நலன்

யோகாசனத்தின் சிகிச்சைத் தாக்கங்கள்

மூளையில் யோகாசனத்தின் தாக்கங்கள், மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்த உதவலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

சமீபகாலமாக, யோகாசனம் உலகெங்கும் பிரபலமாகியுள்ளது. இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள்வரை எல்லாரும் இதனைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். மனவியலாளர்களும் உளவியல் நிபுணர்களும் யோகாசனத்தின் சாத்தியங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்கள், மனநலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை, புனர்வாழ்வின் ஒரு பகுதியாக யோகாசனத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி ஆய்வுகள் என்ன சொல்கின்றன? NIMHANSல் நடவடிக்கை அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் BN கங்காதர் அவர்களுடன் பேசுகிறார் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் பெட்ரீசியா ப்ரீதம்.

மனநலத்தைப்பொறுத்தவரை, யோகாசனம் என்னமாதிரியான சிகிச்சைத் தாக்கங்களைக் கொண்டுள்ளது?

மனச்சோர்வு மற்றும் பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகளில் யோகாசனத்தின் தாக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான சிகிச்சையிலும் யோகாசனம் நிறையப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கு யோகாசனம் முதல்நிலைச் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உளவியல் குறைபாடுகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளைத் தருகிறார்கள், அவர்கள் அதை உட்கொண்டு ஓரளவு குணமடைகிறார்கள், ஆனால், இன்னும் அவர்களுடைய பிரச்னைகள் முழுமையாகக் குணமாகவில்லை என்றால், அந்தச் சூழ்நிலையில் யோகாசனம் ஒரு கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிலையில் உள்ளவர்களுக்கு நாங்கள் யோகாசனத்தைச் சிபாரிசு செய்கிறோம், அது அவர்களுக்குப் பலன் தருகிறது. உண்மையில், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோருக்கு யோகாசனம் பலன் தருகிறது என்பது ஏற்கெனவே உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஸ்கிஜோஃப்ரெனியா சிகிச்சைக்கான சர்வதேச நெறிமுறையொன்றில் யோகாசனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

மனச்சோர்வு, பதற்றம் கொண்டோருக்கு யோகாசனம் பயன்படுவதை ஏற்கெனவே பார்த்தோம். மனநலத்துறையில் இன்னும் பல பிரச்னைகளுக்கு யோகாசனம் ஒரு சிகிச்சையாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, குழந்தைகளுக்கு வருகிற கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD). சிலர் ஆட்டிசத்துக்குக்கூட யோகாசனத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். முதியவர்களுக்கு அறிவாற்றல்சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அவற்றைக் குறைந்தபட்ச அறிவாற்றல் செயலின்மை என்று அழைப்பார்கள். அதற்கும் பலர் யோகாசனத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதேபோல், தூக்கப் பிரச்னைகள், இன்னும் பல உள்ளம்சார்ந்த பிரச்னைகளுக்கும் யோகாசனம் நல்ல பலன் தருகிறது, உதாரணமாக, உடல்சார்ந்திராத பிரச்னைகளால் உடலில் வலி ஏற்படும்போது யோகாசனம் நன்கு பயன்படுகிறது. இப்படிப் பல மனநலக் குறைபாடுகளுக்கு நாங்கள் யோகாசனத்தை ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்தியுள்ளோம்.

யோகாசனம் மூளையில் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குவது எப்படி என்று விளக்க இயலுமா?

