ஒழுக்கம் சார்ந்த எழுச்சி: மகிழ்ச்சிக்கான ஒரு வியப்பளிக்கும் வழி

ஒழுக்கம் சார்ந்த எழுச்சி: மகிழ்ச்சிக்கான ஒரு வியப்பளிக்கும் வழி

அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் மற்றும் அதன் சுதந்திரப் பிரகடனத்தின் முதன்மை ஆசிரியராகிய தாமஸ் ஜெஃபர்சன், நேர்வித உளவியலில் ஒரு புதிய சிறப்புப் பிரிவை உருவாக்குவதற்கு உதவினார் என்பது தெரியுமா?   வரலாற்றின் மிகப்பெரிய ஆளுமைகள் மனித மனத்தைப்பற்றிய புதிய பார்வைகளை வழங்குவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இது.    1771 ம் ஆண்டில், ஜெஃபர்சனின் நண்பர் ராபர்ட் ஸ்கிட்வித் தன்னுடைய தனிப்பட்ட நூலகத்துக்கு எந்தெந்தப் புத்தகங்களை வாங்கலாம் என்று ஜெஃபர்சனிடம் ஆலோசனை கேட்டார், அப்போது ஜெஃபர்சன் அவருக்குப் புனைவு புத்தகங்களையும், வரலாற்று மற்றும் இயற்கை அறிவியல் சார்ந்த நூல் தொகுப்புகளையும் பரிந்துரைத்தார், இதற்கு அவர் சொன்ன காரணம் “நம்முடைய பார்வையிலோ கற்பனையிலோ எந்த ஒரு தொண்டு அல்லது நன்றியுணர்வுச் செயல்பாடும் தோன்றுகிறபோது, அதன் அழகு நம்மை ஆழமாகக் கவர்கிறது, நாமும் அப்படிப்பட்ட தொண்டு சார்ந்த மற்றும் நன்றியுணர்வு சார்ந்த செயல்களைச் செய்யவேண்டும் என்கிற வலுவான விருப்ப உணர்வை உண்டாக்குகிறது.”    நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியரான ஜொனாத்தான் ஹைடிட் ஒழுக்கம் சார்ந்த வெறுப்பு (வெறுப்பூட்டும் செயல்பாடுகளைப்பற்றிக் கேள்விப்படும்போது ஏற்படும் எதிர்மறை உணர்ச்சி) என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் எதேச்சையாக ஜெஃபர்சனின் கருத்தைப் படித்தார்.  இந்தக் கருத்து நிச்சயம் ஆர்வத்தை தூண்டுகிறது, ஆனால் இது அறிவியல்ரீதியில் உண்மையா?    

2000களின் தொடக்கத்திலிருந்து டாக்டர் ஹைடிட் மற்றும் அவருடைய சர்வேதேசச் சக நிபுணர்கள் பல பரிசோதனைகளை நடத்தினார்கள், அதன்மூலம் ஜெஃபர்சன் சொன்னது உண்மைதான் என்று உறுதிசெய்தார்கள்.  உணர்வுகள் அடிப்படையில் அகநிலையாகவும், புறநிலை விளைவுகள் சார்ந்தும், ஒழுக்கம் சார்ந்த உயர்வு அல்லது ஒழுக்கம் சார்ந்த எழுச்சி (இந்த இரு சொற்களும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன) என்பது ஓர் உண்மையான மற்றும் அளவிடக்கூடிய உணர்வு நிலையாகக் காணப்பட்டது, இது அவ்வப்போதைய மகிழ்ச்சியிலிருந்து மாறுபட்டிருந்தது.     இந்த உணர்வு நிலையானது நெகிழ்ச்சி, உயர்ந்த எண்ணம் ஆகியற்றுடன் குறிப்பாகத் தொடர்புபடுத்தப்பட்டது, இந்த உணர்வுநிலையை அனுபவிக்கிறவர்கள் நெஞ்சில் ஒரு கதகதப்பான உணர்வைப் பெறுவார்கள், தாங்கள் இன்னும் சிறப்பானவராக நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள், பிறருக்கு உதவ விரும்புவார்கள்.   

