எளிய கணங்களை ரசித்து அனுபவிக்கக் கற்றுகொள்ளுதல்

எளிய கணங்களை ரசித்து அனுபவிக்கக் கற்றுகொள்ளுதல்

பெரும்பாலானோர் பெரிய விருந்துகள் மற்றும் பகட்டான விடுமுறை நாட்களுக்கான ஏங்குகிறார்கள்.    ஆடம்பரமான விஷயங்களைப்பற்றிக் கனவு காண்பது ஒருவேளை மனித இயல்பாக இருக்கலாம், நுகர்வோருக்கான பொருட்களைத் தயாரிக்கும் தொழில்துறையானது, தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பகட்டான விடுமுறை நாட்களுக்கான மக்களுடைய ஆசைத் தீயை விசிறிவிட்டு உதவுவதும் உண்மை.  உலகம்முழுக்க வெகுசன ஊடகங்களில் பெரிய பரிசுக் குலுக்கல்களுக்கான விளம்பரங்கள், சிறந்த பரிசுகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கும் வழங்கல் போட்டிகள் நிறைந்திருக்கின்றன.   இவர்கள் ஓர் எளிய வாசகத்தின்மூலம் மக்களை மயக்குகிறார்கள்: இது வாழ்க்கையில் ஒருமுறைமட்டுமே வரும் வாய்ப்பு, ஆகவே இதை விட்டுவிடாதீர்கள்.     

ஆனால் வாழ்க்கையில் ஒருமுறைமட்டுமே வருகிற, பகட்டான நிகழ்ச்சிகள் உண்மையில் நம்முடைய மகிழ்ச்சிக்கு அவசியமானவையா, அல்லது, அவை நம்முடைய மகிழ்ச்சிக்குப் பொருத்தமானவையா?  இப்படிப்பட்ட விளம்பரங்களின்மூலம் உண்டாக்கப்படும் அனைத்து மிகைப்படுத்தல்களையும் தாண்டிப் பார்த்தால், இது உண்மையில்லை என்றுதான் பல அறிவியல் சான்றுகள் குறிப்பிடுகின்றன.  அதாவது, அன்றாட வாழ்க்கையின் சிறிய, மகிழ்ச்சி தரக்கூடிய கணங்கள்தான் நம்முடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றன என்பதையும், இதனால் நாம் அவற்றைப்பற்றிய நம்முடைய மன முழுமையை அதிகரிக்கவேண்டும் என்பதையும் நேர்வித உளவியல் கண்டறிந்துகொண்டிருக்கிறது.  

இந்த விஷயம் முற்றிலும் புதியதில்லை.  கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னால், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் W சாமர்செட் மாம் தன்னுடைய சுயசரிதையாகிய தொகுத்துச் சொல்லுதல் என்ற நூலில் இவ்வாறு எழுதினார்:   ”நாம் உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரே விஷயம், கடந்துசெல்லும் இந்தக் கணம்தான்.  ஆகவே அதிலிருந்து இயன்றவரை அதிக மதிப்பை பெற்றுவிடுவதுதான் பொதுப்புத்தி.  எதிர்காலமானது என்றைக்காவது நிகழ்காலமாகும், இன்றைய நிகழ்காலம் எப்படி நிச்சயமற்றதாகத் தோன்றுகிறதோ அதுபோல் அன்றைக்கு அது தோன்றும்.”  1938ல் மாம் உணர்ச்சிமிக்க இந்தச் சொற்களை எழுதியபோது, அவர் தன்னுடைய வாழ்வின் நடுக்கட்டத்தை எப்போதோ கடந்திருந்தார், அவர் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்ட இந்த அறிவானது நேர்வித உளவியலின் ஒரு முக்கியமான கோட்பாட்டுக்கு மையமாக அமைகிறது, அதனை "ரசித்து அனுபவித்தல்” என அழைக்கிறார்கள்: அன்றாட வாழ்க்கையில் சிறிய, மகிழ்ச்சியான அனுபவங்களை அடையாளம் காணுதல், பாராட்டுதல், மேம்படுத்துதல்.            

