தூங்கச்செல்லும்போது எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துவது சரியா?

நீங்கள் இரவில் நெடுநேரம்வரை உங்களுடைய தொலைபேசியை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கத்தைக் கொண்டவரா? அல்லது, படுக்கைக்குச் செல்லும்போது மடிக்கணிணியுடன் செல்கிறவரா? அப்படியானால் உங்களுக்குத் தூக்கத்தில் பிரச்னைகள் இருக்கும் அல்லது தூக்கத்தில் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

தொழில்நுட்பமும் நவீன கருவிகளும் நம் வாழ்க்கையில் எங்கும் இடம்பெற தொடங்கிவிட்டன.  இவற்றை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்திக்கொள்வது மற்றும் தவறான முறையில் பயன்படுத்துவது ஆகியவற்றை வேறுபடுத்தும் அந்தக் கோடு மிக மெலிதானது, கிட்டத்தட்ட அது நம் கண்ணுக்கே தெரிவதில்லை.   ஆனால் தொழில்நுட்பப் பொருட்களின் பயன்பாடு ஒருவருடைய தூக்க வழக்கத்தைப் பாதிக்கிறது என்றால், அவர் தொழில்நுட்பப் பொருட்களை பயன்படுத்துவது அதீதமாக இருக்கலாம்.  

ஒருவருடைய உடல் ஆரோக்கியமான முறையில் செயல்படவேண்டுமென்றால் அவருக்கு நாள்தோறும் குறைந்தது 6-8 மணிநேரத் தூக்கம் தேவை.   ஆனால், தூங்கச்செல்கிறவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தால், குறிப்பாக மின்னஞ்சல்களைப் பார்ப்பது மற்றும் சமூக ஊடகங்களில் உரையாடுவது ஆகியவற்றில் ஈடுபட்டால், அவர்களுடைய தூக்கத்தில் பல தொந்தரவுகள் ஏற்படலாம்.   எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் இவையெல்லாம் நிகழலாம்: 

”எங்களிடம் வரும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் இரவில் இணைய விளையாட்டுகளை விளையாடுவதாகவும், அதனால் அவர்கள் தூங்காமல் நெடுநேரம் விழித்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள்” என்கிறார் டாக்டர் மனோஜ் சர்மா. இவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதலைக் குணப்படுத்தும் SHUT (தொழில்நுட்பத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கான சேவை) என்ற மருத்துவமனையை நிறுவி, அதில் உளவியலாளராக பணியாற்றுகிறார்.  ”பல குழந்தைகள் பிற நாடுகளில் உள்ளவர்களுடன் இணையம் சார்ந்த குழு விளையாட்டுகளில் விளையாடுகிறார்கள், அவர்களுடைய நேர மண்டலங்கள் நம்முடைய நேரமண்டலங்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றன.” இதனால் அவர்களுடைய இரவு நேரத் தூக்கம் பாதிக்கப்படலாம், ஆகவே பகல்நேரத்தில் அவர்கள் தூக்கக்கலக்கமாகவும் களைப்பாகவும் காணப்படலாம்” என்று தொடர்ந்து சொல்கிறார் அவர். 

ஒருவர் இரவு நேரத்தில் இணையத்துக்குச் செல்லுவது ஏன்? மக்கள் தங்களுடைய எலக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதற்கும் இணையத்தில் அதிகநேரம் செலவிடுவதற்கும் முக்கியக் காரணங்கள், தனிமை உணர்வு, சலிப்புணர்வு, ஆர்வம், மற்றும் சக நண்பர்களுடைய அழுத்தம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.   இன்னொரு பக்கம், சிலர் தூங்கும்போது பின்னணியில் வீடியோ அல்லது இசையை ஒலிக்கவிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள், இதனாலும் அவர்கள் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக்கூடும்.

