மன நலக் குறைபாடு பழைய நிலைக்குத் திரும்புதல் என்றால் என்ன?

ஒரு மன நலக் குறைபாட்டைக் கையாள்வதில், பிரச்னையிலிருந்து மீள்வதுடன், அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாமல் தடுப்பதும் முக்கியமான ஒரு பகுதி
மன நலக் குறைபாடு பழைய நிலைக்குத் திரும்புதல் என்றால் என்ன?

மன நலக் குறைபாட்டிலிருந்து மீள்வது என்பது, ஆறுதல் மற்றும் மாற்றத்தின் ஒரு செயல்முறையாகும், இதன்மூலம், தனி நபர்கள் தங்களுடைய மன நலத்தை, நலனைத் திரும்பப் பெறுகிறார்கள், தங்களுடைய பணிகளை முன்புபோல் தொடர்கிறார்கள். அதே நேரம், முன்பே காணப்படாத காரணங்களால், மன நலக் குறைபாட்டின் சில அறிகுறிகள் திரும்ப வரலாம், இது, பிரச்னையிலிருந்து மீள்வதைப் பாதிக்கலாம். வாழ்நாள்முழுவதும் பராமரிப்பு தேவைப்படுகிற ஸ்கிஜோஃப்ரெனியா, இருதுருவக் குறைபாடு போன்ற தீவிர மன நலக் குறைபாடுகளைப் பொறுத்தவரை, அவை மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் கூடுதலாகும். அதே நேரம், திரும்ப வருதலின் தாக்கமானது, நிலையின் இயல்பு மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து அமைகிறது.

மனச் சோர்வு போன்ற பொதுவான மன நலக் குறைபாடுகளைப் பொறுத்தவரை, அவை ஒருவரிடம் திரும்ப வருகின்றன என்றால், அவருடைய செயல்திறன் குறையலாம், ஊக்கம் அல்லது சமூக ஊடாடல் குறையலாம். மேலும் தீவிரமான மன நலக் குறைபாடுகளைப் பொறுத்தவரை, அவை ஒருவரிடம் திரும்ப வருகின்றன என்றால், அவருடைய அன்றாடச் செயல்பாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம், சமூகத்திலிருந்து அவர் விலகிச்செல்லலாம், மாயத்தோற்றங்கள் அல்லது இல்லாத காட்சிகளை உணரலாம் அல்லது, தீவிரமாக நடந்துகொள்ளலாம்.

திரும்ப வருதல் என்றால் என்ன?

திரும்ப வருதல் என்றால், மீட்சிக்குப்பிறகு அறிகுறிகள் மீண்டும் வரத் தொடங்குதலாகும். பொதுவாகத் திரும்ப வருதல் என்பது கட்டங்களில் நிகழ்கிறது, ஒவ்வொரு நபருடைய திரும்ப வருதலும் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றுகிறது, அதாவது, ஒவ்வொரு நிகழ்வின்போதும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் மீண்டும் நிகழ்கிறன. ஒருவர் திரும்ப வருதலை ஏற்கெனவே ஒருமுறை சந்தித்துள்ளார் என்றால், அவர் திரும்ப வருதலின் அறிகுறிகளை அறிந்திருப்பார், அது அவருக்கு உதவலாம், அவரும் அவரைக் கவனித்துக்கொள்கிறவரும் சேர்ந்து அதை மேம்பட்டமுறையில் கையாள்வார்கள், அல்லது, சரியான நேரத்தில் உதவியை நாடுவார்கள்.

திரும்ப வருதல் ஏன் நிகழ்கிறது?

