நலன்

தன்னிரக்கம்: ஓர் அறிமுகம்

தன்னிரக்கத்தைப் பின்பற்றினால், வாழ்க்கைத்தரம் மேம்படும்!

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நீங்கள் உங்களைப்பற்றி வருத்தமாக உணர்ந்த ஒரு சூழ்நிலையை எண்ணிக்கொள்ளுங்கள். இது எப்போது நடந்தது? சென்ற வாரமா? நேற்றைக்கா? இன்றைக்கா? அப்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?  பல நேரங்களில், நாம் நம்மையே விமர்சனம் செய்துகொள்கிறோம். குறிப்பாக, நாம் எதையும் கச்சிதமாகச் செய்ய எண்ணும்போது, நம்மேலே குறை சொல்கிறோம். வீட்டில், அலுவலகத்தில், நண்பர்கள்மத்தியில், மனநலப் பிரச்னை கொண்ட ஓர் உறவினரைக் கவனித்துக்கொள்ளும்போதுகூட. இப்படி ஒருவர் தன்னைத்தானே எடைபோட்டுக்கொண்டால், விமர்சனம் செய்துகொண்டால் என்ன நடக்கிறது? அதனால் அவர் திருந்திவிடுகிறாரா? மேம்பட்டுவிடுகிறாரா?

ஒருவர் முன்பைவிடச் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்று எண்ணும்போது, அவர் தன்னைத்தானே விமர்சனம் செய்துகொள்வது இயற்கைதான். ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்து நீடித்தால், அது அவரது சிந்தனையை, நடவடிக்கைகளைப் பாதிக்கத்தொடங்கினால், அதனால் அவருக்கு மனநலப் பிரச்னைகள் வரக்கூடும். ஒருவர் எந்த அளவு தன்னையே விமர்சனம் செய்துகொள்கிறார் என்று அவரே கவனித்து அறியலாம், இதற்கு அவர் தன்னுடன் பேசவேண்டும். மனிதர்கள் எல்லாரிடமும் சில போதாமைகள் இருக்கும், தோல்விகள் இருக்கும், அதற்காக ஒருவர் தன்னைத்தானே தாழ்வாகக் கருதினால், தன்னை விமர்சனம் செய்துகொண்டால், தன்னிரக்கம் அவருக்குப் பயன்படும்.

தன்னிரக்கம் என்றால் என்ன?

ஒருவருடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது இன்னொருவருக்கு ஏதோ பிரச்னை, அதனால் மிகவும் சிரமப்படுகிறார், அப்போது அவரைப்பார்க்கும் இவருக்கு மனத்தில் இரக்கம் தோன்றும், அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வார், ஏதாவது செய்யவேண்டும், அவரைச் சிறப்பாக உணரச்செய்யவேண்டும் என்று எண்ணுவார். அதேபோல, தன்னிரக்கம் என்பது, தன்மேலேயே இரக்கம்கொள்வது. வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக மாற விரும்பும் ஒருவர், அதற்காகத் தன்னை விமர்சித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. மென்மையான, கருணையான, அக்கறையான வழிகளில் தனக்குத்தானே ஊக்கம் தந்துகொள்ளலாம். அதற்குத் தன்னிரக்கம் உதவுகிறது.

தன்னிரக்கத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன:

  • மனமுழுமை:  சூழ்நிலைகளை ஒரு சமநிலையானவிதத்தில் பார்த்தல், தன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறுகுறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கவனித்தல். அதேசமயம், அவர்கள் தங்களை எடைபோட்டுக்கொள்ளக்கூடாது, அந்த எண்ணங்கள், உணர்வுகளிலேயே சிக்கிக்கொண்டு மூழ்கிவிடக்கூடாது.
  • பொதுவான மனிதத்தன்மை: மனிதனாக இருப்பதுபற்றிய ஒரு தத்துவபூர்வமான நிலையை எடுத்தல். சாதாரண மனிதன் இறக்கக்கூடியவன், அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் வரலாம், அவன் கச்சிதமானவன் அல்ல... இதையெல்லாம் நினைவில் கொள்வது. இதன்மூலம், சிரமப்படுவது, தனிப்பட்டமுறையில் போதாமை உணர்வு கொள்வது போன்றவை மனித வாழ்க்கையின் பகுதிகள்தான், அவை ஒருவருக்குமட்டும் நிகழ்கிறவை அல்ல என்று அவர் புரிந்துகொள்வார்.
  • சுய-கருணை: சிரமங்களைச் சந்திக்கும்போது, தோல்வியடையும்போது, போதாமையை உணரும்போது, தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல், தன்மீது பொறுமையாக இருத்தல், தன்னைச் சகித்துக்கொள்ளுதல்.

தன்னிரக்கத்தின் பலன்கள்

தன்னிரக்கத்துக்குப் பல பலன்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன: மேம்பட்ட நேர்வித உணர்வுகள், வாழ்க்கையில் திருப்தி, அறிவு, நேர்ச்சிந்தனை, குறுகுறுப்பு, இலக்குகளை நிர்ணயிக்கக் கற்றுக்கொள்ளுதல், சமூகத்துடன் இணைந்திருத்தல், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உணர்வுநிலையில் எதிர்த்துநிற்கும் திறன். இன்னொருபக்கம், தன்னிரக்கம் குறைந்தால், ஒருவர் தன்னைத்தானே மிகையாக விமர்சித்துக்கொள்ளக்கூடும், மனச்சோர்வு, பதற்றம், அதீதச் சிந்தனை, எண்ணங்கள் அமுங்கிப்போதல் மற்றும் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்ற உணர்வு போன்றவை அதிகரிக்கக்கூடும்.

ஒருவர் தன்னிரக்கத்தைப் பின்பற்றுவது எப்படி?

  • அவர் எப்போதும் தன்னைத்தானே தீவிரமாக விமர்சித்துத் தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடாது, தர்க்கம், பகுத்தறிவு அல்லது தத்துவத்தைக்கொண்டு அதற்குப் பதில்சொல்லவேண்டும்.
  • அவர் 'தன்னிரக்க நாட்குறிப்பு' என ஒன்றை எழுதத்தொடங்கலாம். ஒவ்வொரு நாளும் அவர் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்ட சிந்தனைகள், உணர்வுகளைக் குறித்துவைக்கலாம். இன்னொரு நண்பரிடம் அந்தச் சொற்களைச் சொல்வோமா என்று சிந்தித்துப்பார்க்கலாம்.
  • தன்னை ஏற்றுக்கொள்ளுதல், அதாவது, தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளுதல், தான் மதிப்புக்கு உரியவர் என்று உணர்தல். 
  • பின்வாங்குதல்கள், தோல்விகள், தனிப்பட்ட போதாமை போன்றவை ஏற்படும்போது, தன்னைத்தானே மன்னித்துக்கொள்ளப் பழகுதல்.
  • தன்மீது இரக்கம்கொண்ட ஒரு நண்பராகத் தன்னையே கற்பனை செய்துகொண்டு, தனக்கு ஒரு தன்னிரக்கக் கடிதம் எழுதுதல்.

இந்தக் கட்டுரை NIMHANS நல மையத்தால் நடத்தப்பட்ட ஒரு பயிற்சிப்பட்டறையின் அடிப்படையில் எழுதப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org