ஓர் ஆலோசகர் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?

ஓர் ஆலோசகர் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?

உலகெங்குமுள்ள பல நாடுகளில் சிகிச்சையளிப்பவர்கள், ஆலோசகர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்களுடைய தொகுப்பொன்றை உருவாக்கியுள்ளன. நன்னெறி ஒழுங்கானது சிகிச்சையளிப்பவர், சிகிச்சை பெறுபவர் என இருவரையும் இவ்வழிகளில் ஆதரிக்கிறது:

  • ஊடாடலுக்கான வழிகாட்டுதல்களைத் தெளிவாக அமைக்கிறது

  • உறவின் எல்லைகளை வரையறுக்க இருவருக்கும் உதவுகிறது

  • இருவருக்கும் (உடல்சார்ந்த மற்றும் உணர்வுசார்ந்த) பாதுகாப்பை அமைக்க உதவுகிறது.

ஆனால், இந்தியாவில் இதுபோன்ற ஆலோசனைப்பணிகளைக் கட்டுப்படுத்துகிற அமைப்பு அல்லது பொதுவான நெறிமுறைகளின் விதிமுறையொன்று வழக்கத்தில் இல்லை. இதன் பொருள், ஒரு சிகிச்சையாளரிடம் செல்கிற பலருக்கு, என்னென்ன செயல்முறைகளைப் பின்பற்றவேண்டும், எவையெல்லாம் நல்லதில்லை என்று தெரிவதில்லை. சிகிச்சையளிப்பவர்கள் பின்பற்றுகிற நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று புரிந்துகொள்வதற்காக, சிகிச்சையளிக்கிற சிலருடன் பேசியது வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை. அவர்கள் சொன்ன குறிப்புகள் சில, இதோ:

எதை எதிர்பார்க்கலாம்?

  • சிகிச்சைக்கு வருகிற ஒருவர் அந்தச் சிகிச்சையின்மூலம் எதை எதிர்பார்க்கலாம் என்பதை, சிகிச்சையளிப்பவர் அல்லது ஆலோசகர் முதல் சந்திப்பின்போது அவருக்குச் சொல்வார். இதற்காக, அவர்கள் அவரைச் சில படிவங்களை நிரப்பச்சொல்லலாம், அதன்மூலம் அவருடைய மருத்துவ அல்லது மன நல வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம், அதன் அடிப்படையில், தங்களுடைய அணுகுமுறைகளைப்பற்றி அவருக்குச் சொல்லலாம்.

  • முதல் சில சந்திப்புகளில், சிகிச்சை பெறுபவர் தன்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கு, சிகிச்சைக்கான தன்னுடைய இலக்குகளைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்குச் சிகிச்சையளிப்பவர் உதவலாம்; அதன்மூலம், தாங்கள் எதை நோக்கிப் பணியாற்றுகிறோம் என்பதை அவர்கள் இருவரும் அறியலாம்.

  • சிகிச்சையளிப்பவர் தான் எதிலெல்லாம் சிறப்புக் கவனம் செலுத்துகிறார் என்பதைச் சிகிச்சை பெறுகிறவரிடம் தெளிவாகச் சொல்வார்; அவருக்கு முழுமையாக ஆதரவளிக்கும் திறன்கள் அல்லது தகுதி தனக்கு இல்லாவிட்டால், அதையும் தெரிவிப்பார். சிகிச்சையளிப்பவர் அவரை இன்னொரு மனநல வல்லுனரிடமும் அனுப்பலாம்.

  • சிகிச்சை என்பது பல நேரங்களில் வழிநடத்தப்படாத ஒரு செயல்பாடாகும். சிகிச்சை என்பது பல நேரங்களில் ஒருங்கிணைந்த செயல்பாடாகும்: சிகிச்சை பெறுகிறவருக்குத் தான் விரும்பியபடி தீர்மானமெடுக்கும் முழுச் சுதந்தரம் உண்டு; அவருக்குச் சிகிச்சையளிக்கும் வல்லுனர், சிகிச்சை பெறுபவருக்கான ஒரு பிரதிபலிப்பு இடமாக, அல்லது, தெளிவு பெறுவதற்கு அவருக்கு உதவும் ஒருவராகப் பணியாற்றுகிறார்.

