புகைப்படமெடுப்பது ஆரோக்கியத்துக்கு உதவுமா?
நலன்

புகைப்படமெடுப்பது ஆரோக்கியத்துக்கு உதவுமா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

கேமராவிலோ ஸ்மார்ட்ஃபோனிலோ புகைப்படம் எடுப்பது பலருக்குப் பிடிக்கும். ஆனால், அது வெறும் பொழுதுபோக்குதானா? அல்லது, தனிப்பட்ட ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு கலையா? தன்னை உணர்தலுக்கான ஒரு பாதையாகக்கூட அதைக் காணலாமா?

இன்றைய நேர்வித உளவியலால் பெருமளவு எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்வி, ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டெர் மிட்டி-யில், சீன் ஓ'கானெல் (நடிகர் சீன் பென் நடித்த பாத்திரம்) ஒரு பிரபலமான சாகசப் புகைப்படப் பத்திரிகையாளர். அவருடைய பயந்த, அலுவலகத்தையே சுற்றிவரும் உதவியாளரான வால்டெருக்கு ஒரு கதாநாயகனாகத் தோன்றுகிறவர். பல ஆண்டுகளாக இவர்கள் அஞ்சல்வழியாகவே உரையாடிவந்தார்கள், பின்னர் ஒருநாள், இமயமலைச் சிகரமொன்றில் சந்தித்தார்கள். ஒரு பூதத்தைப்போல் தோன்றும் பனிச்சிறுத்தையை சீன் படமெடுக்கிறார், அப்போது அவர் வெளிப்படுத்தும் ஒரு செய்தி, எப்போதும் பகற்கனவு கண்டுகொண்டிருக்கும் வால்டெரை மாற்றிவிடுகிறது: இந்தக் கணத்தை அனுபவி, இந்த நிகழ்வை அனுபவி, இங்கேயே முழுமையாக இரு.

மனமுழுமையான புகைப்படக்கலை என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்தக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் மைனர் வொய்ட். இவர் 1940களில் ஆல்ஃப்ரெட் ஸ்டீக்ளிட்ஜ், ஆன்செல் ஆடம்ஸ், மற்றும் எட்வர்ட் வெஸ்டன் போன்ற மேதைகளான புகைப்படக்கலைஞர்களுடன் இணைந்து ஆய்வுநடத்தினார். குறிப்பாக, ஸ்டீக்ளிட்ஜ் சொல்லும் "சமநிலை" என்ற கொள்கை வொய்ட்மீது மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. அதாவது, ஒரு புகைப்படமானது அந்த நிலையில் இருத்தலுக்கான காட்சி உருவகமாகிறது. பின்னர், வொய்ட் MITயில் ஆசிரியப் பணியாற்றினார், புகைப்படக்கலைக்கும், வாழ்க்கைக்கும் தியானம், மனமுழுமையின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தந்தார். "நீங்கள் கவனிக்கும் பொருள் உங்களுடைய இருப்பை உறுதிப்படுத்தும்வரை உங்களுக்குள் அசையாமல் இருங்கள்," என்றார் வொய்ட். இன்னும் பரந்த கவனத்தோடு அவர் சொன்னது, "கண்ணின் அப்பாவித்தனத்துக்கு ஒரு தரம் உண்டு. ஒரு குழந்தை பார்ப்பதுபோல் அது பார்க்க விரும்புகிறது, புதுமையாக, வியப்பை ஏற்றுக்கொண்டு..."  