மருந்தில் மாற்றம், அளவில் மாற்றம் அல்லது மருந்தைத் திடீரென்று நிறுத்துதல் ஆகியவை திரும்ப வருதலின் எச்சரிக்கை அடையாளங்களைக் கொண்டுவரலாம். மன நலக் குறைபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய மருந்து அல்லது அதன் அளவு மாற்றப்படுகிறது என்று உணர்ந்தால், அவர் அதைப்பற்றித் தன்னுடைய மனநல மருத்துவரிடம் பேசுவது நல்லது, இந்த மாற்றத்தால் தான் எதை எதிர்பார்க்கலாம் என்று கேட்பது நல்லது, தன்னுடைய நடவடிக்கையில் அல்லது எண்ணங்களில் அவர் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால், உடனே அவர்களைத் தொடர்புகொள்வதும் நல்லது. மன நலக் குறைபாடு கொண்ட நபர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள் அவர்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும், மருந்து மாறும்போது அவர் முன்பைவிட நன்றாக உணர்கிறாரா, அல்லது, மோசமாக உணர்கிறாரா என்று கண்காணிக்கவேண்டும், சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும்.

தவறான பொருட்கள், போதை மருந்துகள் அல்லது மதுவைப் பயன்படுத்துவதாலும் மன நலக் குறைபாடுகள் திரும்ப வரலாம். பணி முன்னேற்றம், திருமணம், கர்ப்பமாதல், குழந்தை பிறப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள், அல்லது, வேலை போதல் அல்லது அன்புக்குரிய ஒருவருடைய இறப்பு போன்ற சவால்கள் அளிக்கும் அழுத்தத்தாலும் இது நிகழலாம்.

திரும்ப வருதலை முன்கூட்டியே ஊகிக்க இயலுமா?

பொதுவாக, திரும்ப வருதலுக்கான தொடக்க எச்சரிக்கை அடையாளங்களை மன நலக் குறைபாடு கொண்டவரோ அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்பாகவே கவனிக்கலாம். இந்தத் தொடக்க எச்சரிக்கை அடையாளங்கள், அந்த நபருடைய எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் பார்வைகளில் ஏற்படும் மாற்றங்களாக இருக்கலாம்.

 • தூக்கம் குறைதல்

 • தனிமையுணர்வு

 • பசியெடுப்பதில் மாற்றங்கள்

 • சிரமமாக உணர்தல், மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ள இயலாமலிருத்தல்

 • அழுத்தமாக அல்லது எரிச்சலாக உணர்தல்

 • தோற்றம் மற்றும் தனிப்பட்ட தூய்மையில் அக்கறை காட்டாம இருத்தல்

 • கவனம் செலுத்த இயலாமல் போதல், மறதி

 • விளக்க இயலாத வலிகள் மற்றும் நோவுகள் (மனச்சோர்வுக்கு)

திரும்ப வருதைன்போது உதவிக்குத் திட்டமிடுதல்

ஒருவர் ஒரு மன நலக் குறைபாட்டிலிருந்து மீண்டபிறகு, அந்த மன நலக் குறைபாட்டின் அடையாளங்கள் திரும்ப வரலாம் என்பதை அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அறிந்திருப்பது முக்கியம். இதற்கான வரையறையை உருவாக்கும்போது, மன நலப் பிரச்னை கொண்டவர், அவருடைய மன நலச் சிகிச்சை வல்லுனரையும் அதில் ஈடுபடச்செய்யலாம். திரும்ப வருதலுக்காகத் தயாராகும்போது எடுக்கக்கூடிய சில படிநிலைகள், இதோ:

மாற்றங்களுக்கான குறிப்பிட்ட அடையாளங்கள்/தொடக்க நிலை எச்சரிக்கைச் சின்னங்கள்: மன நலக் குறைபாடு கொண்டவருடைய எண்ணங்கள், நடவடிக்கை மற்றும் உணர்வு நிலையில் உண்டாகும் குறிப்பிட்ட மாற்றங்களை, அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களால் அடையாளம் காண இயலும்: அவர்கள் வழக்கத்தைவிடக் கூடுதல் எரிச்சலுடன் உள்ளார்களா? அவர்களுடைய தூங்கும் பாணிகளில் பெரிய மாற்றம் உள்ளதா? தீவிரத்தின் அளவு மற்றும் அடையாளங்கள் எப்போதெல்லாம் வருகின்றன என்பதைக் கவனித்துக்கொள்கிறவர் குறித்துவைக்கலாம்.

