மின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன?

மின்சார வலிப்புச் சிகிச்சை (ECT) என்பது சில குறிப்பிட்ட மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான, பாதுகாப்பான, செயல்திறன் வாய்ந்த சில சமயங்களில் உயிரையே காக்கக்கூடிய சிகிச்சை ஆகும்

டாக்டர் ப்ரீத்தி சின்ஹா, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் (NIMHANS) அமைப்பில் உளவியல் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் நாங்கள் மின்சார வலிப்புச் சிகிச்சை, அதன் பலன்கள், அதைக் குறித்த சர்ச்சைகள் ஆகியவற்றைப்பற்றி விளக்கும்படி கேட்டுக்கொண்டோம்.

மின்சார வலிப்புச் சிகிச்சை என்பது ஒரு தீவிர உளவியல் பிரச்னையைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை ஆகும். இதனைப் பொதுமக்கள் ‘மின்சார அதிர்ச்சி’ சிகிச்சை என்று அழைப்பார்கள். பொதுமக்களுக்கு இந்தச் சிகிச்சையைப்பற்றி சில குழப்பங்கள், கவலைகள் இருக்கின்றன. காரணம் இந்தச் சிகிச்சையின் பின்னனியில் இருக்கிற அறிவியல் பின்னணி இவர்களுக்குத் தெரிவதில்லை. ஆகவே திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இணையம் போன்றவற்றில் கிடைக்கும் தகவல்களை நம்பி மிகவும் கவலைப்படுகிறார்கள்.

ECT பற்றிய அனைத்து தவறான நம்பிக்கைகளையும் தெளிவு படுத்தி அதைப்பற்றிய உண்மைகளை விளக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

மின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன?

மின்சார வலிப்புச் சிகிச்சை (ECT) என்பது சில குறிப்பிட்ட மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான பாதுகாப்பான, செயல்திறன்மிக்க, சில நேரங்களில் உயிரையே காப்பாற்றும் திறன் வாய்ந்த சிகிச்சை ஆகும். இது கடந்த 75 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ECT யின் போது பாதிக்கப்பட்டவருடைய நெற்றிப்பகுதிக்கு இடையே குறைந்த அளவிலான நன்கு கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரம் செலுத்தப்படுகிறது, அதன்மூலம் அவரது மூளையின் செல்கள் தூண்டப்படுகின்றன. இதனால் சில வினாடிகளுக்கு அவர்களுக்கு வலிப்பு ஏற்படுகிறது. இந்தச் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவருக்கு மயக்க மருந்து தரப்பட்டிருப்பதால், மின்சாரம் பாய்ந்தீருப்பதை அவர்கள் உணரவில்லை, அவர்களுக்கு வரும் வலிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தச் சிகிச்சை முழுவதும் சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக 15 -20 நிமிடங்களில் சுய நினைவு அடைந்துவிடுகிறார்கள்.

இது பொதுவாக எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

ECT சிகிச்சையானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது, உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல ஆஸ்திரேலியா-ஆசிய நாடுகள் இதைப் பின்பற்றி வருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பின்வரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு ECT வழங்கப்படுகிறது:

  • அமெரிக்கா : 35000
  • பெல்ஜியம் : 7000
  • ஜெர்மனி : 1500

பெங்களூரில் உள்ள NIMHANS இல், ஒவ்வோர் ஆண்டும் 600-800 பேர் ECT பெற்று வருகின்றனர்.

ECT யாருக்குப் பலன் தருகிறது?

