‘எனக்கு 17 வயதானபோது, நான் என்னுடைய தாயை இழந்தேன். நானும் என்னுடைய தங்கையும் (அவருடைய அப்போதைய வயது 16) அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தோம். அவர் எங்களுடைய நண்பராக, நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.நாங்கள் எந்த விஷயத்தில் தடுமாறினாலும், உடனே அவரிடம்தான் செல்வோம். அவருடைய இழப்பு என்னை உடைத்துப்போட்டது. ஒரு முழு ஆண்டு சென்றபிறகும், என்னால் மீள இயலவில்லை. அவர்கள் என்னை ஒரு சிகிச்சையாளரிடம் அழைத்துச்சென்றார்கள். வியப்பான விஷயம், என்னுடைய தங்கை அதைத் தாண்டி வந்துவிட்டார். அவரும் தன்னுடைய தாயைப் பிரிந்து வருந்தினார், நாங்கள் அவரைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அழுதார். ஆனால், அவருடைய வாழ்க்கை தொடர்ந்தது, ஆனால் என் வாழ்க்கை நின்றுவிட்டது.'
மேலே உள்ள தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட மீரா, தன்னுடைய தாயுடைய இழப்பைச் சமாளிக்க இயலாதபடி தன்னைச் சிரமப்படுத்தியது என்ன என்று எப்போதும் சிந்தித்துப்பார்த்துவந்தார். இழப்பைச் சமாளிக்க இயலாததற்காக, அவர் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டார். மிக முக்கியமாக, அவர் தன்னுடைய தங்கையுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டார்; தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று, அழுத்தங்களால் வரும் ஆபத்துகளுக்குத் தன்னை அதிகம் ஆளாக்குகிறதோ என்று புரிந்துகொள்ள விரும்பினார்.
விரிதிறனைப் புரிந்துகொள்ளுதல்
ஒரே சூழலை எதிர்கொள்கிறவர்கள் அதை வெவ்வேறுவிதமாகச் சமாளித்து வெளியில் வருகிறார்கள்; இதற்குக் காரணம், அவர்களுக்கிடையில் உள்ள ஒரு வேறுபாடுதான் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அந்த வேறுபாடு, மக்களைப்பற்றியதுமட்டுமில்லை, அல்லது, அவர்கள் சந்தித்த அனுபவங்களைப்பற்றியதுமட்டுமில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். வேறு ஏதோ ஒரு பண்பு, மக்களிடம் ஏற்கெனவே உள்ளது, அவர்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கிறது, அதுதான் மக்களை வெல்லமுடியாதவர்களாக, ஆபத்துக்கு ஆளாகாதவர்களாக ஆக்குகிறது என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. அது ‘விரிதிறன்’ என்று அழைக்கப்பட்டது; அழுத்தமான ஒரு சூழலை வெவ்வேறு மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், அதன்மூலம் அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை வேறுபடுத்தும் காரணியாக இது கருதப்பட்டது.
ஆனால், இந்தச் சொல்லை நாம் எப்படிப் புரிந்துகொண்டுள்ளோம் என்பது இப்போது மாறிவிட்டது. இப்போது, ஒருவருக்குச் சாதகமாக அமையாத எந்தவொரு சூழலுக்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய அவருடைய திறனை விரிதிறன் என்கிறோம்.
வரலாற்றைத் திருப்பிப்பார்த்தால், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, மற்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுடைய எடுத்துக்காட்டைக் கொண்டு விரிதிறனை விவரிக்கலாம். சமீபத்தில், கேரள வெள்ளத்தின்போது இப்படிப்பட்ட சூழலொன்று வெளிச்சத்துக்கு வந்தது, அங்கிருந்த சிலர் மிகுந்த வலிமையை, மன உறுதியை வெளிப்படுத்தினார்கள், அவர்களுக்குச் சொந்தமாக இருந்தவற்றுள் பெரும்பாலானவற்றை அழித்த பேரழிவைத் தாண்டி வந்தார்கள், இன்னும் மேம்பட்ட, அதேமாதிரியான, அல்லது, இன்னும் மோசமான சூழலில் இருந்த பிறருக்கு உதவ வழிகளைக் கண்டறிந்தார்கள்.
விரிதிறன் என்பது ‘இருந்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை’ என்கிற தன்மையைக் கொண்டதா?
