தன்னிறைவு மக்களிடையே திருமணம் மற்றும் குழந்தைவளர்ப்பு

தன்னிறைவு மக்களிடையே திருமணம் மற்றும் குழந்தைவளர்ப்பு

என்னுடைய முந்தைய பத்தியில், தன்னிறைவு ஆண்கள் மற்றும் பெண்களிடையே நட்பு, காதல்பற்றிய மாஸ்லோவின் பார்வைகளை நான் வழங்கினேன். இந்தப் பத்தி, திருமணம் மற்றும் குழந்தைவளர்ப்பில் கவனம் செலுத்துகிறது. 

தன்னிறைவு மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா, தொடர்ந்த நெருக்கத்தை அவர்கள் அனுபவிக்கிறார்களா?

திருமணம் என்பது, மக்கள் தன்முனைப்பைத் தாண்டி வருவதற்கு, அவருடைய சொந்தச் சொற்களைப் பயன்படுத்துவதென்றால், அன்பு மற்றும் மதிப்புக்கான அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்குக் கற்றுக்கொள்வதற்கான ஓர் அவசியத் தேவை என்று மாஸ்லோ நினைத்தார். அதேசமயம், திருமணம் செய்துகொள்கிற இருவருக்கும் திருமணத்தாலேயே தானாக உணர்வு முதிர்ச்சி வந்துவிடும் என்று அவர் நம்பவில்லை. ஏனெனில், அமெரிக்காவிலுள்ள வயது வந்தோரில் (1950கள்-1960களில் இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள்) வெறும் 1% பேரைத்தான் தன்னிறைவு கொண்டோராக அவர் மதிப்பிட்டார். அப்படியிருப்பினும், திருமணமானது தன்னிறைவுக்குப் போதாவிட்டாலும், தேவையான ஓர் அளவுகோல் என்று மாஸ்லோ நம்பினார். ஏனெனில், அதன் மாற்று, அதாவது, பாலுறவற்றிருத்தல், ஆளுமை வளர்ச்சிக்குத் தேவையான மாறுபட்ட, தீவிர வாழ்க்கை அனுபவங்களைத் தடுத்தது.

தன்னிறைவு மக்கள் திருமணத்தில் போதுமான அளவு நன்றியுணர்வை உணர்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் மாஸ்லோ விவரித்தார். இந்தப் பார்வை, உச்ச-அனுபவங்களைப்பற்றிய அவருடைய ஆய்விலிருந்து வந்தது; இந்த ஆய்வில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பொருளுள்ள கணங்களில் அடிக்கடி உடனியங்குகிற ஒன்றாக நன்றியுணர்வு இருந்தது. எடுத்துக்காட்டாக, மாஸ்லோ இவ்வாறு கூறினார், “நன்றியுணர்வு என்பது, உணர்வு நலனுக்கு முக்கியமானது. அன்றாட வாழ்க்கையைக் குறைத்து மதிப்பிடுவதைத் தடுப்பது, உச்ச-அனுபவங்களை மீண்டும் தூண்ட உதவுவது ஆகிய இரண்டுக்காகவும், மக்கள் ‘தங்களுடைய நல்லவற்றை எண்ணிப்பார்ப்பது’ முக்கியம், இதன்மூலம், அவற்றை உண்மையில் இழக்காமலேயே, தன்னிடம் இருப்பதை எண்ணி மகிழலாம்.” 

மாஸ்லோ இந்தச் சொற்களை எழுதிப் பல பத்தாண்டுகளாகிவிட்டன, இந்தக் காலகட்டத்தில் நன்றியுணர்வானது குறிப்பிடத்தக்க உளவியல் ஆராய்ச்சியின் மையமாகியுள்ளது. நட்புகள், காதல் உள்ளிட்ட சமூக உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் மேம்படுத்தவும் நன்றியுணர்வு உதவுகிறது என்பதற்கான சான்றுகள் அதிகரித்துவருகின்றன. துணைவர்மீதான நன்றியுணர்வு, ஆர்ப்பாட்டமான, ஆனால், அபூர்வமான கருணையுள்ள செயல்களைவிட, அடிக்கடி நிகழ்கிற சிறு கருணைச் செயல்களை அனுபவிப்பதுடன்தான் தொடர்புபடுத்தப்படுகிறது, புதிரான விஷயம், திருமண உறவில் நிதி அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.    

தன்னிறைவு மக்கள் பெற்றோராக எப்படி இயங்குகிறார்கள்

மாஸ்லோவுடைய பதிப்பிக்கப்பட்ட எழுத்துகள்முழுவதும் அவர் ஆங்காங்கே எழுதியுள்ள கருத்துகளின் அடிப்படையில், தன்னிறைவு மக்கள் உண்மையில் பெற்றோராக எப்படி இயங்குவார்கள் என்பதுபற்றிய அவருடைய கருத்தாக்கத்தைத் திரட்டலாம். அவரும் அவருடைய மனைவி பெர்த்தாவும் இரண்டு மகள்களை வளர்த்தார்கள்; தன்னுடைய பேச்சி ஜீனியின் பிறப்பு, குழந்தைப்பருவத்தை அவர் கண்டார். மாஸ்லோவுடைய பெரிய இதய அதிர்ச்சிக்குப்பின் உடனடியாகப் பிறந்த பேத்தியைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார். சில பத்தாண்டுகள் முன்பாக, தன்னுடைய இரு மகள்களும் கருப்பையில் இருக்கும்போதே குறிப்பிடத்தக்க மாறுபாடுள்ள ஆளுமைகளைக் காட்டியுள்ளார்கள் என்று அவர் அவதானித்தார். அப்போது, மனித இயல்புபற்றிய உண்மையான முழுக் கருத்தாக்கமானது பிறப்பில் உடன்வரும் அம்சங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் உணர்ந்தார். எடுத்துக்காட்டாக, அவர் இவ்வாறு சொன்னார்: “தன்னிறைவுபற்றிப் பேசுகிறோம் என்றால், நிறைவடைவதற்கு ஒரு சுயம் இருக்கிறது என்று பொருள். மனிதர் என்பவர் ஒரு டாபுலா ரோஸா-வோ ஒரு களிமண் உருண்டையோ இல்லை.”  