இந்தத் துறையில் இன்றைக்கு ஆராய்ந்துவரும் நிபுணர்களில் முன்னணியில் உள்ளவர், சிகாகோவின் லயோலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரெட் ப்ரயன்ட்.    டாக்டர் ப்ரயன்ட் வளர்ந்துகொண்டிருந்தபோது, தன்னுடைய தாய்க்குச் சிறிய, மகிழ்ச்சியான கணங்களைக் கொண்டாடும் ”இயற்கையான பரிசு” இருந்ததை அவர் கவனித்தார், அது அவருக்குள் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்கியது, பின்னர் அறிவியல் ஆராய்ச்சியை முறையாகப் பகுத்தாயும்போது, தனிப்பட்ட நபர்களுடைய நலன் என்பது அழுத்தத்தைக் குறைப்பதுமட்டுமில்லை, அதில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்பதையும் அவர் கவனித்தார்.   கடந்த பத்தாண்டுகளாக டாக்டர் ப்ரயன்ட் ஒரு சர்வேதேசக் குழுவை வழிநடத்திவருகிறார், மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது எது என்பதையும், அதற்குச் சம அளவு முக்கியமான மகிழ்ச்சியை பலவீனப்படுத்துவது அல்லது சேதப்படுத்துவது எது என்பதையும் ஆராய்ந்துவருகிறார்.     அவர்களுடைய வியப்பூட்டுகிற, அடிப்படையான கண்டுபிடிப்பு என்னவென்றால், பலநேரங்களில் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை அதிகப்படுத்தாமல் இருந்துவிடுகிறார்கள், காரணம் அவர்களுக்குச் சரியான வியூகங்கள் இருப்பதில்லை அதைவிட மோசமான நிலை, அவர்கள் தவறான வியூகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஆகவே தங்களுடைய நல்ல விஷயங்களை அதிகப்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.  

அதாவது, மக்கள் தங்களையும் அறியாமல் தங்களுடைய மகிழ்ச்சிகளைக் குறைவான நேரத்துக்கே அனுபவிக்கிறார்கள், அதை நீடித்து நிலைக்க அனுமதிப்பதில்லை, அதாவது மகிழ்ச்சியின் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறார்கள், அல்லது  தங்களைத் தாங்களே உள்நோக்கி அழுத்திக்கொள்கிறார்கள், இதன்மூலம் தொடர்ந்து அவர்கள் பாதிப்பை சந்திக்கிறார்கள். 

எடுத்துக்காட்டாக, நியூசிலாந்தில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் ஜோஸ் வழிநடத்திய ஓர் ஆராய்ச்சி, 101 ஆண்கள் மற்றும் பெண்களிடம் 30 நாட்களுக்கு ஒரு நாட்குறிப்பை எழுதுமாறு கேட்டுக்கொண்டது.    இதில் பங்கேற்றவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பதிவுசெய்தார்கள், அந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை தாங்கள் எந்த அளவு ரசித்து அனுபவித்தோம் அல்லது தடுத்து நிறுத்தினோம் என்பதையும் குறித்துவைத்தார்கள்.  ’ரசித்து அனுபவித்தவர்கள்’, ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு ஏற்படும்போது சற்றே நிதானித்து, அந்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி, பிறருக்கு அதைப்பற்றிச் சொல்லி அல்லது மகிழ்ச்சியில் சிரித்து அல்லது கத்திக்கூட தங்களுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தினார்கள்.     இதற்கு மாறாக, ‘ரசித்து அனுபவிக்காதவர்கள்’, தாங்கள் இந்த அனுபவத்துக்குத் தகுதியானவர்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள், அல்லது, இந்த அனுபவம் இதைவிட இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், அல்லது, இந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை என்று புகார் சொன்னார்கள், இதன்மூலம் அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியைக் குறைத்துக்கொண்டார்கள்.   வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டேனியல் ஹர்லி மற்றும் பால் க்வான் நடத்திய இன்னோர் ஆய்வில், கடினமான சூழ்நிலையைச் சந்திக்கிறவர்கள் தாங்கள் ரசித்து அனுபவித்த கணங்களிலிருந்து மிகச்சிறந்த நம்பிக்கையை பெற்றார்கள், இதற்கு மாறாக,  நேர்விதமான, ஆனால் ரசித்து அனுபவிக்கப்படாத அனுபவங்களைக் கொண்டிருந்தவர்களைவிட இவர்கள் இதில் சிறந்து விளங்கினார்கள்.      ஒருவர், தன்னுடைய வாழ்க்கையில் இப்போது  மகிழ்ச்சியான கணங்கள் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், அவருடைய  நலனுக்கு ரசித்து அனுபவித்தல் மிக அவசியமாகிறது என்பதை இந்த ஆராய்ச்சி தெரிவித்தது.  

