மூளையை இயற்கையாக மேம்படுத்துதல்

ஒருவர் ஒரே ஒருமுறை யோகாசனம் செய்தால்கூட, அவரது மூளையின் செயல்பாடுகள் மேம்படலாம்!

யோகாசனம் செய்வதால் உடலுக்கு என்னன்ன நன்மைகள் என எல்லாருக்கும் தெரியும்: வலுவான, நெகிழ்வான உடல், அதிக தாங்குதிறன், உடல்நலம் போன்றவை யோகாசனத்தால் கிடைக்கின்றன. அதேசமயம், இதைவைத்து யோகாசனம் என்பது இன்னோர் உடற்பயிற்சிதான் என்று எண்ணிவிடக்கூடாது. உண்மையில், யோகாசனம் என்பது மனத்துக்கு(அல்லது மூளைக்கு)ப் பயிற்சி தரும் நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாகதான் யோகாசனத்தின் உடல்சார்ந்த அம்சங்கள் அதிகம் வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

தியானம், பிற மனமுழுமை உத்திகள் உள்ளிட்ட யோகாசனச் செயல்பாடுகள் மனத்துக்குப் பயிற்சி தரப் பயன்படுத்தப்பட்டன என்கிறார்கள் நிபுணர்கள். “யோகாசனத்தை மனத்துக்கான ஒரு மருந்தாகதான் பதஞ்சலி உருவாக்கினார்; யோகாசனம் செய்வதன் நோக்கம், மனத்தை ஆளுவதுதான். யோகாசனத்தின்மூலம் உடலுக்குப் பல நன்மைகள் உண்டு. ஆனால் அவை, வெறும் இணைப்பொருள்கள்தான். அது மூளைக்கு மிகவும் நல்லது. யோகாசனத்தால் அழுத்தம் குறையும், கவனக்கூர்மை மேம்படும், மூளையின் ஆற்றல் அதிகரிக்கும், புதிய நரம்பு இணைப்புகள் உருவாகும், மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற குறைபாடுகளைக் கையாள்வதிலும் இது உதவுகிறது" என்கிறார் NIMHANS மனநலப்பிரிவு கூடுதல் பேராசிரியர் டாக்டர் ஷிவராமா வரம்பள்ளி.

யோகாசனத்தால் ஒருவருடைய மூளைக்கு நன்மை உண்டா?

யோகாசனத்தால் அழுத்தம் குறையும், முதுமையால் வரும் சிதைவு குறையும் என்பது எல்லாருக்கும் தெரியும். அது உங்கள் நினைவுத்திறனையும் மேம்படுத்தலாம், அறிவாற்றலைக் கூர்மையாக்கலாம். மூளைக்கு ரத்தம் செல்வதை யோகாசனம் மேம்படுத்துகிறது, பக்கவாதம் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. குறிப்பாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை கொண்டோருக்கு இது மிகவும் நல்லது. யோகாசனத்தால் இதயத்துடிப்பு ஆரோக்கியமான நிலைக்கு வரலாம், ஆகவே, சிரமமான சூழ்நிலைகளிலும் அமைதியாகவும் பகுத்தறிவோடும் சிந்தித்துத் தீர்மானமெடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட வேலையில் நெடுநேரம் கவனம் செலுத்தி உழைக்கிற திறனையும் யோகாசனம் மேம்படுத்துகிறது.

யோகாசனத்தின் நன்மைகள் எப்போது தெரியத்தொடங்கும்?

ஒரே ஒருமுறை யோகாசனம் செய்தால்கூட, மூளையில் மாற்றங்கள் ஏற்படலாம். யோகாசனம் செய்யத்தொடங்குகிற ஒருவர், முதல் வாரத்திலேயே மனநல மேம்பாடுகளைக் காண்பார், முன்பைவிடச் சிறப்பாக உணர்வார், அமைதியாக இருப்பார், பிரச்னைகளைத் தன்னால் கையாளமுடியும் என்று நம்பிக்கையோடு இருப்பார், எதனாலும் எளிதில் அழுத்தமடையாமல் நிதானமாகச் செயல்படுவார். அடுத்த சில வாரங்களில், அவர் எல்லாவற்றையும் விரைவாகப் புரிந்துகொள்வார், அவரது ஞாபகத்திறன் மேம்படும், கவனக்கூர்மை அதிகரிக்கும்.

