சிகிச்சை வகைகள்

மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்தப் பலவகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன

மனநலப் பிரச்னைக்கு என்னென்ன வகையான சிகிச்சைகள் உள்ளன?

ஒருவர் மனநலப் பிரச்னைக்கு சிகிச்சைக்கு வந்தால் முதலில் மருத்துவர்கள் அவரை முழுமையாகப் பரிசோதிப்பார்கள். இந்தப் பரிசோதனையின் போது தெரியவரும் விஷயங்களை வைத்து அவருக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை சிபாரிசு செய்வார்கள். கட்டுப்படுத்தப்பட்ட அறிகுறிகளுடன் இருக்கும் மனநலப் பிரச்னைக்கு சிகிச்சையும் குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே இருக்கும். தீவிர மனநலப் பிரச்னை இருப்பவர்களுக்கு உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், உளவியல் சமூக ஊழியர்கள் போன்றோரைக் கொண்ட குழு ஒன்று உரிய சிகிச்சையை வழங்கும். கீழே விவரிக்கப்பட்ட முறைகளில் ஒன்றோ பலவோ இந்தச் சிகிச்சைகளில் இடம்பெறலாம்.

குறிப்பு: எந்தவகை சிகிச்சை ஆனாலும் சிகிச்சை எடுத்துக்கொள்பவர் அதை விரும்பி எடுத்துக்கொண்டால் அவர் விரைவில் குணமாவார். சில குறைபாடுகள் மூளையில் உள்ள வேதிப்பொருள் சமநிலையின்மையால் ஏற்படுகின்றன; சில நேரங்களில் இந்தச் சமநிலையின்மை தீவிர உணர்ச்சிக்கொந்தளிப்பால் ஏற்பட்டிருக்கலாம். அது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் அவர் மீது அனுதாபம் காட்டி, சிகிச்சையின் போது ஆதரவு காட்டினால் அவர்கள் விரைவில் குணமாவர்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சில சிகிச்சை முறைகள்:

மருந்துகள் / பார்மகோதெரபி

மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தோன்றும் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மருந்துகள் உதவுகின்றன. பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள்தான் முதல் சிகிச்சையாக வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் எந்த அளவு பலன் தருகிறது என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொருத்தும் பாதிக்கப்பட்டவர்களுடைய உடல் மருந்துகளை எந்த அளவு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தும் அமையும்.

உளவியலாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சில மருந்துகள் பின்வருமறு

 • ஆன்டி-டிப்ரசென்டுகள்: ஒருவருக்கு மனச்சோர்வு அல்லது பதட்டப் பிரச்னை வந்திருந்தால் அதை, தணிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு உளவியலாளர் இந்த மருந்துகளை வழங்குகிறார். ஆன்டி டிப்ரசென்ட் மருந்துகள் யாரையும் அடிமையாக்காது. நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினாலும் ஒருவர் அவற்றைச் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
 • பதற்றத்திற்கு எதிரான மருந்துகள்: இவற்றை ட்ராங்க்யுலைசர்கள் என்றும் அழைப்பார்கள். அதாவது மயக்க மருந்துகள், நோயை அகற்றும் மருந்துகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை பதற்றத்தை தணிப்பதற்கான மருந்துகள், ஆகவே ஒருவருக்கு ஏற்படும் பதற்றத்தை தணிவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒருவரை இதமாக உணரச் செய்கின்றன அமைதிப்படுத்துகின்றன. ஒருவருடைய மனக் கிளர்ச்சி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகளையும் போக்கப் பயன்படுகின்றன.
 • மனப்போக்கை நிலைப்படுத்தும் மருந்துகள்: மனப் போக்கில் பிரச்னை கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிற உளவியல் மருந்து மற்றும் அவருடைய மனப்போக்கை நிலைநிறுத்தும் மருந்து இது. மூளையில் உள்ள உணர்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சில குறிப்பிட்ட நரம்புக் கடத்திகளை சமன் செய்ய இவை உதவுகின்றன. இந்த மருந்து இருதுருவக் குணப்பாட்டை குணப்படுத்தப் பயன்படுகிறது. இருதுருவக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு தீவிர மற்றும் மனச் சோர்வு நிலைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க இவை உதவுகின்றன. சில நேரங்களில் இந்த மருந்துகளை பயன்படுத்தி தீவிர மனச்சோர்வு மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா குறைபாடுகளைக் குணப்படுத்தலாம்.
 • ஆன்டி சைக்கோட்டிக் மருந்துகள்: இவற்றை நியூரோ லெப்டிக் அல்லது மேஜர் ட்ராங்க்யுலைசர்கள் என்றும் அழைப்பார்கள். ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற குறைபாடுகளின் அறிகுறிகளைக் குணப்படுத்த இவை பொதுவாக பயன்படுகின்றன. உதாரணமாக மாயத்தோற்றங்கள், பிரமைகள், ஒழுங்கற்ற எண்ணங்கள், மனோநிலை மாற்றங்கள் போன்றவற்றை குணப்படுத்த இவ்வகை மருந்துகள் பயன்படுகின்றன. இருதுருவக் குறைபாடு அல்லது தீவிர மனச்சோர்வைக் குணப்படுத்தவும் இவ்வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

தெரபிகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிலருக்கு மருந்துகளும் ஒருவகை தெரபியும் சிபாரிசு செய்யப்படலாம். வேறு சிலருக்கு மருந்துகளோடு இரண்டு வகை தெரபிகள் சிபாரிசு செய்யப்படலாம். ஒருவருக்கு வந்திருக்கிற பிரச்னையின் தீவிரத்தன்மை மற்றும் அவரது உடல்நிலை, உணர்வு நிலையைப் பொறுத்து அவருக்கு எந்தத் தெரபியை சிபாரிசு செய்வது என்று தீர்மானிக்கப்படும்.

சைக்கோதெரபி: இந்தச் சிகிச்சையை ஓர் உளவியலாளர் அல்லது சைக்கோ தெரபியில் பயிற்சி பெற்ற ஒரு மனநல மருத்துவர் வழங்குகிறார். இவர் அறிவியல் முறையில் உறுதிப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவருடைய குழப்பமான, தர்க்கரீதியில் பொருந்தாத சிந்தனையை மட்டுப்படுத்துகிறார், நேர்விதமான, எதார்த்தமான, தர்க்கரீதியில் சரியான சிந்தனைகளைக் கொண்டுவருகிறார். அவர்கள் நேர்விதமாக நடந்துகொள்வதற்காக ஆரோக்கியமான பழக்கங்களை அவர்களிடம் உண்டாக்குகிறார்.

இந்தச் சிகிச்சையை வழங்குபவர் பாதிக்கப்பட்டவரிடம் மனம்விட்டு பேசுமாறு சொல்கிறார். அவர்களுடைய அறிகுறிகளைப்பற்றி அதனுடன் தொடர்பான பிரச்னைகளைப்பற்றி பேசச் செய்கிறார், அவர்களே தங்களுடைய மனப் போக்குகளை, உணர்வுகளை, சிந்தனை பாணிகளை மற்றும் நடவடிக்கைகளை ஆராயவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறார். இவ்வாறு ஒருவர் தன்னைத்தானே புரிந்துகொள்வதன் மூலம், தன்னுடைய நிலையை எப்படிச் சமாளித்து குணமாவது என்பதை அவர்களே கற்றுக்கொள்ள இயலும். சைக்கோ தெரபியில்     பல வகைகள் உண்டு. எல்லாப் பிரச்னைகளையும் குணப்படுத்தக்கூடிய ஒரே ஒரு தெரபி என்று இதில் எதுவும் இல்லை, பிரச்னைக்கு ஏற்ப சரியான சைக்கோ தெரபி தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

அறிவாற்றல் நடவடிக்கை சிகிச்சை (CBT): இது இரண்டு தெரபிகளின் தொகுப்பு ஆகும், அறிவாற்றல் தெரபி (CT), மற்றும் நடவடிக்கை சார்ந்த தெரபி (PT). அறிவாற்றல் தெரபியானது ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளில் கவனம் செலுத்துகிறது, அவை அவரது மனப்போக்குகளில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்கிறது, சுற்றுச்சூழலுக்குப் பொருந்திப் போகவேண்டும், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று ஒருவரைச் சிந்திக்கச் செய்யும் நோக்கத்தை இது கொண்டுள்ளது. நடவடிக்கை சார்ந்த சிகிச்சை என்பது ஒருவருடைய செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது, ஆரோக்கியமற்ற நடவடிக்கை பாணிகளை மாற்ற முயல்கிறது.

