நலன்

அவர் இரவுமுழுக்கத் தரையைத் தட்டிக்கொண்டிருந்தார்

தீவிர செயல்பாட்டுக் குறைபாட்டால் அவதிப்பட்ட கபில், மருத்துகள் மற்றும் சிகிச்சையின்மூலம் 80 சதவிகிதம்வரை குணமாகிவிட்டார்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

கபில் தினமும் அலுவலகத்துக்குக் கிளம்புவதற்கு முன்னால் தன்னுடைய வாகனத்தைக் கிளப்புவார், அணைத்துவிடுவார், மீண்டும் கிளப்புவார், மீண்டும் அணைத்துவிடுவார், இது பல முறை தொடரும், அதன்பிறகுதான் அவர் அலுவலகத்துக்குக் கிளம்புவார்.

இரவு நேரங்களில் கபில் தூங்கச்செல்வதற்குமுன்னால் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் திரும்பத் திரும்பச் செய்வார். அவை தேவையே இல்லாத, விரிவான நடவடிக்கைகளாக இருக்கும்.

அதேபோல், பகலில் அவர் வீட்டில் இருக்கும்போதெல்லாம், அங்கும் இங்கும் சுற்றிவந்து எல்லாப் பொருள்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டே இருப்பார். இவை அனைத்தும் கபிலின் மனைவி சுனிதாவுக்கு மிகுந்த சலிப்பை உண்டாக்கின.    

ஒருநாள், சுனிதாவின் தோழி ஒருவர் ’நாம் வசிக்கும் பகுதியில் ஓர் உளவியல் நிபுணர் இருக்கிறார்’ என்று எதேச்சையாகச் சொன்னார். உடனே, சுனிதா கபிலிடம் பேசினார், அவர் அந்த உளவியல் நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். அவருடைய கட்டாயத்தால் கபில் அந்த உளவியல் நிபுணரைச் சந்திக்க வந்தார்.

சுனிதா மருத்துவரிடம் ‘எங்களுக்குத் திருமணமானபோதிலிருந்தே நான் இதைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன், கபில் தினமும் தூங்குவதற்குமுன்னால் பல வினோதமான, தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகிறார், அவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறார், உதாரணமாக அவர் தன்னுடைய விரலால் தரையைத் தட்டுவார், தூங்கச்செல்வார், மீண்டும் எழுந்து தரையை தட்டத் தொடங்குவார், சில நேரங்களில் மணிக்கணக்காகத்  தொடர்ந்து தரையைத் தட்டிக்கொண்டும், படுக்கையில் படுத்துக்கொண்டும் இருப்பார்.

'அதேபோல், காலையில் அலுவலகத்துக்குச் செல்லும்போது அவர் திரும்பத் திரும்ப வண்டியை கிளப்பி, அணைத்து, கிளப்பி, அணைத்துக்கொண்டே இருக்கிறார். இதனால் அவர் எப்போதும் அலுவலகத்துக்குத் தாமதமாகவே செல்கிறார். அதனால்தான் நான் உங்களைச் சந்தித்து இவரைப்பற்றி ஆலோசனை பெறவேண்டும் என்று தீர்மானித்தேன்’ என்றார் சுனிதா ’இதனால் இவருக்கு வேலையே போய்விடுமே என்று பயமாக இருக்கிறது. நான் வேலைக்குச் செல்வதில்லை. எங்களுக்கு 2 சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள், ஒருவேளை இவருக்கு வேலை போய்விட்டால் எங்களுடைய நிதி நிலைமை என்ன ஆகும் என்று நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.’

சுனிதா சொன்னதை உளவியல் நிபுணர் கேட்டார். அதன்பிறகு கபிலிடம் ‘நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

கபில் மிகவும் சங்கடமாக உணர்ந்தார், ஆனால், அவர் பேசத்தொடங்கினார், ‘இந்தச் செயல்களில் சிலவற்றைச் செய்யாவிட்டால் எனக்கு மிகவும் பதற்றம் ஏற்படுகிறது, என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே இயலுவதில்லை. அதுபோன்ற நேரங்களில் நான் இந்தப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றாவிட்டால், அல்லது இதில் ஏதேனும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டால் வீட்டில் ஏதாவது மோசமாக நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்த வேலைகளைத் திரும்பத் திரும்ப நெடுநேரத்துக்குச் செய்துகொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என்பது எனக்குத் தெரியும், ஆனால், என்னுடைய பதற்றம் என்னை வென்றுவிடுகிறது.’

அடுத்த அரைமணி நேரத்துக்கு, தான் தூங்கி எழுவதில் தொடங்கி தூங்கச்செல்லும்வரை திரும்பத் திரும்பச் செய்கிற பல விஷயங்களை கபில் விவரித்தார். இவையெல்லாம் அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுவதை அவர் உணர்ந்திருந்தார், ஆனால் அவரால் இந்தப் பழக்கங்களை நிறுத்த இயலவில்லை.

கபிலுக்கு தீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD) பிரச்னை இருப்பதாக மருத்துவர் கண்டறிந்தார். கபிலுக்கும் சுனிதாவுக்கும் OCDயைப்பற்றி விரிவாக விளக்கினார். சமூகத்தில் பலருக்கும் OCD பிரச்னை இருப்பதாகவும், அதைக் குணப்படுத்த இயலும் என்றும் அவர் நம்பிக்கை தந்தார்.

அதன்பிறகு, பல மாதங்களாக கபில் மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார், சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். கபில் முன்பைவிட நன்கு முன்னேறிவிட்டதாக, 80 சதவிகிதம் குணமாகிவிட்டதாக சுனிதா சொல்கிறார். இதனைக் கபிலும் ஏற்றுக்கொள்கிறார். சில சமயங்களில், இந்தப் பழக்க வழக்கங்களில் ஈடுபட்டே தீரவேண்டும் என்கிற தீவிர எண்ணம் தனக்கு வருவதாகவும், தன்னால் அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்த உந்துதல்களைப் புறக்கணிக்க இயலுகிறது என்றும் கபில் சொல்கிறார்.

இப்போது, அவர் தன்னுடைய வேலையை நன்றாகச் செய்கிறார், தன்னுடைய குறைபாட்டால் தனக்கு வேலை போய்விடுமோ என்கிற கவலை அவருக்கு இல்லை.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org