வாரத்துக்குக் குறைந்தது மூன்று நாள் எனத் தொடர்ந்து ஆறு மாதத்துக்காவது யோகாசனத்தைப் பின்பற்றினால், சிறந்த, நீண்டகாலப் பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். யோகாசனத்தின்மூலம் அதிகபட்ச அறிவாற்றல் பலன்களைப் பெறவேண்டுமானால், ஒருவர் தனது மனமுழுமை மற்றும் மூச்சு ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு தனது யோகாசனப் பயிற்சியைத் திட்டமிடவேண்டும்.

அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்தல்

மனிதர்கள் ஓய்வெடுக்கிற மற்றும் செயல்படுகிற அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் நரம்பமைப்புகளின் பகுதிகளை யோகாசனம் சமநிலைப்படுத்துகிறது, இதன்மூலம் அழுத்தம், பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

மைய நரம்பமைப்பில் இரண்டு பகுதிகள் உள்ளன: சிம்பதடிக் அமைப்பு மற்றும் பாராசிம்பதடிக் அமைப்பு. பாராசிம்பதடிக் அமைப்பு என்பது, ஒருவருடைய மனமும் உடலும் செயல்பட வழிகாட்டுகிறது, இதன்மூலம் ஆபத்தான சூழ்நிலைகளில் மோதுவதா அல்லது அங்கிருந்து சென்றுவிடுவதா என்று ஒருவரால் சட்டென்று தீர்மானிக்க இயலும். சிம்பதடிக் அமைப்பு, அவர் அமைதியாக உதவுகிறது. அவரது இதயத்துடிப்பு விகிதத்தைக் குறைக்கிறது, பதற்றமில்லாமல் இருக்கச்செய்கிறது. இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலை இருந்தால்தான் ஒருவரால் இயல்பாகச் செயல்பட இயலும். நவீன வாழ்க்கைமுறையில் அழுத்தம் அதிகம், தூண்டுதலும் அதிகம், இதனால் சிம்பதடிக் அமைப்பு அதிகம் செயல்படுகிறது, இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையின்மை உண்டாகிவிடுகிறது. யோகாசனத்தைத் தொடர்ந்து பின்பற்றினால், பாராசிம்பதடிக் அமைப்பு செயலுக்கு வருகிறது, இதனால் மூச்சு, இதயத்துடிப்பு விகிதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன, அழுத்தம், பதற்றம் குறைகிறது.

நினைவாற்றலை மேம்படுத்துதல், கூர்மையாகச் சிந்தித்தல்

யோகாசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால், ஒருவருடைய மூளையின் ஆற்றல் மேம்படக்கூடும். ஒருவருக்கு வயதாக ஆக, அவரது மூளையில் நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹிப்போகாம்பஸ் சுருங்கத்தொடங்குகிறது. இதனால், வயதானவர்கள் பல விஷயங்களை மறந்துவிடுகிறார்கள், அல்லது, அவர்களுடைய சிந்தனைவேகம் குறைந்துவிடுகிறது.

பெங்களூரில் இருக்கும் பல முதியோர் இல்லங்களில் NIMHANS ஓர் ஆய்வை நடத்தியது. அவற்றில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு ஆறு மாதம் யோகாசனப் பயிற்சி தந்து, அதனால் அவர்களுடைய மூளையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று ஆராய்ந்தது. இந்த ஆய்வில் தெரியவந்த விஷயம், முதியவர்கள் யோகாசனத்தைத் தொடர்ந்து பின்பற்றினால், முதுமை காரணமாக அவர்களுடைய மூளையில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தலைகீழாகிவிடுகின்றன, அதாவது, அவர்களுடைய ஹிப்போகாம்பஸ் சுருங்கவில்லை, பெரிதாகிறது. இதனால், மிதமான அறிவாற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு யோகாசனம் நல்ல பலன் தரும் என்று அவர்கள் கண்டறிந்தார்கள். இந்த மிதமான அறிவாற்றல் குறைபாடுதான் பின்னர் டிமென்சியா, அல்லது பிற முதுமை சார்ந்த மூளைக் குறைபாடுகளாக மாறுகிறது. ஆகவே, யோகாசனத்தை ஒழுங்காகப் பின்பற்றினால், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்று தெரியவந்துள்ளது.

