உளவியல் புனர்வாழ்வு: ஓர் அறிமுகம்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப புனர்வாழ்வு உதவும்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன : சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகு வழங்கப்படும் புனர்வாழ்வு. இதில் சிகிச்சை ஆனது பாதிக்கபட்டவரிடம் காணப்படும் மனநலக் குறைபாட்டு அறிகுறிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் வந்திருக்கிறது என்றால், அவருக்கு வந்திருக்கும் சிகிச்சையின் நோக்கம் அவர் உடல் வெப்ப நிலையைத் தணிப்பதுதான்.

உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தவரை ஒருவருக்கு மருந்துகள் அல்லது அறுவைச் சிகிச்சை முழு நலத்தைத் தந்துவிடக்கூடும், ஆனால் மனநலப் பிரச்னைகளைப் பொறுத்தவரை மருந்துகளுடன் பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் மனநல சிகிச்சை ஆனது பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. பாதிக்கப்பட்டவருக்கு வந்திருக்கும் பிரச்னையின் தீவிரம், அவருடைய உடல் நிலை, உணர்வு நிலை போன்றவை. இப்படி பல காரணிகளின் அடிப்படையில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பலவிதமான சிகிச்சைகள் வழங்கப்படவேண்டியிருக்கலாம் : மருந்துகள், தெரபி, ஆலோசனைகள், மருத்துவமனையில் சேர்த்தல், மூளைத்தூண்டுதல் சிகிச்சைகள் மற்றும் உளவியல் புனர்வாழ்வு. பல நேரங்களில் சிகிச்சைக்கும் புனர்வாழ்வுக்கும் இடையே உள்ள கோடு மிக மெலிதாகக் காணப்படுகிறது. ஆகவே இரண்டுக்கும் வித்தியாசம் காண இயலாமலே இருக்கலாம்.

உளவியல் புனர்வாழ்வு என்பது மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றவர் ஒரூ சிறப்பான நிலையில் செயல்படவேண்டும், தன்னுடைய வாழ்க்கை இலக்குகளை அவர்கள் எட்டவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த விஷயங்களில் அவருக்கு உதவுகிறது. இதற்காக அவர்களுக்கு மருத்துவம், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன. இந்த இடத்தில் சிகிச்சை நிறைவடைகிறது, இங்கே புனர்வாழ்வு தொடங்குகிறது என்று கண்டிப்பான எல்லைக்கோடுகள் எவையும் இல்லை.

சொல்லப்போனால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற எல்லாருக்கும், புனர்வாழ்வு தேவைப்படும் என்று சொல்ல இயலாது. பாதிக்கப்பட்ட பலர் மருந்துகள் அல்லது மருந்துகளோடு தெரபி ஆகியவற்றின் மூலமே முழுமையாகக் குணமாகி விடுகிறார்கள். ஒரு செயலான வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறார்கள். ஆனால் வேறு சிலருக்கு இந்தச் சிகிச்சைகள் நிறைவடைந்த பிறகும், புனர்வாழ்வு தேவைப்படும். அது சிகிச்சைச் சூழலின் ஒரு பகுதியாகவே இணைந்துகொள்ளும்.

புனர்வாழ்வு ஏன் தேவைப்படுகிறது?

இருதுருவக் குறைபாடு, ஸ்கிசோப்ரெனியா போன்ற தீவிரமான, நாள்பட்ட குறைபாடுகளுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான அடைப்படைத் திறன்களையே மறந்திருக்கக்கூடும் அவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கக்கூடும். மனநல பாதிப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்போர் சிகிச்சை பெற்றுக் குணமான போது தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்காக அவர்களுக்குச் சில திறன்களைக் கற்றுத்தரவேண்டும். அதற்காக அவர்களுக்குப் புனர்வாழ்வு அவசியமாகிறது.

(புனர்வாழ்வு என்பது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அதற்காக சிகிச்சை பெற்று அந்தச் சிகிச்சை முடிவடைந்த பிறகு சில திறன்களை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதைக் குறிக்கிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்ட சிலர் இந்தத் திறன்களை மனநல பாதிப்பிற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் முதன்முறையாக இந்தத் திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. நிபுணர்கள் இதனை Habilitation என்று அழைக்கிறார்கள்.)