இதுபற்றி அமைப்புரீதியிலான ஆய்வுகள் போதுமான அளவு நடத்தப்படவில்லையென்றாலும், மருத்துவ நிபுணர்கள் புகைப்படக்கலையின் உணர்வுப் பலன்களை அதிகம் பயன்படுத்திவருகிறார்கள். 2008ல், புகைப்படச் சிகிச்சை, சிகிச்சையாக அமையும் புகைப்படக்கலைக்கான முதல் சர்வதேசக் கருத்தரங்கம் நார்வேயில் நடைபெற்றது. இதில் கலைச் சிகிச்சையாளர்கள், உளவியலாளர்கள், சமூக ஊழியர்கள் பேசினார்கள். அதன் தலைவர்களில் ஒருவர், ஜூடி வெய்ஸெர், அவர் எழுதிய புகைப்படச் சிகிச்சை உத்திகள் என்ற புத்தகம் தனிப்பட்ட புகைப்படங்கள், குடும்ப ஆல்பம்கள், மற்றும் பிறர் எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்தித் தன்னைப்பற்றிச் சிந்தித்தல், சிகிச்சை உரையாடல்களை மேம்படுத்துதலுக்கான உத்திகளை வழங்கியது. தொடக்கத்தில் இது கலைச் சிகிச்சையின் ஒரு பிரிவாக இருந்தது, ஆனால் இப்போது, புகைப்படக்கலையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது புகழ்பெற்றுவருகிறது, பெரியவர்களுக்கான வகுப்புகள், பயிற்சிப்பட்டறைகள் நடைபெறுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளால், புகைப்படங்களைச் சுய-சிந்தனைக்கான ஒரு காட்சிப்பூர்வ நாளேடாகப் பயன்படுத்தலாம், அவற்றைக்கொண்டு நல்ல நினைவுகளை மேம்படுத்தலாம், படைப்புணர்வைத் தூண்டலாம், பிறருடனான பிணைப்பை உறுதிப்படுத்தலாம் என்பவை வலியுறுத்தப்படுகின்றன.

மனமுழுமைப் புகைப்படக்கலை என்பது வகுப்பறையிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைச் சொல்லித்தருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தில், அயர்லாந்து தேசியப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சௌயிர்ஸ் கபாயின், டாக்டர் ஜேன் சிக்ஸ்மித் இருவரும் 8 முதல் 12 வயதுள்ள சிறுவர்கள் சிலரிடம் "அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை"ப் புகைப்படம் எடுக்குமாறு கூறினார்கள், பின்னர் இன்னொரு குழுவினர் இந்தப் புகைப்படங்களை "எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள்", "உணவு மற்றும் பானங்கள்," மற்றும் "விலங்குகள்/செல்லப்பிராணிகள்" என்று வகைப்படுத்தினார்கள்.  ஆரோக்கியம் என்கிற விஷயத்தைச் சொல்லித்தர புகைப்படக்கலை ஒரு சிறந்த கற்றுத்தரும் கருவியாக இருந்ததை ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். இங்கிலாந்தின் ஷெஃப்பீல்ட் ஹல்லாம் பல்கலைக்கழகத்தில், டாக்டர் அன்னெ கெல்லாக் நியூசிலாந்தைச் சேர்ந்த, 8 முதல் 10 வயதுள்ள மவோரி ஏழைகளைப் புகைப்படமெடுக்கச்செய்தார், அவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள அது உதவியது. இந்தத் துறையில் இயங்கிவரும் உளவியலாளர்கள் புகைப்படக்கலையைச் சிறுவர்களிடம்மட்டுமின்றி வளர்ந்த மாணவர்களிடமும் பயன்படுத்துகிறார்கள்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒரு சமீபத்திய கையேட்டில், ஜேம்ஸ் மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெய்மெ குர்ட்ஜ் மற்றும் ரிவர்சைடில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோனியா லல்யுபோமிர்ஸ்கி இருவரும், மாணவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி தரும் தினசரிப் பொருட்களைப் படமெடுக்கவேண்டும், பின்னர் குழுவாகச் சேர்ந்து அந்தப் படங்களைப்பற்றி விவாதிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தார்கள்.    