விரிதிறன் என்பது ஒருவருக்கு இருக்கிற அல்லது அவரிடம் இல்லாத ஒரு பண்பு என்று சொல்லிவிட இயலாது. சூழ்நிலையைப் பொறுத்து ஒருவருடைய விரிதிறன் மாறுகிறது.
கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் உங்களுடைய திறனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மீராவைக் கேட்டபோது, அவர் உடனடியாகப் பதிலளித்தார், ‘நான் பலவீனமானவள் என்று நினைக்கிறேன். என்னால் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க இயலாது.' மீராவுடைய கணவரும் அவரோடு வந்திருந்தார், அவருக்குப் பக்கத்தில்தான் அமர்ந்திருந்தார், அவர் தன்னுடைய தலையை நுட்பமாக அசைப்பதை என்னால் காண இயன்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நான் அவரைக் கேட்டேன். அவர் சொன்னார், ‘இது உண்மை என்று நான் நம்பவில்லை. எங்களுடைய திருமணத்தை என்னுடைய பெற்றோர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, எங்களுடைய திருமணத்துக்குப்பிறகு நாங்கள் கடினமான நேரத்தைச் சந்தித்தோம். எங்களுடைய திருமணம் காதல் திருமணம். என்னைப் பொறுத்தவரை, மீரா எப்போதும் என்னுடைய பெற்றோரிடம் இனிமையாகப் பழக முயன்றுள்ளார். அவர்கள் அவரிடம் மோசமாக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும், அவர்களைப்பற்றி விசாரிப்பார், அவர்களுடன் கலந்து பழக முயல்வார்.'
பெரும்பாலானோரைப்போல், ஒரு சிரமமான குடும்பச் சூழலைக் கையாள்வதில் தான் காட்டிய விரிதிறனை மீராவால் காண இயலவில்லை, தன்மீது அவர் கொண்டிருந்த அவநம்பிக்கையில் உறுதியாக நின்றார்.
விரிதிறனுடைய தகவமைப்புச் செயல்முறை ஒரு வெற்றிடத்தில் நிகழ்வதில்லை, அதாவது, ஒருவருக்கு விரிதிறன் முற்றிலும் உண்டு, அல்லது முற்றிலும் இல்லை என்று சொல்ல இயலாது. பின்னணியைப் பொறுத்து மக்கள் விரிதிறனோடு செயல்படுகிறார்கள். சூழ்நிலைகள் மாறுகின்றன, வேறுபடுகின்றன, அதற்கேற்ப விரிதிறன் நிலைகளும் மாறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவர் தொடர்ந்து அழுத்தத்தைச் சந்தித்தால், அதுவும் அவருடைய விரிதிறனில் சமரசத்தை உண்டாக்குகிறது; பல சூழ்நிலைகளைச் சமாளிப்பதைக் கடினமாக்குகிறது.
ஒருவர் விரிதிறனைக் கட்டமைத்துக்கொள்வதும் சாத்தியம் என்பதையும், அது சில தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறப்பான மனிதர்களிடம்மட்டும் காணப்படுகிற ஓர் அசாதாரணமான குணம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள இது நமக்கு உதவுகிறது.
விரிதிறனைக் கட்டமைத்தல்
பல சூழ்நிலைகளில் விரிதிறனைக் கட்டமைத்தல், பராமரித்தலில் தனிநபர் மற்றும் அவருடைய குடும்பம், சமூகம் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது. ஒருவரை விரிதிறனுள்ளவராக ஆக்குவதில் பலவிதமான காரணிகள் செயலாற்றுகின்றன.
பரிந்துரைக்கப்படும் வியூகங்களைப் பலவிதமாகக் கலந்து பயன்படுத்துவதன்மூலம் வெவ்வேறு நபர்கள் பலன் பெறலாம். தனக்கு எது சிறப்பாகப் பணியாற்றக்கூடும் என்பதை ஒருவர் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், அவர் தன்னுடைய முந்தைய அனுபவங்களைக் காணவேண்டும், எது தனக்குச் சரியாகச் செயல்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியவேண்டும், அதன்மூலம், விரிதிறனை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வியூகத்தை உருவாக்கவேண்டும்.
காம்னா சிப்பெர் ஒரு மருத்துவ உளவியல் ஆலோசகர், ஃபோர்ட்டிஸ் நலப்பராமரிப்பு அமைப்பின் மனநலன் மற்றும் பழகுமுறை அறிவியல் துறையின் மனநலப் பிரிவுத் தலைவர்.