மனநலப் பிரச்னைகளுக்கான சிகிச்சை

மனநலப் பிரச்னை வந்த ஒருவருக்கு சரியான ஆதரவும் முறையான சிகிச்சையும் கிடைத்தால், அவர் தங்களுடைய ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்று ஓர் இயல்பான வாழ்க்கையை வாழலாம்

மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை என்றால் என்ன?

மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் எவ்வளவு சீக்கிரம் ஒரு மனநல நிபுணரைக் கொண்டு ஆலோசனையும் சிகிச்சையும் பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரமாக அவரால் அந்தப் பிரச்னையிலிருந்து குணமாக இயலும், அதன் அறிகுறிகளைச் சமாளித்து ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ இயலும். உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சில குறிப்பிட்ட சிகிச்சைகள் இருப்பதைப் போல பெரும்பாலான மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட மற்றும் மருத்துவ ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் இருக்கின்றன.

மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை வழங்குதல் என்றால் என்ன என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். ஒருவருக்கு காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு பிரச்னைகள் அல்லது இதயநோய் போன்றவை வரும்போது, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன, அல்லது அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறமுடிகிறது. ஆனால் மனநலப் பிரச்னைகளைப் பொறுத்தவரை அவற்றிற்கு வேறுவிதமான சிகிச்சைகள் தேவைப்படலாம். பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மேலாண்மைச் சிகிச்சை வழங்கப்படுகிறது. அதோடு, மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இது ஒருவருக்கு வந்திருக்கிற பிரச்னையின் தீவிரத்தன்மை அவரது உடல் மற்றும் உணர்வு நிலையைப் பொறுத்து அமைகிறது.

முக்கியக் குறிப்பு: ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டது என்பதாலேயே அவரால் எந்த வேலையையும் செய்ய இயலாது, ஒரு சுதந்தரமான, இயல்பான வாழ்க்கையை வாழ இயலாது என்று எண்ணிவிடக்கூடாது. மனநலப் பிரச்னை என்பது, ஒருவர் உணர்வு நிலையில் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார், சிறிது காலத்திற்கு அவருக்கு இந்த விஷயத்தில் ஆதரவு தேவை என்பதைமட்டும்தான் குறிக்கிறது. சரியான ஆதரவும் முறையான சிகிச்சையும் வழங்கப்பட்டால் அவர்கள் தங்களது வாழ்க்கையைத் திரும்பப் பெறுவார்கள், இயல்பாக வாழ்வார்கள், மனநலப் பிரச்னை வருவதற்குமுன்னால் அவர்கள் எப்படி இருந்தார்களோ அந்த நிலைக்கு அவர்களால் திரும்பச் செல்ல இயலும்.

மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை ஏன் தேவை?

எந்த ஒரு பிரச்னைக்கும் வழங்கப்படுகிற சிகிச்சையின் நோக்கம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பிரச்னையிலிருந்து விடுபட்டு, ஓர் இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும், தனது தினசரி வேலைகளைச் செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான். உதாரணமாக, நீரிழிவு பிரச்னைக்கு வழங்கப்படும் சிகிச்சைத் திட்டமானது, மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கலாம். அதேசமயம், புற்றுநோய், HIV அல்லது AIDS போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் நோக்கம், அவர்கள் அந்தப் பிரச்னையைச் சமாளித்து வாழச்செய்வதும், அவர்கள் தங்களுடைய வாழ்வை எந்த அளவு சுதந்தரமாக வாழ இயலுமோ அந்த அளவு சுதந்தரமாக வாழ அனுமதிப்பதும்தான்.

