நலன்

சரியான சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

சரியான சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுப்பது என்பது, நீண்டநாள் உழைக்கக்கூடிய காலணிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றது.   ஒருவர் நடக்க நடக்க அவருடைய காலில் அவ்வப்போது சில சிராய்ப்புகள் ஏற்படலாம், அதுபோல, வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய மனத்திலும் இதயத்திலும் சில சிராய்ப்புகள் ஏற்படுகின்றன, அவற்றில் சில சிராய்ப்புகள் பெரியவை, சில சிராய்ப்புகள் சிறியவை.   பொதுவாகப் பாதத்தில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்டநாள் ஆகும் என்று சொல்வார்கள், ஏனெனில் மக்கள் பாதங்களைத் தொடர்ந்து எப்போதும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.   இது மனத்துக்கும் பொருந்தும், மக்கள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள், இடைவிடாமல் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் தூங்கும்போதுகூட அது முழுமையாக ஓய்வெடுப்பதில்லை.  ஆகவே, மனத்தில் ஏற்படும் காயங்கள் ஆற நீண்ட நாளாகும், அதனால்தான் சிகிச்சை என்பது விரைவான தீர்வைத் தரும் என்று எப்போதும் எண்ணக்கூடாது, சிகிச்சையில் முன்னேற்றத்தைக் காண்பதற்குப் பல நிகழ்வுகள் தேவைப்படும், சிகிச்சையாளரும் பாதிக்கப்பட்டவரும் பலமுறை சந்தித்துப் பேச வேண்டியிருக்கும்.       ஆகவே, இந்தச் செயல்முறையின்போது பாதிக்கப்பட்டவருக்கு முழுமையான ஆதரவை அளிக்கக்கூடிய தகுதியுள்ள ஒரு சிகிச்சையாளரைக் கண்டறிவது கட்டாயமாகும்.

ஒரு நல்ல சிகிச்சையாளர், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உளவியல் துன்பத்தைப்பற்றிப் பேசுவதற்கான ஒரு பாதுகாப்பான, தீர்மானம் எடுக்காத இடத்தை வழங்குகிறார், உள்ளார்ந்த, அறிவார்ந்த, பச்சாத்தாபம் மிக்க மற்றும் ஆற்றல் மிகுந்த வழிகளில் அவர்களுக்கு ஆதரவை தரும் தகுதியைக் கொண்டிருக்கிறார்.    வசதியாக இல்லாத ஒரு காலணி, சில நேரங்களில் காயங்களைப் பெரிதாக்கிவிடக்கூடும், அதுபோல பாதிக்கப்பட்ட ஒருவருடைய தேவைகளுக்குப் பொருந்தும் சரியான சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.   சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்கும்போது சிந்திக்கவேண்டிய சில எதார்த்தமான குறிப்புகள் இதோ.

ஒரு நல்ல சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்கவேண்டும், வசதியான சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுத்துவிடக்கூடாது.

செலவு, வசதி போன்றவை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டியவைதான், ஆனால் அதேசமயம் முக்கியத்துவங்களை மறந்துவிடக்கூடாது.   ஒருவர் தன்னுடைய மனநலனுக்கு முக்கியத்துவம் தருவது அவசியமாகும், ஏனெனில், ஒருவருக்கு உளவியல் துன்பம் இருக்கும்போது அவரால் பெரும்பாலான அன்றாடச் செயல்பாடுகளை எளிதில் செய்ய இயலாது. 

சிலர் தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், வேறு சிலர் யார் தங்களுக்கு வசதியான நேரத்தில் சிகிச்சை அளிக்கிறாரோ அவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், இவை முக்கியம்தான், ஆனால் இதன்மூலம் சிறந்த சிகிச்சையாளர் கிடைப்பார் என்று சொல்ல இயலாது.    வேலை, கல்லூரி நேரங்கள் போன்ற எதார்த்தமான தடைகள் எப்போதும் இருக்கும், அதேசமயம்  சிகிச்சை என்பது எப்போதும் சும்மா இருக்கிற நேரத்தில் பொருந்துவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்வதற்கான நேரத்தை உருவாக்கவேண்டும், அதற்காக நேரம் செலவிடத் தயாராக இருக்கவேண்டும்.     சிகிச்சை என்பது, பாதிக்கப்பட்டவர் சுறுசுறுப்பாகப் பங்கேற்கவேண்டிய ஒரு செயல்முறையாகும், கூகுளில் முதலாவதாக வரும் பெயரைத் தேர்ந்தெடுப்பது ‘எளிதாக’ இருக்கலாம், அல்லது, ஒருவர் முதலில் யாருடைய பெயரைக் கேள்விப்படுகிறாரோ அவரைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அவரிடம் சிகிச்சைக்குச் செல்வது எளிதாக இருக்கலாம், இவையெல்லாம் விரைவாக வேலையை செய்யும், ஆனால் மதிப்பைத் தராது.  ஆகவே அவர் இதற்காக நேரம் ஒதுக்கி, உழைத்து சரியான சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்கவேண்டும், இந்தச் செயல்முறை அவருக்கு மிகவும் நன்மை தரும்.   இந்தியாவில் தகுதிமிக்க சிகிச்சையாளர்கள் குறைவாகவே இருக்கிறார்கள், ஆகவே இணையம்மூலம் ஆலோசனை பெறும் வாய்ப்பையும் சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கலாம், இதன்மூலம், பாதிக்கப்பட்டவர் எங்கிருந்தாலும் இன்னும் அதிகத் தரமான உதவியை அவர் இருந்த இடத்திலிருந்து பெறலாம்.   