CBT இன் மூலம் ஒருவர் தன்னுடைய பிரச்னைகளைப் புரிந்து கொள்ளலாம். அவற்றை எப்படித் தீர்ப்பது என சிந்தித்து செயல்படலாம். இந்தச் சிகிச்சையில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சிகிச்சை அளிப்பவர் இருவருமே முனைப்புடன் பங்கு பெறுகிறார்கள். சிதைந்த அல்லது தனக்கு உதவாத சிந்திக்கும் பாணிகளை பாதிக்கப்பட்டவர் அடையாளம் காண்பதற்கு சிகிச்சை அளிப்பவர் உதவுகிறார், தவறான, பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை அவர்கள் அடையாளம் கண்டு மாற்றச் செய்கிறார், அதற்கேற்ப அவரது நடவடிக்கைளை மாற்றுகிறார், பிறருடன் அவர்கள் கொண்டிருக்கும் உறவுளை மேம்படுத்துகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது பிரச்னைகளைப்பற்றிய புரிதல் இருக்கிறது என்றால் அவர்களுக்கு CBT நன்கு உதவும். காரணம் இந்தச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உத்திகள் பாதிக்கபட்டவருக்கு சில குறிப்பிட்ட பங்குகளை வழங்குகின்றன. அவர்களை சிகிச்சையில் முனைப்புடன் பங்கு பெறச் செய்கின்றன. உதாரணமாக அவர்கள் சில குறிப்பிட்ட சில வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கலாம். உதாரணமாக அவர்கள் தங்கள் மனநிலையை நாட்குறிப்பாக எழுத வேண்டி இருக்கலாம், தங்களை செயல்பட விடாமல் செய்யும் எண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டி இருக்கலாம், நேர்விதமான அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டி இருக்கலாம்.

மனச்சோர்வு, பதற்றம், உண்ணுதல் குறைபாடு மற்றும் இருதுருவக் குறைபாடு போன்ற பல்வேறு மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த CBT ஐ பயன்படுத்தலாம்.

பிறருடன் பழகுதல் தெரபி (IPT): இந்தச் சிகிச்சையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர் பிறருடன் கொண்டிருக்கிற தகவல் தொடர்பையும் அவர் மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறார் என்பதையும் மேம்படுத்துவது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தினால் சில பிரச்னைகள் வருகின்றன என்றால், IPT மூலம் அவர்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொண்டு தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளலாம். IPT ஐ மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம், ஒருவருக்கு IPT பலன் தருமா தராதா என்பது பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்தும் பாதிக்கப்பட்டவர் எந்த அளவு ஆர்வத்துடன் சிகிச்சை பெறுகிறார் என்பதையும் பொறுத்து அமையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

குடும்பச் சிகிச்சை: இங்கே பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் குடும்ப உறவுகள் மேம்படும் அதன்மூலம் பாதிக்கப்பட்டவர் சரியாகக் கவனித்துக்கொள்ளப்படுவார், அதன்மூலம் அவர் குணமாக வாய்ப்புகள் ஏற்படும்.

இங்கே சிகிச்சை அளிப்பவர் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினருடன் இணைந்து பணிபுரிகிறார், பாதிக்கப்பட்டவருடைய பிரச்னையைத் தீவிரமாக்கக்கூடிய குடும்ப பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அடையாளம் காண்கிறார், இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமாவதற்கான ஒரு தீர்வை சிபாரிசு செய்கிறார். இவை அனைத்திற்குமான முன்னெடுத்தல் குடும்ப உறுப்பினர்களாலேயே செய்யப்படுகிறது. அதாவது கண்டறியப்படும் தீர்வை அவர்கள் புரிந்துகொண்டு, ஒப்புக்கொள்ளக்கூடியவகையில் இந்தச் சிகிச்சை அமைகிறது.