புனர்வாழ்வின் நோக்கம் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்குச் சிகிச்சை பெற்ற ஒருவர், சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கிற நேரத்தில், சமூகத்தில் அவருக்குத் தேவைப்படுகிற சமூக மற்றும் புத்திசாலித்தனத் திறன்களை அவர் கற்றுக்கொள்ள உதவுவதுதான். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிலும் பணி இடத்திலும் அர்த்தமுள்ள பங்கைக் கண்டறிகிறார். அவருக்குத் தேவைப்படும் வாய்ப்புகளை வழங்கி, அவர்மீது பிறர் களங்க உணர்வு காட்டாமலும், பாரபட்சமாக நடத்தாமலும் பார்த்துக்கொண்டு ஆதரிக்கிறது புனர்வாழ்வு முறை.

மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவர்களை பின்வரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம் :

  • சிலர் சிகிச்சைக்குப்பிறகு முன்பைவிடச் சிறப்பாக உணர்வார்கள், ஆனால் அவர்களுடைய மனநலப் பிரச்னை காரணமாக அவர்களுடைய சில குறிப்பிட்ட செயல்பாடுகளில் பாதிப்புகள் காணப்படும் (உதாரணமாக அவர்களுடைய அறிவாற்றல் திறன் குறையலாம்)
  • சிலர் சிகிச்சைக்குப்பிறகு சுதந்தரமாகச் செயல்படுவார்கள். ஆனால் சமூகம் அவர்களைக் களங்கமாகப் பார்க்கும். ஆகவே அவர்கள் மனம் தளர்ந்து காணப்படுவார்கள்.
  • சிலர் நன்கு செயல்படும் நிலையில் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்காது. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தக்கூடிய நல்ல சூழல் அமையாது
  • சிலர், தீவிரமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்திருப்பார்கள். (மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கைமட்டும்).

உளவியலாளர் அல்லது புனர்வாழ்வு நிபுணர் தன்னிடம் புனர்வாழ்வுக்காக வந்திருக்கிறவர் இந்த வகைகளில் எதைச் சேர்ந்தவர் என மதிப்பிடுகிறார்.

தீவிர மனநலப் பிரச்னையைச் சந்திக்கிற பெரும்பாலானோருக்கு, இந்தப் பிரச்னை 18 வயதிலிருந்து 25 வயதுக்குள்தான் வருகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பலர் உறுதியான வாழ்க்கை இலக்குகளை அமைத்துக்கொள்வார்கள். அவற்றை எட்டுவதற்காக கடினமாக உழைப்பார்கள். இது போன்ற நேரத்தில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டாதென்றால் அவர்களால் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இதனால் இவர்கள் பல வாய்ப்புகளை விட்டுவிடுகிறார்கள். போதாக்குறைக்கு அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகிவிட்டாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இது இன்னும் சோகமான சூழ்நிலையாகும். சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுடைய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவர்களை மிகையாக விமர்சனம் செய்யக்கூடும். அல்லது அதீதமாக பாதுகாக்க முனையக்கூடும். ஏற்கெனவே அவர்களுடைய மனநலப் பிரச்னையால் ஏற்பட்ட காயத்துடன், இதுவும் சேர்ந்து கொள்கிறது.

இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்கு வழங்கப்படுகிற புனர்வாழ்வானது பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறது:

  • புனர்வாழ்வு பெறுகிறவருடைய திறன்கள், வலிமைகள் மற்றும் அவர்களால் எது சாத்தியம் என்பனவற்றை மதிப்பிடுதல்
  • மனநலப் பிரச்னை காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற வரம்புகளை ஏற்றுக்கொள்ளுதல்
  • புனர்வாழ்வு தருகிற நிபுணர் இந்த அம்சங்களை நான்கு புரிந்துகொண்ட உடன், தன்னிடம் புனர்வாழ்வு பெறுகிறவர் ஒரு செயலுள்ள வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு அவர்களுக்கு என்ன மாதிரியான ஆதரவு தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிகிறார்.