மனச்சோர்வு அல்லது ஸ்கிஜோஃப்ரெனியா அல்லது மேனியா போன்ற தீவிர மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் ECT ஐ பயன்படுத்த எண்ணுகிறார்கள். இந்தச் சிகிச்சை பல்வேறு கருத்தில் கொண்ட பிறகே செய்யப்படுகிறது. சிகிச்சையின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் குடும்பத்தின் விருப்பம், உளவியல் பிரச்னையிலிருந்து உடனடி நிவாரணம் தேவைப்படுகிறதா என்ற தன்மை, உளவியல் மருந்துகளுக்கு எந்தவிதமான பலன்களும் கிடைக்கவில்லையா என்ற நிலைமை. பொதுவாக, ECT பின்வரும் தருணங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

  • ஒருவருக்கு வந்திருக்கும் உளவியல் பிரச்னை (உதாரணமாக மனச்சோர்வு) மிகவும் தீவிரமாகி விட்டது. அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடிய சாத்தியங்கள் மிகவும் அதிகமாகிவிட்டன.
  • உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட்வர்கள் உணவு உண்ண மறுக்கிறார், எதையும் குடிக்க மறுக்கிறார். இதனால் அவருடைய உடல்நலத்திற்கு பாதிப்பு வரக்கூடும்.
  • பாதிக்கப்பட்டவருடைய பிரச்னை மிகவும் மோசமாகிவிட்டது. அவர்கள் யாருடனும் பேசுவதில்லை. இருந்த இடத்தை விட்டு நகருவதும் இல்லை, இதனை “காடடோனியா” என்று அழைப்பார்கள்.
  • பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உணர்ச்சிவயப்படுகிறார், அல்லது மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறார். இதனால் அவருடைய பாதுகாப்புக்கோ, அவரைச் சுற்றிள்ளவருடைய பாதுகாப்புக்கோ பாதிப்பு ஏற்படலாம்.
  • பாதிக்கப்பட்டவருடைய உளவியல் அறிகுறிகளுக்கு ஏற்ற மருந்துகளைக் கொடுத்தும் அவர்களிடம் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
  • பாதிக்கப்பட்டவர் உளவியல் பிரச்னைக்கான மருந்துகளை உட்கொள்வதால் அவருக்கு தீவிர பக்க விளைவுகள் வருகின்றன, அதனால் அவர் அந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள இயலாது.

ECT வழங்குவதற்கு முன்னால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் உறவினர்களின் ஒப்புதல் பெறப்படுகிறதா?

மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ECT தேவை என்று ஓர் உளவியலாளர் தீர்மானித்தால், அந்தச் சிகிச்சையைப்பற்றி அவர் பாதிக்கப்பட்டவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் விளக்குவார், அதன் நன்மைகள், தீமைகளைச் சொல்லுவார் இந்தச் சிகிச்சைக்கு என்னென்ன மாற்று அணுகுமுறைகள் உள்ளன என்று விளக்குவார். இவை அனைத்தையும் கேட்டபிறகு பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் குடும்பத்தினர் எழுத்து பூர்வமான ஒப்புதல் வழங்கவேண்டும். அந்த ஒப்புதல் பெற்ற பிறகே ECT தரப்படுகிறது. ஒருவேளை பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி இந்தச் சிகிச்சையைப்பற்றி புரிந்துகொள்ளவோ அதற்கு ஒப்புதல் வழங்கவோ இயலாது என்றால், அவரது குடும்ப உறுப்பினர்களுடைய ஒப்புதல் பெறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரும் அவர் குடும்பத்தினரும் ஒப்புதல் வழங்க மறுக்கலாம். ஆரம்பத்தில் ஒப்புதல் வழங்கிவிட்டாலும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவோ சிகிச்சையின் போதோ அவர்கள் அந்த ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் வேறு எந்த மாற்று சிகிச்சை சாத்தியமோ அது அவர்களுக்கு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட ஒருவர் ECT க்கு ஒப்புதல் வழங்காவிட்டால் என்ன ஆகும்?

பாதிக்கப்படவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ECT சிகிச்சையை மறுத்தால் அவர்களுடைய கருத்தை உளவியலாளர் மதிப்பார், வேறு மாற்று சிகிச்சைகளைப் பயன்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிப்பார். அதே சமயம் இந்த மாற்று முறைகளின் தாக்கம் தெரிவதற்கு அதிக நாள் ஆகலாம். எனவே அவர்கள் மருத்துவமனையில் அதிக நாள் தங்க வேண்டியிருக்கலாம். ECT க்கு மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் சம்மதம் தெரிவிக்காதபோது மருத்துவர் அவருக்கு அதிக மருந்துகளைக் கொடுத்து துடிப்பு, பரபரப்பு, அல்லது பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முயல்வார்கள்.