பெற்றோராகும் தன்னிறைவு மக்கள் இயற்கையான பொறுப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள்? உயர் ஊக்கம்பற்றிய கட்டுரையொன்றில் மாஸ்லோ இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “இதுபற்றிய அவதானிப்புகள், அவர்கள் தங்களுடைய குழந்தைகளிடம், அவர்கள் நல்ல வயதுவந்தோராக வளர உதவுவதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.” ஆனால், இந்த இரு குணங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் மாறுபட்டவை: ஒரு பெற்றோர், தன் குழந்தையிடம் மேலோட்டமாக அல்லது உணர்ச்சியற்றவகையில் ஒரு வலுவான தார்மிக-நீதிக் கட்டுப்பாட்டை விதிக்கலாம், இன்னொருவர் தன்னுடைய மகன் அல்லது மகளுக்கு எப்போதும் தார்மிகம் அல்லது நீதி உணர்வைப் புகுத்தாமல் அவருடன் விளையாடி மகிழலாம். அதேசமயம், குழந்தைகளை வளர்க்கும் தன்னிறைவு மக்கள்மத்தியில் மகிழ்ச்சி மற்றும் மதிப்பீடுகளை அமைக்கிற இந்த இரு குணங்களும் முரண்படவில்லை, ஒருங்கிணைந்திருந்தன என்று தெளிவாகத் தெரிவிக்கிறார் மாஸ்லோ. ஆகவே, மாஸ்லோவுடைய பார்வையில், தன்னிறைவு மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள், அதேசமயம் (அவருடைய சொற்றொடரில்) “ஒரு நல்ல மனிதராக” ஆவதற்கான மதிப்பீடுகளைக் கற்றுத்தருவதற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். 

தங்களுடைய குழந்தையின் தனித்துவமான, தனிப்பட்ட தன்மைக்கு மிகவும் நுண்ணுணர்வோடு இருக்கிறவர்களாகத் தன்னிறைவு மக்களைக் கண்டார் மாஸ்லோ. அந்த நுண்ணுணர்வு, தூய கவனத்திலிருந்து (இன்று கவனமுள்ள குழந்தை வளர்ப்பு என்று அழைக்கப்படக்கூடியது) வருகிறது, அதற்கு எந்த இணையையும் அவர் காணவில்லை. ஆகவே, மனிதத்தன்மையுள்ள ஓர் உயிரியலை நோக்கி என்ற தன்னுடைய கட்டுரையில் அவர் இவ்வாறு சொன்னார்: “தாய், தன்னுடைய குழந்தையைக் கண்டு மகிழ்கிறார், குழந்தையுடைய ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் திரும்பத்திரும்ப ஆராய்கிறார், அதில் மிகவும் திளைக்கிறார்; ஆகவே, நேரடியாகச் சொல்வதென்றால், அந்தக் குறிப்பிட்ட குழந்தைமீது ஆர்வமில்லாத இன்னொருவரைவிட அவருக்குத் தன்னுடைய குழந்தையைப்பற்றிக் கண்டிப்பாக அதிகம் தெரிந்திருக்கும்.” 

தன்னுடைய மனநல மருத்துவ நண்பரான டேவிட் எம் லெவியுடைய விளையாட்டுச் சிகிச்சைப் புதுமைச்சிந்தனைகளில் ஆலோசனையாக வழங்கப்பட்டிருந்த ஒரு திட்டத்தைப் பயன்படுத்தி, மாஸ்லோ தன்னுடைய இரு மகள்களிடம் தன்னுடைய கவனத்தை அதிகப்படுத்த முயன்றார். அவ்வப்போது, மாஸ்லோ தன்னுடைய மகள்களான ஆன், எல்லெனிடம் ஒரு பொம்மலாட்டக் காட்சியை நடத்துமாறு கேட்பார், அவர்களுடைய மகிழ்வூட்டுகிற பொழுதுபோக்குக்குப் பணம் தருவதாகச் சொல்வார். அவருடைய மகள்கள் நடித்துக்காட்டிய பொம்மலாட்டக் கதைகள் அவர்களுடைய சுயத்தை வெளிப்படுத்துபவையாக இருந்தன, அவற்றின்வழியே, அவர்களுடைய அடியாழத்தில் இருந்த உணர்வுகளை அவரால் பகுத்துணர முடிந்தது. இதைப் பல ஆண்டுகள் கழித்துதான் அவருடைய மகள்கள் அடையாளம் கண்டார்கள்.  

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தின் இணை உதவி உளவியல் பேராசிரியர். தனிப்பட்ட செயல்பாட்டில் உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் தொடர்புள்ள துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். டாக்டர் ஹாஃப்மன், டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து சமீபத்தில் எழுதிய நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியுடைய அறிவியல். நேர்வித உளவியலுக்கான இந்தியச் சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் இவர் பணியாற்றுகிறார். நீங்கள் அவரை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்columns@whiteswanfoundation.org

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org