ஆர்வமூட்டும் விஷயம், இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள பரிசோதனை ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாகத் தெரியவருகிற ஒரு விஷயம், உந்துதலை உண்டாக்கும் திரைப்படங்கள்கூட (அவை ஆவணப்படங்களாக இருக்கலாம், அல்லது கதை சார்ந்தவையாக இருக்கலாம்) ஒழுக்கம் சார்ந்த எழுச்சியை உண்டாக்கலாம்.   இந்தக் கண்டுபிடிப்பானது, மனநல நிபுணர்களுடைய சிகிச்சை சார்ந்த பணியுடன் குறிப்பிடத்தக்க அளவு ஒத்துப்போகிறது.  எடுத்துக்காட்டாக, இந்தப் பின்னணியில் திரைப்படங்களைப் பயன்படுத்துவதுபற்றி இணையத்தில் நான் ஒரு கேள்வியைப் பதிவுசெய்தேன், உலகெங்கிலுமிருந்த உளவியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டிகள் அதற்குப் பதிலளித்தார்கள், சில குறிப்பிட்ட திரைப்படங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய உணர்வுகளை எப்படி மேலெழச்செய்தன என்று விளக்கினார்கள்.       புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான காந்தி  மற்றும் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், போன்றவையும் “இன்னும் சிறிய” திரைப்படங்களான தி புக் தீஃப் மற்றும் கிரவுண்ட்ஹாக் டே போன்றவையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.    என்னுடைய சக ஊழியர்களில் சிலர் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சில குறிப்பிட்ட திரைப்படங்களை வழங்கிப் பார்க்கச்சொல்வதாகச் சொன்னார்கள், இது அவர்களுக்கு மனித இனத்தின்மீது முன்பைவிட அதிக நேர்வித நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது, மக்கள் சுயநலம், வெறுப்பு அல்லது குரூரத்தோடுமட்டுமின்றி தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் ஈகை குணத்துடனும் செயல்படலாம் என்பதை அவர்கள் அடையாளம் காண உதவுகிறது என்றார்கள்.   

  என்னுடைய உயர்நிலைப்பள்ளியுடைய முன்னாள் மாணவர்களுடைய இணையத்தளத்திலும் நான் இதேபோன்ற ஒரு கேள்வியைப் பதிவுசெய்தேன், அதற்கும் இதயப்பூர்வமான பல பதில்கள் வந்தன.    அதற்குப் பதிலளித்த ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், “ஊடக விற்பனைத்துறையில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியபிறகு நான் புதிய சவால்களை எதிர்நோக்கியிருந்தேன்.  அப்போதுதான் நான் பொலியாவில் பிறந்த லாஸ் ஏஞ்ஜலஸ் கல்வியாளரான ஜெய்மே எஸ்கெலன்டெயைப்பற்றிய ஸ்டாண்ட் அன்ட் டெலிவர்  திரைப்படத்தைப் பார்த்தேன்… கல்லூரியிலும் உயர்நிலைப் பள்ளி நிலையிலும் கல்வி கற்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று நான் தீர்மானித்ததை மிகவும் பாதித்த ஒரு காரணியாக அந்தப் படம் அமைந்தது.” இதற்குப் பதிலளித்த இன்னொருவர் இப்படிச் சொன்னார் ”1950களில் வெளியான ஒரு செவ்வியல் நாடகமாகிய 12 ஆங்க்ரி மென், திரைப்படத்தை நான் பார்த்தேன், ஒரு கொலை வழக்கின் தீர்ப்புக்குழுவினருக்கிடையே ஏற்படும் இழுபறியைப்பற்றிய திரைப்படம் அது.” முரண்பாடுகளுக்கு எதிராகச் செயல்படும் ஒரு மனிதர் இந்த உலகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று அந்தப் படம் உண்மையாகவே எண்ணச்செய்தது.” 