சிகிச்சை வழங்குபவர் பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினருடன் பேசி அவர்களுடைய அன்புக்குரியவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது, அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று விளக்குவார், ஒருவேளை பாதிக்கப்பட்டவர் தீவிரமாக அல்லது விரோதமாக நடந்துகொள்கிறார் என்றால் அவர் உண்மையில் அப்படி விரும்பிச் செய்யவில்லை, மனநலப் பிரச்னை காரணமாகத்தான் அப்படி நடந்துகொள்கிறார் என்பதைச் சிகிச்சையளிப்பவர் விளக்குகிறார். அத்தகைய எதிர்மறையான நடவடிக்கைகளை எப்படிச் சரி செய்யலாம் எனச் சிந்திக்கிறார். அதேசமயம், பாதிக்கப்பட்டவர் குணமாகவேண்டுமென்றால், அவர் இந்தச் சிகிச்சையில் விரும்பிப் பங்குபெறுவது அவசியம் என்பதையும், குடும்பத்தினர் அவரைக் கவனித்து ஆதரவளிப்பது முக்கியம் என்பதையும் சிகிச்சை அளிப்பவர் விளக்குகிறார். ஒருவேளை, பாதிக்கப்பட்டவரை நீண்டநாளாகக் கவனித்துக்கொள்வதன்மூலம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டிருந்தால், அதைக் குறைப்பதிலும் குடும்பச் சிகிச்சை முக்கியப் பங்காற்றுகிறது.

முக்கியக் குறிப்பு: சில நேரங்களில் இந்தத் தெரபிகளில் சிலவற்றை ஒன்றாக செயல்படுத்தினால், சிகிச்சையின் செயல்திறன் அதிகரிக்கக்கூடும். பலநேரங்களில் பார்மாகோ தெரபியையும் சைக்கோ தெரபியையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக ஒருவருக்கு மிதமான மனச்சோர்வு இருந்தால், CBT உடன் ஆதரவான சைக்கோ தெரபியையும் இணைத்து நல்ல பலன் பெறலாம். அதே சமயம் மிகத் தீவிரமான மனச் சோர்வு கொண்ட ஒருவருக்கு பார்மகோ தெரபி பிறகு அத்துடன் சைக்கோ தெரபியை இணைத்தல் நல்ல பலனை தரலாம். அதே போல் ஒருவருக்கு சைக்கோட்டிக் பிரச்னை வந்திருந்தால், அவருக்கு சைக்கோ தெரபி பலன் தராமலே போகலாம், அப்போது அவருக்கு மருந்துகள் மட்டுமே உதவலாம்.

மூளையைத் தூண்டும் சிகிச்சைகள்

மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருந்துகள் அல்லது சைக்கோ தெரபி போன்றவை எந்தவிதப் பலனையும் தரவில்லை என்றால்மட்டுமே, அவருக்கு மூளையைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக, பாதிக்கப்பட்டவருடைய மருத்துவ நிலை முழுமையாக மதிப்பிடப்படுகிறது, பல மருத்துவர்கள் கலந்து பேசி, பாதிக்கப்பட்டவருக்கு இந்தச் சிகிச்சை பலன் அளிக்கும் என்று தீர்மானித்தபிறகே இந்தச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

முக்கியக் குறிப்பு: இந்தச் சிகிச்சையைப் பெறுகிறவரும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரும் இந்தச் சிகிச்சையின் பக்க விளைவுகளைப்பற்றி நான்கு அறிந்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஒப்புதல் அளித்த பிறகே இந்தச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

மூளையைத் தூண்டும் சிகிச்சைகள் சில:

 • மின்சார வலிப்புச் சிகிச்சை (ECT): இந்தச் சிகிச்சையில் பாதிக்கப்பட்டவருடைய மூளையின் வழியாக ஒரு மின்சார துடிப்பு அனுப்பப்ப்டுகிறது. இதன்மூலம் சில குறிப்பிட்ட மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ECT எப்போது, ஏன் சிபாரிசு செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: மின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன?
 • மண்டையோட்டின் ஊடாகச் செல்லும் காந்தத் தூண்டல் (TMS): இங்கே காந்தப் புலன்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடைய மூளையில் உள்ள நரம்பு செல்கள் தூண்டப்படுகின்றன, அதன் மூலம் சில மனநலப் பிரச்னைகளின் அறிகுறிகள் குணப்படுத்தப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட சிகிச்சை பலன் தருமா தராதா என்று எப்படி அறிந்துகொள்வது?

