மீண்டும் தொலைபேசியின் ஆட்சி

COVID-19 சமூக விலகியிருத்தல் காரணமாக, நம்முடைய சமூகங்கள் தகவல் தொடர்புக்காக மீண்டும் தொலைபேசிக்குத் திரும்பச் செல்கின்றனவா?
மீண்டும் தொலைபேசியின் ஆட்சி

1986ல் எனக்குச் சுமார் ஆறு வயதிருக்கும், அப்போது எனக்குத் தொலைபேசியில் பேசுவது பிடித்திருந்தது, அதன்பிறகு வேறு எப்போதும் நான் அதை ரசித்ததாக நினைவில்லை. உண்மையில், வளர வளர நான் தொலைபேசியை வேண்டுமென்றே தவிர்த்தேன். (எனக்கு ஓர் ஆண் நண்பர் கிடைத்தபோது இந்த நிலைமை மாறியது உண்மைதான்; அந்தக் காதலின் பெரும்பகுதி மிகத்தொலைவிலிருந்து நிகழ்ந்ததால், நான் எப்போதும் தொலைபேசியிலேயே இருந்தேன், ஆகவே, இந்தத் திருப்புமுனை ஏற்பட்டது.)

ஆனால், மக்களை, உறவுகளை எப்படிக் கையாள்வது என்பதில் நான் பெற்ற சில தொடக்கப் பாடங்கள், தொலைபேசியின் இருத்தலிலிருந்துதான் கிடைத்தன. இந்தப் பாடங்களில் பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்வதற்கு எனக்குத் தொலைபேசிக் கருவியே தேவைப்படவில்லை.

எனக்கு ஒன்பது வயதானபோது, நாங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோம்; தொலைபேசி, என்னுடைய பெற்றோருக்கு ஓர் உயிர் இணைப்பானது. அவர்கள் தங்களுடைய வயது முதிர்ந்த பெற்றோரை இந்தியாவில் விட்டுவந்திருந்தார்கள்; ஆகவே, ஆண்டுமுழுக்க அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு ஒரே வழி, தரைவழித் தொலைபேசிதான். அப்போது இந்திய எண்களைத் தொலைபேசியில் அழைப்பதற்கான கட்டணங்கள் மிகக் கூடுதலாக இருந்தன. ஆகவே, வாரத்துக்கு ஒருநாள், கட்டணங்கள் குறைவாக இருக்கிற நேரத்தில், என் பெற்றோர் அவர்களுடைய பெற்றோரையோ உடன்பிறந்தோரையோ அழைப்பார்கள்; இருதரப்பினருக்கும் நியாயமாக இருக்கக்கூடிய ஒரு வழக்கத்தைக் கண்டறிய முயல்வார்கள்; வாராவாரம் என்னுடைய பெற்றோர் இப்படிச் செய்வதைப் பார்த்து, நான் சிக்கனத்தைக் கற்றுக்கொண்டேன். வளங்களில் சிக்கனம், நேரத்தில் சிக்கனம், சொற்களில் சிக்கனம். நான் சொல்ல விரும்பியதை இயன்றவரை மிகக் குறைவான சொற்களிலும் விரைவாகவும் சொல்வதற்கு நான் பயிற்சியெடுத்தேன், அதில் சிறந்து விளங்கினேன்.

ஓவியம்: சந்தியா மேனன்

ஆனால், எனக்கு நினைவு தெரிந்தவரை, என்னுடைய பெற்றோர் தங்களுடைய சிக்கன நடவடிக்கையில் பெரும்பாலும் வெற்றிபெற்றதில்லை, மாத நிறைவில், தொலைபேசிக் கட்டணப் பட்டியல் வீட்டுக்கு வரும், அப்போது, என் பெற்றோருக்கிடையிலான விவாதங்கள் எந்த அளவு தீவிரமாக இருக்கும் என்பதுபற்றி எனக்கு நானே பந்தயம் கட்டிக்கொள்வேன். ஒவ்வொருமுறையும், விவாதம் நிச்சயம் உண்டு, அதன் தீவிரம்தான் கொஞ்சம் முன்னே, பின்னே இருக்கும். இந்த வாதங்களின்போது, நான் ஆற்றலைப்பற்றிக் கற்றுக்கொண்டேன். கடினமாக உழைப்பவராகிய என்னுடைய தந்தை, அழைப்புகளின் பட்டியலை ஒவ்வொன்றாகக் கவனிப்பார், அப்போது வீட்டைமட்டும் கவனித்துக்கொள்கிறவராக இருந்த என் தாய், அவருடைய குடும்பத்தினரிடம் பேசுவதற்கு மிக நீண்ட நேரம் செலவிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுக்காட்டுவார். ‘நீங்களும் அதேபோல்தான் பேசுகிறீர்கள்’ என்று அவரை எதிர்த்துப் பேசுகிற உரிமை தனக்கு இருப்பதாக என் தாய் அப்போது உணரவில்லை. கட்டணங்கள் குறிப்பிடக்கூடிய அளவுக்கு மிகுதியாக இருந்தால், நிலைமை சரியாகிவிட்டது என்று தான் கருதும்வரை யாரையும் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என்று என் தந்தை குறிப்பிடுவார். எங்களுக்கு டயல்-அப் வகை இணையம் கிடைத்தபோதும் அதே நிலைமைதான்: அப்போதைய கட்டுப்பாட்டு அடிப்படை, கட்டணப் பட்டியலைத் தாண்டியும் சென்றது. தொலைபேசி எவ்வளவு நேரம் பயன்பாட்டில் இருந்தது என்பதும் முக்கியம். ஏனெனில், என்னுடைய தந்தை பரபரப்பாக எங்களை அழைக்க முயன்றிருக்கலாம்.

