ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கு ஓவியச் சிகிச்சை

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை உள்ளவர்களுக்கு ஓவியக்கலையின் மூலமாகச் சிகிச்சை தரும்போது அவர்கள் ஆரோக்கியமான உணர்வுகளையும் எண்ணங்களையும் கலையின் மூலமாக வெளிப்படுத்தப் பழகுகிறார்கள்

ஓவியக் கலைச் சிகிச்சை என்றால் என்ன?

ஓவியக்கலைச் சிகிச்சை என்பது மனநலப் பிரச்னை கொண்டோர், தங்களுடைய வெளிப்பாடு ஊடகமாக ஓவியங்களைப் பயன்படுத்தவேண்டும் என தூண்டுகிறது. சிகிச்சையாளர் இதற்கு வழிகாட்டுகிறார். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் வண்ணச்சாயங்கள், களிமண், அல்லது வேறு பல காலைப்பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படுத்தலாம். இதற்கு அவர்கள் சொற்களை உபயோகப்படுத்தவேண்டிய அவசியமே இருக்காது. ஓவியக்கலைச் சிகிச்சை என்பது பொதுவாக மற்ற மாற்று சிகிச்சைகளுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இசை, நடனம், அசைவு, ஆகியவற்றை சிகிச்சையாக பயன்படுத்தும்போது, ஓவியக்கலையையும் சேர்ப்பார்கள், அது மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் உதவியாக அமையும். ஓவியக்கலைச் சிகிச்சையின் நோக்கம் ஒருவருக்கு வரையக் கற்றுக்கொடுப்பதல்ல, அவரை ஒரு பெரிய ஓவியராக ஆக்குவதல்ல. அதற்கு பதிலாக மனநலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உணர்வுகளுக்கு ஒரு குரலைத் தருவதற்கு இது உதவுகிறது, தன்னுடைய உணர்வுகளை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள துணைபுரிகிறது.

குறிப்பு: கலைச் சிகிச்சை என்பதில், இசை, நடனம், நாடகம், போன்ற மற்ற பல வடிவங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு, ஆனால் இந்தக் கட்டுரை காட்சி அடிப்படையிலான கலைகளை மட்டுமே, அதாவது ஓவியம் போன்ற கலைகளை மட்டுமே பேசுகிறது.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்களுக்கு ஓவியக்கலைச் சிகிச்சை

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் பலவிதமான அறிகுறிகளுக்கு உட்படுகிறார்கள். உதாரணமாக, அவர்களுக்கு மாயத்தோற்றங்கள் வருகின்றன, சிதைந்த அல்லது தவறான, நம்பிக்கைகள் ஏற்படுகின்றன, இவற்றை அவர்களது நண்பர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ புரிந்துகொள்வதில்லை. அதுபோன்ற நேரங்களில் ஓவியக்கலை அடிப்படையிலான சிகிச்சை அதற்கு உதவுகிறது.

  • ஓவியக்கலையின் மூலம் அவர்கள் தங்களுடைய உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்தலாம், சொற்களைப் பயன்படுத்தாமலே தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லலாம். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.
  • ஸ்கிஜோஃப்ரெனியாவை குணப்படுத்த தரப்படும் மருந்துகளின் பக்க விளைவுகளை, சரிசெய்யலாம்: பொதுவாக ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைக்கு தரப்படும் மருந்துகள் அவர்களுக்கு தூக்கக்கலக்கம், சோம்பல் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கும். ஒருவர், ஓவியம் வரைதல் அல்லது கோலாஜ் உருவாக்குதல் போன்ற கலை சார்ந்த பணிகளில் ஈடுபடும்போது, அவர்களுடைய மனம் வேளையில் மூழ்கிவிடுகிறது, ஆகவே இந்தப் பக்க விளைவுகளுக்கு அவர்கள் ஆளாவதில்லை.

“ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை உள்ளவர்களுக்கு, தங்களுக்கு வரக்கூடிய பல்வேறு தொந்தரவான அறிகுறிகளிலிருந்து மனத்தை திசை திருப்புவதற்கு ஓவியக்கலை ஒரு நல்ல மாற்று ஆகும். இதனால் அவர்களை தொந்தரவு செய்கிற சிந்தனைகள், அவர்களுக்கு கேட்கின்ற குரல்களின் தாக்கம் குறையத்தொடங்குகிறது, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ ஓவியக்கலையிலேயே ஈடுபட்டு அதையே சிகிச்சையாக எடுத்துக்கொள்ளும்போது, அவர்கள் தங்களுக்கூ வழங்கப்பட்டிருக்கிற வேலையில் முழு கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள், தங்களுக்குள் கேட்கின்ற குரலை அலட்சியப்படுத்தத் தொடங்குகிறார்கள். தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதை நிறுத்துகிறார்கள், இது அவர்களுடைய படைப்புணர்வை தூண்டுகிற ஒரு வெளிப்பாடு ஆகிறது.” இப்படிச் சொல்பவர் ஆஷா என்கிற புனர்வாழ்வு அமைப்பில் பணியாற்றும் ஒரு நிபுணர். ஆஷா என்கிற இந்த அமைப்பு, ஸ்கிஜோஃப்ரெனியா மற்றும் இருதுருவக் குறைபாடு கொண்டவர்களுக்கான ஒரு பாதிதூர இல்லமாகச் செயல்படுகிறது, இது பெங்களூருவில் இருக்கும் ரிச்மண்ட் பெல்லோஷிப் சொஸைட்டியின் ஆதரவில் இயங்கிவருகிறது.

ஓவியக்கலைச் சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது?

காட்சி அடிப்படையிலான கலையை சிகிச்சையாகப் பயன்படுத்தும்போது, தனிநபருக்கும் சிகிச்சை அளிக்கலாம், குழுக்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். குறிப்பாக, குழுச் சிகிச்சையில் சில கூடுதல் பலன்கள் உண்டு. இங்கே பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மட்டும் பழகுவதில்லை, அவர் இங்கே சமூகத் திறன்களையும் கற்றுக்கொள்கிறார்.

மனநலப் பாதிப்பில் இருக்கிறவர்கள், ஓவியக்கலைச் சிகிச்சைக்கு வரும்போது பிறருடன் உரிய முறையில் பேசாப் பழகுகிறார்கள், எளிய தகவல் தொடர்பு முறைகளை மீண்டும் கற்றுக்கொள்கிறார்கள், குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி என்று புரிந்து கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் பணிபுரியக் கற்றுக்கொள்கிறார்கள், அதன்மூலம் அவர்களுடைய குழுவாகச் செயல்படும் திறன்கள் மேம்படுகின்றன.

“ஓவியக்கலைச் சிகிச்சைக்கு வருகிறவர்களை நாங்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கிறோம், அவர்களிடையே ஒரு சிறிய போட்டியையும் உண்டாக்குகிறோம், அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து, இந்த வேலையை நீங்கள் இருவரும் செய்யவேண்டும், யார் முதலின் நன்றாக செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்று குறிப்பிடுவோம், இது ஓர் ஆரோக்கியமான போட்டியாக அமைகிறது. இதன்மூலம் அந்த வேலையை சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற அவர்களுடைய ஊக்கம் அதிகரிக்கிறது. அதன் மூலம் அவர்களுடைய சுய மதிப்பும் சமூக குழு உருவாக்கமும் மேம்படுகிறது.“ என்கிறார் ஒரு புனர்வாழ்வு நிபுணர்.

தனி நபர்களுக்கு வழங்கப்படும் ஓவியக்கலைச் சிகிச்சையின் போது சிகிச்சை வழங்குகிறவரும், சிகிச்சை பெறுகிறவரும்தான் அதில் பங்கேற்பார்கள். அதாவது, சிகிச்சை பெறுகிறவருக்கு தனித்துவமான அலசலும் அவருக்கேற்ற சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில், ‘நீங்கள் எந்தப் பொருளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்’ என்று சிகிச்சை பெறுகிறவரிடமே கேட்கப்படும். அவர் வண்ணங்களைப் பயன்படுத்துவதா அல்லது களிமண்ணைப் பயன்படுத்துவதா என்று தானே தீர்மானிப்பார், அதன் பிறகு அவர் விரும்பும் பொருட்கள் அவருக்கு வழங்கப்படும்.