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ECT வழங்கலாமா? அது பாதுகாப்பானதுதானா?

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செய்யப்படும் ECT முதியவர்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சையாகவே இருக்கும். சொல்லப்போனால், சில நாடுகளில் பெரும்பாலும் முதியவர்களுக்குத்தான் ECT வழங்கப்படுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை ECT ஒரு கடைசி வாய்ப்பாக மட்டுமே கருத்தப்படுகிறது, அதாவது மற்ற எல்லா சிகிச்சை முறைகளும் சாத்தியமில்லை அல்லது பலன் தரவில்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு ECT வழங்கப்படுகிறது. இதற்கு முன் பல மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடல்நிலை மற்றும் மனநிலையைப்பற்றி விவாதிப்பார்கள் அதன் பிறகு தான் ECT வழங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். பெங்களூரில் உள்ள NIMHANS இல் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ECT வழங்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு எந்தவிதமான தீவிர விளைவுகளும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால், அப்போதும் ECT ஐ பயன்படுத்தலாமா?

ECT தருவதற்கு முன்னாள் உளவியலாளர்கள், பாதிக்கப்பட்டவரின் நிலையைத் தகுந்தபடி ஆராய்ந்து மதிப்பிடுகிறார்கள், பல்வேறு நிபுணர்களின் கருத்துகளைப் பெறுகிறார்கள். உதாரணமாக மயக்க மருந்து நிபுணர் போன்றோரைக் கலந்து ஆலோசிக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் பாதிக்கப்பட்டவருக்கு ECT தர வேண்டுமா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு ECT கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டாலும், சிகிச்சையின் போது அவருடைய உடல்நிலை மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. இதய, நரம்பியல், சுவாசப் பிரச்னை கொண்ட பலருக்கு ECT தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதமான தீவிரப் பிரச்னை ஏதும் இல்லாமல் அவர்கள் இந்தச் சிகிச்சையைப் பெற்றுள்ளார்கள்.

கர்ப்பமாக உள்ள பெண்கள் அல்லது பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ECT ஐப் பயன்படுத்தலாமா?

முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழங்கப்படுகிற ECT ஆனது கர்ப்பிணிப்பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பானதுதான். சொல்லப்போனால் பலவித உளவியல் மருத்துகளை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வழங்க இயலாது, ஆகவே அவர்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருந்து அதற்கு அவசரமான சிகிச்சை தரவேண்டியது இருந்தால் மருத்துவர்கள் ECT ஐ சிபாரிசு செய்கிறார்கள்.

ஒருவருக்கு ECT ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு அவர்களுக்கு எப்போது பிரச்னை வந்தாலும் ECT தர வேண்டியிருக்குமா?

இப்படித்தான் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல, பெரும்பாலான சூழ்நிலைகளில் ஒருவருக்கு ECT தரப்பட்ட பிறகு, உளவியலாளர்கள் வழக்கமான மருந்துகளைக் கொடுத்து அவர்களைத் தொடர்ந்து குணப்படுத்துவார்கள், சம்மந்தப்பட்ட பிரச்னை மீண்டும் வராமல் பார்த்துக்கொள்வார்கள். ஒருவேளை அந்தப் பிரச்னை வந்துவிட்டால், அதன் தாக்கம் மிதமான அளவிலேயே காணப்பட்டால் அவர்களுக்கு மருந்துகள் தான் தரப்படும். ECT தரப்படாது. அபூர்வமான சூழ்நிலைகளில், சில குறிப்பிட்ட மனநலப் பிரச்னைகள் ECT ஆல் மட்டுமே கட்டுக்குள் வரும். வேறு எந்தச் சிகிச்சையும் அங்கே பலனளிக்காது, அது போன்ற சூழ்நிலைகளில் மட்டும் தான் ECT மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

ECT மனநலப் பிரச்னையை குணப்படுத்துமா? ECT யின் போது அல்லது ECT க்குப் பிறகு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டுமா?