இந்த மாற்றுக்கருத்துகளெல்லாம் எப்படிச் சரிசெய்யப்பட்டன என்று எனக்கு நினைவில்லை. அநேகமாக, என்னுடைய தந்தையின் முன்கோபம் குறைந்திருக்கும். இன்னொரு சாத்தியம், கீழ்ப்படிதலுள்ள பெண்ணாக வளர்க்கப்பட்டுச் சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட என்னுடைய தாய், இதுதான் தன்னுடைய வாழ்க்கை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருக்கக்கூடும்; ஒரு குறிப்பிட்ட நிலைக்குப்பிறகு அவர் நிதியளவில் விடுதலை பெற்றிருக்காததால், அவருடைய பெருமை மற்றும் தன்னுடைய மணவாழ்க்கையைச் சிறப்பாகத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்கிற அவருடைய ஆசை ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இந்த நிலைமையைத் தொடர அனுமதித்தன என்று நான் நினைக்கிறேன். நிதியளவில் விடுதலை பெற்றிருக்கவேண்டும் என்கிற தீவிரமான தேவையை நான் (அநேகமாக, மோசமானமுறையில்) கற்றுக்கொண்டேன். உண்மையில், நிதியளவில் விடுதலை பெற்றிருப்பது எப்படி என்பதற்கான உண்மை வாழ்க்கைப் பாடங்களை நான் எப்போதாவதுதான் கற்றுக்கொண்டேன், நிதியளவில் இன்னொருவரைச் சார்ந்திருப்பதை எண்ணி அஞ்சி நடுங்குவதற்குதான் நான் மிகுதியாகக் கற்றுக்கொண்டேன். வேலைக்குச் செல்வதும் பணி வாழ்க்கை ஒன்றைக் கொண்டிருப்பதும் ஒருபுறமிருக்க, உண்மையான நிதி விடுதலை என்பது, வங்கியில் பணத்தைக் கொண்டிருப்பதால்தான் வருகிறது.

நாங்கள் நாடு மாறியபிறகு, முதல் சில ஆண்டுகளுக்கு என் தாய் ஓர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் போடவே இல்லை. இந்தியாவில் அவர் வண்டி ஓட்டியிருக்கிறார், அது அவருக்குத் தீவிரமான விடுதலை மற்றும் சாதனை உணர்ச்சியை வழங்கியிருந்தது, ஆனால், இந்தப் புதிய இடத்தில் அவர் வண்டி ஓட்டுவதற்கான தேவையே உண்மையில் இல்லை, ஏனெனில், வாழ்க்கை மிக ஒழுங்காகச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அவரைப் பொறுத்தவரை, தொலைபேசி என்பது இந்தியாவிலிருக்கும் அவருடைய அன்புக்குரிய குடும்பத்துடன் அவரை இணைக்கிற கருவிமட்டுமில்லை, அது ஓர் உயிர் இணைப்பு, அது நல்லறிவைக் கொண்டுவந்தது, அந்த நகரத்தில் அவர் உருவாக்கத் தொடங்கியிருந்த நண்பர்கள், சமூகத்தைப்பற்றிய செய்திகளைக் கொண்டுவந்தது. நாங்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருகிற பல நாட்களில், அவர் உரையாடல்களையும் சமையலையும் மாற்றி மாற்றிச் சமாளிப்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போதைய எங்கள் சமையலறையில் குறைந்தது மூன்று விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்: அடுப்பில் ஏதாவது சமைக்கப்படும், மேடையில் ஏதாவது நறுக்கப்படும், பாத்திரம் தேய்க்கும் தொட்டியில் ஏதாவது தேய்க்கப்படும். இத்தனைக்கும் நடுவில், என் தாயின் கழுத்துக்கும் தோளுக்கும் நடுவிலுள்ள வளைந்த பகுதியில் கம்பியில்லாத தொலைபேசி வாங்குவான் (ரிசீவர்) சிக்கியிருக்கும்.

