ஒவ்வொருவரும் சரியானவிதத்தில் எதிர்வினையாற்றவேண்டும், அதுதான் அவர்களைக் காக்கும்

பெரிய அதிர்ச்சிச் சூழலொன்றைக் கையாள்கிறவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்காக ஓர் உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கிக்கொள்ளலாம். ஆனால், இது அவருடைய உணர்வு நலனுக்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடும்
ஒவ்வொருவரும் சரியானவிதத்தில் எதிர்வினையாற்றவேண்டும், அதுதான் அவர்களைக் காக்கும்

தங்களுடைய பதற்றத்தைப்பற்றி அறிந்திருக்கிறவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவ்வாறு அறியாதவர்கள், மற்றவற்றை அறியவேண்டியிருக்கிறது: தலைவலிகள், முதுகுவலிகள், வயிற்றுவலிகள், ஒற்றைத் தலைவலிகள், சோம்பல், வெறுமையுணர்வு, கவனமின்மை, உணர்ச்சியின்மை மற்றும் சோர்வாக உணர்தல்.

பதற்றம் என்பது ஓர் அடையாளம், ஒருவருடைய அமைப்பு காண்கிற ஓர் அச்சுறுத்தலின் அடையாளம். அது ஓர் எச்சரிக்கையாக இருப்பதால், அதைக் கவனிப்பது சிறப்பான பலன்களைத் தரும். செயலை நோக்கி நகரவேண்டும் என்கிற ஓர் உடல் சார்ந்த துடிப்பை அது உருவாக்குகிறது, தாக்க வருகிற ஒருவரை எதிர்த்து மோதி வெல்லவேண்டும், அல்லது, அங்கிருந்து தப்பி ஓடவேண்டும், இப்படி ஏதாவது ஓர் எதிர்வினையை ஆற்றவேண்டும் என்கிறது. ஆகவே, கொரோனாவைரஸ் என்கிற இப்போதைய அச்சுறுத்தலுக்கு மக்களிடம் எதிர்பார்க்கப்படும் எதிர்வினை, வீட்டிலேயே இருப்பது, ஏதும் செய்யாமல் இருப்பது என்பது முற்றிலும் நகைமுரணானது.

நான் ஓர் உளவியல் சிகிச்சையாளர், ஆகவே, மக்களுடைய மிகுதியான பதற்ற நிலைகள், தீவிர உணர்ச்சிகளைக் கையாள்வது என்னுடைய அன்றாடப் பணியாகும். எனினும், ‘உங்களுடைய உணர்வுகள் உண்மையில் உங்கள் உயிர்ப்பின் சான்றுகள்தாம்’ என்று என் வாடிக்கையாளர்களை ஏற்கச்செய்வது கடினம். சோகம், மகிழ்ச்சி, சினம்… இவை அனைத்தும் உயிர்ப்பின் சான்றுகள். பச்சாத்தாபம் மற்றும் உணர்ச்சிகளிலேயே மிக வலி நிறைந்ததாகிய குற்றவுணர்ச்சி ஆகியவை உண்மையில் ஒவ்வொருவருடைய மனிதவுணர்வின் அடையாளங்கள், ஆகவே, இன்னொருவர்மீது மக்கள் காட்டுகிற உணர்வுகளிலேயே மிகவும் மதிப்பு மிக்கவை. ஆனால், என்னுடைய வாடிக்கையாளர்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிற சொற்றொடர்கள், “ஆனால், நான் எதையும் உணர விரும்பவில்லை!” அல்லது “நான் மரத்துப்போக விரும்புகிறேன்." என்னைப் பொறுத்தவரை இதன் பொருள், உயிரோடு இருக்கவேண்டும், ஆனால், உணர்ச்சிகள் இருக்கக்கூடாது, கிட்டத்தட்ட ஓர் இயந்திர மனிதரைப்போல.