 • திரும்ப வருதல் நிகழ்வைப்பற்றிக் கலந்து பேசுதல்: மன நலக் குறைபாடு கொண்ட ஒருவர், தன்னைக் கவனித்துக்கொள்கிறவர்களை முற்றிலும் சார்ந்திருக்கிறார் என்றால், திரும்ப வருதல் நிகழ்வைப்பற்றி அவர்கள் அனைவரும் கலந்து பேசுவது முக்கியம். அவர் ஓரளவு அல்லது பெருமளவு தானே இயங்குகிறார் என்றால், கவனித்துக்கொள்கிறவர்கள் எச்சரிக்கை அடையாளங்களைப்பற்றி அவரிடம் பேசலாம், அதைக் கையாள்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கலாம்.

 • அவர்களுடைய மருந்துகளைக் கவனித்தல் - மருந்தின் அளவு மாறலாம், மருந்தின் வகை மாறலாம், அதைப் பயன்படுத்தும் முறைகள் மாறலாம், இவை அனைத்தையும் கவனிக்கவேண்டும். மன நலக் குறைபாடு கொண்டவர் இந்த மாற்றங்களால் தனக்குள் ஏற்படுகிற மற்ற மாற்றங்களைக் கவனிப்பதற்கு இது உதவும். அவரைக் கவனித்துக்கொள்கிறவரும் அவருக்குச் சிகிச்சை அளிக்கிற மன நல மருத்துவரும் சேர்ந்துகூட ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம்.

 • அழுத்தம் நிறைந்த நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்தல்: மன நலக் குறைபாடு கொண்ட நபர் ஏதேனும் ஒரு முக்கிய வாழ்க்கை நிகழ்வை எதிர்பார்க்கிறார் என்றால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அதை அறிந்திருப்பதும், அறிகுறிகளை எப்படிக் கையாள்வது என்பதுபற்றி அவரிடம் கலந்து பேசுவதும் முக்கியமாகும், அந்த நிகழ்வு நேர்விதமாக இருந்தாலும்கூட இது அவசியம்.

திரும்ப வருதலுக்குப்பின் மீட்சி

திரும்ப வருதல் நிகழ்வொன்றுக்குப்பின் அதிலிருந்து மீள்வது ஒரு சவாலான நேரமாக இருக்கலாம், குறைபாடு கொண்டவரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடைய ஆதரவும் பொறுமையும் இந்த நேரத்தில் மிகவும் தேவை. மன நலக் குறைபாடு கொண்ட ஒருவர் தன்னுடைய குறைபாட்டிலிருந்து போதுமான அளவு மீளாவிட்டால், திரும்ப வருதல் அவருடைய ஊக்கத்தைக் குறைக்கலாம், அவருடைய சுய மதிப்பைப் பாதிக்கலாம். இந்த நேரத்தில், அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவருக்கு நம்பிக்கையளிக்கும்விதத்தில் பேசலாம், தங்கள் ஆதரவு அவருக்கு உண்டு என்று கூறலாம். ஒருவேளை, மன நலக் குறைபாடு கொண்டவரைக் கவனித்துக்கொள்கிறவர் உணர்வுரீதியில் திகைப்படைந்து காணப்பட்டால், அதுபற்றிப் பேசுவதற்காக அவர் ஒரு சிகிச்சையாளரை அணுகவேண்டும். மன நலக் குறைபாடு கொண்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஆகிய இருவருக்கும் திரும்ப வருதலைப்பற்றி ஐயங்கள் இருக்கலாம், சிகிச்சையளிக்கிற மன நல மருத்துவரிடம் அவர்கள் இதைப்பற்றிப் பேசித் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது முக்கியம்.

பார்வைகள்:

மீட்சிக்கு உதவும் அமைப்புபற்றிய கையேடு, தென்மேற்கு நலப் பராமரிப்பு மன நலச் சேவைகள், ஆஸ்திரேலியா

NIMHANS மன நல மறுவாழ்வுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ண பிரசாத், மும்பையைச் சேர்ந்த மன நல மருத்துவர் டாக்டர் தயாள் மிர்சந்தானி வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org