உடல்ரீதியிலான பிரச்னைகளின் சிகிச்சையோடு ஒப்பிடும்போது, மனரீதியிலான பிரச்னைகளின் சிகிச்சை பெரும்பாலும் அதிகச் சிக்கலானது, இதில் மருந்துகள், தெரபி போன்றவை கலந்து பயன்படுத்தப்படலாம். ஒருவருக்கு எந்தவகையான மருத்துவம் தரலாம் என்பதைப் பல காரணிகளின் அடிப்படையில் மருத்துவர் தீர்மானிப்பார், உதாரணமாக, அவருக்கு வந்திருக்கிற பிரச்னைகளின் தீவிரம், அவர் ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் போன்றவை. மனநலப் பிரச்னை கொண்ட எவருக்கும் ஒரு சிகிச்சையைச் சிபாரிசு செய்வதற்கு முன்னால் மனநல நிபுணர் அவரை முழுமையாக மதிப்பிடுகிறார், அதன் அடிப்படையில்தான் அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்

சில நேரங்களில் மனநலப் பிரச்னைகளைக் கொண்டவர்களின் நிலை மிகவும் தீவிரமாக இருக்கலாம், அவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ சேவையும் கண்காணிப்பும் தேவைப்படலாம். அது போன்ற நேரங்களில் மருத்துவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள். சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளில் இருக்கலாம், அப்போதும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கும்போது பின்வரும் தெரிவுகளில் எதையேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்: 24 மணி நேர உள்நோயாளிப் பராமரிப்பு, தீவிர வெளி நோயாளிப் பராமரிப்பு மற்றும் பகுதி நேர அல்லது பகல்நேர மருத்துவமனையில் சேர்த்தல்.

உளவியல்-சமூகவியல் புனர்வாழ்வு

புனர்வாழ்வு மையம் என்பது ஒரு நலப்பராமரிப்பு மையமாகும், இது பகல்நேரப்பராமரிப்பு மையமாகவும் இருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெறும் மையமாகவும் இருக்கலாம். இந்த மையங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தற்காலிக வாழ்விடம் வழங்கப்படுகிறது, அங்கே வாழ்ந்தபடி அவர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிற சிகிச்சை அல்லது தெரபியை எடுத்துக்கொள்ளலாம். புனர்வாழ்வின் நோக்கம் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர், பொது சமூகத்தில் சேருவதற்கான பணிசார்ந்த, சமூகம் சார்ந்த, புத்திசாலித்தனம் சார்ந்த திறன்களை அவர் கற்றுக்கொள்ளுதல். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய தினசரி நடவடிக்கைகளை இயன்றவரை சுதந்தரமாகச் செய்யலாம், வீட்டில் மற்றும் அலுவலகத்தில் தங்களுக்கு ஓர் அர்த்தமுள்ள பொறுப்பைத் தேடிக்கொண்டு செய்யலாம்.

புனர்வாழ்வு மையங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை வழங்குவதற்காக உளவியல் நிபுணர்கள், செவிலியர்கள், மனநல மருத்துவர்கள், சமூக உளவியல் ஊழியர்கள், பிஸியோதெரபிஸ்டுகள் மற்றும் பணி சார்ந்த தெரபிஸ்டுகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு ஒன்றாகச் செயலாற்றுகிறது.

இருதுருவக் குறைபாடு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற நாள்பட்ட உளவியல் பிரச்னைகளை கொண்டவர்கள் இந்தப் பிரச்னை காரணமாக மனரீதியில் செயல்பட இயலாதவர்களாக இருக்கலாம். தங்களுடைய தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செயல்களை அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கலாம், மனநல சிதைவு போன்ற குறைபாடுகளைக்கொண்டவர்களுக்கு அவர்கள் தங்கள் தினசரி செயல்பாடுகளுக்கான திறன்களைக் கற்றுக்கொள்ள அல்லது மேம்படுத்திக்கொள்ள புனர்வாழ்வு செயல்முறை தேவைப்படுகிறது. இன்னும் சிலர் போதைப்பொருள் போன்றவற்றிற்கு அடிமையாயிருப்பார்கள் அல்லது மற்ற பழக்கம் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுவார்கள் அவர்களுக்கும் புனர்வாழ்வு பலன் தருகிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org