ECTயின் தாக்கம் நிரந்தரமானதல்ல, ECT மூலம் கிடைத்த முன்னேற்றங்களைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்றால் அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளவேண்டும். அபூர்வமாக சிலர் என்னதான் மருந்து சாப்பிட்டாலும் ECT மூலம் கிடைத்த முன்னேற்றங்கள் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பி விடும், அதுபோன்ற சூழ்நிலைகளில் ECTஐ மீண்டும் எடுக்கவேண்டியிருக்கலாம், ஆனால், இதை அடிக்கடி வழங்கவேண்டியிருக்காது, மாதம் ஓரிரு முறைமட்டும் வழங்கவேண்டியிருக்கலாம்.

பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ECT சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர் என்ன செய்யவேண்டும்?

ECT பெறப்போகும் ஒருவர் தன்னுடைய இப்போதைய மற்றும் முந்தைய பிரச்னைகள் பற்றி மருத்துவரிடம் சொல்லவேண்டும். குறிப்பாக, இதயம், நுரையீரல், உயர் ரத்த அழுத்தம், அல்லது எலும்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் அவை பற்றி அவசியம் பேசவேண்டும். இதற்கு முன் அவருக்கு மயக்க மருந்து தந்து அறுவைச் சிகிச்சைகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கின்றனவா? அவருடைய பற்கள் எவையேனும் ஆடிக்கொண்டிருக்கின்றனவா? அவர் பொய்ப்பல் ஏதும் கட்டிக்கொண்டிருக்கின்றாரா என்ற விவரத்தையும் அவர் தெரிவிக்கவேண்டும். ECT பெறப்போகிறவர் இப்போது என்னென்ன மருந்துகளை உட்கொள்கிறார் என்கிற விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். இந்த விவரங்களை அறிந்துகொண்டபிறகு மருத்துவர்கள் நோயாளியை விரிவாகப் பரிசோதிப்பார்கள். சில இரத்தப் பரிசோதனைகளைச் செய்தபிறகு, எலெக்ட்ரோகார்டியோகிராம் (ECG) எடுப்பார்கள். தேவைப்பட்டால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவருடைய மூளையை ஸ்கான் செய்தும் பார்ப்பார்கள்.

ECT பெறப்போகும் ஒருவர் தன்னை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும்?

முக்கியமாக ECT பெறுவதற்கு 6 மணி நேரம் முன்னால் அவர் எதையும் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது. ECT பெறப்போகிறவர் தன்னுடைய தலையை ஷாம்பு போட்டு குளிக்கவேண்டும், அங்கே எண்ணெய் பிசுக்கு எதுவும் இருக்கக்கூடாது மற்றும் தொளதொளப்பான ஆடைகளை அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்லக்கூடும். ECT பெறப்போகிறவர் நகைகள், காண்டாக்ட் லென்ஸ், பொய்ப்பல் மற்றும் காதுகேட்கும் கருவிகள் ஆகியவற்றை அணிந்திருந்தால் அவற்றை நீக்கிவிடவேண்டும். ECTக்காக அறையில் நுழைவதற்கு முன்னால் சிறுநீர் கழித்துவிடவேண்டும். ECT பெறப்போகிறவர் ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டு இருந்தால் ECTக்கு முன் அல்லது ECTக்குப் பின் எந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர் ஆலோசனை கூறுவார்.

ECT சிகிச்சையின் போது என்ன நிகழ்கிறது? ECT எவ்வாறு வழங்கப்படுகிறது? அது வலி தருகிற அனுபவமா?