ரசித்து அனுபவித்தல் என்பது ஒரே வகை அனுபவம்தானா? டாக்டர் ப்ரயன்ட் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் நான்கு வகையான ரசித்து அனுபவித்தல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள், இவை அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் நாம் உணர்ந்து அதிகரிக்கலாம் என்று கண்டறிந்துள்ளார்கள்.   அவை: 

1.திளைத்தல் அல்லது பாராட்டுகள், புகழ்ச்சியைப் பெறுதல், குறிப்பாக யாருடைய கருத்துகளை நாம் மதிக்கிறோமோ அவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுதல். 
2.வியத்தல் அல்லது அந்தக் கணத்தின் வியப்பில் தன்னை மறத்தல்.   சிலநேரங்களில் பயணத்தின்மூலம் இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டாகின்றன.
3.ஆடம்பரத்தில் மூழ்குதல் அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்வில் மூழ்குதல். எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல காஃபியை மெதுவாக உறிஞ்சி அனுபவித்துக் குடித்தல் அல்லது நறுமணம் மிக்க மலர்களை முகர்தல்.
4.நன்றி தெரிவித்தல் அல்லது நன்றி உணர்வை வெளிப்படுத்துதல்.  இங்கு நன்றி உணர்வு என்பது உண்மையானதாக, உள்ளப்பூர்வமானதாக இருக்கவேண்டும், அப்போதுதான் அதற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.     

டாக்டர் ப்ரயன்ட் மற்றும் அவருடைய சக ஊழியர்கள், ‘மகிழ்ச்சியைக் கொல்லும் சிந்தனை’யை விட்டுவிடவேண்டும் என்று வலுவாக எச்சரிக்கிறார்கள், அதாவது, தங்களுக்கு வருகிற சிறிய, மகிழ்ச்சியான கணங்களை அடித்து வீழ்த்துதல் அல்லது குறைத்தல் போன்ற முயற்சிகளை அவர்கள் கவனமாகக் கைவிடவேண்டும்.     இதைச் செய்வதன்மூலம் சிலர் தங்களுக்குத் தாங்களே மிக மோசமான எதிரிகளாகிவிடுகிறார்கள்.   ஏன்? இந்த விஷயத்தில் அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்கு லட்சியப் பிம்பங்களாக இருந்திருக்கலாம்; பொதுவாக மக்கள் பரவலான மதிப்பீடுகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பெற்றோரிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.  ஆகவே, “இந்த மகிழ்ச்சியான கணம் என்றென்றும் தொடரப்போவதில்லை, இது மிக மோசமான விஷயம்!” அல்லது ”நான் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன், ஆனால் இதன்பிறகு நான் நிறைய வேலை செய்யவேண்டும்!” அல்லது "இப்போது நான் அதிக மகிழ்ச்சியை அனுபவித்துவிடக்கூடாது, ஏனெனில் நான் இப்போது மகிழ்ச்சியாக இருந்தால் பின்னர் மோசமாக உணர்வேன்” என்பது போன்ற எண்ணங்களை மக்கள் கைவிடவேண்டும்.    எதார்த்தமாக யோசித்தால் ரசித்து அனுபவித்தல் என்பது என்ன? ரசித்து அனுபவித்தலை மேம்படுத்துவதற்கு டாக்டர் ப்ரயன்ட் வழங்கும் பரிந்துரைகள்:  

1) தன்னுடைய மகிழ்ச்சியான அனுபவத்தைப்பற்றி தன் நண்பர்களிடம் சொல்லுதல்-அது ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கலாம், ஒரு சிறந்த உணவகமாக இருக்கலாம், அல்லது ஒரு மகிழ்ச்சியான விடுமுறைக் காலமாக இருக்கலாம்.     அந்த நிகழ்ச்சியை மீண்டும் இன்னொருவருக்குச் சொல்லும்போது அது வலுவாகிறது.  

