தன்னிறைவடைந்தவர்களுடைய நட்பும் காதலும்

நேர்வித உளவியலானது 1998ல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், அதன் வேர்கள் டாக்டர் ஆப்ரஹாம் மாஸ்லோவ் அவர்களுடைய பணிகளில் வேரூன்றியுள்ளன. இன்றைக்கு இந்தியர்கள் இவரை 'மனித ஊக்கத்தின் குருநாதர்' என்று அறிந்திருக்கிறார்கள், நிறுவன வெற்றியில் இதன் பொருத்தத்தை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மாஸ்லோவின் கொள்கைகளில் நன்கு அறியப்பட்ட ஒன்று, தன்னிறைவு: ஒவ்வொருவருக்கும் தான் எதற்காகப் பிறந்தோமோ அந்தச் சாத்தியத்தை நிறைவேற்றும் திறமை உள்ளது, அதேசமயம் மிகச்சிலர்தான் அதை உண்மையில் எட்டுகிறார்கள். மாஸ்லோவின் வரையறைப்படி, அப்படிப்பட்ட ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு, சொந்தமாதல், மதிப்பு மற்றும் மரியாதைக்கான தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தவர்கள், அதைவிட உயர்ந்த தேவைகள்தான் அவர்களுக்கு முதன்மையாக ஊக்கமளிக்கின்றன: இதனை அவர் படைப்புணர்வு, நீதி, இன்னும் மேம்பட்ட ஓர் உலகை உருவாக்குவதற்கு உதவுதல் போன்ற எல்லைகடந்த மதிப்பீடுகளுடன் தொடர்புபடுத்துகிறார்.    

மாஸ்லோவின் பார்வையில், தன்னிறைவடைந்த மனிதர்களை ஆராய்வது, மனித குலத்துக்கு "வளர்வதற்கான... வழிகாட்டியாக, மாதிரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான முறையான திசையை"க் காட்டி வழிநடத்துவதற்கு முக்கியம். இந்தக் காரணத்தால், சமூக வாழ்க்கையின் இந்த நான்கு பரிமாணங்களில் அவருடைய பார்வைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம்: நட்பு, காதல் கொண்ட நேயம், திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பு. இந்தப் பத்தி, முதல் இரண்டில் கவனம் செலுத்தும், அடுத்த பத்தி, அடுத்த இரண்டில் கவனம் செலுத்தும்.

1) தன்னிறைவடைந்தவர்களுக்கு நண்பர்கள் இருப்பார்களா? இது ஒரு மறுக்கமுடியாத நேரடிக் கேள்வி. இதற்கு நுட்பமான, மூன்று பகுதிகளைக் கொண்ட பதில் தேவை. முதலில், உளவியல்ரீதியில் நலமாக இருப்பவர்களுக்கிடையிலான நட்பின் கதகதப்பான மகிழ்ச்சிகளை மாஸ்லோவ் புகழ்ந்து பேசியுள்ளார். எடுத்துக்காட்டாக, அடையாளம் - நேயம் என்பதை அவர் இவ்வாறு வரையறுத்தார்: "ஒருவிதமான அனைத்தையும் கடந்த நிலை, எடுத்துக்காட்டாக, ஒருவருடைய குழந்தைக்காக அல்லது அன்பான நண்பருக்காக." அவர் குறிப்பிட்ட இன்னொரு விஷயம், "ஒருவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை நேசிக்க இயலுவது ஒரு சிறப்புரிமையாகும். அவ்வாறு செய்வதன்மூலம் அவர்களுடைய வலியெல்லாம் இவர்களுடைய வலியோடு சேர்ந்துகொண்டாலும், அது ஒரு சிறப்புரிமைதான்." இரண்டாவதாக, நம்பகத்தன்மை மற்றும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதால் உண்டாகும் உண்மையான நட்புகளை, மேலோட்டமான போலி-நட்புகளிலிருந்து கூர்மையாகப் பிரித்துக்காட்டினார் மாஸ்லோவ். மூன்றாவதாக, தன்னிறைவு பெற்றவர்கள் பொதுவாக ஆழமான நட்புகளை அனுபவிப்பதை மாஸ்லோவ் கண்டபோதும், அவர்களுடைய தொடர்ந்த உணர்வு நலனுக்கு அப்படிப்பட்ட உறவுகளைச் சிறிதளவே தேவை என்று அவர் கருதினார். ஏனெனில், சொந்தமாதல் மற்றும் மதிப்புக்கான அவர்களுடைய தேவைகள் ஏற்கெனவே நிறைவுசெய்யப்பட்டுவிட்டன. அதாவது, அவர்களைப் புகழ்வதற்கு நண்பர்கள் தேவையில்லை.   

நம்பிக்கையான உறவுகளுக்கு, நம்பகத்தன்மை மற்றும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய இரண்டும் முக்கியம் என்று மாஸ்லோவ் வலியுறுத்தினார். நம்பகத்தன்மை என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒருவருடைய வாழ்க்கை அனுபவங்களை அடையாளம் காண்கிற மற்றும் அவற்றுக்குப் பொறுப்பேற்கிற திறன், அந்த அனுபவங்களுடன் ஒத்துச் செயல்படுதல். தன்னை வெளிப்படுத்துதல் என்பது, ஒவருடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்தலாகும். தன்னிறைவடைந்த மக்களுடைய நட்புகளில் கதகதப்பு மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆர்வங்களுடன் இந்த இரு குணங்களையும் முக்கியமாகக் கருதுகிறார் மாஸ்லோவ்.     