முடக்கத்தின்போது இயந்திர மனிதராக மாறுவது மிக எளிது, குறிப்பாக, இந்த முடக்கம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று மக்களுக்குத் தொடக்கத்தில் சொல்லப்பட்டதைவிட மிக நீண்ட நாட்களுக்கு அது நீடிக்கும்போது, இது இன்னும் எளிது. இந்தச் சூழ்நிலையில் வாழ்க்கை இயல்பாகிவிடும் என்கிற நம்பிக்கை எதார்த்தமற்றது என்பது மக்களுக்குத் தெரியும், என்றாலும், அவர்கள் அதை நம்பினார்கள், அந்த நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன, இதனால், முடக்கத்தின்போது உயிர்ப்புடன் இருப்பது எப்படி என்று தெரியாமல் பலரும் தடுமாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். முடக்க நிலை ரோபோ-க்களாக ஆகாமலிருப்பது எப்படி?

பெரும்பாலான மக்களுடைய உறவுகள், பணி மற்றும் அவர்களுடைய உணர்வு வாழ்க்கைகளைச் செயலாக்குகிற உரையாடல்கள் வீட்டுக்கு வெளியில் இருக்கலாம், தனிமையில் இருக்கும்போது அவர்களுக்கு அது கிடைக்காமல் போகலாம். மக்களுடைய பணியும் அவர்களுடைய உணர்வு வாழ்க்கைகளை அமைதியாக்க அவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் ஒரு பணியில் ஈடுபடும்போது, அவர்களுடைய கைகளுக்கும் மனங்களுக்கும் ஏதோ ஒரு வேலை இருக்கிறது. அது அவர்களுக்கு ஓர் இருத்தல் நோக்கத்தை அளிக்கிறது, வாழ்க்கைக்கு ஒரு பொருளை அளிக்கிறது. மாதம் நிறைவடையும்போது சம்பளம் வரும் என்பதற்காகமட்டுமே வேலை செய்தாலும் சரி, அதுவும் ஒரு பொருளுள்ள நோக்கம்தான். முடக்க நாட்களில் ஒருவருக்கு வேலை இல்லாவிட்டால், அந்த வெறும் கைகளும் மனமும் அவருடைய நோக்கமின்மையை அவருக்கு மிகத் தெளிவாக உணர்த்திவிடுகின்றன.

முடக்க நாள் ரோபோக்களை நான் இந்த அளவுக்கு எதிர்ப்பது ஏன்? ஏனெனில், இந்த மனநிலையிலிருந்து வெளியில் வருவது மிகவும் கடினம். இது ஒரு சாம்பல் வண்ண நிலை, உணர்வற்ற நிலை, ஒருவர் இதை நிறுவியபிறகு, இது நயவஞ்சகத்துடன் பரவுகிறது, அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊறிக்கொள்கிறது, அஜ்கபான் டிமென்டர்ஸைப்போல (Dementors of Azkaban), அனைத்திலிருந்தும் மகிழ்ச்சியை உறிஞ்சி எடுத்துவிடுகிறது. இது ஒரு விரக்தி, நெஞ்சைக் கனமாக்குகிற, வயிற்றைப் பிசைகிற தன்மை கொண்டது. இது, உயிரோடு உள்ள உடலுக்குள் நிகழ்கிற மரணம்.

என்னுடைய தொழில்துறையில் இதை ‘பாதிப்பிலிருந்து விலகியிருத்தல்’ அல்லது ‘பாதிப்பிலிருந்து தனிமைப்பட்டிருத்தல்’ என்பார்கள், இங்கு ஒருவர் சினம், சோகம், பதற்றம், மகிழ்ச்சி போன்ற ஓர் உணர்ச்சியைப்பற்றிப் பேசுவார், ஆனால், அது தன்னுடைய உடலுக்குள் இருக்கிற அனுபவத்தை அறிந்திருக்கமாட்டார். இது ஒரு பாதுகாக்கும் அமைப்பாகும், குழந்தைப்பருவத்திலேயே இது ஒருவருக்குள் உண்டாகிவிடுகிறது, மிக நெருங்கிய உறவுகளில் ஏற்படும் வலி மற்றும் சினத்திலிருந்து அவர்களைக் காப்பதற்காக இது உருவாகிறது. இவருடைய வாழ்க்கையில் பின்னர் ஒரு நிலையில், ஓர் உறவைக் காக்கவேண்டும், அதே நேரம், அந்த மனிதருடைய செயல்கள்/அவர் இவரை எப்படி நடத்துகிறார் என்பவை இவருக்கு வலியை உண்டாக்கக்கூடாது என்பது முக்கியமாகிறபோது, இது தானே முன்னுக்கு வருகிறது, இதன் நோக்கம், உணர்வு சார்ந்த உயிர்பிழைத்தல். துரதிருஷ்டவசமாக, அதே காரணத்தால், அது இவருக்குள் சிக்கிக்கொள்கிறது, அதன் பயன்பாடு நிறைவடைந்தபிறகும் அங்கேயே தங்குகிறது, ஏனெனில், அதை எப்படி அணைப்பது என்று இவருக்குத் தெரிந்திருப்பதில்லை. ஒருவருடைய செயல்பாடுகளின் மனிதப் பகுதிதான் அது. சிறுவயதில் செய்யக் கற்றுக்கொண்ட ஒன்றை மறப்பது மிகவும் கடினம்.