  • மனநல வல்லுனர், சிகிச்சை பெறுபவருக்கு உணர்வுரீதியில் பாதுகாப்பான, பச்சாத்தாபமுள்ள, தீர்ப்புச் சொல்லாத, கேட்கும் இடத்தை வழங்குகிறார்.

  • சிகிச்சை அளிப்பவருக்கும் சிகிச்சை பெறுபவருக்கும் இடையிலான அனைத்து உரையாடல்களும் ரகசியமானவை; சிகிச்சையளிப்பவர் அவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டார், சிகிச்சை பெறுபவருடைய நண்பர்கள், குடும்பத்தினரிடம்கூட. அதேசமயம், ஒருவர் தன்னைத்தானே, அல்லது பிறரைக் காயப்படுத்தும் நிலையில் இருக்கிறார் என்று சிந்திப்பதற்குப் போதுமான காரணங்கள் இருந்தால், அவருக்குச் சிகிச்சையளிப்பவர் அவருடைய பாதுகாப்புக்காக இந்தத் தகவலை அவருடைய குடும்பத்தினர் அல்லது பிற மனநல வல்லுனர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதேசமயம், சிகிச்சைக்காக வருகிற ஒருவரிடம், சிகிச்சையளிப்பவர் இதைச் சொல்வார், முதல் சந்திப்பிலேயே சொல்வது இன்னும் நல்லது.

“ஓர் உதவித் தொலைபேசி எண் என்றமுறையில், வாடிக்கையாளருடன் எங்களுடைய ஒரே ஊடாடல் தொழில்நுட்பத்தின்வழியாக நிகழ்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் தொலைபேசியில் மனநலப் பிரச்னைகளை அடையாளம் காண்பதில்லை, வடிகட்டுவதில்லை, அல்லது, பரிந்துரைகளை வழங்குவதில்லை. நாங்கள் சொல்வதெல்லாம், தனக்கு உதவக்கூடிய ஒருவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுபற்றி அவர் சிந்திக்கவேண்டும் என்று பரிந்துரைப்பதுதான். அதன்பிறகு, தேவைக்கேற்ப களச் சேவைகளுடன் நாங்கள் அவர்களை இணைக்கிறோம். எடுத்துக்காட்டாக, சிகிச்சையளிப்பவர்கள், சிறப்புப் பிரிவுகள், சட்ட உதவி, NGOக்கள் அல்லது மருத்துவமனைகள்.

தனுஜா பாப்ரே,  திட்ட வல்லுனர், iCALL, உளவியல் சமூகவியல் உதவித் தொலைபேசி எண், மும்பை

எப்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்:

  • முதல் சில சந்திப்புகளுக்குள், சிகிச்சையளிப்பவர் உறுதியான தீர்வுகள் அல்லது காலகட்டத்தை முன்வைக்கிறாரா? முழுப் பிரச்னையையும் புரிந்துகொண்டு, சாத்தியமுள்ள பலன்கள் எவ்வாறு இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரமாகும்.

  • அறிவுரை அல்லது தயார்நிலைத் தீர்வுகளை வழங்குதல், அல்லது, எந்தத் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று சொல்லுதல்.

  • சிகிச்சைக்காக வந்தவர் தன்னுடைய உணர்வுகள், தன்னுடைய அடையாளம், தன்னுடைய அனுபவங்கள் அல்லது தன்னுடைய தெரிவுகளுக்காகக் குற்றம்சாட்டப்படுதல், விமர்சிக்கப்படுதல் அல்லது அவமானப்படுத்தப்படுதல்.

  • சிகிச்சை பெறுபவருக்கும், அவருக்குச் சிகிச்சை வழங்குபவருக்கும் இடையிலான உரையாடல்களைப்பற்றிய தகவல் அல்லது தகவல்கள் அவருடைய அனுமதியில்லாமல் அவருடைய நண்பர்கள், குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ளப்படுதல்.

