நேரச் செழுமை: நலனுக்கு முக்கியத் தேவை

இன்றைய நேர்வித உளவியலாளர்கள் மக்களுடைய உணர்வு நலனைப் பாதிக்கும் பலவிதமான அம்சங்களைக் கண்டறிகிறார்கள். அவற்றில் மிகவும் ஈர்ப்புண்டாக்குகிற ஒன்று, நேரத்துடனான மக்களுடைய உறவு. சிறப்பாக, நேரம் தடையற்று ஓடுவதாக மக்கள் எந்த அளவு வசதியாக உணர்கிறார்கள்? அல்லது, விரைவுபடுத்தப்படுவதாக, அழுத்தத்துக்குட்படுவதாக உணர்கிறார்களா? இந்தப் பிரச்னையின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதாக, மக்களுடைய மன நலனையும், அநேகமாக மக்களுடைய உடல்நலனையும்கூடப் பாதிப்பதாகத் தோன்றுகிறது. புவியியல்ரீதியில் தொலைவிலுள்ள நாடுகள் தாற்காலிகமாக அதிகம் நெருக்கி இணைக்கப்படுவதால், மக்களில் பலர், பல நேர மண்டலங்களில் உள்ளவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுவதால், “நேரச் செழுமை” என்று இப்போது அழைக்கப்படும் தலைப்பு நிச்சயம் அதிக முக்கியத்துவத்தைப் பெறும்.

ஒருவகையில் பார்த்தால், இது ஒரு புதிய பிரச்னையே இல்லை. எடுத்துக்காட்டாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குமுன்னால், எலெனார் ரூஸ்வெல்ட் ஒரு புகழ்பெற்ற புத்தகத்தை எழுதினார். அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுடைய மனைவியான இவர், 1945ல் அவருடைய மரணத்துக்குப்பிறகு, மக்களுடைய அன்புக்குரிய பொதுப் பிரபலமாக ஆனார். இவர் எழுதிய புகழ்பெற்ற இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கான அறிவுரைகளை வழங்கியது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு, வாழ்வதன்மூலம் கற்றுக்கொள்கிறோம். இந்நூலில், லட்சியம், சாதனை, கல்வி, சுய-ஒழுக்கம் மற்றும் உண்மையுள்ள சமூக உறவுகளை வளர்த்தல் போன்ற தலைப்புகளில் தன்னுடைய அறிவுறுத்தும் பார்வைகளை வழங்கினார் திருமதி ரூஸ்வெல்ட். நேர மேலாண்மையைப்பற்றிய ஒரு சிறப்பான, சிந்தனைகள் நிறைந்த உரையாடலில் திருமதி ரூஸ்வெல்ட் இவ்வாறு கூறுகிறார்: ‘நம் அனைவரிடமும் நிறைய நேரம் உள்ளது. உங்கள் நேரத்தை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று யாராலும் உங்களுக்குச் சொல்ல இயலாது. அது உங்களுடைய நேரம்.’