ஒருவர் தன்னைத் தானே காத்துக்கொள்வதற்கான இந்த அமைப்பு, தீவிரமான தேவையுள்ள நேரங்களில் அவரையும் அறியாமல் அவருக்குள் தானே நிறுவப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இப்போதைய வாழ்க்கைச் சூழ்நிலையில் அது தானே செயலுக்கு வருகிறது, ஒவ்வொருவரையும் உணர்ச்சியற்ற நிலைக்கு அழைத்துச்செல்கிறது, அவர்களுடைய சொந்தத் துன்பத்தையும் மற்றவர்களுடைய துன்பத்தையும் அவர்கள் காணாதபடி மறைக்கிறது. பதற்றமுள்ள தனிநபர்களுக்கும், குறிப்பாக, சமூகத்துக்கும் அது நல்லதில்லை என்று நான் எண்ணுகிறேன். ஒருவருடைய உணர்ச்சியின்மை அவரைக் காப்பாற்றாது, எதிர்வினையாற்றல்தான் காப்பாற்றும்.

சில நேரங்களில், நான் விட்டு விலகியிருப்பதுபோல் உணர்கிறேன். மக்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழப்பதுபற்றி, அவர்களுக்குக் கடைசிமுறையாக விடைகொடுக்க இயலாததுபற்றி, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவில்லாமல் பல கிலோமீட்டர் நடப்பதுபற்றி, அப்படி நடந்தபிறகும் தங்கள் இடத்துக்குச் சென்றுசேர இயலாமல் அதற்குமுன் அவர்கள் இறப்பதுபற்றி, மதம் காரணமாகக் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதுபற்றியெல்லாம் படிக்கும்போது, எனக்கு எந்த உணர்வும் வருவதில்லை. அந்தச் செய்தியிலிருந்து நான் விரைவாக நகர்ந்துவிடுகிறேன்.

அப்போது, என் முதுகு வலிக்கிறது. முடக்கத்தின் முதல் நாளில் தொடங்கி இதுதான் நடக்கிறது. ஆனால், இடம் பெயர்ந்த தொழிலாளர் ஒருவருடைய குழந்தையொன்றால் இனி நடக்க இயலவில்லை என்பதைப்பற்றிப் படிக்கும்போது, அல்லது, மருத்துவர் ஒருவர் தன் குடும்பத்துக்கு நோய்த்தொற்றை உண்டாகிவிடுவோமோ என்று அஞ்சியதால், அவரால் தன் வீட்டுக்கே வர இயலவில்லை என்பதைப்பற்றிப் படிக்கும்போது, எனக்குள் வலி ஊறுகிறது. அந்த நேரத்தில், சினத்தின், சோகத்தின் சூடான கண்ணீர்த்துளிகள் என் முகத்தில் வடிகின்றன. அப்போது, நான் விட்டு விலகி இருக்கவில்லை என்பதை நான் உணர்கிறேன், அதற்காக நன்றியுணர்வை உணர்கிறேன், என்னுடைய உணர்வுப் பாதுகாப்புகளால் செயல்திறனோடு செயல்பட இயலவில்லை என்பதற்காக நன்றியை உணர்கிறேன். உணர்ச்சியின்றி இருப்பதைவிட, உணர்ச்சியுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

அதனால், என்னுடைய முதுகுவலியும் குறைந்துள்ளது.

டாக்டர் நூபுர் திங்க்ரா பைவா ஒரு மருத்துவ உளவியலாளர், ஆசிரியர்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org