2) அந்த அனுபவத்தை மனத்தில் படம் பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.  அதாவது, தன்னை எது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணரச்செய்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவேண்டும், எடுத்துக்காட்டாக தன்னுடைய அன்புக்குரிய ஒருவருடைய தொடுகை, நண்பருடைய சிரிப்பு போன்றவை.      

ஒரு சாதனை அல்லது மிகவும் முயற்சி செய்து சம்பாதித்த பலனை எண்ணித் தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளவேண்டும்.   அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

உணர்வுப் பார்வைகளைக் கூர்மையாக்கிக்கொள்ளவேண்டும்.  அதாவது, ஒலிகள், வண்ணங்கள், மணங்கள், சுவைகள் மற்றும் தொடுகை போன்ற உணர்வுகளில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.  ரசித்து அனுபவித்தலானது ஒருவருடைய உணர்வுகளால் வலுவாகப் பாதிக்கப்படுகிறது என்பதற்குச் சான்றுகள் உள்ளன, ஆகவே இதுபோன்ற உணர்வுகளை விட்டுவிடக்கூடாது.        

வழிநடத்தப்படும் செயல்பாடு  

ரசித்து அனுபவித்தலை மேம்படுத்துவதற்கு, ஒருவர் அன்றாடம் செய்கிற இரண்டு வேலைகளை எடுத்துக்கொள்ளலாம்: அவற்றில் ஒன்று வீட்டுக்குள் செய்யக்கூடியதாகவும் இன்னொன்று வீட்டுக்கு வெளியே செய்யக்கூடியதாகவும் இருக்கலாம்.  எடுத்துக்காட்டாக, குளித்தல், இரவு உணவு உண்ணுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஒரு பூங்காவில் நடத்தல்.    ஆரம்பத்திலாவது இவை தனியாகச் செய்யக்கூடிய முயற்சிகளாக இருக்கட்டும், கவனச்சிதறல்களை இயன்றவரை குறைக்கவேண்டும், எடுத்துக்காட்டாக ஸ்மார்ட்ஃபோனைக் கையில் கொண்டுசெல்லவேண்டாம்!   

இப்போது அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செயல்படத் தொடங்கவேண்டும். தான் எதை அனுபவிக்கிறோம் என்பதில் முழுக் கவனம் செலுத்தவேண்டும்.  அவர் ஐந்து உணர்வுகளுக்கும் தன்னைத் திறந்துகொள்ளவேண்டும், பிறகு அவற்றில் ஏதாவது ஓர் உணர்வைமட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும், அது தன்னுடைய விழிப்புணர்வை வழிநடத்தும்படி செய்யவேண்டும்.   இப்போது அவர் எதைக் கவனிக்கிறார்? எது புதியதாக அல்லது மாறுபட்டதாகத் தோன்றுகிறது? நேரம் விரிவடைவதையும் தன்னுடைய நலன் மேம்படுவதையும் அவர் உணரவேண்டும்.    ரசித்து அனுபவித்தலை ஒரு நண்பர் அல்லது அன்புக்குரியவருடன் உணர்ந்து அனுபவிப்பதும் நல்ல பலனைத் தரும்.   ஆடம்பரத்தில் மூழ்குதல் அல்லது நன்றி தெரிவித்தல்        போன்றவற்றை இன்னொருவருடன் இணைந்து இருபது நிமிடங்களுக்குத் திட்டமிடுவது எளிது, அத்துடன் ஒப்பிடும்போது, திளைத்தல் அல்லது வியத்தல் போன்றவற்றை இணைந்து செய்வது சிரமம்தான், ஆனால் அப்படிப்பட்ட சாத்தியங்களுக்கு மனத்தைத் திறந்துவைத்திருக்கவேண்டும்.      

நியூயார்க் நகரத்தில் உள்ள யஷிவா பல்கலைக்கழகத்தில் இணைப்புத் துணைப் பேராசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்.    தனிப்பட்ட பயிற்சிக்கு உரிமம் பெற்ற மருத்துவ உளவியல் நிபுணரான இவர், உளவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார்.    டாக்டர் ஹாஃப்மேன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்டனுடன் இணைந்து எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல், இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதநேய உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் பணியாற்றுகிறார்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org