மனநலம் என்பது என்ன?

மனநலம் என்பது, ஒருவர் தன்னைத் தன்னோடும் சுற்றியுள்ள பிறரோடும் இணைத்துக்கொள்ளக்கூடிய திறனை, வாழ்க்கையின் சவால்களைக் கையாளக்கூடிய திறனைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மனநலம் என்பது, வெறுமனே மனநலப் பிரச்னை இல்லாத நிலை அல்ல. மனநலத்தை நேர்விதமாக வரையறுக்கும் நோக்கத்துடன், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆரோக்கியம் என்பதை இவ்வாறு வரையறுக்கிறது: 'முழுமையான உடல், மன மற்றும் சமூக நலன் உள்ள நிலை, வெறுமனே நோய் அல்லது பலவீனம் இல்லாத நிலை அல்ல'. WHO இன்னொரு விஷயமும் சொல்கிறது, ஒருவருடைய நலன் என்பது, அவர்கள் தங்களுடைய திறன்களை உணர்வதில், வாழ்க்கையின் வழக்கமான அழுத்தங்களைக் கையாள்வதில், பணியிடத்தில் செயல்திறனோடு செயல்படுவதில், தங்கள் சமூகத்துக்குப் பங்களிப்பதில் இருக்கிறது.

மனிதர்கள் எல்லாருக்கும் சிரமங்கள் வரும், அதனால் தாற்காலிக அழுத்தம் வரும், தனிப்பட்ட, தொழில்சார்ந்த மாற்றங்கள் வரும், அதனால், மனச்சோர்வு வரும், பதற்றம் வரும். இது இயல்புதான். ஆனால், இவற்றினால் ஒருவருடைய இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அவருக்கு ஒரு மனநலப் பிரச்னை இருக்கலாம். இந்தியாவில் உடல்நலம்பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதற்குக்காரணம், மக்கள் வாழ்க்கைமுறைக் குறைபாடுகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அதேசமயம், மனநலத்தைப்பற்றி யாரும் பேச விரும்புவதில்லை, இதனால், மனநலப் பிரச்னைகள் என எவையும் உண்மையில் இல்லை, எல்லாம் அவரவர் சும்மா நினைத்துக்கொள்வதுதான் என்றுகூடப் பலர் கருதுகிறார்கள்.

இந்தப் பிரிவில், எங்களது நிபுணர்கள் மனநலப் பிரச்னைகளைப்பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். மற்ற மருத்துவங்களைப்போலவே, மனநலப் பிரச்னைகளையும் குறிப்பிட்ட அறிகுறிகளைக்கொண்டு கண்டறியலாம், உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளால் சிகிச்சையளித்துக் குணப்படுத்தலாம் என்று புரியவைப்பார்கள். இந்திய அரசாங்கம் மனநலக் குறைபாடுகளைத் தொற்றாத நோய்கள் என்று வகைப்படுத்தியுள்ளது.

மனநலக் குறைபாடுகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்: பொதுவான மனநலக் குறைபாடுகள் (CMD), உதாரணமாக, மனச்சோர்வு, பதற்றம் போன்றவை, மற்றும், தீவிர மனநலக் குறைபாடுகள் (SMD) உதாரணமாக ஸ்கிஜோஃப்ரெனியா மற்றும் இருதுருவக் குறைபாடு போன்றவை.

தீவிர மனநலக் குறைபாடுகளுக்கு உடனடி நிபுணர் உதவி தேவைப்படுகிறது, அதேசமயம், பொதுவான மனநலக் குறைபாடுகள் கண்டறியப்படாமல், சிகிச்சையளிக்கப்படாமலே இருந்துவிடுகின்றன. இதற்குக் காரணம், அவற்றைப்பற்றி மக்கள் அறிந்துகொள்ளாமலிருப்பதுதான். மனநலப் பிரச்னைகள் பொதுவாக அலட்சியப்படுத்தப்படுகின்றன, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. மனநல உலகைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும், இந்தக் கட்டுரைகளை வாசியுங்கள். இந்தப் பிரிவில், மனநலம் என்றால் என்ன, அது ஏன் நமக்கு முக்கியம், மனநலம்பற்றிய விவரங்களை நாம் அதிகம் தெரிந்துகொள்ளவேண்டியது ஏன் என்பனபோன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org