இந்தச் சிகிச்சையின் நோக்கம் சிகிச்சை வழங்குகிறவருக்கும் பெறுகிறவருக்கும் இடையே ஓர் உரையாடலை உண்டாக்குவது, அதன்மூலம், பாதிக்கப்பட்டவருடைய மனநிலையைப் புரிந்து கொள்வது. ஒரு சிறந்த கலைப் படைப்பை உண்டாக்கும் நோக்கத்துடன் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவரை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டு அதன்மூலம் அவருக்கு ஏற்ற சிகிச்சையை / அணுகுமுறையைத் தீர்மானிப்பதுதான் இங்கே முக்கியம். இப்போது சிகிச்சை பெறுகிறவர் தனக்குத் தரப்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டு தான் விரும்பிய கலைப் படைப்பை உருவாக்குகிறார், பிறகு அதைப்பற்றி சிகிச்சை வழங்குகிறவரும் அவரும் பேசுகிறார்கள், அந்தக் கலை வடிவம் அவருக்கு எப்படி பலன் தந்திருக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்கிறார்கள்.

ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர மனநலப் பிரச்னைகளைக் கொண்டவர்கள், தாங்கள் விரும்பி ஒரு கலை வடிவத்தை உண்டாக்கும்போது, அதைப் பகிர்ந்துகொள்ளவும், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசவும், விரும்பக்கூடும் அல்லது தாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை விவரிக்க அவர்கள் விரும்பக்கூடும். இதற்குமுன் அவர்கள் சொற்களால் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒரு நிகழ்வு அல்லது அனுபவத்தை இப்போது அவர்கள் கலையின் வழியாக வெளிப்படுத்தக்கூடும். இது அவர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுடைய சிகிச்சையை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஓவியக் கலை என்பது மனநல சிகிச்சையை முழுமைப்படுத்துகிறது

ஸ்கிஜோஃப்ரெனியா என்பது ஒரு நாள் பட்ட, தீவிரமான மனநலப் பிரச்னை ஆகும். இது ஒருவரின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கிறது. இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு எதிலும் ஊக்கம் இருப்பதில்லை, சமூகத்திலிருந்து அவர்கள் விலகிக்காணப்படுகிறார்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு திறன்களும் சொற்களைப் பயன்படுத்தாமல் தங்களை வெளிப்படுத்தும் திறன்களும் குறைந்து காணப்படும். இந்த எதிர்மறையான அறிகுறிகளைக் குறைப்பதற்கு ஓவியக்கலைச் சிகிச்சை பயன்படும்.

மற்ற சிகிச்சைகளோடு சேர்த்து ஓவியக்கலைச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான மருந்துகளைத் தந்தபடி அவர்களை ஓவியம் வரையும்படி சொல்லலாம். இதன்மூலம் அவர்களுடைய சிகிச்சை இன்னும் மேம்படுகிறது. அவர்களுடைய இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு அதனைச் சமாளித்து வாழக்கூடிய நிலை மேம்படுகிறது. குறிப்பாக ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற மனநலப் பிரச்னைகளை அனுபவிக்கிறவர்களுக்கும் அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கும் ஏற்படுகிற கோபம், எரிச்சல் மற்றும் பிற உணர்வு ஏற்ற தாழ்வுகளை ஓர் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதற்கு ஓவியக்கலைச் சிகிச்சை பயன்படுகிறது. ஓவியக்கலைச் சிகிச்சை சூழலானது பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஆகியோருக்கு ஆதரவளிக்கிறது, களங்கமற்றதாக உள்ளது.

ஓவியக்கலைச் சிகிச்சையை எங்கே பெறுவது?

பொதுவாக ஓவியக்கலைச் சிகிச்சை நிகழ்வுகள், மருத்துவமனைகளிலும், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மையங்களிலும் நடத்தப்படுகின்றன. மனநல சிகிச்சை பெற்று வருபவர் அல்லது அவரைக் கவனித்துக்கொள்பவர் தங்களுடைய மனநல மருத்துவரை அணுகி இதுபற்றிப் பேசலாம். ஓவியக்கலையில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற ஒரு நிபுணரை அவர் சிபாரிசு செய்வார். ஒருவேளை ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவரின் வீட்டிற்கு அருகே ஏதாவது புனர்வாழ்வு மையம் இருந்தால், அவர்கள் அங்கே நேரடியாகச் சென்று அங்கே ஓவியக்கலைச் சிகிச்சை நிகழ்வுகள் எவையேனும் நடைபெறுகின்றனவா என்று விசாரிக்கலாம். அப்படி நடைபெறுவதாக இருந்தால் அங்கே நேரடியாகச் சேர்ந்து பலன் பெறலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org