பல ஆண்டுகளாகத் தியானம் செய்துள்ளவர்களையும், தியானம் செய்யாதவர்களையும் ஆராய்ந்துபார்த்தபோது, தியானம் செய்தவர்களுடைய மூளையின் சில பகுதிகள் நன்கு மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அது ஒரு விஷயம். இரண்டாவதாக, உடல்சார்ந்த பிரச்னைகள் எவையும் இல்லாத சில முதியவர்களுக்கு ஆறு மாதங்கள் யோகாசனப்பயிற்சி வழங்கப்பட்டது. அதற்கு முன்பும் பின்பும் அவர்களுடைய மூளையை ஸ்கேன் செய்துபார்த்தார்கள். முதியவர்களுடைய மூளையில் சில நுண்ணுணர்வுள்ள பகுதிகள் கொஞ்சம்கொஞ்சமாகச் சுருங்கும், சிறிதாகும். ஆனால், யோகாசனம் செய்த இந்த முதியவர்களுடைய மூளையில் அந்தப் பகுதிகள் பெரிதாகியிருந்தன. அவைதான் அவர்களுடைய ஞாபகத்திறனைத் தூண்டும் பகுதிகள்! இதன் பொருள், யோகாசனம் மூளையைப் பாதுகாக்கிறது, அதன் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. ஒருவருடைய மூளையின் செயல்பாடுகள் ஏன் மேம்படுகின்றன என்பதுபற்றி வேறு பல விவாதங்கள் உள்ளன. யோகாசனம் கார்டிசால் அளவுகளைக் குறைக்கிறது. இந்த கார்டிசாலின் அளவு அதிகரிக்கும்போது, அது மூளையின் சில செயல்பாடுகளைப் பாதிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளைக் கொண்டவர்கள் யோகாசனம் செய்தால், அவர்களுடைய ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட புரதம் அதிகரிக்கிறது. இதனை Brain Derived Neurotrophic Factor என்கிறார்கள். இதுவும் மூளையில் நடைபெறுவதாக இருக்கலாம், இதனால் மூளைக்குப் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படுகிறது, இது மூளையை அவ்வப்போது பழுதுபார்க்கிறது!

செயல் அடிப்படையில் பார்த்தால், மூளையின் மின் அமைப்பியல், EEG, நிகழ்வு தொடர்பான சாத்தியங்களைப்பற்றிப் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன, இவற்றில் முன்னேற்றங்கள் உள்ளதையும், இவற்றால் மூளை சிறப்பாகச் செயல்படுவதையும் நாங்கள் காட்டியுள்ளோம். (இதன் பொருள் என்ன என்பது நிச்சயமாகத் தெரியவில்லை)

யோகாசனத்தின் சில செயல்முறைகளால், உதாரணமாக, 'ஓம்' என்று தொடர்ந்து சொல்வதால் மூளையின் சில பகுதிகள் குளிர்வடைவதைக் காண இயலுகிறது; இதனால் அந்தப் பகுதிகளில் செயல்பாடு குறைகிறது. மூளையின் செயல்பாடுகள் ஏன் குறையவேண்டும்? மூளையின் இந்தப் பகுதிகள் பொதுவாக உணர்வுநிலையில் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன, அவை அதிகம் செயல்படுகின்றன. ஆகவே, உணர்வுநிலை குறைவதற்கு நரம்பு-உடலியல் சார்ந்த ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது. இது மூளை தன்னைப் பழுதுபார்த்துக்கொள்ளும் செயல்முறையை மேம்படுத்தும். ஆக, யோகாசனம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும், மற்ற பாதிப்புகளிலிருந்து அதனைப் பாதுகாக்கும் என இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.

ஞான யோகா, கர்ம யோகா, பக்தி யோகா, ராஜ யோகா என்று பலவிதமான யோகாசன வடிவங்கள் இருக்கின்றன. மனநலக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு இவற்றில் எந்த யோகாசன வடிவம் முதன்மையாகப் பயன்படுகிறது?

