விமானமா? வேண்டாம்

அச்சக்கோளாறுகள் குணப்படுத்தக்கூடியவையே; அவை உங்கள் வாழ்க்கையை ஆள அனுமதிக்காதீர்கள்

தனது அத்தை மகளுடன் ராஜஸ்தானுக்கு விடுமுறைச் சுற்றுலா செல்லவிருந்தார் சாந்தா. ஆனால், கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்துவிட்டு ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க சென்றுவிட்டார். காரணம், சாந்தா விமானத்தைப் பிடிக்க  விமானநிலையத்துக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

மருத்துவரின் அறையில் காந்திருந்தபோது, அவர் பார்ப்பதற்கு மிகவும் சங்கடத்துடனும் சோகத்துடன் காணப்பட்டார். தன்னால் அத்தை மகளின் பயணம் ரத்து ஆனதை எண்ணி அவர் மிகவும் மோசமாக உணர்ந்தார்.

சாந்தா ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்?

சில ஆண்டுகளுக்குமுன், நியூயார்க்கில் சில விமானங்கள் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளாகின, அதன்பிறகும் அடுத்தடுத்து சில விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் பார்த்துப்பார்த்து, விமானத்தில் பயணம் செய்வதே ஆபத்து என்று சாந்தாவுக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது.

இதற்குமுன்பும் அவர் இப்படிச் சில பயணங்களை ரத்து செய்திருக்கிறார், குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது, கணவருடன் மகிழ்ச்சியாகச் சுற்றுலா செய்வது… எல்லாவற்றையும் அவர் விட்டுவிட்டார், காரணம், இந்தப் பயம்தான்.

ஆனால், சாந்தா தன்னுடைய பயத்தைத் தன் அத்தை மகளிடம்சொல்லவில்லை, அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்துவந்தார்.

மற்றபடி, சாந்தாவுக்கு எந்த வருத்தமோ பதற்றமோ இல்லை, தன் வாழ்க்கை திருப்தியாக இருப்பதாகவே அவர் சொல்கிறார்.

சாந்தாவின் குழந்தைகள் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள், கணவர் ஓய்வுபெற்றுவிட்டார், அவர்கள் மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.           

ஓய்வுக்குப்பிறகு, அவர்கள் முன்பைவிட அதிகம் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது, விமானத்தில் ஏறவேண்டும் என்ற சிந்தனைகூட அவளை மிகவும் பதற்றப்படுத்தியது, வியர்த்துக்கொட்டியது.

இதற்குமுன் சிலமுறை அவர் விமானத்தில் ஏறிவிட்டு மிகவும் பயந்து நடுங்கியிருக்கிறார், இதனால், அவருடைய பயம் மேலும் அதிகமாகிவிட்டது.

மனநல நிபுணர் சாந்தாவுடன் சிறிதுநேரம் பேசினார், அவருக்கு வந்திருப்பது என்ன பிரச்னை என்று விவாதித்தார். இந்தப் பேச்சின் அடிப்படையில், சாந்தாவுக்கு ஒரு தனிப்பட்ட அச்சக்கோளாறு வந்திருப்பதை அவர் கண்டறிந்தார். இதற்குச் சிகிச்சை உள்ளது என்று உறுதியளித்து அவருடைய அச்சத்தை நீக்கினார்.

அடுத்த சில வாரங்களுக்கு, இந்த அச்சத்திலிருந்து எப்படி மீள்வது என்பதுபற்றி உளவியல் நிபுணர் சாந்தாவுக்கு அறிவுரை வழங்கினார். படிப்படியாக அவரது பயம் குறைந்தது.

சில மாதச் சிகிச்சைகளுக்குப்பிறகு விமானத்தில் பறப்பதுபற்றிய தன்னுடைய பயம் குறைந்துள்ளதாக சாந்தா கூறினார். சாந்தாவும் அவரது கணவரும் டெல்லிக்குப் பயணம் செய்யத் தீர்மானித்தார்கள்.

இப்போது, சாந்தா விமானத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்தார், கொஞ்சம் பதற்றம்மட்டுமே இருந்தது. அதன்பிறகு, அடுத்தடுத்த பயணங்களில் அதுவும் சென்றுவிட்டது, அவர் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் விமானத்தில் பயணம் செய்யத் தொடங்கினார்.

6 மாதங்களுக்குப்பிறகு அவர் தனது மனநல ஆலோசகரை அழைத்து நன்றி கூறினார். இப்போது தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், இந்தியாமுழுக்கப் பல இடங்களுக்குப் பயமின்றி விமானங்களில் பயணம் செய்வதாகவும் சொன்னார்.

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org