மூளையைக் குணப்படுத்துதல்

மூளை ஓர் அருமையான உறுப்பு. அது தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும்! ஒருவருக்கு மூளையில் காயம் அல்லது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அவருக்குச் சிறிதுகாலம் சில பிரச்னைகள் இருக்கலாம். அதற்குள், அவருடைய மூளை காயம்பட்ட பகுதியைப் பழுதுபார்த்துக்கொண்டுவிடும், அல்லது, அந்தச் செயல்பாட்டை இன்னொரு பகுதிக்குக் கொண்டுசென்றுவிடும்.

Brain Derived Neurotropic Factor (BDNF) என்பது மூளையின் உருமாறும்தன்மை, அல்லது, தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையைக் குறிக்கிறது. ஒருவருக்கு BDNF அதிகமாக இருந்தால், அவரது மூளைக்குத் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளுகிற திறன் அதிகம் என்று பொருள்.

மனச்சோர்வு அல்லது இருதுருவக் குறைபாடு கொண்டவர்களுடைய BDNF அளவு குறைந்து காணப்படுகிறது. அவர்களிடம் கார்டிசால் (அழுத்த ஹார்மோன்) அளவும் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு மனச்சோர்வுக்கான சிகிச்சை வழங்கப்படும்போது, மனச்சோர்வு குணமாகலாம், BDNFம் அதிகரிக்கலாம், ஆனால், மருந்தை நிறுத்தியவுடன், அவருக்கு அழுத்தம் மீண்டும் வருகிற ஆபத்து தொடரும், அப்போதும் அவருடைய கார்டிசால் அளவு அதிகமாகவே காணப்படலாம்.

NIMHANS ஒருங்கிணைந்த யோகா மையத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், மனச்சோர்வு கொண்ட நோயாளிகள் மருந்துடனோ மருந்து இல்லாமலோ யோகாசனத்தைச் செய்தபோது, அவர்களுடைய BDNF அளவுகள் இயல்பாகின, கார்டிசால் அளவு குறைந்தது. இதன் பொருள், அவர்களுடைய அழுத்தம் குறைந்தது, ஆகவே, பிரச்னை மீண்டும் வருவதற்கான வாய்ப்பும் குறைந்தது.

எதிர்மறை உணர்வுகளைக் குறைத்தல்

ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு "ஓம்" என்று சொன்னால், அவரது மூளையில் எதிர்மறை உணர்ச்சிகளான கோபம், அழுத்தம், பொறாமை அல்லது அருவருப்பு போன்றவற்றைத் தூண்டும் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் குறையக்கூடும்.

NIMHANSல் நிகழ்த்தப்பட்ட ஒரு செயல்பாட்டு MRI ஆய்வில், யோகாசனத்தைப்பற்றி எதுவுமே தெரியாத பொதுமக்கள் சிலரிடம் "ஓம்" என்ற மந்திரம் தரப்பட்டது, அவர்கள் அதை ஐந்து நிமிடங்களுக்குச் சொன்னார்கள், வேறு சிலருக்கு இன்னொரு மந்திரம் தரப்பட்டது, அதையும் அவர்கள் ஐந்து நிமிடங்களுக்குச் சொன்னார்கள். அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட ஸ்கான்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, மற்ற மந்திரத்தைச் சொன்னவர்களைவிட, 'ஓம்' என்று சொன்னவர்களுடைய மூளையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் குறைந்திருப்பது தெரியவந்தது. இதன் பொருள், பல்வேறு மனமுழுமை உத்திகளில் (யோகாசனம் அல்லது மனமுழுமைத் தியானம்) சொல்லப்பட்டுள்ள வெவ்வேறு மந்திரங்களைத் தொடர்ந்து உச்சரிப்பதால், எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