ECT சிகிச்சையை வழங்குவோர் அனுபவம் வாய்ந்த உளவியலாளர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள். இவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவருக்கு ஓர் ஊசியைப் போட்டு அவரைத் தூங்க வைப்பார்கள். அப்போது அவர் சுவாசிப்பதற்காக முகமூடியைப் போட்டு ஆக்சிஜனை செலுத்துவார்கள். பாதிக்கப்பட்டவர் மயக்க நிலைக்குச் சென்றவுடன் அவருக்கு இன்னொரு ஊசியைப் போட்டு அவருடைய தசைகளைத் தளர்த்துவார்கள். இதன்மூலம் அவருக்கு பின்னர் ஏற்படக்கூடிய வலிப்புகள் மிதமானவையாக இருக்கும். இப்போது அவருக்கு நெற்றிக்கு அருகே குறைந்த அளவிலான மின்சாரம் சுமார் இரண்டிலிருந்து நான்கு வினாடிகள் வரை வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்படும். இது இரண்டு வினாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை இருக்கும். அதன்பிறகு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவருடைய சுவாசத்தை ஒழுங்காக்க உதவுவார்கள். ஒரு கட்டத்தில் அவர் இயல்பாக சுவாசிக்கத்தொடங்கிவிடுவார். இந்தச் சிகிச்சையின் போது மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவருடைய நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், அவருடைய இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கவனிப்பார்கள். ECT இன் போது சிகிச்சை பெறுகிறவருக்கு வலி ஏற்படாது காரணம் அவருக்கு மின் துடிப்பு செலுத்தப்படும்போது அவர் நல்ல தூக்கத்தில் இருப்பார்.

ECT பெற்ற பிறகு என்ன செய்யவேண்டும்?

ECT நிறைவடைந்து சில மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர் நன்கு விழித்தெழுந்துவிடுவார். அவர் எப்போது சாப்பிடலாம் அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை செவிலியரிடம் கேட்டு அறியலாம். ECT எடுத்துக்கொண்ட பிறகு சில மணி நேரத்திற்கு எந்த வண்டியும் ஓட்டாமல் இருப்பது நல்லது. மற்றபடி அவர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை எப்போதும்போலத் தொடரலாம். ECT பெற்றுக்கொண்டு இருக்கும் ஒருவர் அந்தச் சிகிச்சை முழுமையடையும் வரை எந்தவித முக்கிய நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நல்லது. உதாரணமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, தொழில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது போன்றவை. ECT நிறைவடைந்த பிறகு இவற்றை எப்போதும் போல் தொடரலாம்.

ECT எப்போதெல்லாம் தரப்படுகிறது? பொதுவாக ECT எத்தனை முறை தேவைப்படுகிறது?

ECT வாரத்திற்கு இரண்டும் அல்லது மூன்று முறை வழங்கப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு 6-12 சிகிச்சைகள் தேவைப்படும். ஒருவர் ECTக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப் பொறுத்து அவருக்கு எத்தனை ECT நிகழ்வுகள் தேவை என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்கலாம்.

ECT எங்கே வழங்கப்படுகிறது?

ECT பொதுவாக ஒரு விசேஷ அறையில் வழங்கப்படுகிறது. இந்த அறையில் ECTக்கு வந்திருப்பவருக்கு மயக்க மருந்து தரப்படுதல், அவர் ECT பெறுதல் போன்றவற்றின்போது அவருடைய உடல்நிலையை நன்கு கண்காணிப்பதற்கான கருவிகள் இருக்கும். ECT பெற வந்திருப்பவர்கள் காத்திருப்பதற்கு, சிகிச்சை பெறுவதற்கு மற்றும் சிகிச்சையிலிருந்து பழைய நிலைக்குத் திரும்புவதற்கு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அறைகள் இருக்கும்.

ECT ஒருவருக்கு எப்போது பலன் தரத்தொடங்கும்?

பெரும்பாலானோருக்கு இரண்டு முதல் நான்கு ECTக்களிலேயே பலன் தரத்தொடங்கும். அதே சமயம், சிலருக்கு இன்னும் அதிக முறை ECT தரவேண்டி இருக்கலாம். அபூர்வமாக சில சூழ்நிலைகளில் ECT ஐ பெற்றுக்கொண்டவருக்கு எந்த முன்னெற்றமும் தெரியாமலேயே போகக்கூடும்.