1960ல் பதிப்பிக்கப்பட்ட திருமதி ரூஸ்வெல்ட்டுடைய புத்தகம், பணிநேரத்தில் இரண்டு மணிநேர உணவு இடைவேளைகள் பொதுவாக இருந்த, எதிர்கால வல்லுனர்கள் எதிர்வரும் பத்தாண்டுகளில் அமெரிக்கர்கள் தங்களுடைய பெரிய, எதிர்பார்க்கப்படும் ஓய்வை எப்படிப் பயன்படுத்துவார்களோ என்பதுபற்றிக் கவலை கொண்ட ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடுகிறது. தானியக்கமாக்குதல் பணியிடத்திலும் வீட்டிலும் விரைவாக அதிகரித்ததால், பணிசார்ந்த அழுத்தங்களும் வீட்டுவேலைகளுக்காகக் கடுமையாக உழைக்கவேண்டியிருப்பதும் மிகவும் குறையும் என்று பெரும்பாலான சமூக அறிவியலாளர்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய பார்வையில், இந்தச் சூழலால் யார் வேண்டுமானாலும் பலவிதமான பொழுதுபோக்கு வாய்ப்புகளைப் பெறலாம். அமெரிக்கர்கள் (பின்னர் பிற நாட்டவர்களும்) தங்களுடைய எதிர்பார்க்கப்படும் பெரிய அளவு ஓய்வு நேரத்தைத் தங்களுக்காகவும் தங்களுடைய சமூகத்துக்காகவும் செயல்திறனோடு பயன்படுத்துவார்களா, அல்லது, தொலைக்காட்சி பார்த்தல், அல்லது, அதைவிட மோசமான அதீதக் குடி அல்லது சூதாட்டம் போன்ற இலக்கற்ற செயல்பாடுகளில் அதைச் செலவிடுவார்களா என்று 1970களின் மத்தியில், பல சமூக அறிவியலாளர்கள் கவலையை வெளிப்படுத்தினார்கள்.