ஸ்மார்ட்ஃபோன் கேமெராக்கள் பரவலாகக் கிடைப்பதால், அவற்றைப் பயன்படுத்தி உளவியல் நலனை மேம்படுத்த இயலுமா? இர்வினில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யு சென் நடத்திய சமீபத்திய ஆய்வொன்று இந்தக் கேள்விக்கு ஊக்கம்தரும் பதில்களை வழங்குகிறது. இந்த ஆய்வுக்காக, கல்லூரி மாணவர்கள் சிலரை மூன்று குழுக்களாகப் பிரித்தார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதம்முழுக்க நாள்தோறும் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும். முதல் குழுவினர் நாள்தோறும் சிரிக்கும் உணர்வோடு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பவேண்டும், இரண்டாவது குழுவினர், தங்களை மகிழ்ச்சியாக உணரச்செய்யும் ஏதோ ஒன்றின் புகைப்படத்தை எடுத்து அனுப்பவேண்டும், மூன்றாவது குழுவினர், இன்னொருவரை மகிழ்ச்சியாக உணரச்செய்யும் என்று தாங்கள் நம்புகிற ஏதோ ஒன்றின் புகைப்படத்தை எடுத்து அனுப்பவேண்டும். மாத நிறைவில், மூன்று குழுக்களைச் சேர்ந்த எல்லாப் பங்கேற்பாளர்களுடைய தினசரி மனோநிலையும் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டிருந்தது. அத்துடன், இன்னொருவரை மகிழ்ச்சியாக்கும் என்று நம்பியவற்றைப் புகைப்படம் எடுத்து அனுப்பியவர்கள் குறிப்பிடத்தக்க அளவு அமைதியாக இருந்தனர், மற்ற இரு குழுக்களில் இருந்தவர்களும் அந்த அளவு அமைதியாகக் காணப்படவில்லை. இது வியப்பளிக்கும் விஷயமில்லை. ஏனெனில், தன்னைப்பற்றி அதிகம் எண்ணுகிறவர்களுக்குதான் தீவிரப் பதற்றமும் மனச்சோர்வும் அதிகம் வருகிறது. மனிதத்தன்மை உளவியலின் முக்கிய நிறுவனரான ஆப்ரஹாம் மாஸ்லோ உறுதியாகக் குறிப்பிட்டதுபோல, அதிக வலி தரும் மனநிலைகளில் ஒன்று, உலகில் தன்னைத் தனியாக உணர்தல்.         