அநேகமாக ஒவ்வொரு மனநல மருத்துவரும் ஏதாவது ஒரு வடிவ யோகாசனத்தைப் பயன்படுத்துகிறார். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • ஞான யோகா: இங்கே நாம் உளவியல் கல்வியை வழங்குகிறோம். ஒருவர் தனக்கு வந்திருக்கும் பிரச்னையை நன்கு புரிந்துகொள்ளச்செய்கிறோம், தான் என்ன செய்யவேண்டும், தனது குடும்பம் என்ன செய்யவேண்டும் என்று அவர் தெரிந்துகொள்கிறார். இதுதானே ஞானம்? இதற்கும் யோகாசனத்தின் 'ஞான யோகா'வுக்கும் தொடர்பு இருப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், அந்த வடிவத்தை நாம் பயன்படுத்துகிறோம்.
  • பக்தி யோகா: சிகிச்சைக்கு வருகிற ஒருவர் மருத்துவர்மீது நம்பிக்கை வைத்தால், அவருக்கு நல்ல பலன்கள் கிடைப்பதை நாம் காண்கிறோம். சொல்லப்போனால், நம்பிக்கையை உண்டாக்குதல் என்பது, அவர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகும். உளவியல் சிகிச்சையில், இது ஒரு முக்கியமான முன் நிபந்தனையாக உள்ளது. சிகிச்சை வழங்குபவருக்கும் சிகிச்சை பெறுபவருக்கும் இடையே உறவு மேம்படும்போது, சிகிச்சை பெறுபவருக்குச் சிகிச்சை வழங்குபவரின் அணுகுமுறைகளில் அதிக நம்பிக்கை வருகிறது, அதன்மூலம் சிகிச்சையின் தரம் மேம்படலாம். இதை நாம் பக்தி யோகா எனலாம்.
  • கர்ம யோகாவை நீங்கள் இந்தக் கட்டடத்திலேயே (NIMHANS மனநலம் மற்றும் நரம்பியல் புனர்வாழ்வுத்துறை) பார்க்கலாம். மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்கள், தங்களது ஊக்கத்தை இழந்துவிட்டவர்களுக்கு நாங்கள் ஊக்கம் தந்து அவர்களைப் பல செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம், அவர்களுக்குப் பயிற்சி தருகிறோம், இந்தச் செயல்பாடு மிகவும் நல்ல பலன்களைத் தருகிறது, நாங்கள் அதைப் பயன்படுத்துகிறோம்.
  • ராஜ யோகா என்பதில் பல விஷயங்கள் உண்டு. உதாரணமாக, யோகாசனம், தியானம் போன்றவை. ஒருவர் இவற்றால் பலன் பெறுகிறார் என்றால், அவர் தனக்குத்தானே உதவிக்கொள்கிறார் என்று பொருள். நாங்கள் யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை ராஜ யோகத்தின் பகுதிகளாகும். நாங்கள் தியானத்தைச் சிலருக்குமட்டும்தான் சிபாரிசு செய்கிறோம். எல்லாருக்கும் அதனைச் சிபாரிசு செய்வதில்லை. உண்மையில், தியானம் என்பது ராஜ யோகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. ஆனால், மனநலப் பிரச்னை கொண்ட எல்லாராலும் தங்களுடைய மனத்தை ஒருங்கிணைத்துத் தியானம் செய்ய இயலாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, நாங்கள் யோகாசனம், பிராணாயாமம் ஆகியவற்றைமட்டும் பின்பற்றுகிறோம். சிலருக்குத் தியானத்தைச் சிபாரிசு செய்கிறோம், அது அவர்களுக்கு உதவுகிறது.

மக்கள் தங்களுடைய மன ஆரோக்கியம் மற்றும் நலத்துக்காக யோகாசனத்தைப் பின்பற்றவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? யோகாசனம், அதன் முக்கியத்துவம், நன்மைகளைப்பற்றி நீங்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மக்கள் யோகாசனம் செய்யவேண்டும் என்று நீங்கள் எப்படி ஊக்கப்படுத்துவீர்கள்? வெறுமனே, ‘யோகாசனம் செய்யுங்கள்’ என்று சொன்னால் போதாது. அவர்களோடு சேர்ந்து யோகாசனத்தில் ஈடுபடவேண்டும், நாங்கள் அப்படிதான் செய்கிறோம், நாங்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களோடு யோகாசனம் செய்கிறோம், அவர்கள் யோகாசனத்தின் பலன்களை அனுபவிக்கச்செய்கிறோம், அதன்மூலம் அவர்கள் கவரப்பட்டுத் தொடர்ந்து யோகாசனத்தில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம். உதாரணமாக, NIMHANSல் பணிபுரிகிற ஊழியர்கள், இங்கே படிக்கிற மாணவர்கள் என எல்லாருக்கும் யோகாசனத்தின் நன்மைகளைத் தெரிவிக்கும் ஒரு மாதப் பயிற்சி தரவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், அதன்மூலம், அதன் பலன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்கிறவர்கள், அதன்பிறகு வீட்டில் யோகாசனத்தைத் தொடரலாம். இங்கே உள்நோயாளிகளாகச் சேர்ந்துள்ளவர்களுக்கு, இது கொஞ்சம் சவாலான விஷயம். அவர்கள் யோகா மையத்தை அணுகுவது, ஒரு குருநாதரைச் சந்திப்பது, அல்லது வீட்டிலேயே யோகா கற்றுத்தருகிற ஒருவரைக் கண்டறிவதெல்லாம் சிரமமில்லை. ஆனால், அவர்களுடைய மனநலப் பிரச்னை காரணமாக, அவர்களுடைய ஊக்கம் குறைபட்டிருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவி தேவை, எதைச் செய்தாலும் மெதுவாகச் செய்யவேண்டும். இதுபற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், யோகாசனத்தின் நன்மைகளைப்பற்றிப் பேசினால் யாருக்கும் அதில் ஆர்வம் வராது. அவர்கள் அதனை அனுபவிக்கும்படி செய்யவேண்டும். அதுதான் சிறந்த வழி. பெரும்பாலான யோகாசனப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு இது தெரியும். யோகாசன வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே, அவர்கள் 'யோகாசனத்தின் பலன்களைப் புரிந்துகொள்ளுதல்' என்ற அம்சத்தைச் சேர்க்கிறார்கள், அதன்மூலம், அவர்கள் தொடர்ந்து யோகாசனத்தைச் செய்ய ஊக்கம் தருகிறார்கள்.

