நலன்

அன்புக்குரிய ஒருவரின் இழப்பு அல்லது மரணத்தைச் சமாளித்தல்

துக்கத்தைச் சமாளிப்பது சிரமமான ஒரு விஷயம், ஆனால், அது மிகவும் அவசியமானது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

துக்கம் என்றால் என்ன? அதைச் சமாளிப்பது எப்படி?

ஒருவருடைய மரணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டால், இயல்பாகவே நாம் வருத்தமாக அல்லது சோகமாக உணர்வோம். மக்கள் பலவிதமான அடையாள இழப்புகளை எண்ணியும் துக்கப்படுகிறார்கள், உதாரணமாக, விவாகரத்து, நிறைவேறாத காதல், உறவு முறிவு அல்லது, அன்புக்குரிய ஒருவருக்கு மனநலப் பிரச்னை உள்ளதை அறிதல் போன்றவை. துக்கமானது பல சிக்கலான உணர்வுகளை உண்டாக்குகிறது, இவை இழப்பைச் சமாளிக்க உதவுகின்றன. துக்கத்தைச் சமாளிப்பது சிரமமான ஒரு விஷயம், ஆனால், அது மிகவும் அவசியமானது. அதேசமயம், ஒருவர் இப்படிதான் துக்கப்படவேண்டும், இத்தனை நாள் துக்கப்படவேண்டும் என்றெல்லாம் நிச்சயமாகச் சொல்ல இயலாது.

துக்கப்படும் ஒருவர் அனுபவிக்கக்கூடிய உணர்வுகள்

 • வருத்தம், சோகம் அல்லது மகிழ்ச்சியின்மை

 • அதிர்ச்சி: மரணமானது திடீரென்று அல்லது இயற்கையற்றமுறையில் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்கிறவர்களிடம் அதிர்ச்சி காணப்படுகிறது.

 • குற்றவுணர்ச்சி: ஒருவர் இறந்துவிட்ட சூழ்நிலையில், அவருடைய நண்பர் அல்லது உறவினர், 'நாம் ஏதாவது செய்து இதைத் தடுத்திருக்கலாமே' என்று எண்ணுவது.

 • தனிமை: நன்கு பழகிய அல்லது நெருக்கமான ஒருவருடைய மரணத்தைச் சந்திக்கிறவர்கள் இதனை அனுபவிக்கிறார்கள். சில நேரங்களில், மரணமடைந்தவரைச் சார்ந்திருக்கக்கூடியவர்களும் இவ்வாறு உணர்வார்கள், தாங்கள் இனி யாரிடம் உதவிகேட்பது என்று திகைப்பார்கள்.

 • கோபம் அல்லது விரக்தி: சிலர், இறந்துபோனவர்கள்மீது கோபப்படக்கூடும், 'என்னை ஏமாற்றிவிட்டு அவர் இறந்துவிட்டார்' என்று நினைக்கக்கூடும், அல்லது, திடீரென்று தான் கைவிடப்பட்டுவிட்டதால் அவர்கள் விரக்தியடையக்கூடும்.

துக்கத்தைச் சமாளித்தல்

துக்கமானது வலிதருகிற ஒரு விஷயம்தான். ஆனால், பாதிக்கப்பட்டவரின் ஆரோக்கியத்தை மீட்க அந்தச் செயல்முறை அவசியமாகிறது. கலாசாரம் சார்ந்த அல்லது வழக்கம் சார்ந்த செயல்முறைகள், சடங்குகளால் இறந்தவரை எண்ணிப் பிறர் துக்கம் காக்கிறார்கள், அவர்கள் தங்களுக்குள் நெருங்கும் சூழல் ஏற்படுகிறது. துக்கத்தை அனுபவிப்பது, சமாளிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்கவேண்டியதில்லை. துக்கத்தை அனுபவிப்பவர் மூன்று வெவ்வேறு அம்சங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும்:

 • இறந்தவர் இனிமேல் இல்லை என்கிற விஷயம். துக்கத்தின் ஒருபகுதியாக, இறந்தவர் தன்னருகே இல்லையே என்று அவர்கள் ஏங்கக்கூடும்

 • உயிரோடு இருப்பவர் அனுபவிக்கும் கலவை உணர்வுகள். துக்க உணர்வை அனுபவிக்கும் விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நடந்துகொள்வார்கள்.