    இந்த ஆர்வமூட்டும் சூழலை ஆராய்ந்துவரும் முன்னணி உளவியலாளர்களில் ஒருவர், சேவியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரயான் நியமிக்.   அவருடைய பார்வையில், ஒருவர் உந்துதல் அளிக்கும் திரைப்படக் கதாபாத்திரம் ஒன்றையோ கருப்பொருள் ஒன்றையோ கண்டபிறகு, பல சாத்தியமான வழிகளில் திரைப்படம் சார்ந்த மேலெழல் அவருக்குள் ஏற்படலாம்.   எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக்கொள்வதற்கு அல்லது ஓர் அன்புக்குரியவருக்கு உதவுவதற்கு அந்தத் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்துடைய மையப் பலங்களை பிரதியெடுக்கத் தீர்மானிக்கலாம்.   ஆகவே, ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தைப் பார்க்கிறவர்களில் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதிக நம்பிக்கை மற்றும் விடா முயற்சியைக் கொண்டுவருவதற்குத் தூண்டப்படலாம்.  இன்னும் சிலர்  2>தி ஆர்ட்டிஸ்ட்போன்ற திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, அதில் காட்டப்பட்ட வலிமை அல்லது ஒழுக்கத்திலிருந்து மாறுபட்ட இன்னொரு வலிமை அல்லது ஒழுக்கத்தை வெளிப்படுத்தத் தீர்மானிக்கலாம்-எடுத்துக்காட்டாக ஆர்வத்துக்குப் பதிலாக அவர்களுக்கு வாழ்க்கைமீது நன்றியுணர்வு வரலாம். 
 இன்னும் சிலர், கிரவுண்ட்ஹாக் டே,போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு மாறிய வெளிப்பார்வையின்மூலம் “நல்லவற்றைச் செய்வதற்கு” அல்லது தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்வதற்கு உந்துதல் பெறலாம்.
 என்னுடைய தொழில்முறை அனுபவத்தில், இந்தப் பின்னணியில் அடிக்கடி குறிப்பிடப்படும் திரைப்படங்கள் சில ஆஸ் குட் ஆஸ் இட் கெட்ஸ், ஃபைண்டிங் ஃபாரஸ்டர் மற்றும் இயக்குநர் ஃப்ராங் காப்ராவுடைய செவ்வியல் திரைப்படமான இட்ஸ் வொண்டர்ஃபுல் லைஃப்.   இந்தப் பட்டியல் நீளமானது, அது உண்மையில் ஓர் ஊக்கமளிக்கும் விஷயமாக உள்ளது.

ஒழுக்கம் சார்ந்த எழுச்சிக்கு ஓர் உண்மையான உடல்சார்ந்த அடிப்படை இருக்கிறதா? அப்படிதான் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  ஒரேகான் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சரீனா சாட்டர்ன் வழிநடத்தலில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், 104 கல்லூரி மாணவர்கள் சில வீடியோக்களை பார்த்தார்கள் இந்த வீடியோக்களில் சில, வீரம் சார்ந்த, இரக்கம் சார்ந்த பணிகளைக் காட்டின, பிற வீடியோக்கள் வெறுமனே ஆர்வமூட்டும் சூழல்களைமட்டுமே காட்டின.    அதேசமயத்தில், ஆய்வில் பங்கேற்றவர்களுடைய இதயத் துடிப்பு மற்றும் மீடியல் ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் செயல்பாடுகளையும் அவர்களுடைய சுவாச சைனஸ்-அரித்மியாவையும் (மனிதர்களை அமைதிப்படுத்துகிற, தன்னைத்தானே அமைதியாக்கிக்கொள்ள உதவுகிற ஓர் அமைப்பு, பேரா சிம்பதடிக் நரம்பியல் அமைப்பின் (PNS) செயல்பாட்டைக் காட்டுகிறது)  ஆய்வாளர்கள், அளவிட்டார்கள். டாக்டர் சாட்டர்னின் ஆராய்ச்சிக் குழுவினர் எதிர்பார்க்காதவிதமாக, மனவெழுச்சியைத் தூண்டும் வீடியோக்களைப் பார்த்தவர்களில், குறிப்பாக மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தீவிரத்தன்மை கொண்ட கணங்களில், இதயத்துடிப்பு, PNS ஆகிய இரண்டும் தூண்டப்பட்டன. இதற்கு நேர் எதிராக, வெறுமனே ஆர்வமூட்டும் வீடியோக்களைப் பார்த்த கல்லூரி மாணவர்களுடைய இதயத்துடிப்போ, உடல் சார்ந்த, தன்னைத்தானே இதமாக்கிக்கொள்கிற பகுதிகளோ தூண்டப்படவில்லை. 

