தன்னை அறிதலின் முக்கியத்துவம்

ஒருவர் தன்னைப்பற்றிப் பிறரிடம் சொல்லவேண்டும், ஆனால், தன்னுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் போன்ற வெளிக் காரணிகள் எவற்றையும் பயன்படுத்தக்கூடாது. அவர் முழுக்க முழுக்க, தன்னைப்பற்றிமட்டும்தான் பேசவேண்டும், தான் எப்படி உணர்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம், தனது பலங்கள் என்ன, பலவீனங்கள் என்ன, எது தன்னைக் கோபப்படுத்துகிறது, எது தன்னைச் சந்தோஷப்படுத்துகிறது... இப்படி. 

இந்தப் பயிற்சியின்மூலம், ஒருவர் தன்னை எந்த அளவு அறிந்திருக்கிறார் என்பதை அறியலாம். தன்னை அறிதல் என்பது, சில நேரங்களில் சுய அறிவு அல்லது சுய அலசல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் ஒருவர் தனது சொந்தத் தேவைகளை, ஆசைகளை, தோல்விகளை, பழக்கங்களை, அவரைத் தனித்துவமான மனிதராக்கும் பிற விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். ஒருவர் தன்னை அதிகம் அறிய அறிய, அவரால் வாழ்க்கையின் மாற்றங்களுக்கேற்பத் தன்னை நன்கு மாற்றிக்கொள்ள இயலுகிறது. ஒருவர் தன்னை நன்கு அறிந்திருக்கும்போது, அவர் தன்னை ஒரு தனித்துவமான மனிதராக, பிறரிடமிருந்து வேறுபட்டவராக உணரத்தொடங்குகிறார். இதன்மூலம், அவர் தன்னிடம் தேவைப்படும் மாற்றங்களைத் தானே செய்துகொள்ள இயலுகிறது, தனது பலங்களில் கவனம் செலுத்தி முன்னேற இயலுகிறது, தான் எங்கே மேம்படவேண்டும் என்று அடையாளம் காண இயலுகிறது. பல நேரங்களில், இலக்கு நிர்ணயித்தலின் முதல் படியே தன்னை அறிதல்தான்.

இதுபற்றி நிகழ்ந்த ஆய்வுகள், ஒருவர் உணர்வுநிலையில் புத்திசாலித்தனத்துடன் இருக்கவேண்டும், வெற்றிபெறவேண்டும் என்றால், அவர் தன்னை அறிந்திருப்பது அவசியம் என்கின்றன. இதன்மூலம் அவரால் தனது பலங்கள், பலவீனங்களைப்பற்றியும், தன்னை எது செயல்படத்தூண்டுகிறது என்பதைப்பற்றியும் சிந்திக்க இயலுகிறது, அதன் அடிப்படையில் தன்னால் எட்டக்கூடிய இலக்குகளை அமைத்துக்கொள்ள இயலுகிறது. அவர் தனது திறமைகளுக்கு, விருப்பங்களுக்கு, போக்குகளுக்கு நன்கு பொருந்தும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார், சரியான பாதையில் தன்னைச் செலுத்துகிறார். எந்தெந்தச் சூழ்நிலைகள் தன்னை எப்படிச் செயல்படச்செய்யும், யார் எப்படிப் பேசினால் தான் எப்படி நடந்துகொள்வோம் என்றெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், தன்னுடைய எதிர்வினையைத் தானே முன்கூட்டியே ஊகிக்கத் தொடங்குவார். இதனால், அவர் தன்னுடைய நடவடிக்கைகளில் நேர்விதமான பழகுமுறை மாற்றங்களைச் செய்யத் தொடங்குவார், தனிப்பட்டமுறையிலும் பிறருடன் பழகுவதிலும் பெரிய வெற்றிகளை எட்டுவார்.

தன்னை அறிந்திருத்தல் என்பது, ஒரு மனநல நிபுணருக்கும் முக்கியமானதொரு குணமாகக் கருதப்படுகிறது. மனநல நிபுணர்கள் பல கலாசாரங்கள், மதங்கள், மொழிகள், வாழ்க்கைமுறைகள், மதிப்பீடுகளைக் கொண்டவர்களுடன் பழகுகிறார்கள். அவர்களுக்குச் சிறப்பானமுறையில் ஆலோசனைகளை வழங்கவேண்டுமென்றால், தெரபிஸ்ட் முதலில் தன்னுடைய சொந்த மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ளவேண்டும், அப்போதுதான் அவரால் பிறருடைய தனித்துவத்தை மதிக்க இயலும். நல்ல மனநல நிபுணர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட அறிவு அல்லது பெற்றுக்கொண்ட திறன்களைத் தாண்டிக் குறுக்கீடுகளை நிகழ்த்துவார்கள், இதற்கு, அவர்கள் தங்களுடைய ஆலோசனைப் பணியில் தங்களையே ஒருங்கிணைத்துக்கொள்வார்கள், இது அவ்வளவு சுலபமான பணி அல்ல!