 • மரணம் நிகழ்ந்த சூழ்நிலை. அதாவது, அது இயற்கை மரணமா அல்லது இயற்கைக்கு மாறான மரணமா என்பது

சில நேரங்களில், சுற்றியிருப்பவர்கள் அவர்களுடைய உணர்வுகளை மறுக்கிறார்கள், அல்லது, மறைக்கிறார்கள், இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம்தான் என்பதுபோல் பேசுகிறார்கள். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைக் கவனித்துக்கொள்வது முக்கியம்தான், அதேசமயம், ஒருவர் துக்கத்தை அனுபவிப்பதற்கான நேரமும் இடமும் கிடைக்கவேண்டும். துக்கத்தை வெளிப்படுத்தாதபோது, அதனால் உடல்சார்ந்த அல்லது உணர்வுசார்ந்த துயரம் வரக்கூடும். உதாரணமாக:

 • ஒருவருடைய கோபம் மற்றும் விருப்புவெறுப்பற்ற நிலை ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படாதபோது, வெளிப்படுத்தப்படாதபோது, அது ஒரு தீவிரச் சோக நிலையை எட்டலாம், அங்கே அவர் இறந்தவரை எண்ணி மிகவும் ஏங்கக்கூடும், மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படக்கூடும். அந்தக் கோபம் அவருக்குள்ளேயே திரும்பினால், அது மனச்சோர்வாக மாறக்கூடும்.  

 • ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகவிருந்தவர்கள் இப்போது துக்கத்தைத் தாங்க இயலாமல் தவிக்கக்கூடும், அவர்களுக்கு மனநலப் பிரச்னை ஏற்படக்கூடும், பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு வருகிறது.

 • சிலர் துக்கம், இழப்பைச் சமாளிப்பதற்காகப் போதைப்பொருள்களைப் பயன்படுத்த முயற்சிசெய்கிறார்கள், இதன்மூலம் தங்கள் சிரமங்கள் குறையும் என நம்புகிறார்கள்.

 • இன்னொருவருடைய மரணத்தைப் பார்க்கும்போது, தங்களுடைய வாழ்க்கையும் நிலையற்றது என்று அவர்களுக்குத் திடீரென்று புரியவரக்கூடும், இதனால் உடல்நலம்சார்ந்த பதற்றம் ஏற்படலாம். மனச்சோர்வு உணர்வுகள் தீவிரமாகவும் தொடர்ந்தும் காணப்பட்டால், துக்க எதிர்வினையைச் செயல்முறைப்படுத்த நிபுணரின் உதவியைப் பெறுவது நல்லது.

துக்கத்தின் இயற்கையான செயல்முறையை மக்கள் அனுபவிக்கவிடுவது முக்கியம், அதை அடக்கவோ மறுக்கவோ முயலக்கூடாது. துக்கத்தை அனுபவிப்போருக்கு ஆலோசனை வழங்கப்பட்டால், அவர்கள் துக்கத்தைச் சரியாகக் கையாள அது உதவும். இதற்கு, அவர்கள் அனுபவிக்கும் உணர்வுகளை அடையாளம் காணவேண்டும், அவர்கள் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த உதவவேண்டும், ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஆரோக்கியமான முறையில் அவர்கள் தங்கள் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப உதவவேண்டும்.

அன்புக்குரிய ஒருவருடைய மரணத்தைச் சமாளிப்பதற்குச் சில வழிகள்

 • புகைப்படத் தொகுப்புகள் மற்றும் வீடியோக்களைக்கொண்டு, அவருடன் செலவிட்ட நல்ல நினைவுகளை எண்ணிப்பார்ப்பது: இதன்மூலம் அவருடைய நினைவுகள் மீண்டும் எழும்; அவரோடு தொடர்புடைய உணர்வுகளுக்குப் படிப்படியாக இவர் தன்னைத் தயார்செய்துகொள்ள உதவும்.

 • அவருடைய தனிப்பட்ட பொருள்கள், நினைவுச்சின்னங்களைப் பார்த்து, அவற்றில் எதை வைத்துக்கொள்வது, எதைப் பிறருக்குக் கொடுத்துவிடுவது என்று தீர்மானிப்பது.

 • பிறருடன் தொடர்பில் இருப்பது, இழப்பைப்பற்றியும் தான் அனுபவிக்கும் துக்கத்தைப்பற்றியும் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசுவது.

 • துக்கத்தை அனுபவிக்கிறவர்கள் தங்கள் எண்ணங்களை எழுதிவைப்பது உதவும்.

 • இதுபோன்ற நேரங்களில் உடனடியாகத் தினசரி வேலைகளுக்குத் திரும்புவது சிரமம்தான். ஆனால், படிப்படியாக இயல்புநிலைக்கு வருவது முக்கியம்.

 • கலாசாரச் சடங்குகளைப் பின்பற்றுவதால் அவருக்கு ஆறுதல் உணர்வு கிடைக்கிறது, இது அவருடைய மனநலத்தில் ஒரு நேர்விதமான தாக்கத்தைக்கொண்டுள்ளது.

 • இத்தகைய இழப்பின் ஆன்மிகப் பொருளைப்பற்றியும் ஒருவர் சிந்திக்கலாம். சில நேரங்களில், ஆன்மிகத்தின்மூலம் ஒருவரால் அந்த நிகழ்வை அல்லது இழப்பைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

NIMHANS மருத்துவ உளவியல் துறைத் துணைப் பேராசிரியர் டாக்டர் வீணா A S வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org