மறுமுனையில் யார் இருந்தாலும் சரி, அன்றைக்கு நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அவர் விளக்குவார், அல்லது, குழந்தைகளாகிய நாங்கள் தரும் தொல்லைகளைப் பேசுவார், அல்லது, என் தந்தையைப்பற்றி மெதுவாகப் புகார் சொல்வார், அல்லது, தன் உடல்நலமின்மையைப்பற்றிப் பேசுவார். சில நேரங்களில், விரக்தியால் அவர் தொலைபேசியில் அழுவதை நான் பார்த்துள்ளேன். மற்ற நேரங்களில், அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் யாருக்கும் துன்பம் தராத கிசுகிசுக்களைச் சிறிதளவு பேசுவார். இதையெல்லாம் பார்க்கிற நான், மிகவும் ஆர்வத்துடன் ஊன்றிக் கவனித்தபடி, மேல் பார்வைக்கு ஆர்வமில்லாததுபோல் தோன்றக் கற்றுக்கொண்டேன். அது முற்றிலும் பயனற்ற ஒரு திறமை என்று நான் சொல்வேன். பெண்களால் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய இயலும், ஆனால், ஆண்களால் அது இயலாது என்று ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. அந்த ஆராய்ச்சியைப் படிப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே நான் அதைப்பற்றித் தெரிந்துகொண்டேன். ஒரு வேலையை வெறுமனே விரைவாகச் செய்வதோடு நிறுத்திவிடாமல், அதைச் செயல்திறனோடு செய்வது எப்படி என்று நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அதை எனக்குச் சொல்லித்தரவேண்டும் என்று என் தாய் எப்போதும் முயன்றதில்லை, ஆனால், அவருடைய செயல்பாட்டின்மூலம் அதை எனக்குச் சொல்லித்தந்துவிட்டார். அது, சமூகத்தின் பாடம்.

என் தாய் நாள்தோறும் நெடுநேரம் தனிமையில் இருப்பவர், தான் எங்கேயாவது செல்லவேண்டுமென்றால், அதற்காகத் தன்னுடைய கணவரைப் பெரிதும் சார்ந்திருக்கிறவர். அன்றைய நாளில் அவருடைய வட்டத்திலிருந்த பல பெண்கள் அப்படிதான் இருந்தார்கள். இதனால், என் தாயும் அவருடைய நண்பர்களும் பெரும்பாலும் தொலைபேசியில்தான் தங்களுடைய ஒன்றுபட்ட சமூகத்தை வளர்த்துக்கொண்டார்கள். என்னுடைய தாயின் சமூக உணர்வு முழுவதும் தொலைபேசியில்தான் நிகழ்ந்தது. எடுத்துக்காட்டாக, அவருடைய தந்தை இறந்தபோது இன்னொருவரிடம் ஆறுதல் பெற்றது, அவருடைய தாய் இறந்தபோது அந்தத் துயரத்தைச் சமாளித்தது, தன்னுடைய மாதவிடாய் நிற்கிற நிலையைச் சமாளித்தது, உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆறுதல் சொல்லி மகிழ்வித்தது, அவர்களுக்காகச் சமைப்பதாகச் சொன்னது (அப்படிச் சமைத்த உணவை அனுப்பிவைப்பதாகச் சொன்னது), அவர்களுடைய மகள்கள் பூப்படையும்போது அதைப்பற்றிப் பேசியது, அல்லது, அவர்களுடைய மகன்கள் தங்கள் விருப்பப்படி ஏதேதோ செய்வதைப்பற்றி விவாதித்தது… இப்படி அனைத்துமே தொலைபேசியில்தான் நிகழ்ந்தன. அவர் தானாகப் பல இடங்களுக்குச் சென்றுவருகிற நிலை ஏற்பட்டபிறகும், தொலைபேசி அவருடைய வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது.

