யோகாசனப் பயிற்சிக்கு ஐந்து அப்ளிகேஷன்கள்

எங்கும் யோகாசனம் செய்ய உதவும் அப்ளிகேஷன்கள்!

யோகாசனத்தை மொபைல்ஃபோனைப்பார்த்துக் கற்றுக்கொள்வதா என்று சில குருநாதர்கள் முகம்சுளிக்கக்கூடும். ஆனால், எல்லாருக்கும் யோகாசன வகுப்புகள் அமைந்துவிடுவதில்லை, அவர்களுக்கு, யோகாசன அப்ளிகேஷன்கள் நன்கு பயன்படுகின்றன. இதற்காக, நாங்கள் பல ஆப் ஸ்டோர்களை ஆராய்ந்து, நல்ல அப்ளிகேஷன்களைக் கண்டறிந்தோம். இந்த அப்ளிகேஷன்கள் ஒரு சிறந்த யோகாசன குருநாதருக்கு மாற்றாகிவிடாது. ஆனால், யோகாசனமே செய்யாமலிருப்பதற்குப்பதிலாக, இங்கே தொடங்கலாம். வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த பிரியங்கா M வெவ்வேறு மொபைல் தளங்களில் உள்ள ஐந்து அப்ளிகேஷன்களை முயன்றுபார்த்து, அவற்றில் எது சிறப்பு, எது சுமார் என்று விளக்குகிறார். இவை பயனாளர் இடைமுகம் மற்றும் பிரபலத்தன்மையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

1 - Daily Yoga (iOS)

இந்த அப்ளிகேஷன் மூன்று முக்கிய மொபைல் தளங்களிலும் கிடைக்கிறது (iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்ட்), பயனாளர்களிடையே இது ஓரளவு பிரபலமாக உள்ளது. Daily Yogaவின் ஓர் உருவகப்படுத்தப்பட்ட யோகி தோன்றுகிறார், பல ஆசனங்களைச் செய்துகாட்டுகிறார்.  இந்த அப்ளிகேஷனில் பின்வரும் பிரிவுகள் உள்ளன: பயிற்சியைத் தொடங்குதல், போஸ் நூலகம், சமூகம், யோகா இசை, மேலும் விவரங்கள், மேலும் அப்ளிகேஷன்கள். இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும் கிடைக்கிறது. ஆனால், முழுமையான அனுபவத்துக்கு, pro பதிப்புக்கு மாறவேண்டியிருக்கும்.

சிறப்பான விஷயங்கள்:

  • ஒவ்வொருவரும் தன்னுடைய குறிப்பிட்ட உடல்சார்ந்த இலக்குகளுக்கேற்பத் தனது யோகாசனப் பயிற்சியை வடிவமைக்கலாம்.
  • வீடியோக்கள் HD தரத்தில் உள்ளன.
  • இந்த அப்ளிகேஷனில் உள்ள 'போஸ் நூலகம்' ஒவ்வொரு போஸையும் நன்கு விவரிக்கிறது, அதன் பலன்களைச் சொல்லுகிறது.
  • உருவகப்படுத்தப்பட்ட வகுப்புகளைத் தரவிறக்கம் செய்துகொண்டால், அவற்றை இணையம் இல்லாமலே பார்க்கலாம்.

சுமாரான விஷயங்கள்:

  • இந்த அப்ளிகேஷனை ஆன்லைனில் பயன்படுத்தும்போது, ஏதாவது ஒரு நிகழ்வைப் பாதியில் நிறுத்தினால், பாப்-அப் விளம்பரங்கள் தோன்றுகின்றன. நிகழ்வைத் தொடரும்போது, அந்த விளம்பரங்கள் மறைவதில்லை.

2 - Simply Yoga (ஆண்ட்ராய்ட்)

இந்த யோகா அப்ளிகேஷனில் இரு நிலைப் பயிற்சிகள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் 20, 40 மற்றும் 60 நிமிடங்களுக்கு அமைகின்றன. யோகாசனப் போஸ்களின் தீவிரத்தன்மையைப்பொறுத்து நிலைகள் மாறுபடுகின்றன. இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும் கிடைக்கிறது, விரும்பினால் pro பதிப்புக்கு மாறிக்கொள்ளலாம்.

சிறப்பான விஷயங்கள்:

  • ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டுள்ள பயிற்சிகள் வீடியோ வடிவில் உள்ளன, அவற்றை எளிதில் காண இயலுகிறது.
  • முதன்முறையாக யோகாசனம் செய்கிற ஒருவருக்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படும்.

சுமாரான விஷயங்கள்:

  • வீடியோக்களைத் தரவிறக்கம் செய்ய இயலாது. ஆகவே, இணைய இணைப்பு இல்லாதவர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த இயலாது.
  • ஒருவர் தனது தேவைகளுக்கேற்பப் பயிற்சிகளை மாற்றியமைக்க இயலாது.
  • இலவசப் பதிப்பில் முதல் நிலை ஆசனங்களைமட்டுமே காணலாம்.

