விரிதிறன் என்றால் என்ன?

விரிதிறன் என்றால் என்ன?

எதிர்மறைச் சூழல்களைக் கையாள்கிறவர்களை ‘விரிதிறன் கொண்டவர்கள்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில், விரிதிறன் என்றால் என்ன?

சிலரால் அதிர்ச்சியைத் தாண்டி வர இயலுகிறது, தங்களை மாற்றிக்கொண்டு முன்னேற இயலுகிறது, இது ஏன்? வேறு சிலர் எதிர்மறையான அல்லது வலிமிகுந்த அனுபவங்களால் பாதிக்கப்படுகிறார்கள்; அவை நிகழ்ந்து பல ஆண்டுகளாகியும் இந்தப் பாதிப்பு தொடர்கிறது; இது ஏன்? சிலரால் எதிர்மறை உணர்வுகளைச் சந்தித்தும் மனத்தளவில் ஆரோக்கியமாக இருக்க இயலுகிறது; மற்ற மக்களுடன் ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருக்க இயலுகிறது; இது எப்படி? வேறு சிலரால் இவ்வாறு செய்ய இயலுவதில்லையே, அது ஏன்?

விரிதிறனைப் புரிந்துகொள்ளுதல்

அமெரிக்க உளவியல் அமைப்பு விரிதிறனை இவ்வாறு வரையறுக்கிறது: எதிர்மறை நிகழ்வுகள், அதிர்ச்சி, சோகம், அச்சுறுத்தல்கள் அல்லது குடும்ப மற்றும் உறவுப் பிரச்னைகள், தீவிர உடல்நலப் பிரச்னைகள் அல்லது பணியிட மற்றும் நிதி அழுத்தமூட்டிகள் போன்ற குறிப்பிடத்தக்க அழுத்த மூலங்கள் ஏற்படும்போது அவற்றுக்கேற்பத் தன்னை நன்கு மாற்றிக்கொள்ளுதல். ஒருவர் சவாலான நேரங்களை எப்படிச் சமாளிக்கிறார், உணர்வுகளைக் கையாள்கிறார், ஆதரவு நாடுகிறார் என்பதை இச்சொல் குறிப்பிடுகிறது.

விரிதிறன் என்ற கருத்தாக்கம், எதிர்மறையான குழந்தைப்பருவ அனுபவங்களைக் கொண்ட குழந்தைகளுடைய வயதுவந்த பருவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சிகளின் வாயிலாக அலசப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் சொல்லும் சில விஷயங்கள்:

ஒவ்வொருவருக்கும் விரிதிறன் உண்டு: ஒவ்வொருவரும் அழுத்தம் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளுக்கு வெவ்வேறு விதங்களில் எதிர்வினையாற்றுகிறார்கள். அதேசமயம், ஒவ்வொருவரும் அழுத்தத்துக்கு எந்த விதத்தில் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது பல காரணிகளைச் சார்ந்து அமைகிறது. ஒருவர் எப்படிச் சமாளிக்கிறார், தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பது, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற தனித்துவமான பண்பாகும். விரிதிறனை வலுவாக்கக்கூடிய, ஒருவருடைய திறனால் தீர்மானிக்கப்படுகிற சில உள் காரணிகள்:

  • எதார்த்தமான திட்டங்களை உருவாக்குதல்; அவற்றைச் செயல்படுத்துவதற்கான படிநிலைகளைப் பின்பற்றுதல்

  • தன்னை, தன்னுடைய தேவைகளைப் பிறரிடம் வெளிப்படுத்துதல்

  • தீர்வுகளைக் கண்டறிதல், பிரச்னைகளைத் தீர்க்கும் திசையில் பணிபுரிதல் 

  • தன்னுடைய சொந்த உணர்வுகள்/உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளை அறிந்திருத்தல்

  • தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதன்மூலம் தன்னைத்தானே பரிசோதித்துக்கொள்ளுதல், சிந்தித்தல்: எனக்கு என்ன நடக்கிறது? நான் என்ன செய்யவேண்டும்? என்னால் என்ன செய்ய இயலும்? நான் யாரிடம் உதவி கேட்கலாம்? போன்றவை.