ஓர் ஆலோசகர் தன்னை அறிந்திருக்கவில்லையென்றால் என்ன ஆகும்? ஓர் ஆலோசகர் குறைந்தபட்ச அளவில்கூட தன்னை அறிந்துகொள்ளவில்லையென்றால், அவர் தனது வாடிக்கையாளர்களிடம் பேசும்போது, அவர்களுடைய பிரச்னைகளோடு தன்னையும் இணைத்துப்பார்க்கத் தொடங்கிவிடக்கூடும், தாங்கள் ஒரேமாதிரி இருப்பதாகவும், தங்களுக்கு ஒரேமாதிரி பிரச்னைகள் இருப்பதாகவும் அவர் எண்ணக்கூடும். இது எதிர்விதமாகவும் நடக்கலாம். தன்னை அறிந்திருக்காத ஒருவர், மற்ற எல்லாருக்கும் தன்னைப்போலவே பிரச்னைகள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளலாம். இங்கே ஆலோசகர் தனது சொந்தப் பிரச்னைகளைத் தன்னுடைய வாடிக்கையாளர்மீது ஏற்றிக்காண்கிறார். அவ்வாறன்றி, ஓர் ஆலோசகர் தன்னை அறிந்திருக்கும்போது, அவரால் தன்னுடைய ‘சுயத்தின் எல்லை’யை அறிய இயலும், தன்னுடையவை எவை, தன் வாடிக்கையாளர்களுடையவை எவை என வெற்றிகரமாகப் பிரித்துக்காண இயலும். இரண்டாவதாக, ஆலோசகர் தன்னை அறிந்திருக்கும்போது, அவரால் ‘சுயத்தை உணர்ந்து பயன்படுத்த’ இயலும். ஓர் ஆலோசகர் தன்னை அறிந்திருந்தால், அவரால் ஆலோசனைக் குறுக்கீடுகளை அதிக ஆற்றலுடன் வழங்க இயலலாம், அவர்கள் நினைத்ததைப் பேசாமல், திகைத்துநிற்காமல், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து, சிந்தித்துச் செயல்படுவார்கள்.

ஒருவர் தன்னை அறிந்திருப்பதால், தன்னை அழுத்தத்துக்கு உட்படுத்தும் விஷயங்கள் என்னென்ன என்பதையும் அவரால் அடையாளம் காண இயலும், அந்த விவரத்தைப் பயன்படுத்தி, நிலைமையைச் சமாளிப்பதற்கான சிறந்த முறைகளை உருவாக்க இயலும். 