2) தன்னிறைவு கொண்ட மக்கள் காதல்வயப்படுவார்களா? மாஸ்லோவுக்குக் காதல் அனுபவம் அதிகமில்லை. அவர் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைமட்டும்தான் காதலித்தார், அவரை விரைவில் திருமணம் செய்துகொண்டுவிட்டார். ஆனால், வியப்பளிக்கும் விஷயம், அவருக்கு இந்தத் தலைப்பில் வலுவான, தொடர்ந்த ஆர்வம் இருந்துவந்தது. தன்னிறைவு பெற்ற மக்களுக்கு வியப்பு, பாராட்டு அல்லது ஆதிக்கத்துக்கான நரம்பியல் தேவைகள் இல்லாததால், அவர்களுடைய காதல் உறவுகள் அதிகப் பச்சாத்தாபத்துடனும் அக்கறையுடனும் இருந்ததாக மாஸ்லோவ் கூறினார். மாஸ்லோவ் தன்னுடைய வாழ்வின் பிற்பகுதியில், உளவியல்ரீதியில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தங்களை அதிகம் வெளிப்படுத்திக்கொள்பவர்களாகவும் இருப்பதைக் கவனித்தார். இதைவிட மாஸ்லோவ் முக்கியமாகக் கருதிய விஷயம், தன்னிறைவு கொண்ட மக்கள் தங்களுடைய மதிப்பு மற்றும் மரியாதைத் தேவைகளை நிறைவுசெய்துவிட்டதால், தங்களுடைய அன்புக்குரியவர்கள்மீது முழு மனத்துடன் அவர்களால் கவனம் செலுத்த இயன்றது. சமகாலச் சொற்களைப் பயன்படுத்துவதென்றால், அவர்களால் தங்களுடைய நேயம் நிறைந்த காதலில் அதிக மனமுழுமையைக் காட்ட இயன்றது என்று சொல்லலாம்.  

1960களில், கீழை எண்ணங்களின் தாக்கத்தால், இந்த மனப்போக்கை மாஸ்லோவ் 'தாவோயிஸ ஏற்றுக்கொள்ளலை'க் கொண்டிருப்பதாக விவரிப்பார். காதலர்கள் ஒருவர் மற்றவருடைய கண்களை மகிழ்ச்சியுடன் பார்ப்பது அல்லது தாய் தன்னுடைய குழந்தையை மகிழ்ச்சி நிறைந்த வியப்புடன் பார்க்கும்போது அதில் இந்தத் தன்மை இருப்பதாக அவர் கண்டார். அவருடைய பார்வையில், காதலில் இருக்கும் உளவியல் நிலையானது, ஒருவர் தன்னுடைய காதலரை வியப்பாக, அசாதாரணமாகமட்டுமில்லாமல், கச்சிதமானவராகவும் காணவைக்கிறது. அன்றாட வாழ்க்கைப் பார்வையில் இப்படிப்பட்ட மனநிலை நிச்சயம் எதார்த்தமற்றதாக இருந்தாலும், காதல் வளர்வதற்கும் செழிப்பதற்கும் இது அவசியம் என்று மாஸ்லோவ் கருதினார்.

ஒருவர் தன்னுடைய காதல் துணைவரை லட்சிய பிம்பமாகக் கருதுதல், அல்லது, மாஸ்லோவின் சொற்களிலேயே சொல்வதென்றால் "புனிதப்படுத்துதலின்" முக்கியத்துவத்தை மாஸ்லோவ் வலியுறுத்துகிறார்; காதலில் நேர்விதமான மாயத்தோற்றங்களின் பங்களிப்பைப்பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியை முன்னறிவிப்பதாக இது அமைந்தது. புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்களில், தங்களுடைய துணைவரை லட்சிய பிம்பமாகக் கருதுகிறவர்கள் மூன்றாண்டுகளுக்குப்பிறகு மற்றவர்களைவிடத் தங்களுடைய திருமணத்தில் அதிக நிறைவை அனுபவிக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு கண்டறிந்தது. இன்னோர் ஆய்வில், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட, ஒருவரையொருவர் லட்சிய பிம்பமாகக் கருதுகிறவர்கள் ஆராயப்பட்டார்கள்; திருமணமாகிப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அதிகக் காதலுடன் இருந்தார்கள், அவர்கள் காதல் இழப்பைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகியிருந்தன. சுருக்கமாகச் சொன்னால், ஒருவர் தன்னுடைய துணைவரை லட்சிய பிம்பமாக அல்லது புனிதமாகக் கருதுவது, திருமண வாழ்க்கையில் பேரார்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கியமாகத் தோன்றுகிறது.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன், நியூ யார்க் நகரத்திலுள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தில் துணை இணை உளவியல் பேராசிரியர். தனிப்பட்ட மருத்துவச் சேவையை வழங்கும் உரிமம் பெற்ற மருத்துவ உளவியலாளரான இவர், உளவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் பணியாற்றுகிறார். அவரைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரிcolumns@whiteswanfoundation.org

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org