சர்வதேச யோகாசன தினத்தின் முக்கியத்துவம் என்ன? இது ஏன் உலகம்முழுக்கக் கொண்டாடப்படுகிறது?

நம் நாட்டில் யோகாசனத்தை எல்லாரும் நன்றாக அறிவார்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் இதனை அறிந்துவைத்திருக்கிறோம். யோகாசனத்துக்காக ஒரு நாளை அறிவிக்கவேண்டும் என்ற யோசனையைப் பல உள்நாட்டு, வெளிநாட்டுக் குழுக்கள் முன்வைத்திருக்கிறார்கள். யோகாசனத்துக்காக ஒரு நாளை அங்கீகரிக்குமாறு பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் UNஐக் கேட்டுக்கொண்டிருந்தன. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, பெங்களூரில் ஒரு சர்வதேசக் கூட்டம் நடைபெற்றது, அதில் நானும் கலந்துகொண்டேன். இந்தியாவைச் சேர்ந்த பல யோகாசன நிபுணர்கள், ஐரோப்பாவில் யோகாசனப் பள்ளிகளை நடத்தி இதுபற்றிய விழிப்புணர்வைப் பரப்பிவரும் யோகாசன ஆசிரியர்கள் என்று பலரும் ஒன்றாகக் கூடிப்பேசினார்கள், 21 ஜூனைச் சர்வதேச யோகாசன தினமாக அறிவிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 21 ஜூன் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால், அதுதான் வருடத்தில் மிக நீளமான நாள், அதிக நேரம் சூரியவெளிச்சம் அடிக்கும் நாளும் அதுதான், அதனை Summer Solstice என்பார்கள். உலகின் வடக்கு அரைக்கோளத்தில் வசிப்பவர்களில் 80% பேர் இதை அனுபவிப்பார்கள்.

யோகாசனம்தான் நம் எல்லாருக்கும் ஞானத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் யோகாசனம் என்று சொல்வது, யோகாசனம், பிராணாயாமம், தியானம் ஆகியவைதான். ஆனால் உண்மையில், யோகாசனத்தை அதன் உண்மையான ஆன்மிக உணர்வுடன் பார்த்தால், அது நம்மை ஒரு விடுதலைநிலைக்கு அழைத்துச்செல்லும். யோகாசனத்தின் அடிப்படை விவரிப்பே 'என்னுடைய உணர்வு அண்டத்தின் உணர்வுடன் இணையவேண்டும்' என்பதுதான். அதுதான் யோகாசனத்தின் ஆன்மிகப் பின்னணி. அந்தப் பாதையில், நாம் யோகாசனத்தின் பல நல்ல விளைவுகளை அனுபவிக்கிறோம், அவற்றையே நாம் பயன்படுத்துகிறோம். வேடிக்கையாகச் சொல்வதென்றால், யோகாசனத்தின் பக்கவிளைவுகளைப் பயன்படுத்திதான் நாம் மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துகிறோம் என்றார் ஒருவர்!

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org