இப்படிப்பட்ட முடிவுகளின்மூலம் தெரியவருகிற உண்மை, ஒழுக்கம் சார்ந்த நல்ல செயல்பாடுகளைக் காண்பது ஒரேநேரத்தில் ஆற்றலையும் தருகிறது, உடல்ரீதியிலும் இதமான உணர்வை உண்டாக்குகிறது-இது ஓர் ஆற்றல் மிகுந்த கூட்டணியாகும்  இதுபற்றி டாக்டர் சாட்டர்ன் ஒரு பத்திரிக்கையாளரிடம் குறிப்பிட்டது, “மக்கள் இரக்கமாக நடந்துகொள்கிற காட்சிகளைக் கொண்ட உந்துதல் அளிக்கும் ஒரு வீடியோவைக் காட்டுவதன்மூலமே மக்களுடைய உடலில் வியப்பூட்டும் நிகழ்வுகளை உண்டாக்க இயலும், அதேபோல் தாங்களும் பிறருக்கு உதவவேண்டும், சமூகத்தில் அன்பாகப் பழகவேண்டும் என்று விரும்பச்செய்யமுடியும் என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம்."

வழிநடத்தப்பட்ட செயல்பாடுகள்

ஒழுக்கம் சார்ந்த எழுச்சி என்பது நல்ல செயல்களையும் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் தூண்டுவதால், குறிப்பிடத்தக்க இரக்கம், துணிவு அல்லது பொதுநலச் செயல் என்று தான் முன்பு கண்ட நிகழ்வுகளைத் திரும்ப எண்ணிப்பார்ப்பது நன்மை தரும்.   எடுத்துக்காட்டாக, அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் இரக்கத்துடன் நடந்துகொள்வதை எல்லாரும் பார்த்திருப்பார்கள், அதை மீண்டும் எண்ணிப்பார்க்கலாம். அந்த நிகழ்வை எழுத்தில் விவரிக்கலாம், அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது தான் எப்படி உணர்ந்தோம் என்பதைக் கண்டிப்பாகப் பதிவுசெய்யவேண்டும்.  இந்த நிகழ்வைத் தொடங்கியவர் அல்லது அதனால் பலன் பெற்றவரைத் தான் முன்பே அறிந்திருந்தோமா அல்லது அவர்கள் தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாதவர்களா என்பதையும் அவர் எழுதலாம்.   அதைப் பார்த்தபோது, இப்படிப்பட்ட கருணையைப் பிறரிடம் காட்டவேண்டும் என்கிற உந்துதல் தனக்கு ஏற்பட்டதா என்று அவர்  சிந்திக்கலாம்.   ஆம் எனில், தான் அதைப்பற்றி என்ன செய்தோம் என்பதையும் அவர் பதிவு செய்யலாம்.

அடுத்து, துணிவு (உடல் சார்ந்தது அல்லது ஒழுக்கம் சார்ந்தது), பொதுநலச் சிந்தனை அல்லது உறுதியான அன்பு (எகா: ஒரு பெற்றோர் தன்னுடைய குழந்தைமீது காட்டும் அன்பு) போன்றவற்றைக் காட்டும் எந்தத் திரைப்படமாவது தன்னை நெகிழவைத்ததா என்று அவர் சிந்திக்கலாம்.    அந்தத் திரைப்படம் உணர்வுரீதியில் மற்றும் உடல்ரீதியில் தன்னை எப்படி உணரச்செய்கிறது என்று சிந்திக்கலாம்.  பாராட்டக்கூடிய இந்தச் செயலைச் செய்தவர், அதைப் பெறுகிறவர் ஆகிய இருவரில் யாருடன் தான் அதிகம் ஒத்துப்போவதாக நினைக்கிறோம் என்று சிந்திக்கலாம்.  நிறைவாக, மனித இயல்பில் இருக்கிற நல்லவற்றுக்கான சாத்தியத்தைப்பற்றிய ஓர் உணர்வெழுச்சி தேவைப்படுகிற ஒரு பதின்பருவத்தினருக்குத் தாங்கள் எந்தெந்த திரைப்படங்களை பரிந்துரைப்போம் என்று சிந்திக்கலாம், அது ஏன் என்பதுபற்றியும் சிந்திக்கலாம்.   

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூயார்க் நகரத்தில் உள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் ஓர் இணைத் துணை உளவியல் பேராசிரியர்.   தனிப்பட்ட மருத்துவச் சேவையை வழங்கும் ஓர் உரிமம் பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல், அது தொடர்பான 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/ தொகுத்துள்ளார்.     சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து டாக்டர் ஹாஃப்மன் எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல். இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதநேய உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் அவர் பணியாற்றுகிறார்நீங்கள் அவருக்கு எழுத விரும்பினால் இந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org  

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org