இப்போது நான் அவரைக் கேட்டால் (நான் அதைக் கேட்டிருக்கிறேன்), அந்தத் தொலைபேசி அழைப்புகள்தாம் தன்னைச் சரியான மனநிலையில் வைத்திருந்தன என்பார். ஒரு புதிய நாட்டில், தன்னுடைய கணவர் வார நிறைவு நாட்களில் வெளியில் செல்லலாம் என்று தீர்மானிக்கும்வரை பல நாட்களுக்குத் தனிமைப்பட்டிருக்கிற சூழ்நிலையில், வீடு, அடுப்பு, அவற்றுக்குள் முடங்கியிருக்கிற நிலையைத் தாண்டியும் ஏதோ இருக்கிறது என்கிற ஓர் உணர்வை இந்தத் தொலைபேசி அழைப்புகள்தாம் அவருக்குத் தந்தன. தோழியாக, வழிகாட்டியாக, நம்பிக்கைக்குரிய ஒருவராக அவர் விரும்பப்பட்டார், தேவைப்பட்டார், பயன்பட்டார். அவருடைய குடும்பம் அவரை இந்தப் பொறுப்புகளில் காணவில்லை, அல்லது, அப்படிப் புரிந்துகொள்ளவில்லை, மிகப் பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் அவர்கள் அவரை அவ்வாறு கண்டார்கள். ஆனால், இது அவர் ஒருவருடைய கதை இல்லை. அவருடைய நிலையிலிருந்த நூற்றுக்கணக்கான பெண்களின் கதை இது, அவர்களில் பலர் அவருடைய நட்பு வட்டத்தில் இருந்தார்கள். அந்தப் பெண்களுக்கெல்லாம், தாங்கள் விட்டுவிட்டு வந்த வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தியது தொலைபேசிதான். அது நல்லறிவின் அடையாளம், சமூகத்தின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம், நட்பின் அடையாளம்.

இந்த வார நிறைவில் என்னுடைய உறவினர் ஒருவர் என்னை அழைக்கிறார். நான் எடுத்த எடுப்பில் சிறிதும் யோசிக்காமல் அவரைக் கேட்கிறேன், ‘உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?’ என்னைப் பொறுத்தவரை, தொலைபேசி அழைப்புகள் என்பவை சாதாரணமான பயன்பாட்டுக் கருவிகள். ‘கொரோனாவைரஸ் நேரத்தில் தேவையானவற்றைச் செய்வதற்காக நான் விடாமுயற்சியுடன் உழைத்தேன், ஆகவே, கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்கு நான் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்’ என்றார் அவர், அதைக் கேட்டு என் நெஞ்சு வலித்தது. அவருக்குத் தேவையான ஒரே விஷயம், இன்னொரு மனிதரிடம் பேசவேண்டும்! ‘இத்தனை நாட்களாக நான் செய்த அனைத்து வீடியோ அழைப்புகளையும்விடக் கூடுதலான வீடியோ அழைப்புகளை இந்த ஒரு வாரத்தில் செய்துள்ளேன்’ என்கிறார் நண்பர் ஒருவர். காரணம், அவருடைய நண்பர்களில் பலருக்கு ஆதரவு தேவைப்படுகிறது. என்னுடைய இன்னொரு நண்பரும் என்னை அழைத்து அரட்டையடித்தார், இதற்குமுன் அவரும் நானும் நலன், சீரழிவு மற்றும் உணர்வு நொறுங்குதலைப்பற்றிச் சுருக்கமான செய்திகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். அந்தத் தொலைபேசி அழைப்பை நாங்கள் இவ்வாறு நிறைவுசெய்தோம், “நெடுநாட்களாக நாம் பேசவில்லை என்று எனக்குத் தெரியும்; ஆனால், இனிமேல் நாம் தொடர்ந்து பேசுவோம்.”

இன்றைய சூழ்நிலையில், இணையத்துக்கு வருவதே நம்மைச் சோர்வாக்குகிறது: அழுத்தம் தருகிற, அச்சம் தருகிற செய்திகள், நம்மை மீளவிடாத சீற்றச் சுழல்கள், மக்கள் தங்களுடைய WFH (வீட்டிலிருந்து வேலை செய்தல்) படங்களை வெளியிடுதல் (அந்த அளவுக்கான நெருக்கம் எனக்குப் பிடிப்பதில்லை)… இவற்றுக்கு நடுவில், தொலைபேசி அழைப்பு ஒரு வசதியின் சின்னமாக நிற்கிறது. நம்மால் இணைப்பு இல்லாமல் வாழ இயலாது; ஓர் உரைச்செய்தியோ ஓர் உணர்வுக்குறியோ ஒரு குரலின் கதகதப்பை, ஒருவருடைய பார்வையின் மென்மையை அல்லது, ஒருவருடைய சிரிப்பின் மகிழ்ச்சியை உணர்த்துவதில்லை. ஒரு தொலைபேசியில் சாத்தியமில்லாத ஒரே விஷயம், பெரிய, அழுத்தமான முத்தங்களின் ஈரம்தான். ஆனால், உதடுகள் ஒரு விநாடிக்குத் திரையில் ஒட்டப்படுவதைக் காண்பது இனிமையாகவே உள்ளது.

சந்தியா பெங்களூரைச் சேர்ந்த, சுயமாக இயங்கும் எழுத்தாளர். BPD (விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு) மற்றும் BPAD (இருதுருவப் பாதிப்புக் குறைபாடு) ஆகியவற்றைக் கொண்ட அவர், தான் அவற்றை எப்படிச் சமாளித்தோம் என்கிற பார்வையின்வழியாக மன நலன் உள்ளிட்ட பல விஷயங்களைப்பற்றி எழுதுகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org