இதற்கு ஆகும் கட்டணத்தைச் செலவாக நினைக்கக்கூடாது, ஓர் ஆரோக்கியமான சிகிச்சைக் கூட்டணி என்பது நன்மைகளைத் தருவது, மற்றும் மதிப்பு மிக்கது, அது அவருடைய மன மற்றும் உளவழி உடல் ஆரோக்கியத்துக்கான மதிப்பு மிக்க தொலைநோக்கு முதலீடாகும்.       சிகிச்சை அளிப்பவர்களுடைய அனுபவம் மற்றும் தகுதிகளைப் பொறுத்து அவர்களுடைய கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாறுகின்றன. மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் சிகிச்சையாளர்தான் மிகச் சிறந்தவர் என்று எப்போதும் சொல்லிவிட இயலாது, அதேசமயம், சரியான பயிற்சி இல்லாத ஒரு மலிவுக் கட்டணச் சிகிச்சையாளர் பாதிக்கப்பட்டவருடைய நிலையை இன்னும் மோசமாக்கிவிடலாம், அவர் ஆபத்துக்குள்ளாவதாக உணரும்போது அவருடைய அனுபவத்தை இவர் இன்னும் மோசமாக்கிவிடக்கூடும், மேலும் சேதம் உண்டாகிவிடக்கூடும். 

இப்படிப்பட்டவர்தான் நல்ல சிகிச்சையாளர் என்று எந்தப் பொதுவான விதிமுறைகளும் இல்லை, ஒவ்வொருவரும் தங்களுக்கு நன்றாகப் பொருந்துகிற ஒரு சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்

எந்த ஒரு காலணியும் இரண்டு பேருக்கு ஒரே மாதிரியாகப் பொருந்துவதில்லை: அவர்களுடைய அளவுகள், விருப்பங்கள் மற்றும் காயங்கள், எல்லாம் மாறுபட்டிருக்கின்றன.  பொதுவாக அவர்கள் சில காலணிகளை அணிந்துபார்க்கிறார்கள், அதில் எது தங்களுக்கு நன்கு பொருந்துகிறது என்பதை அவர்கள் கண்டறிகிறார்கள்.    அதேபோல, பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் சில சிகிச்சையாளர்களை அழைத்துப்பார்க்கலாம், அதன்மூலம் தங்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சையாளர்கள் தேவை என்பதைப்பற்றிய ஒரு புரிந்துகொள்ளல் அவர்களுக்குக் கிடைக்கும், அதன்மூலம் அவர்கள் சிறந்த சிகிச்சையாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.   பெரும்பாலான சிகிச்சையாளர்களுடைய இணையத்தளங்கள்/அவர்களைப்பற்றிய குறிப்புகளை வாசித்துப் பார்த்தால், அவர்கள் எப்படிப்பட்ட அணுகுமுறையுடன் பணிபுரிகிறார்கள் என்பதுபற்றி ஓரளவு தெளிவான யோசனை கிடைக்கும்.     பாதிக்கப்பட்டவர் இதற்காகச் சிறிதுநேரம் செலவிட்டு பல சிகிச்சையாளர்களுடைய குறிப்புகளைப் படித்து, ஒப்பிட்டுப்பார்ப்பது நன்றாக இருக்கும், அதன்மூலம் அவர் தன்னுடைய உலகப்பார்வை மற்றும் தேவைகளுக்குச் சரியாக பொருந்தும் ஒரு சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுக்க இயலும்.  இதனால்தான், அடுத்து வரும் விஷயத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். 