உளவியல் சிகிச்சை வடிவங்கள் ஒவ்வொன்றிலும், தன்னை அறிதலை மேம்படுத்துவதற்கான முறைகள் இருக்கின்றன. நவீன உளவியல் சிகிச்சையானது, உளவியல் ஆய்வில் தொடங்கியது, சிக்மண்ட் ஃப்ராய்டால் உருவாக்கப்பட்ட பேச்சுச் சிகிச்சை இது. உளவியல் ஆய்வு என்பது, மக்கள் தங்களுடைய உணர்வோடையில் தொடர்ந்து தோன்றுகிற எண்ணங்கள் மற்றும் நினைவுகளை அறிந்துகொள்வதற்குச் சுதந்தரத் தொடர்புபடுத்தலைப் பயன்படுத்தி உதவுகிறது. உளவியல் ஆய்வாளர்கள் கனவுகளுக்குப் பொருள் சொல்வதும் உண்டு, இதன்மூலம், அவர்கள் கவனிக்கத் தவறிவிடக்கூடிய அனுபவங்களுக்கான உணர்வுப் பின்னணிபற்றி அவர்களால் புரிந்துகொள்ள இயலும். இப்போதைய அறிவாற்றல் சிகிச்சைகள், புத்தமதத்தினர் பின்பற்றிவந்த மனமுழுமைச் செயல்பாடுகளின் மதச்சார்பற்ற வடிவங்களைக் கற்றுத்தருகின்றன. மனமுழுமை மேம்பட்டால், மக்கள் தங்களுடைய மதிப்பீடுகளுக்கேற்ப எதிர்வினையாற்றுவார்கள். பிரச்னைகளிலிருந்து தப்பவோ, அவற்றைத் தவிர்க்கவோ முயற்சி செய்யமாட்டார்கள், இதனால் பிரச்னைகள் தீவிரமாகாது. தன்னை அறிதலை மேம்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு மனமுழுமைப் பயிற்சிகள் சொல்லித்தரப்படுகின்றன. உதாரணமாக, மூச்சைக் கவனித்தல், உடலை அறிதலுடன் நகர்த்துதல், மதிப்புத் தீர்ப்புகளின் வடிகட்டல் இன்றி அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை. இந்த வாடிக்கையாளர்களுக்கு நாட்குறிப்பு அட்டைகளும் தரப்படுகின்றன. இவற்றில் அவர்கள் தங்களது மனநிலையை, சிந்தனைகளை, செயல்பாடுகளை, சிரமமான சூழ்நிலைகளுக்குத் தாங்கள் ஆற்றிய உணர்வுநிலை எதிர்வினைகளைக் குறித்துவைக்கலாம். ஆரம்பநிலை அறிவாற்றல் சிகிச்சைகளில் நாட்குறிப்பு அணுகுமுறை முக்கியப் பங்குவகிக்கிறது. உதாரணமாக, அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) போன்றவற்றில் இதனைக் காணலாம். இந்தப் பயிற்சிகளை எடுத்துக்கொள்கிற வாடிக்கையாளர்கள் தானியங்கி எண்ணப் பதிவுகளை நிரப்புகிறார்கள், வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தாங்கள் எப்படி எதிவினையாற்றினோம் என்று பதிவுசெய்கிறார்கள். பழக்கத்தால் வரும் ஊகங்களைக் குறைத்தல், யாரிடமும் உதவிபெறாத, நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புகளால் உண்டாகும் பதற்றம், மனச்சோர்வைக் குறைத்தல் ஆகியவையும் இவர்களுக்குச் சொல்லித்தரப்படுகின்றன. 

ஓர் ஆலோசகர் அல்லது அவரது வாடிக்கையாளர்கள் தன்னை அறிய விரும்பினால், அதற்கு உதவக்கூடிய சில உத்திகள்:

 • நாட்குறிப்பு எழுதுவது, தெரபிக்கு வெளியே, தன்னுடைய அனுபவங்களைப்பற்றிச் சிந்திப்பது, அவற்றை எழுதிவைப்பது. சில புரிந்துகொள்ளல்கள் சிகிச்சையை மேலும் சிறப்பாக்கலாம்.
 • நூல் சிகிச்சை: இதில் சிகிச்சைக்கு வருபவர் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் போன்றவற்றை வாசிக்கச் சிபாரிசு செய்யப்படுகிறது. அவரது சிகிச்சையாளர் நல்ல சிந்தனைகளைக்கொண்ட, வலுவான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்த புத்தகங்களைச் சிபாரிசு செய்வது மிக நல்லது.
 • ஓவியச் சிகிச்சைகள், மணல் தட்டுகள்: இவற்றில் பங்கேற்பவர் படங்களை வரைகிறார், அல்லது பொருள்களை அடுக்குகிறார், இதன்மூலம் அவர் தனது சிறுவயதுக்கே சென்றுவிடுகிறார், அப்போது விளையாடியதுபோல் கற்பனையைக் கலந்து விளையாடுகிறார், அதேசமயம், இதன்மூலம் அவர் தன்னை அறிந்துகொள்ளவும், பிரச்னையைச் சரிசெய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
 • மனமுழுமை அடிப்படையிலான அழுத்தக் குறைப்பு (MBSR): இது ஜான் கபட்-ஜின் அவர்களால் கற்றுத்தரப்படுகிறது, மக்கள் தங்களது உடல்சார்ந்த மற்றும் உணர்வுசார்ந்த வலியைக் கையாள உதவுகிறது.
 • தியான வகுப்புகள், குறிப்பாக, மனமுழுமை தியானம், அல்லது ஷமதா (அமைதிக்கு இணங்குதல்) மற்றும் விபாசனா (நுண்ணறிவு) தியானம் ஆகியவற்றைக் கற்றுத்தருகிறவை.
 • குழுச் சிகிச்சைகள், இவற்றில் ஒருவர் தன்னைப்பற்றிய பிறருடைய  கருத்துகளைக் கேட்கிறார், தன்னைப்போலவே பிறருக்கு உள்ள அனுபவங்களைக் கேட்கிறார், அதன்மூலம் அவர் தன்னை அறிந்திருத்தலை மேம்படுத்திக்கொள்கிறார். ஒருவர் சமூகத்தில் எப்படி ஊடாடுகிறார் என்பதும் “நேரடியாக”க் கவனிக்கப்படுகிறது, இதைக்கொண்டு தெரபிஸ்ட் அல்லது குழுவினர் அவரது பிரச்னைகளைத் தீர்க்க உதவலாம்.