அங்கிருந்து இன்றைய நாளுக்குத் தாவினால், இந்த ஊகம் நகைப்புக்கு இடமளிப்பதாகத் தோன்றுகிறது. மிகுந்த ஓய்வு நேரத்தைக் கொண்ட ஒரு சமூகம் இதோ வரப்போகிறது என்கிற நம்பிக்கை சில பத்தாண்டுகளுக்கு உறுதியாகத் தொடர்ந்தாலும், காலப்போக்கில் வல்லுனர்கள் தங்களுடைய பார்வையை மாற்றிக்கொள்ளத்தொடங்கினார்கள். 1981லேயே, அமெரிக்க உளவியலாளர் டேவிட் எல்கின்ட்,  அவசரப்படுத்தப்படும் குழந்தை-ல் இவ்வாறு எச்சரித்தார்: குழந்தைகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவு விரைவுபடுத்தப்படுதலுக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்களுடைய படைப்புத்திறனை, கற்பனைத்திறனை இழந்துவிடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். பத்தாண்டுகள் கழித்து, வருங்காலம் மிகவும் வித்தியாசமாகத் தோன்றியது. சமூகவியலாளர் ஜூலியட் ஸ்காருடைய அதிகம் பணியாற்றுகின்ற அமெரிக்கர்: ஓய்வின் எதிர்பாராத சரிவு போன்ற நூல் தலைப்புகள் பொதுவாகக் காணப்பட்டன. ஆனால், அனுபவம் சார்ந்த தரவுகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னையை அளந்த முதல் சமூக அறிவியலாளர்களில் ஒருவர், ஹார்வர்ட் தொழிற்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் லெஸ்லி பெர்லோ. 1999ல் அவர் வழங்கிய நேரப் பஞ்சம் என்ற விவரிப்பு, தொழில்வல்லுனர்கள்மத்தியில் விரைவாகப் புகழ்பெற்றது. டாக்டர் பெர்லோ மென்பொருள் பொறியாளர்களுடைய குழுவொன்றை ஆராய்ந்தார், அவர்கள் எப்போதும் தங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும், அவற்றைச் செய்யப் போதுமான நேரம் இருப்பதில்லை என்றும் உணர்ந்தார்கள். பெருநிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை “விரைவான, அதிக அழுத்தமுள்ள, நெருக்கடி-நிரம்பிய” சூழல்களில் அமைப்பதன்மூலம் அவர்களுடைய செயல்திறனை உண்மையில் தடைசெய்கின்றன என்று வலியுறுத்தினார். 'பெருநிறுவன வழக்கறிஞர்கள், முதலீட்டு வங்கியாளர்கள், கணினி நிரலாளர்கள், இன்னும் பல வகை ஊழியர்கள் தொடர்ந்து வாரந்தோறும் எழுபது அல்லது எண்பது மணிநேரம் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக, பணி அதிகமுள்ள நேரத்தில் கூடுதல் உழைப்பை வழங்குகிறார்கள் இந்த ஆண்களும் பெண்களும், திருமணமானவர்களும் திருமணமாகாதவர்களும் இந்த வெறித்தனமான பணி அட்டவணையால் அழுத்தத்தில் உள்ளார்கள், களைத்துள்ளார்கள், இறந்துகொண்டிருக்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். பணி, பணிக்குவெளியிலுள்ள தங்களுடைய வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நேரம் அவர்களிடம் இல்லை’ என்கிற இருண்ட பார்வையை வெளிப்படுத்தினார் அவர். பெருநிறுவன அலுவலர்களுக்கு மனிதத் தானியங்கிகளைவிட, படைப்புணர்வுள்ள நபர்கள்தான் உண்மையில் தேவை என்றால், அவர்கள் சுதந்தரமாக இருக்க இன்னும் அதிக நேரம் தரப்படவேண்டும் என்று டாக்டர் பெர்லோ வலியுறுத்தினார். சமீபத்தில், அமெரிக்க உளவியலாளர்கள் டிம் காஸெர் மற்றும் கென்னெத் ஷெல்டன் நேரச் செழுமை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இதன் பொருள், போதுமான நேரம் இருக்கிறது என்று ஒருவர் தொடர்ச்சியாக உணர்வது. நான்கு அறிவியல் ஆய்வுகளைத் தொகுத்த இந்தக் கண்டுபிடிப்புகளின்மூலம் அவர்கள் கண்டறிந்தது: பொருட்களாகிய சொத்தைச் சாத்தியமுள்ள ஒரு காரணியாகக் கட்டுப்படுத்தியபிறகும், ஒருவருடைய நேரச்செழுமையுணர்வு இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டுள்ளது. புதிரான விஷயம், நெருங்கிய உறவுகள் இருப்பதாகத் தெரிவித்தவர்கள், பொதுவாக மற்றவர்களைவிட அதிக நேரச் செழுமையை உணர்வதாகத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், நேரச்செழுமை உணர்வானது நம்முடைய மன நலன், உடல் நலன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவுகளுக்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற பணிகளை விரிவாக்கியுள்ள வார்டன் தொழிற்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் காஸி மோகில்னெர் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் பரிசோதனை அடிப்படையில் கண்டறிந்துள்ள ஒரு விஷயம் முரணாகத் தோன்றுகிறது: ஒருவர் பிறரை ஆதரிக்கும்விதமாகத் தன்னுடைய நேரத்தைச் செலவிடும்போது, அவருடைய நேரச்செழுமை உணர்வு அதிகரிக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்? அவர்களுடைய பார்வையில், இதுபோன்ற பொதுநலச் செயல்பாடுகள் ஒருவருடைய சுய மதிப்பை, தன்னம்பிக்கையை மேம்படுத்துகின்றன, இதனால், அவருடைய மனத்தில் அவருடைய நேரம் விரிவாக்கப்படுகிறது. இதனால், அவருக்கு எவ்வளவுதான் பணிகள் இருந்தாலும், வருங்காலத்தில் கூடுதல் பணிகளை ஏற்றுக்கொள்கிறவராக அவர் ஆகிறார். ஹார்வர்ட் தொழில் விமர்சன இதழில் வெளியான பின்பற்றல் கட்டுரையின் தலைப்பு இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “தங்கள் நேரத்தைப் பிறருக்கு வழங்குபவர்கள், தாங்கள் குறைவாக விரைவுபடுத்தப்படுவதாக உணர்கிறார்கள்.’

