யோகாசனமும் சாக்குப்போக்குகளும்

யோகாசனத்தைப் பின்பற்ற மறுக்கும் சிலர், அதற்குச் சொல்லும் சாக்குப்போக்குகள் இவை.

கடந்த சில ஆண்டுகளாக, நாம் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். சமீபகாலமாக, பலரும் யோகாசனங்களைப் பின்பற்றிவருகிறார்கள். அதேசமயம், யோகாசனத்தின் பல நன்மைகளைப்பற்றித் தெரிந்தும்கூட, பலர் அதனை விரும்புவதில்லை, அல்லது, தயங்கிநிற்கிறார்கள். இவர்கள் சொல்லும் சில பொதுவான சாக்குப்போக்குகள்.

#1 என் உடல் அந்த அளவுக்கு வளையாது

உடல் வளைந்தால்தான் யோகாசனம் செய்ய இயலும் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யோகாசனம் செய்யத்தொடங்கும் எல்லாரும், முதல் நாளிலேயே தங்களுடைய கால்விரல்களால் மூக்கைத் தொட இயலாது. உண்மையில், தொடர்ந்து யோகாசனம் செய்வதன்மூலம்தான் உடல் வளையும். உடல் வளைந்தால்தான் யோகாசனம் செய்ய இயலும் என்று நினைத்துவிடக்கூடாது. மற்ற உடற்பயிற்சிகளைப்போல, யோகாவில் வேகம் தேவையில்லை. மெதுவாகவும் கட்டுப்பாட்டுடனும் அசையவேண்டும், இதனால், யோகாசனம் செய்பவருடைய தசைகள் எலும்புக் கட்டமைப்பில் ஒரேமாதிரியாக வளர்கின்றன. இதனால் அவருடைய வளையும்தன்மை மேம்படுகிறது. பலவகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஒருவர் தன்னுடைய உடல் வகை மற்றும் மனப்போக்குக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றலாம்.

#2 எனக்கு நேரமில்லை

அநேகமாக எந்தவேலையை எடுத்துக்கொண்டாலும், இப்படிச் சொல்லித் தப்பிக்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். குறிப்பாக, யோகாசனம் என்றவுடன் பலமணிநேரம் ஒரேமாதிரி உட்கார்ந்து தியானம் செய்யவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆகவே, அதைச் செய்ய மறுத்துவிடுகிறார்கள். சில குறிப்பிட்ட யோகாசன வடிவங்களைச் செய்ய அதிக நேரமாகும் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயம், குறுகியகாலத்தில் செய்யக்கூடிய பல யோகாசனங்கள் உள்ளன. அவற்றை ஒருவர் தனது தினசரி வேலைகளோடு சேர்த்துச் செய்வது சிரமமே இல்லை.

#3 யோகாசனமெல்லாம் பெரிய விஷயம், எனக்கு ஒத்துவராது

#1ல் நாம் பார்த்ததுபோல், தொலைக்காட்சியில் வரும் யோகிகள் செய்யும் சிக்கலான யோகாசனங்களை எல்லாரும் செய்ய இயலாது, ஆரம்பத்தில் எளிய யோகாசனங்களைச் செய்துதான் அவர்கள் முன்னேறுவார்கள். எல்லாரும் இப்படித் தொடங்கியவர்கள்தான். அங்கிருந்து படிப்படியாக வளர்ந்துவந்திருக்கிறார்கள். ஆகவே, யோகாசனம் செய்யத்தொடங்கும் ஒருவர் எந்த அளவு தொடர்ச்சியாக அதில் ஈடுபடுகிறார், எவ்வளவு முனைப்போடு அதனைச் செய்கிறார் என்பதைப்பொறுத்து, அவருடைய முன்னேற்றம் அமையும். அந்தவிதத்தில் யோகாசனமும் மற்ற உடற்பயிற்சிகளைப்போலவேதான்.

#4 யோகாசனத்துக்குப்பதிலாக நான் ஓடுகிறேன், ஜிம்முக்குப் போகிறேன்

இது மிகவும் நியாயமான காரணம்தான். இதுபோன்ற உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். அதேசமயம், யோகாசனத்தில் சில கூடுதல் பலன்கள் உள்ளன. அவற்றை இங்கே வாசிக்கலாம்; ஆகவே, மற்ற உடற்பயிற்சிகளைச் செய்கிறவர்கள், அதோடு சில யோகாசனங்களையும் சேர்க்கலாம், இது அவர்களுடைய பிற உடற்பயிற்சிகளிலும் உதவும், உதாரணமாக, காயம் ஏற்படுவதைக் குறைக்கும்.  

#5 யோகாசன வகுப்புகளுக்கு ரொம்பச் செலவாகிறது

இது ஓரளவு உண்மைதான்; சில பெரிய நகரங்களில் இருக்கும் யோகாசன மையங்கள் ஏகப்பட்ட காசு வசூலிக்கிறார்கள், ஆனால், இன்னும் பல மையங்கள் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் ஆரம்ப நிலை வகுப்புகளை நடத்துகிறார்கள். இவற்றுக்கான செலவு, சாதாரண ஜிம் கட்டணத்தைவிடக் குறைவுதான். அதேசமயம், ஒருவர் யோகாசனத்துக்காகச் செலவழிக்க விரும்பவில்லை என்றால், இணையத்தில் பல பயிற்சி வீடியோக்கள், வழிகாட்டிகள் உள்ளன. உதாரணமாக, YouTubeல் பல வீடியோக்களைக் காணலாம், உங்கள் ஃபோனிலேயே பயன்படுத்தக்கூடிய இலவச மற்றும் குறைந்த விலை அப்ளிகேஷன்களும் உள்ளன.

#6 அது ரொம்ப போரடிக்கிற விஷயம்

ஒரு புத்தகம் அல்லது திரைப்படத்தைப் பிடிக்காத ஒருவர், பின்னர் அதை ரசிப்பதில்லையா? அதுபோலதான் யோகாசனமும். ஆரம்பத்தில் அது போரடிப்பதுபோல் தோன்றலாம், ஆனால் உண்மையான ஆர்வத்துடன் ஒருவர் அதில் ஈடுபட்டால், தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வார். அது அவரது மனப்போக்கை மேம்படுத்தும், மன அமைதி, மகிழ்ச்சி மற்றும் திருப்தியுணர்வைத் தூண்டும். யோகாசனம் ஒரேமாதிரி இருப்பதாகத் தோன்றினால், அதன் வரிசையை மாற்றிப்பார்க்கலாம். இதன்மூலம், 'யோகாசனமா? வேண்டாம்!' என்று சொல்கிறவர்கள்கூட, அதனை ரசித்து அனுபவிக்கத்தொடங்கிவிடுவார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org