ECT எப்படி வேலை செய்கிறது?

ECTஆனது மூளையில் சில வேதியியல் மாற்றங்களை உண்டாக்குவதாகவும், அதன்மூலம் மூளையின் நரம்பு செல்களின் இடையே புதிய இணைப்புகள் உருவாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. ECTக்குப் பிறகு மூளையில் இருக்கும் நரம்புக்கடத்திகளின் நிலையில் மாற்றம் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். ECTக்குப் பிறகு ஒருவரிடம் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு இவையே காரணங்களாக அமையலாம். அதே சமயம், ECT எப்படி வேலை செய்கிறது என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவரவில்லை. இதை நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ECT பாதுகாப்பானதா? ECTயின் பக்க விளைவுகள் என்ன? ECTஆல் ஞாபக சக்தி போய்விடுமா?

ECT பெருமளவு பாதுகாப்பான சிகிச்சைதான், காரணம் இந்தச் சிகிச்சையை வழங்கும் நிபுணர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கவனமாகச் செய்கிறார்கள். அதன்பிறகே ECT ஐத் தொடங்குகிறார்கள். ECT எடுத்துக்கொள்கிற ஒருவருக்குப் பொதுவாக தாற்காலிக பக்க விளைவுகள் ஏற்படும். உதாரணமாக பாதிக்கப்பட்டவருக்கு தலைவலி ஏற்படலாம், உடல்வலி ஏற்படலாம், இவற்றைத் தாங்கிக்கொள்வதற்கு அவருக்கு வலிநிவாரணி மருந்துகள் தேவைப்படலாம். ECT எடுத்துக்கொள்ளும் சிலர் சிகிச்சைக்குப் பிறகு குழப்பத்தை எதிர்கொள்ளலாம், சிகிச்சைக்கு சற்று முன்பாக அல்லது சற்று பின்பாக நடந்த சில நிகழ்வுகளை அவர்கள் மறந்துவிடலாம். ஆனால் ஒருவருடைய பொதுவான புத்திசாலித்தனமோ, இதற்குமுன் நடந்த நிகழ்வுகள் மற்றும் உண்மைகள் போன்றவையோ ECT ஆல் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை. மற்ற எல்லா மருத்துவசிகிச்சை போலவே பக்கவிளைவுகளின் தன்மை மற்றும் அளவு போன்றவை நபருக்கு நபர் மாறுபடும். முறையான மருத்துவ பராமரிப்புடன் ECT ஐ நடத்தினால், இதயம் அல்லது நரம்பு அமைப்புகளை பாதிக்கக்கூடிய தீவிரமான பக்கவிளைவுகள் நிகழாது. ஒருவேளை அபூர்வமாக அப்படி நிகழ்ந்தால், ECT குழுவினர் அதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்திவிடுவார்கள். ECTக்காக கண்டறியப்பட்டிருக்கும் நவீன உத்திகளால், பல், எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த சிக்கல்களும் அபூர்வமாகவே நிகழ்கின்றன. ஆகவே ECT சிகிச்சை பெறுவதற்கு குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு எனலாம்.

பக்க விளைவுகளைக் குறைக்க ஏதேனும் வழி உண்டா?

ECT செயல்முறையானது நன்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் பக்க விளைவுகள் மிகவும் குறைந்திருக்கின்றன. ஞாபக இழப்பு போன்றவையும் குறைந்திருக்கின்றன. அதே சமயம் ECT இன் செயல்திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதாவது குறைவான பக்க விளைவுகளுடன் நல்ல பலன் தருகிற சிகிச்சையாக இது மேம்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேகத்தில் மீள விரும்புகிறார்கள், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள உடல் சார்ந்த நோய்கள், அவர்களது வயது, இதற்குமுன் அவர்கள் ECT எடுத்துக்கொண்டிருக்கிறார்களா என்பது போன்ற காரணிகளை எடுத்துக்கொண்டு ECT ஐ மேம்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org