வெளிக் காரணிகளும் ஒருவருடைய விரிதிறனைத் தீர்மானிக்கின்றன: விரிதிறன் என்பது, சமாளிப்பதற்கான மற்றும் எதிர்மறை நிகழ்வுகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதற்கான ஓர் உள் திறன்மட்டுமில்லை. சில வெளிக் காரணிகளும் ஒருவருடைய விரிதிறனைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன. விரிதிறன் இவற்றால் மேம்படுகிறது:

  • அக்கறையான, ஆதரவான குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டிருத்தல்

  • அன்பை, நம்பிக்கையை உருவாக்குகிற, லட்சிய பிம்பங்களை வழங்குகிற, ஊக்கம், உறுதிப்படுத்தலை வழங்குகிற உறவுகள்

  • சமூகம் அல்லது குழு போன்ற ஆதரவளிக்கும் சமூகக் கட்டமைப்புகள். எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்கான இலவசக் கல்விக்காக அரசாங்கம் கல்வி அமைப்புகளை உருவாக்கினால், ஒரு பரந்துபட்ட வழியில் அது அவர்களுடைய விரிதிறனை வளர்ப்பதற்குப் பணியாற்றலாம்.

விரிதிறனை வளர்ப்பதற்கு உள் மற்றும் வெளிக் காரணிகள் இரண்டும் முக்கியமானவை: விரிதிறன் என்பது, உள் மற்றும் வெளிக் காரணிகளுடைய ஓர் ஊடாடல் செயல்முறையாகும். ஒருவருடைய மாறிக்கொள்ளும் உள் திறன், கிடைக்கும் வெளி ஆதரவு மற்றும் நேர்வித அனுபவங்களால் விரிதிறன் வளர்கிறது.

மக்களுடைய பார்வைக்கோணம் விரிதிறனுக்கு முக்கியம்: ஒரு நிகழ்ச்சியை அல்லது சூழலை ஒருவர் எப்படிப் பார்க்கிறார் என்பது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம். ஒரு நேர்விதமான பார்வையுடன் இருப்பது, தன்னுடைய வலிமைகளி, திறன்களில் நம்பிக்கையுடன் இருப்பது விரிதிறனுக்குப் பங்களிக்கிறது. 

ஒருவர் விரிதிறனுடன் இருக்கிற தன்மை காலப்போக்கில் மாறலாம்: குழந்தைகள் பெரியவர்களைவிட ஒப்பீட்டளவில் அதிக விரிதிறனைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. இதற்கு முதன்மைக் காரணம், ஒருவர் அழுத்தத்தை உடல்ரீதியில் மற்றும் உணர்வுரீதியில் கையாளும் திறன் வயது ஆக ஆகக் குறைகிறது.  அதேசமயம், எந்தவொரு நேரத்திலும், ஒருவர் (குழந்தையோ பெரியவரோ) விரிதிறனுடன் இருக்கிறாரா இல்லையா என்று தீர்மானிப்பது சாத்தியமில்லை. எதிர்மறைச் சூழலுடைய வகை, தீவிரம் மற்றும் காலகட்டத்தைப் பொறுத்து அவர் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு வெவ்வேறுவிதமாக எதிர்வினையாற்றலாம். 

சிலர் விரிதிறனுடன் பிறக்கிறார்கள்; ஆனால், எல்லாரும் விரிதிறனை வளர்த்துக்கொள்ளலாம்: விரிதிறனுடைய சில அம்சங்கள் ஒருவருக்குப் பிறப்பிலேயே வரலாம். எடுத்துக்காட்டாக, சில குழந்தைகளால் தங்களுடைய சூழல்களுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ள இயலுகிறது. எல்லாக் குழந்தைகளாலும் இது இயலுவதில்லை. ஆனால், இந்தத் திறனைக் கற்றுக்கொள்ள இயலும் என்று ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஒருவர் எந்தப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் சரி, எந்தச் சவால்களைச் சந்தித்தாலும் சரி, அனைவராலும் விரிதிறன் கொண்டவர்களாக மாற இயலும். (விரிதிறனை எப்படி வளர்ப்பது என்பதற்கான கட்டுரையை இணையுங்கள்) 

 இந்தக் கட்டுரை, NIMHANS மருத்துவ உளவியல் துணைப் பேராசிரியர் டாக்டர் பூர்ணிமா போலா வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது 

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org