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் அடிக்கடி புகைப்படம் எடுப்பது எளிது, அது ஈர்க்கக்கூடிய விஷயமும்கூட. ஆனால், அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு சிந்திக்கவேண்டும். ஃபேர்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லிண்டா ஹென்கெல் கனெக்டிகட்டில் நடத்திய ஒரு முக்கியமான பரிசோதனை ஆய்வு, ஓர் அருங்காட்சியகத்துக்குச் சென்ற இளைஞர்களை ஆராய்ந்தது. அவர்களில் சிலர், அருங்காட்சியகத்தில் இருந்த பொருட்களைப் பார்த்தபடி நடந்தார்கள், வேறு சிலர் அங்கிருந்த நகைகள், ஓவியங்கள், மண்பாண்டங்கள், சிற்பங்களைப் புகைப்படமெடுத்தார்கள். மறுநாள் இவர்களுக்கு ஒரு நினைவுத்திறன் பரிசோதனை நடத்தப்பட்டது, அதாவது, முந்தைய நாள் பார்த்த பொருட்களை அடையாளம் காணும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது, அதில், பொருட்களைப் புகைப்படம் எடுத்தவர்களைவிட, வெறுமனே பார்த்தவர்களின் நினைவுத்திறன் மேம்பட்டிருந்தது. இதைவிடச் சுவாரஸ்யமான ஒரு கண்டுபிடிப்பும் இருக்கிறது. இத்துடன் தொடர்புடைய இன்னோர் ஆய்வும் நடத்தப்பட்டது. அதிலும் இதேபோன்ற நபர்கள்தான் பங்கேற்றார்கள், ஆனால், புகைப்படம் எடுக்கிறவர்களிடம் 'வெறுமனே க்ளிக் செய்யாதீர்கள், குறிப்பிட்ட பகுதிகளை ஜூம் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்' என்றும் சொல்லப்பட்டது. அப்போது, அவர்கள் ஒட்டுமொத்தப் பொருட்களையும் நினைவில் பதித்துக்கொண்டார்கள், அதாவது, புகைப்படம் எடுக்காமல் வெறுமனே பார்த்தவர்களுக்கு இணையான நினைவுத்திறனைக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளை எப்படிப் புரிந்துகொள்வது? இதுபற்றி டாக்டர் ஹென்கெலின் பார்வை, ஒரு பொருளை அல்லது காட்சியை வெறுமனே புகைப்படம் எடுப்பதால், அந்தக் கணத்துடன் நாம் நம்முடைய தனிக் கவனத்தை வழங்கி ஒன்றிவிடுவதில்லை. அது எத்தனை அழகான புகைப்படமாக இருந்தாலும் சரி, நாம் தனிப்பட்ட கவனத்துடன் அதை அனுபவிப்பதற்கு இணையாகாது. அதேபோல், டிஜிட்டல் புகைப்படக்கலை வந்தபிறகு, புகைப்படங்களை அச்சிட்டு, ஒழுங்குபடுத்தித் தொகுத்துவைத்து, குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றைப் பார்க்கும் கலாசாரம் பெரிதும் காணாமல்போய்விட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அந்தக் கேமெரா நமக்காக விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் என்று நாம் நம்பப்போகிறோம் என்றால், நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக அந்தப் பொருளைப் பார்க்கவேண்டும்."  

வழிநடத்தப்படும் செயல்பாடு    

ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, விலங்குகள், மக்கள், அல்லது, உணர்வுகளைத் தூண்டும் கட்டடக்கலை... இப்படி ஒருவர் தேர்ந்தெடுத்த கருப்பொருளில் புகைப்படங்களை எடுக்கவேண்டும், அவை தனித்துவமாக இருக்கவேண்டும் என்று மெனக்கெடவேண்டும். தன்னுடைய மனமுழுமைத்தன்மையை அதிகப்படுத்த, அவர் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றலாம்:

1. வண்ணத்துடன் புகைப்படம் எடுப்பது கண், மனத்தை ஒத்திசையச்செய்யும். ஆகவே, வண்ணமயமான ஒரு பொருளைத் தேடவேண்டும், பிறகு, அருகே செல்லவேண்டும்.

2. ஒளித் தரத்தால் எப்போதும் பாதிக்கப்படும் இழைநயங்களின் புகைப்படங்களை எடுக்கவேண்டும். தான் பார்ப்பதைத் தொடுவதுபோல் கற்பனை செய்யவேண்டும்.

3. மக்களைப் புகைப்படம் எடுக்கும்போது, முதலில் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் தொடங்கவேண்டும். பொறுமை அவசியம். ஆரம்பத்தில் அவர்கள் "நன்றாகத் தோன்றவேண்டும்" என்று மெனக்கெடுவார்கள்; விரைவில் அந்த மெனக்கெடல் நின்றுவிடும், அப்போது அவர்கள் அந்தக் கணத்தில் உண்மையாக இருப்பதைப் பதிவுசெய்யும் மேம்பட்ட படங்கள் இவர்களுக்குக் கிடைக்கும்.

நியூயார்க் நகரத்திலுள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் உளவியல் இணை உதவிப் பேராசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன். உரிமம் பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர் தனியே சேவை வழங்கிவருகிறார், உளவியல், தொடர்புடைய துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து எழுதிய நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல். இவர் நேர்வித உளவியலுக்கான இந்தியச் சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். நீங்கள் columns@whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரியில் அவருக்கு எழுதலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org