மனநல நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவ வரலாறை நன்கு ஆராய்கிறார்கள், அவர்களுடைய அறிகுறிகளை நன்கு அலசுகிறார்கள், பரிசோதனைகள், மதிப்பீடுகளை நடத்துகிறார்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பேசுகிறார்கள், இவற்றின் அடிப்படையில்தான் அவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிகிறார்கள், அதன் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய சிகிச்சை முறையைத் தீர்மானிக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் மொத்தமும், பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை எந்த அளவு பலன் தரும் என்று புரிந்துகொள்ளும் நிலையில், அதைப்பற்றி விவாதிக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார் என்றால், அவரிடம் அதுபற்றி விளக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அவர் அவ்வாறு புரிந்துகொள்கிற நிலையில் இல்லை என்றால், அவருடைய பிரச்னையைப்பற்றியும் அவருக்கு எந்தவிதமான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதைப்பற்றியும் அவருடைய குடும்பத்தினர் (அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள்) போதுமான அளவு தெரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் எந்தவகை சிகிச்சை வழங்கப்படுகிறது என்ற விஷயத்தில் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களும் ஒத்துப்போக இயலும்.

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு யோகாசனத்தை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தலாமா?

கடந்த பத்து ஆண்டுகளில், மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கு யோகாசனம் ஒரு சிகிச்சையாக வழங்கப்பட்டுள்ளது, இதுகுறித்த பல ஆய்வுகளும் நடைபெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில், மனநலப் பிரச்னைகளுக்கு யோகாசனம் ஒரு கூடுதல் சிகிச்சையாக நன்கு பயன்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள டாக்டர் சிவராம வரம்பள்ளி உடனான நேர்காணலை வாசியுங்கள். மனநலப் பிரச்னைகளுக்கு யோகாசனத்தைக் கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்துவதன் பலன்களை அவர் விளக்கியுள்ளார்.

உளவியல் மருந்துகளின் பக்க விளைவுகள் என்ன?

எல்லா மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உள்ளன. சிலரிடம் அந்தப் பக்க விளைவுகள் தெரியாமல் போகலாம். அல்லது அவர்கள் அதை சமாளித்து கொள்ளலாம். உளவியல் மருந்துகளைப் பொறுத்தவரை, அவற்றின் பக்க விளைவுகள் அந்த மருந்துகளோடு வருகிற விவரத்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பக்க விளைவுகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்களுடைய மருத்துவர்களிடம் பேசலாம்.

உளவியல் மருந்துகளால் ஏற்படும் சில பக்க விளைவுகள்:

 • தூக்கக் கலக்கம் மற்றும் மெதுவாகச் செயல்படுதல்
 • எடை அதிகரித்தல்
 • நீரிழிவுப் பிரச்னை வரக்கூடிய சாத்தியங்கள்
 • இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதனால் வருகிற மயக்க உணர்வு
 • எதிலும் ஊக்கமின்றி, ஆர்வமின்றி, காணப்படுதல் தன்னைத்தானே சரியாகக் கவனித்துக்கொள்ளாமல் இருத்தல் போன்ற எதிர்மறை அறிகுறிகள்

இந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் அதற்கு முன் சில முக்கியமான விஷயங்களைச் சிந்திக்கலாம்:

 • ஒரு மருந்தில் சில சிறிய பக்க விளைவுகள் இருக்கலாம். அதில் அதிக கவனம் செலுத்தாமல், அந்த மருந்தால் வருகிற பலன்களைக் கவனிக்கவேண்டியது இன்னும் முக்கியம்
 • சரியாக மருத்துவர் குறிப்பிடுகிற நேரத்திலேயே மருந்துகளை உட்கொள்வது நல்லது, அப்போதுதான் பிரச்னை விரைவில் குணமாகும்
 • சிறிது காலத்திற்கு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் பக்க விளைவுகள் நின்றுவிடலாம்
 • அதன்பிறகும் ஒருவருக்குப் பக்க விளைவுகள் தொடர்ந்தால், இனிமேல் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்று அவர் தயங்கினால், அவர் தனது மருத்துவரிடம் பேசவேண்டும். மருந்தின் அளவைக் குறைப்பதா அல்லது மருந்தை மாற்றுவதா என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்கவேண்டும்.
 • ஆகவே, மனநலப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறவர்கள் தங்களது மருத்துவரிடம் கலந்து பேசாமல் மருந்து சாப்பிடுவதைத் திடீரென்று நிறுத்தக்கூடாது, காரணம் எதுவானாலும் சரி, மருந்துகளைப்பற்றிய தீர்மானத்தை மருத்துவர்தான் எடுக்கவேண்டும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org