தனக்கோ தன் அன்புக்குரிய ஒருவருக்கோ மனநலப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படித் தெரிந்துகொள்வது?

இதைக் கண்டறிவதற்கான சில பொதுவான அடையாளங்களை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்:

1. அன்றாடச் செயல்பாடுகள், நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து விலகியிருப்பது. பெரும்பாலும் தனிமையில் இருக்க விரும்புவது.



2. திடீரென்று செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வது; நீண்ட நாளைக்குப் பள்ளி/கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லாமலிருப்பது. வழக்கமான பணிகளில் கவனம் செலுத்த இயலாமலிருப்பது. முன்பு அவர்கள் விரும்பிச்செய்த வேலைகளீல் இப்போது ஆர்வமின்றி இருப்பது.

3. தர்க்கத்துக்குப் பொருந்தாத நம்பிக்கைகள் அல்லது சிந்தனைகளில் உறுதியாக இருப்பது (எடுத்துக்காட்டாக, யாரோ என்னுடைய தலையில் ஒரு சிப் பொருத்திவிட்டார்கள், அதன்மூலம், இப்போது நான் சிந்திப்பதையெல்லாம் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

4. தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பது, மனச்சோர்வான நிலையில் இருப்பது, அல்லது, தற்கொலை எண்ணங்கள்.

5. அடிக்கடி வலி ஏற்படுவது, ஆனால், அந்த வலிகளுக்கு எந்த மருத்துவ அடிப்படையும் இல்லாமலிருப்பது.

6. திடீரென்று சில விஷயங்கள், இடங்களைப்பற்றித் தீவிரமாக அச்சப்படுவது.

7. தீவிரப் பதற்றம் அல்லது கிளர்ச்சியுணர்வு

8. தீவிர மனநிலை மாற்றங்கள்

9. அசாதாரணமான நடவடிக்கைகள்

10. தூக்கம், பசி அல்லது தன்னைக் கவனித்துக்கொள்வதில் தீவிர மாற்றங்கள்.

11. உணர்வுகளை மழுங்கடித்துக்கொள்வது; பொருந்தாத உணர்வுகளை வெளிக்காட்டுவது.

தீவிர அழுத்தத்தின்போது, அநேகமாக எல்லாருமே இந்த நடவடிக்கைகளில் ஒன்றையோ பலவற்றையோ செய்யக்கூடும். ஆனால், ஒரு மாதம் அல்லது அதற்குமேல் யாராவது இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், அவர்களுக்கு மனநலக் குறைபாடுகள் இருக்கலாம். இதைக் கவனிக்கிறவர்கள், இந்தப் பிரச்னையைப் பச்சாத்தாபத்துடன் அணுகிப் பேசவேண்டும், அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவை வழங்கவேண்டும்.

மன மற்றும் உளவியல் குறைபாடுகள் பலவிதமானவை, இந்த அறிகுறிகள் அனைத்தும் எல்லாக் குறைபாடுகளிலும் வெளிப்படுவதில்லை. மனநலப் பிரச்னைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அனுபவிக்கிறார்கள், இந்த அறிகுறிகளின் வகை, தீவிரம் மற்றும் காலகட்டம் நபருக்கு நபர் மாறுபடலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org