அவர் தன்னுடைய உள்ளுணர்வை நம்பவேண்டும்

முதல்முறை சிகிச்சைக்காகச் சிகிச்சையாளரைச் சந்திக்குமுன் அல்லது அவரைச் சந்தித்தபின், அவருடன் பேசும்போது தான் எப்படி உணர்கிறோம் என்பதை அவர் காணவேண்டும்.    அவரிடம் பேசுவது எளிதாக இருக்கிறதா?  அவருடன் பேசுவதற்குமுன்/ அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்குமுன்/பேசியபோது/ மின்னஞ்சல் அனுப்பியபோது/ பேசியபிறகு/மின்னஞ்சல் அனுப்பியபிறகு இவர் எப்படி உணர்கிறார்?    அவர் தன்னைப்பற்றித் தீர்மானம் எடுக்கிறார் என்று இவர் உணர்கிறாரா?  அவர் அருகில் இருக்கும்போது தன்னுடைய உணர்வு எப்படி இருக்கிறது என்பதை இவர் கவனிக்கவேண்டும், அதை நம்பவேண்டும்.  அதேசமயம் சிகிச்சை என்பது ஒரு விரைவான தீர்வைத் தந்துவிடாது என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.     சிலமுறைமட்டும் சிகிச்சையாளரைச் சந்தித்துவிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிப்பது சாத்தியமில்லை.   அதேசமயம், சிகிச்சையாளரை ஆரம்பத்தில் சிலமுறை சந்தித்துப் பேசியபிறகு, பாதிக்கப்பட்டவர் அவருடன் பேசுவதற்கு வசதியாக உணராவிட்டால், பல காரணங்களால் அவரால் தன்னுடைய மனத்தைத் திறக்க இயலாவிட்டால், அந்தச் சிகிச்சையாளர் அவருக்குப் பொருந்தவில்லை என்று ஊகிக்கலாம். இதைப்பற்றி அவர் அந்தச் சிகிச்சையாளரிடமே பேசலாம், இது ஏன் நடக்கிறது, என்பதை ஆராயலாம், இது அவருடைய சிகிச்சையில் உதவலாம்.   இந்தப் பிரச்னைகளை நேர்மையாகச் சரிசெய்வது ஓர் ஆரோக்கியமான சிகிச்சை உறவின் மையத்தில் உள்ளது, பல நேரங்களில், இப்படிப்பட்ட கவலைகளை அவர் வெளிப்படுத்தும்போது அதற்குச் சிகிச்சையாளர் எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைக் கவனித்தால், ஆலோசனை சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதுபற்றிய ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கும்.   

அவர்களுடைய கோட்பாட்டியல் நோக்குநிலையை புரிந்துகொள்ளுதல்

கோட்பாட்டியல் நோக்குநிலை என்பது, பாதிக்கப்பட்டவர் முன்வைக்கிற குறிப்பிட்ட உளவியல் ஆபத்து நிலையைச் சரிசெய்வதற்கு சிகிச்சையாளர் பயன்படுத்துகிற தலையீட்டு அணுகுமுறை ஆகும்.  ஆலோசனை வழங்குதல் மற்றும் உளவியல் சிகிச்சையில் இருவிதமான சிந்தனை முறைகள் இருக்கின்றன – தீர்வில் கவனம் செலுத்துபவை, உள்ளார்ந்த புரிந்துகொள்ளலைச் சார்ந்திருப்பவை.    இதை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு, பாதிக்கப்பட்டவருடைய பிரச்னை புகை பிடிக்கும் பழக்கத்தை விடுவது என்று வைத்துக்கொள்வோம், ஒரு சிகிச்சையாளர் இந்தப் பிரச்னையைப் பலவிதங்களில் அணுகலாம்.    தீர்வில் கவனம் செலுத்தும் ஒரு சிகிச்சையாளர், எடுத்துக்காட்டாக CBT முறையைப் பின்பற்றும் ஒருவர் சிந்தனை பாணிகளை அடையாளம் கண்டு மாற்றுவது, சூழல் சார்ந்த தூண்டுதல்களை அடையாளம் காண்பது, வெறுப்புச் சிகிச்சை போன்றவற்றின்மூலம் இந்தப் பிரச்னையைக் கையாளலாம்.     ஆகவே, அவருடைய சிகிச்சை முறை முதன்மையாகப் பிரச்னையில் கவனம் செலுத்துகிறது, அதனுடன் தொடர்புடைய வேறு சில விஷயங்களிலும் அது கவனம் செலுத்தக்கூடும்.   