நான் இவற்றை உரத்த குரலில் மறப்பேன்: என்னால் உண்மையென உறுதிப்படுத்த இயலாத ஆவணங்களை நான் வழங்குவதில்லை (சில நேரங்களில், முதல் சந்திப்பிலேயே ஒரு கண்டறிதலைச் சொல்லும் கடிதங்களை வழங்குமாறு சிலர் என்னைக் கேட்பார்கள், அல்லது, நான் ஒரு வாடிக்கையாளரைப் பலமுறை சந்தித்திராதபோது, அவ்வாறு சந்தித்ததாகச் சொல்லுகிற கடிதங்களைக் கேட்பார்கள்) இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் ஒரு மருத்துவ விடுமுறைக்குப்பிறகு அலுவலகத்துக்குத் திரும்பச்செல்லலாம். சிகிச்சை வழங்குபவர்களுடைய சொந்த நெறிமுறைப் பொறுப்புகளைப் பாதுகாப்பதற்காக இதைக் கண்டிப்பாகப் பின்பற்றக்கூடாது: தான் உண்மையில் செய்துள்ளவற்றைமட்டுமே அறிக்கையாக அளிக்கவேண்டும்.

டாக்டர் திவ்யா கண்ணன், மருத்துவ உளவியலாளர், பெங்களூரு

சிகிச்சையளிக்கும் ஒருவர் என்றமுறையில், இணையத்தில் ஆலோசனை அளிப்பவர் என்றமுறையில், உடனடிப் பராமரிப்பைப் பொறுத்தவரை நான் வழங்கக்கூடிய, வழங்கக்கூடாத தீர்வுகள் என்னென்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். சித்தப்பிரமை ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற சில சூழ்நிலைகள் உடல்சார்ந்த மற்றும் நரம்புசார்ந்த அம்சங்களையும் உளவியல் அம்சங்களையும் கொண்டுள்ளன; இதற்குப் பொறுப்பான மருந்துவழங்கலும் அநேகமாக மற்ற ஆதரவு அமைப்புகளும் தேவைப்படும். அடுத்து, இணையத் தலையீடுமட்டும் பயன் தராது என்பதை நான் தெளிவாகச் சொல்லவேண்டும். என்னுடைய வரம்புகளை நான் அறிந்திருப்பதையும், தேவைப்பட்டால் பிற வல்லுனர்களிடம் அவர்களை அனுப்புவதையும் நான் உறுதிப்படுத்துகிறேன்.

ஸ்கெரெஜேட் சியோபன், உளவியலாளர், தி டாக்கிங் காம்பஸ்

ஒருவர் சிகிச்சைக்குச் செல்லக் கருதுகிறார் என்றால், அவர் இதை மனத்தில் வைத்துக்கொள்வது முக்கியம், சிகிச்சையளிப்பவர் மாறுபட்டு எதையேனும் செய்தால் அவரிடம் பேசுவது முக்கியம். அதே நேரம், தன்னுடைய சிகிச்சையாளர் தேர்வு தனக்கு வேலைசெய்கிறதா என்பதைப்பற்றிய தன்னுடைய சொந்தப் பார்வையுடன் அவர் அங்கு செல்வதும் அவசியம். சில சந்திப்புகளுக்குப்பிறகு (பொதுவாக, ஒரு பிணைப்பை உண்டாக்கிக்கொள்ள முதல் சில சந்திப்புகள் தேவைப்படும்) அவருடன் தகவல்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று இவர் பாதுகாப்பாக உணர்கிறாரா? அவர் திறந்த மனத்துடன் தான் சொல்வதைக் கேட்பதாக இவர் உணர்கிறாரா?

எந்த நேரத்திலும், இவர் ஏதாவது அசௌகர்யமாக உணர்ந்தால், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுகிற, சிகிச்சையளிப்பவர் தான் செய்வதை ஏன் செய்கிறார் என்று தனக்குச் சொல்லுமாறு சிகிச்சையளிப்பவரைக் கேட்கிற உரிமை இவருக்கு உண்டு. அசவுகரிய உணர்வு தொடர்ந்தால், இந்த உறவு தனக்கு வேலைசெய்கிறதா, தன்னுடைய மன நலப் பிரச்னைகளைக் கையாள்வதில் தனக்கு உதவுகிறதா என்று மதிப்பிடவேண்டிய நேரமாக அது இருக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org