ஒருவர் தன்னை அறிந்திருப்பதால், சிகிச்சையாளருடன் வலுவான ஓர் உறவு உண்டாகிறது, அத்துடன், ஒரு சாதாரண மனிதர் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு தீர்மானங்களை எடுக்கவும் இது உதவுகிறது, அவருடைய ஒட்டுமொத்த நலனுக்கும் பங்களிக்கிறது.

இங்கே நினைவில்கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், ஒருவர் தன்னை அறிந்திருக்கிறார் என்றால், அவரால் தனது ஆளுமையின் பலங்களை, பலவீனங்களை ஏற்றுக்கொண்டு மெச்ச இயலுகிறது. இதைப் புரிந்துகொள்வதால், ஒருவர் தனது திறன்களுடன் பொருந்தக்கூடிய செயல்பாடுகளை நிகழ்த்தலாம், சரியான தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம், சரியான தீர்மானங்களை எடுக்கலாம். இதற்காக, ஒருவர் நேரம் செலவிட்டு உழைக்கவேண்டும்: தன்னை அறிதல் என்பது ஒரு புத்தகத்தைப்படித்துத் தெரிந்துகொள்கிற விஷயம் அல்ல, அவர் தன்னைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்கவேண்டும், தான் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்திச் சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும், சரியானபடி நடந்துகொள்ளவேண்டும், பிறருடன் சரியானபடி பழகவேண்டும்.

இதில் உதவக்கூடிய சில வழிகாட்டிக் கேள்விகள்:

 • உங்களுடைய பலங்கள், பலவீனங்கள் என்ன? ஒவ்வொன்றிலும் மூன்றைப் பட்டியலிடவும். 
 • நீங்கள் மிகவும் மதிப்பவை எவை?
 • ஒருவர் தானே செய்யக்கூடியவை, தானே செய்ய இயலாதவை ஆகியவற்றை வேறுபடுத்திக்காணவேண்டும்.
 • பிறருடன் ஒப்பிடும்போது, நீங்கள் அதிகம் அனுபவிப்பதாக அறிந்திருக்கும் உணர்வுகள் என்ன?
 • உங்களைத் தூண்டுபவை (எதிர்மறையான அல்லது அசௌகர்யமான உணர்வுகளைத் தூண்டக்கூடிய மனிதர்கள், சூழ்நிலைகள்) எவை?
 • அழுத்தம் அதிகரிக்கும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?
 • வாழ்க்கையில் உங்களுக்குப் பல்வேறு பொறுப்புகள் இருக்கலாம், உதாரணமாக: சகோதரியாக, மாணவராக, சிறந்த நண்பராக, ஊழியராக, தடகளவீரராக... இதுபோன்ற பல்வேறு பொறுப்புகள் உங்களை எப்படி உணரச்செய்கின்றன?

சான்றுகள்

 • செலிக்மன், M. E. P. (1995). உளவியல் சிகிச்சையின் செயல்திறன்: வாடிக்கையாளர் அறிக்கைகள் ஆய்வு. அமெரிக்கன் சைக்காலஜிஸ்ட், டிசம்பர் 1995 தொகுதி. 50, எண். 12, பக்கங்கள். 965-974. பெறப்பட்ட நாள் டிசம்பர் 16, 2008 தளம் http://tinyurl.com/dn3ofg
 • க்ரிஸ்டோஃபர், J. C., க்ரிஸ்டோஃபர், S. E., டன்னகன், T., & ஸ்க்யூர், M. (2006). தனிப்பட்ட பராமரிப்பை மனமுழுமைச் செயல்பாடுகளின்வழியே சொல்லித்தருதல்: யோகாசனம், தியானம் மற்றும் கிகாங்க் ஆகியவற்றை ஆலோசகர் பயிற்சியில் செயல்படுத்துதல். ஜர்னல் ஆஃப் ஹ்யூமனிஸ்டிக் சைக்காலஜி, 46, 494-509. doi: 10.1177/0022167806290215
 • http://www.counseling.org/docs/default-source/vistas/article_30.pdf

டாக்டர் கரிமா ஸ்ரீவத்ஸவா டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் PhD பெற்றவர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org