள் தங்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதித்தல். ஒருவர் தன்னுடைய உணர்வுகளைப்பற்றி பேசுவதும் பகிர்ந்துகொள்வதுமே ஒரு வகையான சிகிச்சை ஆகிறது.
  • அவர்கள் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது அவர்களுடன் செல்லுதல். மனநலப் பிரச்னை குணமாவதற்காக அவர்களுக்கு மருந்துகள் சிபாரிசு செய்யப்பட்டிருகின்றன என்றால், அவர்கள் அந்த மருந்துகளை வேளாவேளைக்குச் சாப்பிடுகிறார்களா என்று பரிசோதித்தல், மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிடும்படி அவர்களை ஊக்கப்படுத்துதல். சிகிச்சைக்கு சரியான நேரத்திற்குச் செல்லுமாறு தூண்டுதல்.
  • அவர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை செய்வதற்கு உதவுதல், இந்தப் பிரச்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல் அவர்கள் தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்துதல். ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலையை எடுத்துக்கொண்டு அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுதல்.
  • அவர்களுடன் நேரம் செலவிடுதல் அல்லது “சிறிது தூரம் நடந்து செல்லலாம் வா” என்று அவர்களை உடன் அழைத்துச் செல்லல். இயன்றபோதெல்லாம் அவர்களை சமூக நிகழ்வுகள்/ கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லலாம், அப்போது அவர்கள் பிறருடன் தொடர்ந்து உரையாடியபடி இருப்பார்கள், தங்களுடைய சமூக உறவுகளை தக்க வைத்துக்கொள்வார்கள்.
  • அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கிக்கொண்டே இருங்கள். அதன்மூலம் அவர்களுக்கு தங்களின்மீது நம்பிக்கை ஏற்படும், விரைவில் பிரச்னையிலிருந்து மீண்டு விடுவார்கள்.


1 SAMHSA (தவறான பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துதலையும் மனநலத்தையும் நிர்வகித்தல்)

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org