உதாரணமாக, 30 வயது இளைஞர் ஒருவர் ஐந்து ஆண்டுகளாக ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பாதிப்பு ஏற்பட்டு பல வருடங்களுக்குப் பிறகுதான் அது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் அதற்கு சிகிச்சை பெறுகிறார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தன்னுடைய வீட்டுக்குத் திரும்புகிறார். தன்னைச் சுற்றி நடந்திருப்பதைக் கவனிக்கிறார். அவரது வகுப்புத் தோழர்களும் நண்பர்களும் நல்ல வேலையில் நிலையாக அமர்ந்துவிட்டார்கள். சிலருக்குத் திருமணம் ஆகிவிட்டது. சிலர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர் பார்க்கிறார். அவருடைய குடும்பத்தினர் அவர் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’ஏதாவது கூலிவேலைக்காவது போகக்கூடாதா?’ என்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்து அவரை மிகவும் சோர்வாக்குகின்றன. அவர் குழப்பத்துடனும் என்ன நடக்கின்றது என்றே தெரியாதவராகவும் காணப்படுகிறார். அதே சமயம் அவrந்க்கு தன்னுடைய திறன்கள் எவை என்பது நினைவிருக்கிறது. தன்னால் எவற்றையெல்லாம் செய்யமுடியும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவருக்கு ஒரு மனநல நிபுணரின் ஆதரவு தேவை, இந்த நிபுணரின் உதவியுடன் அவர் மாறிவிட்ட சூழலைப் புரிந்துகொள்வார், தன்னுடைய எந்தத் திறன்களை தன்னால் பயன்படுத்தமுடியும் என்று உணர்வார். என்ன மாதிரியான வேலையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது என்று சிந்திப்பார். அவருடைய குடும்பத்தினரும் அவரை ஒரு தனி நபராகக் காணவேண்டும், அவருக்கு வந்திருக்கிற நோய்தான் அவர் என நினைத்துவிடக்கூடாது. இதனால் அவர்கள் அவருடைய பலங்களை ஏற்றுக்கொள்வார்கள், அவருடைய லட்சியங்கள் நடைபெறுவதற்குத் துணை நிற்பார்கள்.

இவரைப் போலவே ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்ட இன்னோர் இளைஞர், அவருக்கு வயது 20, பொறியியல் படித்து வருகிறார். அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பது கண்டறியப்பட்டவுடன் மூன்று ஆண்டுகளுக்கு அவர் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தான் கல்லூரிக்குத் திரும்ப முயற்சி செய்கிறார், ஆனால் அது மிகவும் சிரமாமான விஷயமாக இருக்கிறது. அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, வேறு ஏதாவது செய்யலாம் என சிந்திக்கிறார். ஆனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை அவருடைய எண்ணத்தை ஆதரிக்கவில்லை. ‘நீ இந்தப் பிரச்னை வருவதற்கு முன்னால் பொறியியல்தானே படித்துக்கொண்டிருந்தாய், நீ அதைத்தான் தொடரவேண்டும், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும், அதைத்தவிர வேறு எதையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள். அவர் வேறு எதைச் செய்தாலும் அது தங்களுடைய அந்தஸ்துக்கு இழுக்கு ஆகிவிடும் என்கிறார்கள். இங்கே மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றவரின் குடும்பத்தினருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது. இந்த மனநலப் பிரச்னை, அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவருடைய ஆர்வங்கள் மாறிவிட்டன, அவருடைய திறன்கள் மாறிவிட்டன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தச் சூழ்நிலையை ஜீரணித்துக்கொள்ளவேண்டும்.

(இந்தச் சம்பவங்கள் ஒரு தனி நபருடைய வாழ்க்கையில் நடந்தவைகள் அல்ல. பலருடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்து மனநல நிபுணர்களை வைத்து உருவாக்கப்பட்டவை.)

புனர்வாழ்வுச் செயல்முறை

பொதுவாக புனர்வாழ்வுச் செயல்முறையில் தொடக்கத்தில் உளவியலாளர் அல்லது வேறு ஒரு மனநல நிபுணர் பாதிக்கப்பட்டவரிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் பேசுகிறார்கள். அதன்மூலம் பாதிக்கப் பட்டவருடைய திறன்கள் மற்றும் ஆர்வங்களைக் கண்டறிகிறார்கள் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவருடைய குடும்பம் அவருடைய திறன்களை எதார்த்தமாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் எதார்த்தத்துக்கு பொருந்துகிற எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது வைக்கவேண்டும். உதாரணமாக தீவிர மனநலப் பிரச்னைக்கு உள்ளான ஒருவர் சிகிச்சைக்குப் பிறகும் பிறருடன் நான்கு கலந்து பழக இயலாமல் போகலாம். சில குறிப்பிட்ட வேலைகள் அவர்களுக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். தங்களுடைய எதிர்பார்ப்புகளின் படிதான் அவர்கள் செயல்படவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.

பாதிக்கப்பட்டவருடைய குடும்பங்கள் அவர்களுடைய திறன்கள் மற்றும் வரம்புகளைப் புரிந்துகொண்ட பிறகு, அவர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய இப்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அதற்குப் பொருத்தமான எதிர்பார்புகளை தனது விருப்பத்திற்கேற்ப ஏற்படுத்திக்கொண்டு, ஒரு மகிழ்ச்சியான திருப்தியான வாழ்க்கையை வாழ இயலும்.