இன்னொரு சிகிச்சையாளர் அறிவார்ந்த, புரிந்துகொள்ளலைச் சார்ந்து செயல்படலாம், பாதிக்கப்பட்டவர் புகை பிடிக்குமாறு அவரைத் தூண்டுகிற ஆழமான, வேர்பிடித்த பிரச்னைகளை அவர் ஆராய விரும்பலாம்.  பாதிக்கப்பட்டவருக்கே தெரியாத, ஒதுக்கப்பட்ட தூண்டல்கள் மற்றும் ஆசைகள்தான் அவரைப் புகை பிடிக்கத் தூண்டுகின்றன, இவற்றை ஆராய்வது இந்தச் சிகிச்சையின் நோக்கமாக இருக்கும்.  இதற்காக, சிகிச்சையாளர் பாதிக்கப்பட்டவருடைய உணர்வுகளை, மனத்தின் இயக்கவியலை இன்னும் முழுமையாக ஆராயவேண்டியிருக்கும், அவருடைய தன்னுணர்வு, உறவுகள் மற்றும் பொதுவாக முடக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட நினைவுகளின் பகுதிகளை அணுகவேண்டியிருக்கும், இதன்மூலம், பாதிக்கப்பட்டவருடைய தீய பழக்கங்களுக்கு அடிமையாகிற பரவலான பாணிகளைப்பற்றி அவர் இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்வார். 
 இந்த வகைச் சிகிச்சை ஓருவருடைய உள் உலகத்தை உருப்பெருக்கு கண்ணாடியின்வழியே பார்ப்பதைப்  போன்றது, அங்குள்ள குழப்பங்களுக்கு நடுவே பாணிகளைத் தேடுதல், பாதிக்கப்பட்டவரைக் கட்டுப்படுத்திவைத்திருக்கும் அழிக்கின்ற பழக்க வழக்கங்களிலிருந்து அவரை விடுவித்தல் போன்றவை இதில் இடம்பெறும்.  

தகுதிகள், தகுதிகள், தகுதிகள்

துரதிர்ஷ்டவசமாக, இந்தத் துறையைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஏதும் இல்லாத காரணத்தால் இந்தியாவில் பலர் தங்களை ‘ஆலோசகர்கள்’ என்று  அழைத்துக்கொள்கிறார்கள், ஆனால் இவர்களுக்கு இந்தத் துறையில் முறையான கல்வியே இருப்பதில்லை.   ஆகவே, பாதிக்கப்பட்டவர் ஒரு சிகிச்சையாளரைச் சென்று சந்திப்பதற்கு முன்னால் அவருடைய தகுதிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.   சிகிச்சையளிக்கின்ற ஒருவருக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்சத் தேவை, அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகம்/கல்லூரியிலிருந்து ஒரு முதுநிலைப் பட்டப்படிப்பு.    பொதுவாகப் புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள் இன்னும் நம்பகமான சிகிச்சையாளர்களை உருவாக்குகின்றன.   ஒரு குறிப்பிட்ட சிகிச்சையாளர் படித்திருப்பதாகச் சொல்லும் முதுகலைத் திட்டத்தின்மீது, பாதிக்கப்பட்டவருக்கு ஐயம் இருந்தால், அதைப்பற்றியும் அவர் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.   சில சிகிச்சையாளர்கள் இணையத்தில் பட்டம் பெற்றதாகக் குறிப்பிடுவார்கள், அவர்களிடம் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும், ஏனெனில் இணையத்தில் பெறும் பட்டங்களின்போது மேற்பார்வையிடப்பட்ட மருத்துவப் பணியானது வழங்கப்படாமல் இருக்கலாம், சர்வேதேசத் தரநிலைகளின்படி மேற்பார்வையிடப்பட்ட மருத்துவப் பணியில் பயிற்சி பெறாதவர்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குவது அறமாகாது.     இந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆலோசனைச் ‘சான்றிதழ்கள்’ அல்லது ‘பட்டயங்களை’ வழங்குகின்றன.  இதில் கவனமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், இந்தச் சான்றிதழ்களோ பட்டயங்களோ பட்டப்படிப்புக்குச் சமமாகிவிடாது, இவற்றைப் பெற்றுள்ள மாணவர்களுக்குப் பிறருக்கு ஆலோசனை வழங்கும் தகுதி இல்லை.  மனநல மருத்துவர்கள்கூட, சிகிச்சை வழங்குவதில் முறையான பயிற்சி பெறாவிட்டால், அவர்கள் உளவியல் சிகிச்சையாளராக/ஆலோசகர்களாகப் பணிபுரிவதற்கான தகுதியை பெறமாட்டார்கள்.   