வல்லுனர்கள் உண்மையில் எப்படி நேரச்செழுமையைப் பெறுகிறார்கள்? டாக்டர் காஸெர் திருமணமானவர், வீட்டில் இரண்டு பதின்பருவ மகன்களுடைய தந்தை, அவர் என்னுடைய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார், ‘அநேகமாக ஒவ்வோராண்டும் நான் என்னுடைய கல்லூரியுடன் பேசி என்னுடைய பணிநேரத்தை 2/3ஆக அல்லது 3/4ஆகக் குறைத்துக்கொள்ளவும், அதற்கேற்ப என்னுடைய சம்பளத்தை மாற்றிக்கொள்ளவும் ஏற்பாடு செய்துகொள்கிறேன். பன்னிரண்டு ஆண்டுகளாக, என்னுடைய மனைவி பாதி நேரம்தான் பணியாற்றினார், ஆண்டுக்கு 30 வாரங்களுக்குமேல் அவர் பணியாற்றவில்லை. எங்கள் மகன்களுக்காக, எங்களுடைய சமூகப் பங்களிப்புக்காக, மற்றவருக்காக, எங்களுக்காக அதிக நேரத்தைச் செலவிடவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்தத் தீர்மானங்களை எடுத்தோம்.'

இது ஒரு பாராட்டத்தக்க வாழ்க்கைமுறைத் தீர்மானம்; அவர்களுடைய மகன்கள் பெரியவர்களாகித் தங்களுடைய சொந்தக் குடும்பங்களை வளர்க்கத் திட்டமிடும்போது, இந்தத் தீர்மானத்தை நிச்சயம் எண்ணிப்பார்ப்பார்கள்.

வழிநடத்தப்படும் செயல்பாடு 

ஒருவர் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி, அவர் நகரச் சூழலில் வாழ்கிறார் என்றால், சென்ற ஆண்டுக்குள் நேரப் பஞ்சத்தை உணர்ந்திருக்கிறார். இதற்கு என்ன செய்வது? ஒருவர் தன்னுடைய நேரச்செழுமை உணர்வை, அதனால் கிடைக்கும் உளவியல் நலனை மேம்படுத்தவேண்டுமென்றால், வாரந்தோறும் அவருக்குக் கிடைக்கும் நேரத்தை இன்னும் தாராளமாகச் செலவிடவேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன். அவர்கள் தங்களுடைய வாராந்திரப் பணிகளில், பிறருக்குப் பலன்தரக்கூடிய உதவிப்பணிகளைச் சேர்க்கவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தங்களுடைய பெரிய சமூகத்திலிருக்கும் மற்றவர்களுக்கு அவர்கள் உதவலாம். அவர்கள் எந்தவிதமான தன்னார்வலர் பணியில் ஈடுபட்டாலும் சரி, கிடைக்கும் நேரம்பற்றிய அவர்களுடைய உணர்வு விரிவாகும். ஆகவே, அப்படிப்பட்ட பணிகளை அவர்கள் தேடிச்செல்லவேண்டும். விரைவாக ஓடுவதைவிட, மெதுவாக, நிதானமாக நடப்பது நல்லது. ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ முப்படைப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர் J.R.R. டால்கியான் அறிவார்ந்த சிந்தனையோடு சொன்னதுபோல், ‘திரிகிற எல்லாரும் தொலைந்தவர்கள் இல்லை.’ ஒருவர் எந்த அளவுக்குக் குறைவாகத் தன்னுடைய நேரத்தைப் பதுக்கிவைக்கிறாரோ, அந்த அளவுக்கு அவருடைய அன்றாட வாழ்க்கையில் அதிக நேரத்தைப் பெறுவார்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள யெஷிவா பல்கலைக்கழகத்தின் இணை உதவி உளவியல் பேராசிரியர். தனிப்பட்ட செயல்பாட்டில் உரிமம்பெற்ற மருத்துவ உளவியலாளரான அவர், உளவியல் மற்றும் தொடர்புள்ள துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். சமீபத்தில், டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து டாக்டர் ஹாஃப்மன் எழுதியுள்ள நூல், நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியுடைய அறிவியல். நேர்வித உளவியலுக்கான இந்தியச் சஞ்சிகை மற்றும் மனிதத்தன்மை உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களிலும் இவர் பணியாற்றுகிறார். அவரைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரிcolumns@whiteswanfoundation.org 

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org