யோகாசனத்தில் சுய ஒழுக்கம்: நன்மைகள்

"யோகாசனம் என்பது, மனத்தின் மாறுதல்களைக் கட்டுப்படுத்துதல்.” - பதஞ்சலி யோக சூத்திரம்

உடற்பயிற்சி என்று சொன்னவுடன், பலரும் உடனே நினைக்கிற விஷயங்கள்: அதற்கு எவ்வளவு நேரமாகும்? எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? எப்போதெல்லாம் அதைச் செய்யவேண்டியிருக்கும்? அது சிரமமா, எளிதா?... உண்மையில், எந்தவோர் உடற்பயிற்சி அல்லது செயல்பாட்டுக்கும் மிக முக்கியமாகத் தேவைப்படும் அம்சம், சுய-ஒழுக்கம்தான்.

தற்போது யோகாசனம் என்பது ஒரு முழுமையான உடற்பயிற்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, உலகெங்கிலுமிருந்து பலர் பலவிதமான யோகாசனங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது நமக்குத் தெரியும். ஒவ்வொரு யோகாசன வடிவமும் ஒவ்வொரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, வெவ்வேறு பலன்களைத் தருகிறது, ஒருவருடைய உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துகிறது.

யோகாசனத்தின் இலக்குகளில் ஒன்று, சுய-ஒழுக்கம் மற்றும் சுய-அறிதலை அடைதல்.  நீங்கள் எந்த யோகாசனத்தைப் பின்பற்றினாலும் சரி, சுய-ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். அது இல்லாவிட்டால், யோகாசனத்தின் நேர்விதமான பலன்கள் கிடைக்காது.

பதஞ்சலி யோகசூத்திரம், சுய-ஒழுக்கத்தைத் 'தபஸ்' என்று அழைக்கிறது. அதாவது, வேலை செய்வதில் விருப்பம், கற்றுக்கொள்வதில் விருப்பம். சுய-ஒழுக்கம் என்பது எல்லா வேலைகளுக்கும் பொருந்தும்: அலுவலக வேலைகளைச் சிறப்பாகச் செய்வது, பிறருடனான உறவுகளை மேம்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது, ஒரு புதிய பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்வது, கோபத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது... இப்படி. யோகாசனத்தில், சுய-ஒழுக்கம் என்பது, தொடர்ந்து யோகாசனத்தில் ஈடுபடுவதற்கான அர்ப்பணிப்புணர்வு ஆகும்.

ஒருவர் யோகாசனத்தைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான சுய-ஒழுக்கத்தைப் பராமரிக்க இந்த அம்சங்கள் உதவலாம்:

விழிப்புணர்வு: ஒரு வேலையின் நோக்கம் என்ன, அதைச் செய்தால் என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தால், அதில் இன்னும் சிறப்பாகக் கவனம் செலுத்தலாம், சரியான பலனைப் பெறலாம். யோகாசனத்துக்கும் இது பொருந்தும். தான் எதற்காக யோகாசனத்தைச் செய்கிறோம் என்கிற தேவையை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு யோகாசனத்தைப் பின்பற்றியபிறகு, எந்தெந்த நேர்விதமான மாற்றங்களைத் தான் எதிர்பார்க்கிறோம் என்பதையும் அவர் உணரவேண்டும். இந்த விழிப்புணர்வும் புரிந்துகொள்ளலும் இருந்தால், யோகாசனத்தில் ஈடுபடுகிறவருக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கும், அவர்கள் ஊக்கத்துடன் இதனைத் தொடர்ந்து செய்வார்கள்.

  • யோகாசனங்களைப்பற்றியும் அவற்றின் நன்மைகளைப்பற்றியும் தெரிந்துகொள்ளுதல்.
  • யோகாசன ஆசிரியர் ஒருவரிடம் பேசுதல், தனக்கு இருக்கக்கூடிய கவலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.
  • தன்னைப்போலவே சிந்திக்கக்கூடியவர்களுடன் விவாதித்து, யோகாசனத்தைப்பற்றிப் புரிந்துகொள்ளுதல்.

தொடர்ந்த ஈடுபாடு: "வெற்றிக்கு எந்தக் குறுக்குவழியும் கிடையாது" என்பார்கள். அதுபோல, தொடர்ந்து முயற்சி செய்தால்தான் முன்னேற்றம் வரும். தொடர்ந்து யோகாசனத்தைப் பின்பற்றுவதன்மூலம், மன ஒழுக்கத்தை எட்டலாம், அதன்பிறகு, அது அவரது தினசரிச் செயல்பாடுகளில் ஒன்றாகிவிடும். அவர்கள் தங்களுடைய பணி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை என அனைத்திலும் நேர்விதமான மாற்றங்களைக் காண்பார்கள். இந்த மாற்றங்களை எண்ணி அவர்கள் மகிழத் தொடங்குவார்கள், வாழ்நாள்முழுவதும் பயன் தரக்கூடிய ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொண்டோம் என்று எண்ணி சந்தோஷப்படுவார்கள்.

யோகாசனப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய உதவும் சில வழிகள்:

  • இரவு உணவை விரைவில் (தூங்குவதற்குக் குறைந்தது 2-3 மணிநேரம் முன்பாக) உண்டுவிடவேண்டும், அது மிகவும் அதிகமாக இல்லாமல், மிதமானதாக இருக்கவேண்டும்.
  • தினமும் ஒரே நேரத்தில் தூங்கச்சென்று, ஒரே நேரத்தில் எழவேண்டும், குறைந்தபட்சம் 7-8 மணிநேரங்கள் தூங்கவேண்டும்.
  • இரவு நேரத்தில் மடிக்கணினி, மொபைல் ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவது அல்லது நெடுநேரம் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். காரணம், இவை தூக்கத்தைப் பாதிக்கலாம்.
  • தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் யோகாசனம் செய்யவேண்டும், இதன்மூலம் ஒழுங்கின்மை குறையும், இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டுமே என்று சோம்பல் வராமலிருக்கும்.

குழுப்பணி: யோகாசனப் பயிற்சியில் ஈடுபடுகிற ஒருவர் அதைப் பாதியில் நிறுத்திவிடக்கூடாது என விரும்பினால், அதனை மேலும் சுவாரஸ்யமாகக எண்ணினால், அவர் தனது நண்பர்களுடன் அல்லது வேறொரு குழுவுடன் இணைந்து பயிற்சி எடுக்கலாம். இதன்மூலம், அது குழுப்பணி ஆகிவிடுகிறது, அவர்கள் அதனை ரசித்து அனுபவிப்பார்கள், ஒன்றாகப் பலன்களைப் பெறுவார்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org