SHUT மருத்துவமனையானது பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களை சேர்ந்த 250 ஊழியர்களுடைய பணியிடத் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஆராய்ந்தது.  இதில் 58.8 சதவிகிதப் பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் மொபைல் தொலைபேசி, மேசைக்கணிணி அல்லது மடிக்கணிணியைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.    42 சதவிகிதப் பேர் இணையத்தின் பயன்பாட்டினால் தங்களுடைய வேலையைத் தள்ளிப்போடுவதாகச் சொன்னார்கள்.  5 சதவிகிதப் பேர் சாப்பிடுவது அல்லது தூங்குவதற்குப் பதிலாக இணையத்துக்குச் செல்லுவது தங்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றார்கள்.   இவர்கள் இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது குறைந்தபட்சம் 4 முறை விழித்தெழுந்து தங்களுடைய சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளைக் கவனிப்பதாகவும் சொன்னார்கள். இதனால் அவர்களுடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது.   இதன்மூலம், அவர்களுடைய தூங்குகிற மற்றும் விழித்தெழும் நேரத்தில் ஒன்றரை மணி நேரத் தாமதம் ஏற்படுகிறது.

உயிரியல் ரீதியில் பார்த்தால் இரவு நேரத்தில் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவதன்மூலம் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பி பாதிக்கப்படலாம், இந்த ஹார்மோன் தூக்கச் சுழற்சிகளை(அல்லது சிர்காடியன் ஒழுங்குகளை)க் கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. 

இதை எப்படிச் சரி செய்யலாம்?

இயற்கையான தூக்கச் சுழற்சிக்கு ஏற்ப தன்னுடைய உடலைத் தூங்கச்செய்ய விரும்புகிறவர்களுக்கான சில வழிகள் இதோ: 

  • தூங்குவதற்குக் குறைந்தபட்சம் ஒருமணிநேரத்துக்கு முன்னால் அனைத்துக் கருவிகளையும் அணைத்துவிடலாம்.  
  • மொபைல் தொலைபேசியில் இருக்கும் அலாரத்துக்குப் பதிலாக ஓர் உண்மையான அலாரக் கடிகாரத்தைப் பயன்படுத்துவதுபற்றிச் சிந்திக்கலாம்.    இப்படிச் செய்வதன்மூலம் இரவு நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்துகிற துடிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
  • நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளலாம்.  இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்களுடைய உடல் படிப்படியாக இந்த நேரங்களுக்குப் பழகிவிடும். 
  • இரவுநேரத்தில் தூக்கம் சரியாக இல்லை அல்லது தூக்கம் போதவில்லை என்பதற்காகப் பகல் நேரத்தில் தூங்கி அதைச் சமன் செய்ய முயலாமல் இருக்கலாம்.
  • தூங்குவதற்கு முன் ஆற்றல் தரும் பானங்கள் அல்லது காஃபி போன்ற தூண்டும் பானங்களைக் குடிக்காமல் இருக்கலாம்.  தன்னுடைய உடல் சொல்வதைக் கேட்டு அதற்கேற்பச் செயலாற்றலாம்: இந்தப் பானங்களை எப்போது குடித்தால் சரியாக இருக்கும், எப்போது அது ஒரு நல்ல இரவுத்தூக்கத்தைப் பாதிக்காமல் இருக்கும் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்பச் செயல்படலாம்.  
  • நாள்தோறும் உடல்சார்ந்த நடவடிக்கைகளில், உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் நன்கு தூக்கம் வரும்.   
  • இரவுநேரத்தில் மிகவும் அதிகமாகச் சாப்பிடாமல் இருக்கலாம், தூங்கச்செல்வதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது.  

சான்றுகள்

ஸ்ரீவஸ்தவா, அபூர்வா, மனோஜ்குமார் சர்மா, மற்றும் பழனியப்பன் மாரிமுத்து.  ”பணியிடத்தில் இணையத்துக்கு அடிமையாதல் மற்றும் பணியாளர்களுடைய வாழ்க்கை முறையில் அதன் தாக்கம்: தென்னிந்தியாவிலிருந்து ஓர் அலசல்.”  ஆசிய உளவியல் சஞ்சிகை 32 (2018): 151-155.

ஷ்யாம், H.R., மனோஜ் குமார் சர்மா, மற்றும் T. பழனிச்சாமி. ”பதின்பருவத்தினர் மத்தியில் தொழில் நுட்பப் பயன்பாட்டு பாணியை மற்றும் உளவியல் மாறிகளுடன் அதன் உறவை அலசுதல்.” ஆசிய J உளவியல் 17 (2016): 239-49.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org