சில நேரங்களில் புனர்வாழ்வு வழங்குகிற உளவியலாளர், பாதிக்கப்பட்டவரிடமும், அவருடைய குடும்பத்தினரிடமும் பேசவேண்டியிருக்கலாம். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் இப்போது சந்திக்க வேண்டிய பிரச்னைகள். குடும்பத்தினர் இந்த நிலையை எவ்வாறு பார்க்கிறார்கள் என்றெல்லாம் புரிந்துகொள்ளலாம். அதன்பிறகு, மனநலப் பிரச்னை காரணமாக ஏற்பட்டிருக்கிற வரம்புகளையும் மீறி, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பானதொரு வாழ்க்கையை அமைத்துத்தருவது எப்படி என அவர்கள் சிந்திக்கலாம்.

திறன் பயிற்சி மற்றும் முன்னேற்றம் 

மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் அதற்கு சிகிச்சை பெற்ற பிறகு, அதற்கு முன்பு இருந்த திறனுடன் இயங்கக் கூடும். தங்களுடைய பழைய வேலைக்கே திரும்பச் செல்லக்கூடும். ஆனால் வேறு சிலருக்கு, அந்தத் திறன்கள் மறந்து போயிருக்கலாம் அல்லது குறைபட்ட நிலையில் இருக்கலாம். இப்போது அவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கேற்ற புதிய இலக்குகள், முக்கியத்துவங்கள் அல்லது மதிப்பீடுகளை உருவாக வேண்டியிருக்கலாம், அவற்றுடன் பொருந்திப்போகக்கூடிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். இதற்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஒரு திறனைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது ஒரு புதிய விருப்பத்தை கண்டறிதல் ஆகியவற்றில் வெற்றியடைந்தால், இந்தச் செயல்முறைக்கு ஓர் ஆர்வம்சார்ந்த மதிப்பு ஏற்படுகிறது. இதனை நிபுணர்கள் நேர்விதச் சுழல் என்று அழைக்கிறார்கள். அதாவது இந்தச் சுழலின்மூலம் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கை முன்னேறப்போகிறது.

ஒருவருடைய புனர்வாழ்வில் அவருடைய குடும்பத்தினரின் பங்கு எப்படி இருக்கவேண்டும்?

ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்திருக்கிறது என்றால், அவர் மட்டும் அல்ல, அவரைக் கவனித்துக்கொள்கிறவர், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதனை சமாளிக்க பழகவேண்டும். இதனை சிக்கலாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் முன்பு போல் இல்லை இப்போது மாறிவிட்டார் என்பதை உணர்தல், இப்போது அவர்களால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்ளுதல், குடும்பத்தில் அவர்களுடைய பங்கு எப்படி அமையும் என்பதை உணர்தல். இப்படிப் பட்ட ஒரு மனநலப் பிரச்னையுடன் ஒருவர் வாழவேண்டும் என்றால், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும். புனர்வாழ்வின்மூலம், ஒருவருக்கு வந்திருக்கிற மனநலப் பிரச்னையை அவரது குடும்பத்தினர் ஜீரணித்துக்கொள்ளப்பழகுகிறார்கள், மாறிவிட்ட சூழ்நிலையை ஏற்றுக்கொள்வது, பாதிக்கப்பட்டவர்மீது தாங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வது, பாதிக்கப்பட்டவருடைய பலங்களைப் புரிந்துகொள்வது என அனைத்தையும் புனர்வாழ்வு அவர்களுக்குக் கற்றுத்தருகிறது. அதன் அடிப்படையில், வீட்டில், சமூகத்தில் அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தந்து அவர்கள் சமூகத்தில் முன்னேற உதவுகிறது.

இதனால் ஒருவருடைய புனர்வாழ்வில் அவரது குடும்பத்தினரும் பங்கேற்க வேண்டியது முக்கியமாகும். மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதற்கான சிகிச்சை பெற்று புனர்வாழ்வு பெறுகிறார் என்றால், குடும்பத்தினர் நேர்விதமாகவும், ஆர்வத்துடனும் அதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். இதுதான் புனர்வாழ்வுச் செயல்முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவர் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முயலும்போது, அல்லது புதிய சில இலக்குகளை அமைக்க முயலும்போது அவருடைய குடும்பத்தினர் அவருடன் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றால் அதன்மூலம் அவர்களால் இந்தச் செயல்களை இன்னும் சிறப்பாகச் செய்ய இயலும். இது அந்தக் குடும்பத்திற்கும் பெரிய உதவியாக இருக்கும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org