யோகாசனமும் மனநலமும்

பல்வேறு மனநலக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள், சைக்கோதெரபியுடன் யோகாசனத்தையும் பயன்படுத்தலாம்

பலவகையான மனநலக் குறைபாடுகளுக்கு யோகாசனத்தை ஒரு கூடுதல் சிகிச்சைமுறையாகப் பின்பற்றலாம் எனப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து NIMHANS உளவியல் பிரிவுத் துணைப் பேராசிரியரான டாக்டர் சிவராம வரம்பள்ளியுடன் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச்சேர்ந்த பெட்ரீசியா ப்ரீதம் பேசினார். இந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள், இங்கே:

மனநலக் குறைபாடுகளைக் குணப்படுத்த யோகாசனம் எப்படி உதவுகிறது?

கடந்த சில ஆண்டுகளாக, இதுபற்றி நாங்கள் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளோம். தீவிர மனநலப் பிரச்னை கொண்டவர்களுக்கு, யோகாசனம் நல்ல பலனைத்தரும். அவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருந்துகளுடன் இதையும் கூடுதல் சிகிச்சையாக மேற்கொள்ளலாம். சில நேரங்களில் யோகாசனமே மருந்தாகச் செயல்படுகிறது! எங்களிடம் சிகிச்சைக்கு வந்த சிலர், மருந்துகளைச் சாப்பிட மறுத்துவிட்டார்கள். அவர்கள் மாற்றுச் சிகிச்சை முறைகளை முயன்றுபார்க்க விரும்பினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் யோகாசனத்தைமட்டுமே சிகிச்சையாகப் பயன்படுத்திப்பார்த்தோம், அவர்களிடம் நல்ல பலனைக் கண்டோம். ஆனால், இப்படிப்பட்டவர்களுடைய சதவிகிதம் குறைவுதான். பெரும்பாலானோர், மனநலப் பிரச்னைகளுக்கான வழக்கமான சிகிச்சை முறைகளோடு, யோகாசனத்தை ஒரு கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்திப் பலனடைந்தார்கள். உதாரணமாக, மருந்துகளைச் சாப்பிட்டபடி யோகாசனம் செய்வது, சைக்கோதெரபி எடுத்துக்கொண்டபடி யோகாசனம் செய்வது... இப்படி.

சில குறிப்பிட்ட குறைபாடுகளைக் கொண்டவர்கள்மத்தியில் யோகாசனம் கணிசமான பலனைத் தந்துள்ளது. உதாரணமாக: மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரெனியா, பதற்றம் மற்றும் கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு.

மனநலக் குறைபாடுகளுக்கு யோகாசனம் ஒரு கூடுதல் சிகிச்சைமுறையாகப் பலன் தருவதை உறுதிப்படுத்தும் அறிவியல் அறிக்கை அல்லது புள்ளிவிவரங்கள் எவையேனும் உள்ளனவா?

இதுபற்றிப் பல பிரசுரங்கள், ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன, இவற்றில் நிறைய புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அர்த்தமுள்ள வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் யோகாசனத்தை மனநலப் பிரச்னைகளுக்குக் கூடுதல் சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அதேசமயம், இதுபற்றிய தனிப்பட்ட ஆய்வுகளைக் காணுவது சிரமம். காரணம், இது பயன் தருமா என்று அறிய விரும்புகிறவர்கள், அல்லது, இது எந்த அளவு சிறப்பாகப் பயன் தருகிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குத் தேவையான சான்றுகளைத் தனி ஆய்வுகள் வழங்காமல்போகலாம். ஆகவே, கடந்த 10 ஆண்டுகளில், ஸ்கிஜோஃப்ரெனியா மற்றும் மனச்சோர்வு போன்ற குறைபாடுகளுக்கு யோகாசனத்தை ஒரு கூடுதல் சிகிச்சைமுறையாகப் பயன்படுத்துவதுபற்றிய பல சான்றுகள் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கிடைத்துள்ளன. எங்களது NIMHANS அமைப்பிலேயே நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன, பல தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை நாங்கள் பிரசுரித்துள்ளோம். இவற்றின்மூலம் பல மனநலப் பிரச்னைகளுக்கு யோகாசனம் ஒரு கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுவதைக் காண்பித்துள்ளோம். இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சமீபத்தில் இந்திய உளவியல் சஞ்சிகையின் ஜூலை-செப்டம்பர் 2013 பதிப்பின் இணைப்பிதழில் வெளியான ஒரு குறிப்பை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்வேறு மனநலக் குறைபாடுகளுக்கு யோகாசனத்தை ஒரு கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்துவதுபற்றி நல்ல உதாரணங்களுடன் இது விளக்குகிறது.

யோகாசனம் ஓர் இந்தியக்கலை. ஆனால், இத்தனைநாளாக இதனை ஒரு சிகிச்சைமுறையாக யாரும் அறிந்திருக்கவில்லையே. ஏன்?