முக உணர்ச்சிகளைக் கண்டறிதலை மேம்படுத்துதல்

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோர் யோகாசனத்தைப் பின்பற்றும்போது, அவர்களுடைய மூளையில் முகக்குறிப்புகளைப் பதிவுசெய்யும் திறன் மேம்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோருக்கு முக உணர்ச்சிகளைக் கண்டறிவதில் சிரமங்கள் இருக்கும், இதனால், அவர்களால் பிறருடைய முகக்குறிப்புகளைப் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம், ஆகவே, மற்றவர்களுடைய உணர்வுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இயலாமல் இவர்கள் சிரமப்படலாம். உதாரணமாக, ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவரிடம் இன்னொருவர் பேசுகிறார். அப்போது, அந்த இன்னொருவரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை, அல்லது, நேர்விதமான உணர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆனால், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவரால் அதை உணர இயலாது. அவர் அந்த இன்னொருநபர் கோபப்படுவதாக, அல்லது பயப்படுவதாக எண்ணலாம்.

ஸ்கிஜோஃப்ரெனியாவால் வரும் இந்தப் பிரச்னைகளை யோகாசனத்தின்மூலம் சமாளிக்கலாம் என NIMHANSல் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டியுள்ளது. ஸ்கிஜோஃப்ரெனியா கொண்ட சிலருக்கு, சில நடிகர்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் காட்டப்பட்டன, அதில் அவர்கள் பல்வேறு உணர்ச்சிகளை நடித்துக்காட்டியிருந்தார்கள். ஆனால், அவர்கள் எந்த உணர்ச்சியை நடித்துக்காட்டுகிறார்கள் என்று ஆய்வில் பங்கேற்றவர்களால் கண்டறிய இயலவில்லை, அதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். பின்னர் இவர்களுக்கு மூன்று மாதங்கள் வாரந்தோறும் குறைந்தபட்சம் மூன்றுமுறை யோகாசனப்பயிற்சி தரப்பட்டது. அதன்பிறகு, அவர்களின் இந்தத்திறன் நன்கு மேம்பட்டது. இதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்று யோசித்தால், மேலே விளக்கியபடி இவர்களுடைய மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் யோகாசனத்தால் மாறுபடுகிறது. ரத்தத்தில் ஆக்சிடாசின் (பிணைப்பு ஹார்மோன்) என்ற ஹார்மோன் அதிகரிக்கிறது. இந்த ஆக்சிடாசின்தான் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே பிணைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கிறது. இந்த ஹார்மோன் இணைப்புகளை, இதமான உணர்வை, நம்பிக்கையை மேம்படுத்தி, அதன்மூலம் சமூக நடவடிக்கைகளையும் சிறப்பாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

சான்றுகள்

1- ஹரிபிரசாத் VR, வரம்பள்ளி S, சிவக்குமார் V, கல்மாடி SV, வெங்கடசுப்ரமணியன் G, கங்காதர் BN. முதியவர்களுடைய ஹிப்போகாம்பஸ் அளவை யோகாசனம் அதிகரிக்கிறது. இந்தியன் J சைக்யாட்ரி 2013; 55:394-6.

2- GH, தீர்த்தஹள்ளி J, ராவ் MG, வரம்பள்ளி S, கிறிஸ்டோஃபர் R, கங்காதர் BN. மனச்சோர்வு உள்ளவர்கள்மத்தியில் யோகாசனத்தின் நேர்விதமான சிகிச்சை மற்றும் நியூரோட்ராஃபிக் தாக்கங்கள்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு. இந்தியன் J சைக்யாட்ரி 2013; 55:400-4.

3- ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோர்மத்தியில் ப்ளாஸ்மா ஆக்ஸிடாசின் மற்றும் முக உணர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரச்னைகளில் யோகாசன சிகிச்சையின் தாக்கம்: ஜெயராம் et al, IJP, 2013 இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24049210

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org