நெறிமுறைகள்

சிகிச்சையாளர்களுடைய பணியில் நெறிமுறைகள் மிக முக்கியமானவை.   இந்த நெறிமுறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ரகசியத்தன்மை, அபூர்வமாகச் சில விதிவிலக்குச் சூழல்களிலன்றி இதனை ஒரு சிகிச்சையாளர் உடைக்கக்கூடாது (எடுத்துக்காட்டாக, சிகிச்சை பெறுபவர்  தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றுகொண்டிருந்தால், அல்லது, அவர் இன்னொருவருக்கு ஆபத்தை உண்டாக்குகிற ஆபத்து இருந்தால், சிகிச்சையாளர் இவ்விவரங்களை வெளிப்படுத்தவேண்டும் என ஒரு நீதிமன்றம் ஆணையிட்டு இருந்தால், போன்றவை.)  இந்தத் தீவிர சூழ்நிலைகள் இல்லாதவரையில், ஒரு நல்ல சிகிச்சையாளர் தன்னிடம் சிகிச்சை பெறுகிற ஒருவருடைய நெருக்கமான விவரங்களை அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, தொழில் சாராத தன்னுடைய பிற நண்பர்களுக்கோ தெரிவிக்கமாட்டார்.   நல்ல சிகிச்சையாளர்கள் பிறரைப்பற்றி தீர்ப்பு சொல்லவும் மாட்டார்கள், சிந்தனையை ஊக்கப்படுத்துவார்கள், தங்களிடம் சிகிச்சை பெறுவோர் தாங்களாக இருக்கவேண்டும் என அவர்களுக்கு ஆற்றல் வழங்குவார்கள்.      பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய உரிமைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும், நெறிமுறைகளின்படி நடக்கும் ஒரு சிகிச்சையாளரிடம் தான் எதைக் கோரலாம் என்பதை அறிந்துகொள்ளவேண்டுமென்றால் APA (அமெரிக்க உளவியல் அமைப்பு) அல்லது BACP (ஆலோசனை வழங்குதல் மற்றும் உளவியல் சிகிச்சைக்கான பிரிட்டிஷ் அமைப்பு) போன்ற அங்கீகாரம் வழங்கும் அமைப்புகளின் நெறிமுறை விதிமுறைகளை வாசித்துப் பார்க்கலாம்.

சிகிச்சை என்பது நட்பு இல்லை

நல்ல சிகிச்சை என்பது நட்பைப்போன்றதில்லை, துன்பமாக இருக்கும்போது சாய்ந்துகொள்வதற்கு ஒரு தோள் வேண்டும், சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு ஒருவர் வேண்டும் என்று நினைப்பது சிகிச்சையாகிவிடாது.   அறிவுரைகளைப் பெறுவதும் கருத்துகளைத் திணிப்பதும் இதில் இல்லை. பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெறும்போது அவர் எப்போதும் முன்பைவிட நன்றாக உணர்வார் என்று கட்டாயம் இல்லை, காரணம், சிகிச்சை என்பது ஓர் உண்மையின் கண்ணாடியைக் காட்டுகிறது, இதனைப் பாதிக்கப்பட்டவருடைய நண்பர்கள் செய்ய இயலாமலிருக்கலாம், காரணம், அவர்களுக்குத் தங்களுடைய சொந்தச் சிந்தனைகள், சாய்வுகள் உள்ளன.     நண்பர்களைப்போலன்றி, சிகிச்சை அளிப்பவர்கள் ஆழமாகக் கவனிக்கிறார்கள், பச்சாத்தாபத்துடன் கவனிக்கிறார்கள், தங்கள் மனத்தில் சிக்கலான உளவியல் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் பாணிகளை அடையாளம் காணுகிறார்கள், பாதிக்கப்பட்டவர் அவற்றைச் சரிசெய்ய  உதவுகிறார்கள்.  பாதிக்கப்பட்டவர் தன்னைப்பற்றி முன் முடிவுகளை எடுக்காத, கருணையான ஓர் இடத்துக்குள் தன்னுடைய ஆபத்துச் சாத்தியங்கள் மற்றும் உளவியல் போராட்டங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை இது திறந்துவைக்கும்.   சிகிச்சை நல்லபடியாக அமையவேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய   பணியைச் செய்யவேண்டும்.  சிகிச்சை அளிப்பவர் ஒரு கட்டையை வழங்கலாம், ஆனால், பாதிக்கப்பட்டவர்தான் அதைப் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டும்.

ரியா காந்தி, ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற உளவியல் சிகிச்சையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். அவர் மும்பையில் தனிப்பட்ட மருத்துவ சேவையை வழங்கி வருகிறார், உளவியல் இயக்கவியல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கோட்பாட்டியல் அமைப்புகளின் உரையாடல்களுக்குள் பணியாற்றுகிறார்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org