இது ஒரு மிகவும் சுவையான கேள்வி. பல இடங்களில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இங்கே நாம் இரண்டு விஷயங்களைக் கவனிக்கவேண்டும். ஒன்று: யோகாசனம் கற்றுத்தருகிறவர்கள் அல்லது, யோகாசன வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்கிறவர்களிடம் இதைப்பற்றிப்பேசினால், அவர்கள் யோகாசனத்தை ஒரு சிகிச்சைமுறையாகக் கருதமாட்டார்கள். அவர்கள் யோகாசனம் ஒரு வாழ்க்கைமுறை என்பார்கள், அதனை நாம் வாழ்ந்துபார்க்கவேண்டும் என்பார்கள், எந்தவொரு நோயையும் தீர்க்கிற மருந்தாக அவர்கள் யோகாசனத்தை எண்ணமாட்டார்கள். அதற்குப்பதிலாக, ஒரு தனிநபர் தன்னுடைய இலக்கை எட்டுவதற்கு உதவும் ஒரு வழியாக அவர்கள் யோகாசனத்தைக் கருதுவார்கள். உதாரணமாக, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல், மன ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியம் போன்ற இலக்குகளை யோகாசனத்தின்மூலம் எட்டலாம். யோகாசனத்தை ஒரு சிகிச்சைமுறையாகக் கருதுவது சமீபத்திய பழக்கம்தான். அநேகமாகக் கடந்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளில்தான் இந்தச் சிகிச்சைமுறை பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. அதற்குமுன்னால், யோகாசனம் என்பது முழுக்க முழுக்க ஒரு வாழ்க்கைமுறைச் செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ஆக, யோகாசனத்தின் கோணத்திலிருந்து பார்த்தால், இது ஒரு பெரிய பிரச்னை.

இன்னொரு பிரச்னை, யோகாசனத்தை ஒரு சிகிச்சைமுறையாகப் பார்ப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. காரணம், இதுபற்றிய கட்டுரைகளைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் இதற்கான 'சீரற்ற கட்டுப்பாட்டுப் பரிசோதனை' முடிவுகளைக் கேட்கிறார்கள், உண்மையில் இந்தச் செயல்முறை மருந்துகளைப் பரிசோதிக்கவே ஏற்றது. இந்தப் பரிசோதனையில், ஒருவருக்கு ஒரு மருந்து தரப்படும், இன்னொருவருக்கு, அதேமாதிரி உள்ள இன்னொரு மருந்து தரப்படும், ஆனால், முதல் மருந்தில் இருக்கும் முக்கியமான உட்பொருள் இதில் இருக்காது.

யோகாசனத்தை இப்படிப் பரிசோதிக்க இயலாது. யோகாசனம் செய்கிற ஒருவர் தான் யோகாசனம் செய்கிறோம் என்று அறியாமலிருப்பது சாத்தியமே இல்லை. ஆகவே, தான் யோகாசனம் செய்கிறோமா இல்லையா என்று அவருக்குத் தெரியாது என்று நாம் சொல்ல இயலாது, மருந்துகளைப் பரிசோதிக்கும்போது இது சாத்தியம். ஆகவே, யோகாசனத்தை ஒரு சிறந்த, பலன் தரும் சிகிச்சைமுறையாக அறிவியல் சமூகத்துக்கு நிரூபிப்பதில் இப்படி ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. வேறு முறைகளைப் பயன்படுத்தி இதனைச் சரிசெய்ய முயன்றுவருகிறோம். ஆக, யோகாசனத்தை இன்னும் பலர் ஒரு சிறந்த சிகிச்சைமுறையாக ஏற்றுக்கொள்ளாமலிருக்க இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

மனச்சோர்வு, பதற்றக் குறைபாடு, OCD போன்ற மனநலப் பிரச்னைகளின் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் யோகாசனத்தைப் பின்பற்றினால் அவர்களுடைய பிரச்னை தீர்ந்துவிடுமா?

நான் முன்பே சொன்னதுபோல, யோகாசனத்தை ஒரு சிகிச்சைமுறையாகப் பயன்படுத்துவது இன்னும் அறிவியல் சமூகத்தால் முழுமையாக ஏற்கப்படவில்லை, அவர்கள் இதனை ஓர் ஆரம்பநிலைச் சான்றாகவே காண்கிறார்கள். ஆகவே, யோகாசனம் ஒருவருக்கு ஆரம்பநிலையில் உதவுமா, அல்லது கடைசிநிலையில் உதவுமா என்பதைப் புரிந்துகொள்வதற்கு, உளவியல் குறைபாடுகள் எப்படித் தொடங்குகின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். பல உளவியல் குறைபாடுகளுக்கு, சிகிச்சையைச் சீக்கிரமே தொடங்குவது நல்லது என்பது நமக்குத் தெரியும், அதனால் பிரச்னையையும் விரைவில் உறுதிப்படுத்தலாம், சிகிச்சையும் நல்ல பலன் தரும். ஸ்கிஜோஃப்ரெனியா, மனச்சோர்வு, OCD உள்ளிட்ட பல உளவியல் குறைபாடுகளுக்குச் சிகிச்சையைச் சீக்கிரமாகத் தொடங்குவது நல்லது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆக, யோகாசனம் மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், அது மனநலப் பிரச்னையின் ஆரம்பநிலையில் இன்னும் சிறப்பாகப் பலன் தரவேண்டும். இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், தர்க்கபூர்வமாக யோசித்தால், இதுதான் உண்மையாக இருக்கவேண்டும். இன்னொரு கோணம், யோகாசனம் எப்படி வேலை செய்கிறது? இது ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான கேள்வி, உலகெங்குமுள்ள அறிவியலாளர்கள் இதற்குப் பதில்காண முயன்றுவருகிறார்கள். மனிதனுடைய மூளையில், தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்கிற ஓர் அமைப்பு இருக்கிறது, அது சிறப்பாகச் செயல்படுவதற்கு யோகாசனம் உதவுகிறது என நாம் நம்புகிறோம். அதாவது, உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ள யோகாசனம் உதவுகிறது. இங்கே உடல் என்பது, மூளையைக் குறிக்கிறது. இந்தக்கோணத்தில் யோசித்தாலும், மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் எவ்வளவு சீக்கிரம் யோகாசனத்தைத் தொடங்குகிறாரோ அந்த அளவுக்கு அவருக்குப் பலன் கிடைக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org