3 - Yoga Studio (iOS)

முதன்முறையாக யோகாசனம் செய்கிறவர்கள், யோகாசனத்தை நன்கு அறிந்தவர்கள் என எல்லார்மத்தியிலும் இது ஒரு மிகப் பிரபலமான அப்ளிகேஷன் ஆகும். Yoga Studio என்பது, பணம் தந்து பெறவேண்டிய ஓர் அப்ளிகேஷன். இதில் உருவகப்படுத்தப்பட்ட வகுப்புகள் உள்ளன, அவை ஒரு மென்மையான குரலில் விளக்கப்படுகின்றன. ஒருவர் தன்னிடம் எவ்வளவு நேரம் உள்ளது என்பதைப்பொறுத்து அவரது பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனின் விலை, ரூ 250, இது pro வடிவத்தில்மட்டுமே கிடைக்கிறது.

சிறப்பான விஷயங்கள்:

  • பதிவுசெய்யப்பட்டுள்ள வகுப்புகள் தொடக்கநிலை, மத்தியநிலை, நிபுணர்நிலை எனப் பல நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இவற்றைத் தரவிறக்கம்செய்துகொண்டு, இணையம் இல்லாதபோதும் பார்க்கலாம்.
  • இந்த அப்ளிகேஷன் அடிக்கடி மேம்படுத்தப்படுகிறது, புதிய போஸ்கள் சேர்க்கப்படுகின்றன.
  • ஒருவருக்குக் கிடைக்கும் நேரம், அவரது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அவர் தனது வகுப்புகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.  

சுமாரான விஷயங்கள்:

  • இந்த அப்ளிகேஷன் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் இலவச வடிவத்தைத் தரலாம்.
  • இதில் ஒலிக்கும் இசையை நிறுத்த இயலாது.

4 - Yoga Cure (விண்டோஸ்)

விண்டோஸ் தளத்தில் கிடைக்கும் ஒரு முழுமையான அப்ளிகேஷன், Yoga Cure. இதில் மூன்று பகுதிகள் உள்ளன: என் உடல், என் ஆரோக்கியம், யோகா மையங்கள் (நாடுமுழுவதும் உள்ள யோகா மையங்களின் விவரங்கள்). இவற்றில் 'என் உடல்' என்ற பகுதி சில குறிப்பிட்ட ஆசனங்களில் கவனம் செலுத்துகிறது, அதன்மூலம் மூளை, தோள்கள், தைராய்ட், வயிறு போன்ற பகுதிகளுக்கு என்ன நன்மைகள் என்று காட்டுகிறது. 'என் ஆரோக்கியம்' பகுதி, சில குறிப்பிட்ட நலப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆசனங்களைக் காண்பிக்கிறது. உதாரணமாக, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, நீரிழிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆசனங்கள். அனிமேஷன் வீடியோக்களை மீண்டும் இயக்கிப்பார்க்கலாம்.

சிறப்பான விஷயங்கள்:

  • ஃப்ளாஷ் வீடியோக்கள் குறைந்த செறிவுத்திறனில் உள்ளன, ஆகவே, இவற்றைக் காண அதிகத் தரவுகள் செலவாகாது.
  • உடல்சார்ந்த ஆசனங்களைக்கொண்டு பயிற்சிகளை மாற்றியமைக்கலாம்.

சுமாரான விஷயங்கள்:

  • மிக. அதிக. விளம்பரங்கள்.
  • வீடியோக்கள் ஃப்ளாஷ் வடிவில் உள்ளன. இவற்றை நிறுத்தி மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பில்லை.

5 - Yoga.com (ஆண்ட்ராய்ட்)

289 போஸ்கள், மூச்சுப் பயிற்சிகள், 37 யோகாசனத் திட்டங்களைக்கொண்டுள்ள Yoga.com அப்ளிகேஷன் விரிவான பயிற்சித் தெரிவுகளைத் தருகிறது. உதாரணமாக, ஒவ்வொரு போஸுக்கும் ஒரு புகைப்பட-விவரம் உண்டு, அல்லது, வீடியோ உண்டு, இதில் பயனாளர் தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

சிறப்பான விஷயங்கள்:

  • இதன் இலவசப்பதிப்பில் பல போஸ்கள் உள்ளன.
  • வீடியோக்கள் HD தரத்தில் உள்ளன. உடலில் உள்ள தசைகள் 3D படங்களாகக் காட்டப்படுகின்றன, அவை ஒவ்வோர் ஆசனத்தின்போதும் தூண்டப்படுகின்றன.
  • பயன்படுத்துவது எளிது.

சுமாரான விஷயங்கள்:

  • திடீரென்று வீடியோ காணாமல் போய்விடுகிறது, அந்த இடத்தில் ஒரு சிறிய சின்னம் தோன்றுகிறது, அதை க்ளிக் செய்தால், வீடியோ மூடப்பட்டுவிடுகிறது. இதைச் சரிசெய்யவேண்டும்.
  • இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களைப் பார்க்க இயலாது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org